ஆனந்த ‘வாசன் ‘

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

நரேந்திரன்


தமிழ் எழுத்தாளர்கள் அடிக்கடி உபயோகிக்கும் ‘எதிர்பாராத விருந்து, இன்ப அதிர்ச்சி ‘ போன்ற வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி படித்திருக்கலாம். துண்டு, துக்கடா கதைகளில் கூட இன்ப அதிர்ச்சியும், எதிர்பாராத விருந்தும் வந்து நம்மைப் புளகங்கிதப்படுத்தும். ஏன் ? சமயங்களில் நமக்கே கூட நிஜ வாழ்க்கையில் எ.வி.யும் இ.அ.வும் ஏற்படலாம். மிகவும் நுணுக்கமாகக் கவனித்தீர்கள் என்றால்தான் இது தெரியவரும்.

‘மல்லிகாவைத் தள்ளிகினு போன தனபாலனை, போலிஸ்காரர்கள் அள்ளிகினு போய் கொடுப்பது ‘ எதிர்பாராத விருந்தில் சேர்த்தியில்லை. நாமெல்லோரும் எதிர்பார்த்த விருந்து அது! மாறாக, பழங்கஞ்சியை எதிர்பார்த்துப் போன இடத்தில் பாயாவும், குஸ்காவும் கிடைத்தால் ?…..எதிர்பாராத விருந்து! இன்ப அதிர்ச்சி!!….சரிதானே ?

காரணத்தோடுதான் இந்த பீடிகையெல்லாம். மேலே படியுங்கள்.

பத்தாவதோ என்னவோ படித்துக் கொண்டிருந்தேன் அப்போது (டாக்டர் குருசுவாமி முதலியார் தொண்டை மண்டல துளுவ வேளாளர் மேல் நிலைப் பள்ளி என்பது நான் படித்த பள்ளியின் பெயர். இதை விட நீளமான பெயர் கொண்ட வேறொரு பள்ளிக்கூடம் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது என்பது என் கணிப்பு). மதுரைப் பக்கமிருந்து வந்த சொந்தக்காரப் ‘பெரிசு ‘ ஒன்றின் வற்புறுத்தலின் காரணமாகவும், விருந்தோம்பலின் காரணமாகவும், அவருடன் வேண்டா வெறுப்பாக அந்த சினிமாப் படம் பார்க்கப் போனேன். 1940களின் மத்தியில் தயாரிக்கப் பட்ட மிகவும் பழைய படம். சென்னை, தங்கசாலைத் தெருவில் இருக்கும் (இருந்த ?) கிரவுன் தியேட்டரில் நடந்த ஒரு காலைக் காட்சி என்று நினைவு.

1940களில் வந்த சினிமாப் படங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லவே தேவையில்லை. ‘ஏழிசைக் குயில் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த, 72 பாடல்கள் நிறைந்த… ‘ என்று சுவரொட்டியைப் பார்க்கும் போதே பாதிப் பயல்களுக்கு அடி வயிறு கலங்கி விடும். நின்றால் பாட்டு. உட்கார்ந்தால் பாட்டு. குனிந்தால் பாட்டு. நிமிர்ந்தால் பாட்டு என்று நிப்பாட்டாமல் பாடி பார்ட்டு, பார்ட்டாகப் பின்னி எடுப்பார்கள் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த சேதி.

ரஜினிகாந்தும், கமலஹாசனும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது. என் வயதையொத்தவர்கள் தலையைக் கலைத்து விட்டுச் சிலுப்பிக் கொண்டு ரஜினி ஸ்டைல் நடை நடப்பார்கள். அப்படியாகப் பட்ட காலத்தில் வசித்த என்னை ஒரு அரதப் பழசான படத்திற்கு அழைத்துப் போனால் எப்படி இருக்கும் ? வேறு வழியில்லாமல் மூக்கால் அழுதுகொண்டே தியேட்டரில் போய் உட்கார்ந்தேன்.

