ஆட்டோகிராஃப் 19 :நீயெனதின்னுயிர் கண்ணம்மா!எந்த நேரமும் நின்றனை போற்றுவேன்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

சித்ரா ரமேஷ்


தீபாவளி என்றாலே புதுத் துணி, பட்டாசு, பட்சணம், நசநசக்கும் மழை, களை கட்டிவிடும் மெயின் பஜார் கடைகள், விதவிதமான விளம்பரங்கள். இவை எல்லோருக்கும் நினைவு வரும். ஆனால் எங்களுக்கு இவற்றோடு ஸ்ட்ரைக், அந்த வருடம் தீபாவளி கொண்டாடப் போகிறோமா இல்லையா என்ற கவலையும் சேர்ந்து கொள்ளும். அந்த வருடம் தீபாவளி போனஸ் கிடைத்தால் தீபாவளி! அதனால் தீபாவளிக்கு முன்னால் தொழிற்சங்கப் போராட்டங்கள், அரிவாள், சுத்தி, நட்சத்திரக் கொடிகள். கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கள் பரபரப்புடன் இயங்கத் தொடங்கும். சைக்கிள் ஊர்வலங்கள். கோஷம் போட்டுக் கொண்டு போகும் தொழிலாளிகள். இதையெல்லாம் பார்க்கும் போதே தீபாவளி மூட் வந்து விடும். 40% சதவீதம், 33.3% சதவீதம், 20% சதவீதம் என்று கணக்கிட்டு சேர்மேனோடு பேச்சுவார்த்தை. கடைசியில் கிளைமேக்ஸில் தூக்கிலிடப்படாமல் காப்பாற்றப்பட்டு விடும் கதாநாயகன் போல் எங்கள் தீபாவளியும் போனஸ் பணம் வந்து காப்பாற்றிவிடும். நிறைய பேர் வீட்டில் போனஸ் பணம் வந்தவுடன் தீபாவளிக்கு சைக்கிள் வாங்குவார்கள். சைக்கிள் இல்லையென்றால், சைக்கிள் ஓட்டத் தெரியவில்லையென்றால் தொலைந்தீர்கள்! தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது என்று தலையில் ஒரு துணியை அழுத்திக் கொண்டு ஆஸ்பிட்டல் போக பஸ்ஸுக்காக காத்திருக்கும் நிலைமை! அந்தத் துணி முழுவதும் ரத்த மயமாகி ரத்தப் பெருக்கு உறைந்து ரத்தக் காயம் தன்னால் ஆறிப் போய் வீட்டுக்குப் போய்விடலாம். பஸ் மட்டும் வராது. பஸ் இல்லையென்றால் ஆட்டோ,சைக்கிள் ரிக்ஷா ஏதாவது வசதி செய்து போகலாமே என்று கேட்டால் என்ன சொல்வது! ஆகாயத்தில் விமானம், ஹெலிகாப்டர் இவற்றைப் பார்ப்பது போல் வெளியூர் சென்று ஆட்டோ, டாக்ஸி இவற்றைப் பார்க்கலாம். ரிக்ஷாவை ‘ரிக்ஷாகாரனில் ‘ பார்த்தால் உண்டு. இந்த மாதிரி ஒரு அமைப்பில் சைக்கிளை நம்பாமல் வாழ முடியுமா ? உணவு, உடை, இருப்பிடம், சைக்கிள் என்ற நான்கும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்! முன்னால் ஒரு குட்டி சீட்டில் ஒரு குழந்தை,அடுத்து ஹாண்டில் பாரில் மிச்சமிருக்கும் இடத்தில் இன்னொரு குழந்தை, பின்னால் காரியரில் கையில் குழந்தையுடன் அம்மா! இப்படிபட்ட காட்சிகளை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். அப்ப சிவப்பு முக்கோணம் மூன்று குழந்தைகளை அனுமதித்தது. அதை காரியத்தில் காட்டி பின்பற்றுபவர்களுக்கு சைக்கிள் பரிசு உண்டு!

