ஆய்வுக் கட்டுரை: கீழப்பாவூர் கள ஆய்வும் கண்டுபிடிப்புகளும்

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

நெல்லை நெடுமாறன், எஸ். இராமச்சந்திரன்


சற்றொப்ப 530 ஆண்டுகளுக்கு முன் தென்காசியைத் தலை நகராகக் கொண்டு அரசாண்ட பராக்கிரம பாண்டியன், தென்காசியில் காசி விசுவநாதர் உலகம்மன் ஆலயம் எழுப்பிய வரலாறு நமக்குத் தெரியும். ஆனால் அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பு, தென்காசிக்கு அருகில் அமைந்துள்ள பாவூரில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் குலத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருந்த ஒரு குழுவினர் வாழ்ந்தனர் என்ற வரலாற்றுச் செய்தி நம்மில் பலருக்குத் தெரியாது. இன்று பாவூர் சத்திரம், மேலப்பாவூர், கீழப்பாவூர் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஊர்கள் அன்று ‘பாகூரான க்ஷத்ரிய சிகாமணி நல்லூர் ‘ என்றும், ‘பாகூரான க்ஷத்ரிய ரக்ஷ் நல்லூர் ‘ என்றும் அழைக்கப்பட்டன. இவ்வூர்கள் அடங்கிய குறுமறை நாடு என்ற பகுதியே முன்னர்க் குறிப்பிட்ட வீரக்குழுவினரின் நிர்வாகத்தில் அடங்கியிருந்தது. தன்னாட்சி அதிகாரம் படைத்த இக்குழுவினரின் கீழ், தண்டல் நாயகம் செய்வார் என அழைக்கப்பட்ட வரி வசூல் அதிகாரிகள் இருந்தனர்; படை இருந்தது; தந்திரத்தார் எனப்பட்ட படைத் தலைவர் இருந்தனர். கீழப்பாவூரில் திருக்கபாலீச்சுரம் என்ற பெயருடன் திகழ்ந்த சிவன் கோயிலுக்கு இக்குழுவினர் பல கொடைகளைத் தந்தனர். அக்கோயில் தற்போது திருவாலீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு மேற்கில் ஓர் ஏரி வெட்டுவித்தும், அருகில் திருமால் கோயில் ஒன்று எழுப்பியும் ஊருக்குப் பெருமை சேர்த்த அவர்கள் போர் முனைக்குச் செல்வதில் மோகம் கொண்டவர்கள் என்ற கருத்தில், முனையெதிர் மோகர் என அழைக்கப்பட்டனர். இப் பெயராலேயே அந்த ஏரியும், திருமால் கோயிலும் முனையெதிர் மோகர்ப் பேரேரி1 என்றும், முனையெதிர் மோகர் விண்ணகர் என்றும் அழைக்கப்பட்டன. முனையெதிர் மோகர் விண்ணகர் பல மாற்றங்களுக்கு ஆளாகி இன்று வெங்கடாசலபதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

திருவாலீசுவரர் கோயிலிலுள்ள கல்வெட்டுகள் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இக்கல்வெட்டுகளில் முனையெதிர் மோகர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. வெங்கடாசலபதி கோயிலில் இருந்த மூன்று கல்வெட்டுகள் பற்றிய குறிப்பு 1917ஆம் ஆண்டில் மையத் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது..2

கீழப்பாவூரில், இக்கல்வெட்டுகள் தவிர, பல இடங்களில் கல்வெட்டுத் துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. இவை திருமால் கோயிலின் இடிபாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டனவாகத் தோன்றுகின்றன. இத்தகைய கற்கள் கொண்டு கட்டப்பட்ட நடைப்பாலம் ஒன்றும், வண்டிகள் செல்வதற்கான பாலம் ஒன்றும், கள ஆய்வில் கண்டறியப்பட்டன.

இவற்றின் காலம் பதினான்கு மற்றும் பதினாறாம் நூற்றாண்டாக இருக்கலாம். கி.பி. 1269-70ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகக் கருதத்தக்க வெங்கடாசலபதி கோயில் கல்வெட்டுகளால், முனையெதிர் மோகர் எனப்பட்ட இவ்வீரக்குழுவினர், தென்னவன் ஆபத்துதவிகள் என்றும் அழைக்கப்பட்டனர் எனத் தெரிகிறது. தென்னவன் என்பது பாண்டிய மன்னனைக் குறிக்குமாகையால், பாண்டிய மன்னனுக்கு ஆபத்து நேரும் போதெல்லாம் விரைந்து உதவி புரிந்தவர்கள் இவர்கள் என அறியலாம்.

பாண்டியர் வரலாற்றை ஆய்வு செய்து ஆங்கிலத்தில் எழுதிய பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் 3 கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தைச் சுற்றிப் பார்த்த மார்க்கோ போலோ என்ற வெனிஸ் நாட்டுப் பயணி தந்துள்ள சில குறிப்புகளை வெளியிட்டுள்ளார். ‘பாண்டிய மன்னனுக்கு மெய்க்காவலராகச் செயற்படும் நிலப்பிரபுக்கள் சிலர் உள்ளனர். மன்னனுடனே உடன் கூட்டமாகச் செல்வது இவர்கள் வழக்கம். இவர்களுக்கென்று சிறப்பான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. பாண்டிய மன்னன் இறந்துவிட்டால் சொர்க்கத்திலும் அவனுடனேயே இருக்க வேண்டுமென்பதற்காக அவன் உடலுக்குத் தீ மூட்டப்படும்போது இவர்கள் தாமும் தீப்பாய்ந்து மடிந்து விடுவார்கள் ‘. மார்க்கோ போலோவின் இக்குறிப்பு தென்னவன் ஆபத்துதவிகளை சுட்டுகிறது என்பது நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்தாகும்.