படம் ஆரம்பித்து முதல் ஐந்து நிமிடங்கள் வரை பழைய சினிமாப் படங்களுக்கே உரிய சகல இலட்சணங்களுடன், எந்த மாற்றமும் இல்லாமல், கதாநாயகி குடத்துடன் பாட்டு பாடிக்கொண்டே நாட்டியமாடுவதுமாக சாதாரணமாகத்தான் இருந்தது. ‘ஆரம்பமே இப்படியா ? இன்னும் இரண்டரை மணி நேரத்தை எப்படி ஓட்டப் போகிறோனோ! ‘ என்று நொந்து போய் உட்கார்ந்திருந்தேன். அப்புறம் நடந்ததைச் சொன்னால் நம்ப மாட்டார்கள். அடுத்த பதினைந்து நிமிடங்களில் என் எண்ணம் அப்படியே தலைகீழாக மாறிப் போனது. விறு விறுப்பான கதையோட்டமும், வித்தியாசமான காமிரா கோணங்களும், அற்புதமான நடிப்பும், இசையமைப்பும் என முற்றிலுமாக அத் திரைப்படம் என்னை மெய்மறக்கச் செய்து விட்டது என்றால் மிகையில்லை. ஏதோ வசியத்திற்குக் கட்டுப்பட்டவன் போல உட்கார்ந்திருந்தேன்.

எதிர்பாராத விருந்து, இன்ப அதிர்ச்சிக்கெல்லாம் நெத்தியிலடித்தாற் போல அர்த்தம் புரிந்தது அந்த சமயத்தில்தான்.

ஆனந்த விகடன் பத்திரிகை அதிபரும், சென்னை ஜெமினி ஸ்டுடியோவின் ஸ்தாபகருமான அமரர் எஸ்.எஸ். வாசன் அவர்கள் இயக்கித் தயாரித்து, தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் பரபரப்பாக ஓடி வசூலை வாரிக் குவித்த ‘சந்திரலேகா ‘தான் அந்தத் திரைப்படம். அந்தக் காலத்திலேயே 40 இலட்சம் ரூபாய்கள் செலவு செய்து தயாரிக்கப் பட்ட பிரம்மாண்டமான படைப்பு. ஆங்கிலத்தில் சப்-டைட்டிலுடன் வெளிநாடுகளில் கூட அந்தப் படத்தைத் திரையிட்டார்களாம். சந்திரலேகாவைப் பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் சொன்னாராம், ‘சினிமாஸ்கோப் முறையில் சந்திரலேகா தயாரிக்கப் பட்டிருந்தால், இந்தியர்களை விடவும் அமெரிக்கர்கள்தான் இந்தத் திரைப்படத்தை அதிகம் பார்த்து ரசித்திருப்பார்கள் ‘ என்று. அதில் சந்தேகமே இல்லை.

ஹாலிவுட்டில் இதுவரை தயாரிக்கப் பட்ட சினிமாப் படங்களின் தர வரிசையில், சிறந்த முதல் பத்து படங்களில் முதலாவதாக வருவது ‘Casablanca ‘ என்ற திரைப்படம். அமெரிக்காவின் தீவிர சினிமா ரசிகர்கள் கருத்து இது. கதை அமைப்பிலும், படம் பிடிக்கப் பட்ட விதத்திலும், நடிப்பிலும் மிகவும் சிறந்த படம் என பலராலும் பாராட்டப் பட்ட ஒரு திரைப்படம் Casablanca. ஹாலிவுட்டில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர்களில் மிகச் சிறந்த ஒருவராக இன்றளவும் கருதப்படும் சர். ஹம்ஃப்ரி போகார்ட் (Humphry Bogart), மற்றும் அந்தக் கால knockout ஆன இன்க்ரிட் பெர்க்மனும் (Ingrid Bergman) நடித்த படம். பின்னாளில் தயாரிக்கப் பட்ட ஹாலிவுட் படங்களுக்கு அளவுகோலாக Casablanca-வைச் சொல்வார்கள்.

ஏறக்குறைய ‘சந்திரலேகா ‘வும் Casablanca-வைப் போல 1940களில் மத்தியில் தயாரிக்கப் பட்ட திரைப்படம்தான். அதற்குப் பிறகு ஹாலிவுட் படங்களின் தொழில் நுட்பமும், தரமும் இமாலய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்தியத் திரைப்படங்களுடன் ஒப்பீடு செய்ய முடியாத அளவிற்கு மலையென வளர்ந்திருக்கிறது. நமது இந்தியத் திரைப்பட வல்லுனர்களோ செக்கு மாடு சுற்றி வருவது போல அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் வளர்ச்சி என்ற வியாக்யானம் வேறு செய்து கொண்டிருப்பதுதான் நகைப்பிற்கிடமானது.