ஆக தீபாவளி போனஸ் வந்தவுடன் அந்த வருடம் யாருக்கு சைக்கிள் வாங்குவது என்று ஆலோசனை நடக்கும். வீட்டுக்கு மூன்று சைக்கிளாவது இருக்கும். தெருவுக்கு தெரு பீடி சிகரெட் கடையெல்லாம் இருக்காது. ஆனால் மரத்தடியில் சாக்குப் பை போட்டு சைக்கிள் பம்ப், சைக்கிள் ரிப்பேர் செய்யத் தேவையான உபகரணங்களோடு ஒரு அலுமினிய பேஸினில் தண்ணீரோடு சைக்கிள் ரிப்பேர் கடை கண்டிப்பாக இருக்கும். தீபாவளி டிரஸ், பட்சணம், புதுசா ரிலீஸ் ஆகிற திரைப்படம், நம்ப ஊர் தியேட்டருக்கு தீபாவளிக்கு எந்த தீபாவளிப் படம் வரும் போன்ற சாதாரணக் கவலைகளோடு எத்தனை ரூபாய்க்கு பட்டாசு வாங்கப் போகிறோம், அப்பா பட்டாசை மெட்றாசிலிருந்து வாங்கி வந்து விடுவாரா இல்லை நம்ப லிஸ்ட் போட்டு இங்கேயே வாங்கப்போகிறோமா போன்ற முக்கியக் கவலைகள் சேர்ந்து விடும். மெட்றாசில் புது வகை பட்டாசு வகைகள் கிடைக்கும், விலையும் கொஞ்சம் குறைச்சலாக இருக்கும் என்றாலும் பட்டாசுக் கடையிலிருந்து லிஸ்ட் வாங்கிக் கொண்டு வந்து அப்பாவிடம் எத்தனை ரூபாய் பட்ஜெட் என்று விசாரித்துத் தெரிந்துக் கொண்டு, அதுக்கு தக்க லிஸ்ட் போட்டு கடைக்கு நாமே போய் வாங்கும் சுகம்… இது நீங்க நினைப்பது போல் அவ்வளவு எளிமையான விஷயம் இல்லை. அப்பா பிடி கொடுத்தே பதில் சொல்ல மாட்டார். எல்லாம் நான் பாத்து வாங்கித் தருவேன் என்று வாக்குறுதி கொடுத்தாலும் ரொம்ப கவலையாகத்தான் இருக்கும். கண்ணன் தூது போவது போல் கடைசித் தம்பிதான் தூதுவன் கம் ஒற்றனாக இருந்து இதைப் பற்றிச் சரியான தகவல் தருவான். கடைசியில் எல்லோரும் சேர்ந்து கடைக்குப் போய் அப்பாவுக்கு பெரிய செலவு வைத்து விடுவோம். வருடாவருடம் துப்பாக்கி வாங்கி தருவார். இதையே பத்திரமா அடுத்த தீபாவளிக்கும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கண்டிஷனோடு! என்னக் கண்டிஷன் போட்டாலும் எதிர்த்துப் பேசுகிற வழக்கமெல்லாம் வழக்கொழிந்து போய் விடுகிற அற்புத நேரமது! இதைப் போல் குழந்தைகள் கிடைக்க என்ன தவம் செய்தனை என்று கவி பாடும் அளவிற்கு அவ்வளவு சமத்தாய் நடந்து கொண்டு, அவர் பாவம் இந்த வருடம் 25 ரூபாய்தான் பட்ஜெட் என்று சொல்லித்தான் கூட்டிக் கொண்டுப் போவார். வரும் போது கிட்டத் தட்ட 100 ரூபாய் செலவழித்திருப்போம். உண்மையிலேயே ‘மருதநாயகம் ‘ போல் ரொம்பப் பெரிய