சோழ நாட்டில், அரச மரபுடன் மண உறவு கொண்டிருந்த விசுவாசம் மிக்க வேளக்காரப்படை போலவே, பாண்டிய மன்னர்பால் விசுவாசம் மிக்கவர்களாயிருந்த இத்தென்னவன் ஆபத்துதவிகள் பற்றிய தடயங்கள் எவையாகிலும் கிடைக்கின்றனவா என்று கீழப்பாவூரில் தேடியபோது, திருவாலீசுவரர் கோயிலுக்கு நேர் வடக்கே ஆபத்துக் காத்த அம்மன் என்ற பெயரில் சிறிய கோயில் ஒன்று இருப்பது தெரிய வந்தது. சுற்றிலும் வயல்வெளிகள் சூழ, கிணற்றின் மோட்டார் அறை போன்ற தோற்றத்தில் அமைந்த சிறிய கோயில் அது. ஆயினும் ஆபத்துக் காத்த அம்மன் என்ற பெயரும், சிவன் கோயிலுக்கு வடக்கில், ஊரின் வடவாயிற் செல்வியாக இத்தெய்வம் எழுந்தருளியிருப்பதும் கவனத்தை ஈர்த்ததால் இக்கோயில் ஆய்வு செய்யப்பட்டது.

கோயிலுக்கு வெளியே ஒரு மூலையில் கைகள் சிதைவுற்று, தலையும் தனியாக உடைந்த நிலையில், பழங்காலச் சிற்பம் (காளியின் கற்சிலை) ஒன்று காணப்பட்டது. கோயிலில் பூசை செய்து வரும் வயிராவியை (பண்டாரம் இனத்தவர்) விசாரித்ததில் இத்தெய்வம்தான் ஆபத்து காத்த அம்மன் என்றும், இசுலாமிய மன்னர் படையெடுப்புக் காலத்தில் இச்சிற்பம் உடைக்கப்பட்டதால் அரசி மங்கம்மாள் காலத்தில் (பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்) வேறு சிற்பம் செய்து வைக்கப்பட்டது என்றும், அவருடைய காலத்தில் இப்பகுதியில் குடியேறிய வைகைக் கரையாளர் எனப்படும் பிராமணர்கள்தான் இன்றும் இக் கோயிலில் வழிபட்டு வருகின்றனர் என்றும், அப்போதிலிருந்து தமது மூதாதையர் பொறுப்பில் இக்கோயில் இருந்து வருகிறது எனவும் கூறினார். மங்கம்மாள் காலத்திற்கு முன்னர் மேலப்பாவூர், குறும்பலாப்பேரி (குறுமறை நாட்டுப் பேரேரி) ஊரைச் சேர்ந்த நாடார் சமூகத்தவர் இக்கோயிலில் வழிபட்டிருக்கவேண்டும் என்று தாம் கருதுவதாகவும், இன்றும் திருவிழாக் காலங்களில் குறும்பலாப்பேரி நாடார் சமூகத்தவர் இங்கு வந்து வழிபடுவதாகவும் கூறினார்.

கோயிலின் உள்ளே, சுவரில், சிற்பத்தொகுதி ஒன்று வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத் தொகுதியைக் கன்னிமார் எனத் தவறாகக் குறிப்பிடுகின்றார், வயிராவியார். ஏழுபேர் இச்சிற்பத் தொகுதியில் காணப்படுகின்றனர். அதனால் ஏழு கன்னியர் எனத் தவறாகக் கருதப்பட்டது போலும். இவ் ஏழுபேரும் கையில் ஆயுதம் ஏந்தி நிற்கும் வீரர்கள் ஆவர். இவர்களே தென்னவன் ஆபத்துதவிகள் எனத் தோன்றுகிறது. இச்சிற்பத் தொகுதி, ஆபத்து காத்த அம்மன் சிற்பத்துக்குச் சற்று பிற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகும். அதாவது அம்மன் சிற்பத்தைப் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்தது எனக் கொண்டால், ஆபத்துதவிகள் சிற்பத்தைப் பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

மதுரைப் பாண்டியர்களின் உடன் கூட்டத்தாராகத் திகழ்ந்த உத்தம வீரர்களின் குலதெய்வச் சிற்பம், தான் என்ற முனைப்பை விடுத்துத் தொண்டர்களாகச் செயற்பட்ட அந்த முனையெதிர் மோகர்களின் குழுச் சிற்பம் ஆகியவற்றின் வழி கிடைக்கும் தடயங்கள் தென்காசிப் பாண்டியர் வரலாற்றுக்கே முன்னுரையாக அமையும் ஒரு வீரப்பாயிரம் எனில் அது மிகையாகாது.

அடிக்குறிப்புகள்

1. பாவூர் சத்திரம் பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலுள்ள பிள்ளையார் கோயிலின் முன்பு கிடக்கும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு; பார்த்துப் படிக்கப்பட்டது. ‘முனைவது மோகப் பேரேரி ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

2. ARE 395 of 1917. [2]

3. K.A. Nilakanta Sastry, The Pandyan Kingdom, Madras, 1972, P.173 [3]

maanilavan@verizon.net

Series Navigation

எஸ்.டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்

எஸ்.டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்