வளர்ச்சி என்பது quantity-யில் இல்லை; quality-யில் தான் இருக்கிறது என்பதை உணரும் வரை இந்திய திரைப்பட உலகம் வளர்ச்சி அடையவே அடையாது. அமரர் வாசன் போன்றவர்கள் இன்றைக்கு இருந்திருந்தால் உலகத் திரைப்படங்களுடன் போட்டியிடும் வகையில், தரமுள்ள நல்ல திரைப்படங்கள் இந்தியாவிலும் தயாரிக்கப் பட்டிருக்கக் கூடும். தமிழ் மூதாட்டி அவ்வையாரை திரைப்படமாகத் தயாரித்து, அதையும் ஹவுஸ் ஃபுல்லாக ஓட வைத்த பெருமையுடையவர் அமரர் வாசன். அவரது திறமையின் மேல் அவருக்கிருந்த தன்னம்பிக்கை அபாரமானது.

******

சமீபத்தில் திரு. எஸ். எஸ். வாசன் அவர்களின் நூற்றாண்டு விழா மலரை ஆனந்த விகடன் வெளியிட்டிருக்கிறது. சென்ற சனிக்கிழமை என் கைக்குக் கிடைத்த அந்த மலரை, அப்படி இப்படி நகராமல் cover to cover ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மிக உயரிய தரத்துடனும், அழகான அமைப்புடனும் அமைந்திருக்கும் அந்த மலரில், திரு. வாசன் அவர்களிடம் பணிபுரிந்த, அவரை அறிந்த, பழகிய பலர் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. பல அரிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களுடன் கூட.

மலரைப் படித்து முடித்த பின், அமரர் வாசன் அவர்கள் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில், வெறும் கையால் முழம் போடும் ‘ஜிலு ஜிலு ஜில்ப்பா ‘க்களை மட்டுமே கண்டு பழகிய எனக்கு, திரு. வாசன் அவர்களின் நேர்மையும், கடின உழைப்பும், தயாள குணமும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் ஒரு தமிழ்நாட்டுக்காரன் என்ற முறையில் மிகவும் பெருமிதமடையச் செய்கிறது. அவர் மட்டும் சினிமாத் துறையில் ஈடுபடாமல் வேறொரு தொழிலில் ஈடுபட்டிருந்தாரென்றால்…. ?…!!!

ஆனந்த விகடன் வெறும் ஒரு பத்திரிகையில்லை. ஒரு சமுதாயத்தின், கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு அது. தமிழர் வாழ்வின் ஒரு அங்கம் என்றால் கூட மிகையில்லை. புலம் பெயர்ந்து, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் கூட இன்னும் ஆனந்த விகடனை மறந்து விடவில்லை என்பதிலேயே அதன் முக்கியத்துவத்தை உணரலாம். ஒரு கை தேர்ந்த சிற்பியைப் போல திரு. வாசன் செதுக்கிச் செதுக்கி ஆனந்த விகடன் பத்திரிகையை வளர்த்திருப்பது, இம் மலரின் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு விளங்கும்.

சுய விளம்பர எதிர்ப்பாளரான தன் தகப்பனாருக்கு அளித்த உறுதி மொழியையும் மீறி, இன்றைய ஆனந்த விகடன் பத்திரிகை அதிபரும், வாசன் அவர்களின் புதல்வருமாகிய திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் இந்த மலரை வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டக் கூடிய ஒரு செயலாகும். இல்லாவிடில், என் போன்றோர்க்கு திரு. வாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் அளித்த பங்களிப்பு பற்றி அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டாமலேயே போயிருக்கும். இப்படிப்பட்ட ஒருவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தார் என்பதே பல தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகக் கூட இருக்கலாம். இல்லையா ?

அமரர் எஸ்.எஸ். வாசன் அவர்களின் நூற்றாண்டு விழா மலரை மிக நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் ஆனந்த விகடன் நிர்வாகம் மிகவும் பாராட்டிற்குரியது.

******

narenthiranps@yahoo.com

Series Navigation