பட்ஜெட்தான்! வீட்டுக்கு வந்ததும் பட்டாசு விலையெல்லாம் கேட்டுவிட்டு எனக்கு ஒரு பட்டுப் புடவை எடுத்துத் தர மனசாகாது. நூறு ரூபாய்க்கு காசை கரியாக்கியாச்சு என்று குழந்தைப் போல் சொல்லும் அம்மா! தீபாவளியென்றால் பட்டு ஸ்பெஷல் ஐட்டம் கிடையாது. பட்டாசுதான் என்று உணர்ந்த அப்பா இதையெல்லாம் காதில் விழாதது போல் நகர்ந்து விடுவார். நூறு ரூபாய்க்கு பிரமாதமாகப் பட்டுப் புடவை வாங்கலாம்தான்! அந்த வயதும், நூறு ரூபாய்க்கு பட்டாசு விடுகிற மனசும் இப்போது நினைத்தால் கூட கிடைக்காதே! இந்த பட்டாசு விடுவதற்கு ஆசைப்பட்டு சமீபத்தில் ஒரு முறை சென்னை வந்து பட்டாசுப் புகை ஒத்துக் கொள்ளாமல் தீபாவளியை டாக்டர் சொன்ன விதிமுறைகளுடன் கொண்டாட வேண்டியதாகிவிட்டது. என்ன விதிமுறை ? பட்டாசே வெடிக்கக் கூடாது. பட்டாசுப் புகைபடுகிற இடத்தில் நிற்கக் கூடாது. எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம். எண்ணெயில் பொறித்த எந்த பட்சணமும் சாப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கூடவே ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரையும் கொடுத்தனுப்பாதக் குறையாக நெபுலைசர் வைத்து அஸ்தலின் இத்யாதிகளோடு பாதி சொத்தை வேறு எழுதி வாங்கிக் கொண்டுதான் விட்டார். இதெல்லாம் இல்லாத தீபாவளி என்ன தீபாவளி ? தொலைக்காட்சியில் தமிழ் தெரியாத நடிகைகள் கொடுக்கும் தமிழ் பேட்டிகளைப் பார்த்துக் கொண்டு இந்திய இல்லை உலகத் தொலைகாட்சிகளிலேயே முதன் முதலில் தோன்றும் திரைப்படங்களை பார்த்துக் கொண்டு என்ன முட்டாள்தனமான தீபாவளி! உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறை என்பது கொஞ்சம் கதை! அப்படி வந்த படங்களை ஏற்கனவே இந்த ஊர்ல பார்த்து இருக்கிறோம்! இந்த மருந்து சாப்பிட்டால் கனவு உலகத்தில் உலவுகிற மாதிரி லேசாக பறக்க முடியும். டிரைவ் பண்ணாதீங்கன்னு ஆலோசனை கொடுப்பார். மீறி செய்தால் ‘சக்கரைக் கட்டி ராசாத்தி உன் மனசை வெச்சுக்க காப்பாத்தி ‘ என்று காரோடு சேர்ந்து பறந்து உயிரை காப்பாதிக்க உத்தரவாதம் கிடையாது. பட்டாசு விடுவதை இனிமேல் கணினித் திரையில் வரும் வாழ்த்துகளில் மட்டுமே பார்க்க முடியும். சே! அப்போது பெரியவளானதும் வாங்குகிற சம்பளத்தில் முழுவதும் பட்டாசு மட்டுமே வாங்க வேண்டும் என்ற கற்பனையெல்லாம் காற்றோடு போயாச்சு!

தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பே பட்டாசையெல்லாம் பாகம் பிரித்து அப்பா அம்மாவுக்கும் நீங்க எதையெல்லாம் வெடிப்பீங்கன்னு கேட்டு அவங்களுக்கும் பாகம் போட்டு த்ிரி கிள்ளி வெங்கலத் தாம்பாளத்தில்தான் காய வைக்க வேண்டும். அப்போதுதான் நன்றாக சூடேறி சரியான பதத்தில் காயும். மழை வந்து விட்டால்

பேஜாராகிவிடும். அதுவும் தீபாவளியன்று காலையில் மழை பெய்து விட்டாலோ இல்லை முதல் நாளிரவு மழை பெய்திருந்தாலோ அந்த வருட தீபாவளிக் கொண்டாட்டமே சரியாக அமையாது. ஏற்கனவே மழைபெய்து வாசலில் தண்ணீர் தேங்கியிருக்கும். இதில் என் வீட்டில் வேலை பார்க்கும் கண்ணம்மா வேறு வாசல் தெளித்து கோலம் போடுகிறேன் என்று தண்ணீரைக் கொட்டி அலம்பிவிடுவாள். முதல் நாள் ராத்திரியே

என் தம்பி கண்ணம்மாவிடம் கண்டிப்பாகச் சொல்லி விடுவான். இன்னிக்கி ராத்திரியிலேந்து என் வீட்டில் நீ இருக்கக் கூடாது என்று! எங்க வீட்டுக்குப் பின்னால்தான் சின்னதா ஒரு குடிசைப் போட்டுத் தங்கியிருந்தாள். அவள் எங்கேப் போவாள் ? ஆனாலும் சின்னப் பையன் என்ற சலுகையில் கண்ணம்மாவை கண்டிப்பான்.

அவள் ஒன்றும் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்க மாட்டாள். ஒரு நாளு கிழமைன்னா வாசத் தெளிக்காம எப்படி ? கடைசியில் அம்மாதான் சரி நாளைக்கு வாசல்ல தண்ணி கொட்டாம கோலம் மட்டும் போட்டுவிடு என்று சமாதானப் படுத்துவாள். என் அம்மா வேலைக்குப் போனதிலிருந்து கண்ணம்மாதான் என் அம்மாவுக்கு ஆஸ்தான மந்திரி மாதிரி! எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். ரெண்டு பேரும் தோழிகள் மாதிரி பேசிக்கொள்வார்கள். என் அம்மா மைசூர் சாண்டல் சோப் வாங்கும் போது தனக்கும் சேர்த்து வாங்கச் சொல்லும் நாசூக்கானவள். பாலச்சந்தர் படம் பார்த்து விட்டு விமர்சனம் செய்யும்

அறிவுஜீவி! போய் பாத்துட்டு வாம்மா! புருஷங்காரன் என்ன செஞ்சாலும் பாத்துக் கிட்டு சும்மாயிருக்க முடியுமா ? என்று ‘அவர்கள் ‘ பார்த்துவிட்டுச் சொன்னப் புதுமைப் பெண்.

அம்மாவும் அப்பாவும் முழு நேரமும் எங்க அம்மா அப்பாவாகவே இருக்க முடியுமா ?

கண்ணம்மாவிடம் பார்த்துக்கச் சொல்லிவிட்டு நைசா நைட்ஷோ சினிமா பாத்துட்டு வருவாங்க! காலையில் விஷயம் தெரிந்து விசாரித்தால் சின்னக் குழந்தைக்கள்ளாம் பாக்க முடியாது அது ‘ஏ ‘ படம் என்று சொல்லி சமாள்ிப்பாள். அம்மா அநியாயம்! தீர்க்கசுமங்கலிப் படமெல்லாம் ‘ஏ ‘ படமா ? அது அக்மார்க் முத்திரைப் பெற்ற குடும்பப் படமாயிற்றே! கண்ணம்மா தன் புருஷனை ஊரில் விட்டு விட்டு வந்து விட்டாள்.

கேட்டால் அவன் கிழவன் அவனோட என்னத்த குடும்பம் நடத்ததுவது ? என்று பதில் சொல்வாள். ‘ஏன் கல்யாணத்தில் போது தெரியவில்லையா அவன் கிழவன் என்று! ஒரு பையன் வேறு இருக்கிறானே ? என்று அம்மா கேட்டால் ஆமா பையந்தான் தலையெடுத்து கஞ்சி ஊத்தப் போறானாக்கும் என்பாள். அவள் அனுமதி கேட்டா அவளுக்குக் கல்யாணம் நடந்திருக்கும் ? ஏதோ தப்பித்தவறி ஒரு குழந்தைப் பிறந்து விடுவதால் நிறைவுப் பெற்ற தாம்பத்தியம் ஆகிவிடுமா ? நம் மத்தியதர வர்க்கத்து

அளவுகோல்கள் அவளுக்குப் பொருந்தாது. அவள் யாரையும் சார்ந்து நிற்காத சுதந்திரமானப் பெண்மணி. காலையில் குளித்து கொண்டவனுக்கு எது பிடிக்கும் குழந்தைகளுக்கு எது பிடிக்கும் என்று பார்த்து சமைத்து வீட்டு வேலைகள் எல்லாம் செவ்வனே செய்து சாயங்காலம் ஆனா தலை வாரி மூஞ்சி அலம்பி பொட்டு வைத்து

விளக்கேற்றி கோவிலுக்குப் போனால் கொடுக்கும் குங்குமத்தை நெற்றியில், உச்சி வகிட்டில் கழுத்தில், கழுத்தில் தொங்கும் தாலியில் எல்லாம் அப்பிக் கொண்டு சுமங்கலியாய் கொண்டு போய்விடு தாயே என்று வேண்டிக் கொண்டு வாழும் குடும்பவிளக்குகள் பாரதிதாசனுக்கு வேண்டுமானால் காவியக் கதாநாயகி ஆகலாம்.

தீபாவளிக்குப் பட்டுப் புடவை, நாலு இடத்துக்கு போனால் கல்யாணம், கார்த்திகை என்றால் மதிப்பாகப் போட்டுக் கொள்ள நகைகள் இவற்றோடு பெண்ணின் தேவைகள் தீர்ந்து விடுகிறதா ? பொருத்தம் உடலிலும் வேண்டும் என்று சும்மாவாப் பாடினார் ?

புருஷன் மனசுக்குப் பிடிக்கவில்லையென்றால் கட்டப்பஞ்சாயத்து மூலம் விடுதலை பெற்று விடலாம் என்ற எளிமையான சட்டங்கள்! ஆமா மாமாவுக்கு என்ன தெரியும் என்று வெறுத்துப் பேசும் பெண்மணிகள் யாரும் இந்த முடிவெல்லாம் எடுக்க மாட்டார்கள். அவருக்கு இந்த கலர் வாங்கினாப் பிடிக்காது, வேலைக்குப் போனா பிடிக்காது, சத்தமாச் சிரிச்சா பிடிக்காது, பாட்டு கேட்டாப் பிடிக்காது, மை இட்டுண்டாப் பிடிக்காது, அது பிடிக்காது, இது பிடிக்காது என்று அடுக்கிக் கொண்டேப் போகும் பெண்களை சற்று அனுதாபத்துடன் தான் பார்க்கத் தோன்றுகிறது.கடைசியில் அவர்களுக்கு தங்களையே பிடிக்காமல் போய்விடுமோ ?இதில் எத்தனை உண்மையிருக்குமோ ? பெண்களுக்கு சற்று நாடகம் போடுவதென்றால் பிடிக்குமே! ஆண்கள் என்ன அவ்வளவு முசுடுகளா ? இத்தனையும் சொல்லும்போது அந்த மாமாவைப் பார்த்தால் அவர் பாட்டுக்கும் தேமேயென்று உட்கார்ந்திருப்பார். சரி இந்த வியாக்கியானமெல்லாம் கண்ணம்மாவுக்குப் பொருந்துமா ? கண்ணம்மாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். கண்ணம்மாவைப் பார்க்க வருவார். வரும்போது தன்னுடைய குழந்தைகளைக் கூட கூட்டிக் கொண்டு வருவார். அது பிளட்டானிக் உறவு என்றெல்லாம் கதை விடப் போவதில்லை. அவர்தான் எங்க வீட்டு ரேடியோவுக்கு ஸ்டாண்ட் செய்து கொடுத்தார். யுனிகோட் மாதிரி ரேடியோ ஸ்டாண்ட்டும் ஒரே யுனிவெர்ஸல் டிசைன்! எங்க ஊர் தச்சர்களுக்கெல்லாம் இந்த ஒரே ஒரு டிசைன்தான் தெரியும். யார் வீட்டுக்குப் போனாலும் இதே ரேடியோ ஸ்டாண்ட். அப்புறம்தான் தெரிந்தது. தமிழ் நாடு முழுவதும் இதே டிசைன்தான் என்று.

அவருடைய நண்பர் ஒருவரும் கூட வருவார். கடைசியில் ‘சங்கம் ‘ படம் மாதிரி நண்பன் கண்ணம்மாவின் காதலனாக மாறிவிட இவர் கொஞ்ச நாள் தேவதாஸ் மாதிரி திரிந்து கொண்டிருந்தார். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் கண்ணம்மா சொல்லாமல் கொள்ளாமல் அந்த ‘பாய் ஃபிரெண்டுடன் ‘ ஓடிப் போனதுதான்! அம்மாவுக்கு மனசு ஆறவேயில்லை. எவ்வளவு நன்றாகப் பழகினேன். “அம்மா அவர் கூட வந்து இருங்குறாரு நான் போறேன்ன்னு” ஒரு வார்த்தை சொல்லி விட்டு போயிருக்கலாம் என்று புலம்பிக் கொண்டேயிருந்தாள். நண்பர்கள் செய்யும் துரோகங்கள் சீக்கிரம் மறக்கப் பட்டு விடுமா ? என்னவோ கண்ணம்மாவின் கேரக்டருக்கு அது ஒரு பெரிய சறுக்கல்தான்!

தீபாவளி வாசல் தெளிக்காமல் கொண்டாட முடியும். புது டிரஸ் இல்லாமல் முடியுமா ? தையல்காரர் என்று ஒரு வில்லன் இருந்தார். “பாப்பா தீபாவளித் துணி சீக்கிரம் வாங்கிக் கொடுத்துடு நல்லா புது டிசைன்ல தெச்சுத் தறேன் என்று டிசைன் புக்கெல்லாம் காட்டுவார். புதுத் துணி வாங்கிக் கொடுத்து விட்டு அதை மறந்து விட வேண்டும். எப்பப் பாத்து தச்சாச்சா என்று கேட்டாலும் இதோ பட்டன்தான் கட்ட வேண்டும் என்று சொல்லி விட்டு பாப்பாவோடத் துணியை எடுப்பா கட்டிங் பண்ணணும்

என்று அஞ்சாமல் புளுகுவார். சரி துணியை எடுத்து கட் பண்ணி விட்டாரே தைப்பதற்கு ரொம்ப நாள் ஆகாது என்று திரும்பப் போய்க் கேட்டால் இதோ ஆச்சே என்று திரும்பிப் பார்த்தால் ஜீபூம்பா பூதம் போல் நம் துணி உரு மாறாமல் துணியாகவே

நம்மைப் பார்த்துச் சிரிக்கும். கோபம் வந்தாலும் கொஞ்சம் கூட அசராமல் தீபாவளிக்கு இன்னும் எத்தினி நாள் இருக்கு ? அதுக்குள்ளே உனக்கு பத்து டிரஸ் தச்சிடுவேன் என்று தன் தொழிலில் அபார நம்பிக்கையோடு சொல்லி விடுவார். கடைசி நாளன்று ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு வழியாய் நம் கையில் கிடைக்கும் போது

செம த்ரில்லாத்தான் இருக்கும் போட்டுப் பார்க்கும் வரை! போட்டுப் பார்த்தால்தான்

எப்படியெல்லாம் சொதப்பித் தள்ளியிருக்கிறார் என்பதும் புரியும். ஸ்ரீதேவி படத்தைக்

காட்டிச் சொன்ன புது டிசைனும் இருக்காது. நம் அளவும் இருக்காது. போய்க் கேட்டால் நீ சொன்ன மாதிரிதானே தச்சேன். நீ இவ்வளவு ஒல்லியா இருந்தா இந்த டிசைன் எடுபடாது என்று நம் மீதே குற்றத்தைத் திருப்பி விடுவார். தீபாவளி முடிஞ்சதும்

இந்த சட்டையை திருப்பிக் கொடு சரி பண்ணித் தருகிறேன் என்று சமாதானப் படுத்தினாலும் ஒரு முறை சரியாக அமையாத டிரஸ் என்ன செய்தாலும் சுமாராகத்தான்

இருக்கும் என்று தெரியாதா ? பாரதியார் வேலைக்காரர்களால் பட்ட அவதிகளை எழுதியிருக்கிறாரே! அவர் டைலரிடம் எதையும் தைத்து வாங்கியதில்லையா ?

ஆக தீபாவளிக்கு கதாநாயகன் பட்டாசு என்றால் வில்லன் தையல்காரர்தான்!

வீட்டில் பலகாரம் செய்வதற்கு வரும் சமையல்கார மாமா! சுட சுட ஜாங்கிரி பிழியும் போதே எடுத்து சாப்பிடும் ரசனை! அதிர்சம் பண்ணுவதற்கு பிசைந்து வைத்திருக்கும் மாவு ராத்திரி முழுவதும் ஊற வைத்து மறு நாள்தான் பொறிக்க வேண்டும்.அந்த மாவை எடுத்து தின்று விட்டு இதை எதுக்கு வேஸ்ட்டா பொறிக்கறே என்று கேட்டு…. தீபாவளிக்கு பட்சணம் நைவேத்தியம் கிடையாது என்பதால் எல்லாவற்றையும் தின்று ருசி பார்க்கலாம். தீபாவளி வரைக்குமாவது கொஞ்சம் பட்சணம் வைத்திருக்க வேண்டும். யாராவது வீட்டுக்கு வந்தா தர வேண்டாமா ? என்று அம்மா சொன்னால் மிக்ஸரில் இருக்கும் அவல், பொட்டுக்கடலை, கொஞ்சூண்டு

போனாப் போகிறது என்று மிச்சம் வைத்திருக்கும் பூந்தி இதைக் காட்டி இதைக் கொடுத்தால் போதும் என்று சொல்லிவிடுவோம். தீபாவளி மலர்கள்! தவறாமல் இடம் பெறும் மைசூர் பாகு, தலை தீபாவளி மாப்பிள்ளை ஜோக்ஸ்! குனேகா செண்ட் வாசனையுடன் வந்த ஆனந்தவிகடன் தீபாவளி மலர் ஞாபகம் இருக்கா ?

காலங்கார்த்தாலெ எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து புது டிரஸ் போட்டுக் கொண்டு லேகியம் சாப்பிட்டுவிட்டு (ஆ! காரம்!) பட்டாசையெல்லாம் வெடித்துவிட்டு

சாயங்காலத்திற்கு மிச்சம் அம்மா அப்பா ஷேர் பட்டாசு இருக்கிறதே! எந்த தெருவில்

நிறைய வெடித்திருக்கிறார்கள் என்று நகர்வலம் வந்து பட்டாசுக் குப்பைகள் மூலம்

கண்டு பிடித்து பட்சணத்தைச் சாப்பிட்டுக் கொண்டே அப்படியே சோபாவில் சாய்ந்து ஒரு தூக்கம் தூங்குவோமே அந்தத் தூக்கத்திற்கு ஈடு இணை வேறு எதிலும் கிடையாதுதானே!

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation