ஆக்கலும் அழித்தலும்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

ரெ.கார்த்திகேசு


“இது என்ன ? இது என்ன ? ஏன் இப்படி பண்ண ?”

பொத்து பொத்தென்று கையால் அடிக்கிற சத்தம் கேட்டது. தொடர்ந்து மல்லி சினுங்கி முனகி “வே” என்று அழும் சத்தம் கேட்டது.

அப்போதுதான் கணினியில் உட்கார்ந்து அந்த வார இணைய இலக்கிய இதழான திண்ணையில் வைரமுத்துவுக்கு சாஹித்திய அக்காடமி பரிசு கொடுத்தது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம் என்று யாரோ ஒருவர் எழுதிய சூடான கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தார். “கள்ளிக்காட்டு இதிகாசம்” படித்து மகிழ்ந்தவர்களில் அவரும் ஒருவர். இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்படி ஒரு காவிய செழிப்பு மிக்க நாவல் வந்திருந்தது ரொம்ப நிறைவான விஷயமாக இருந்தது. அதற்கு சாஹித்திய அக்காடமி பரிசு கிடைத்ததும் ரொம்ப மகிழ்ந்து கொண்டாடியவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அதை இப்படிக் கொச்சைப் படுத்துகிறார்கள் என்று பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. தமிழ்நாட்டுச் சிற்றிதழ்களில் நடக்கின்ற இலக்கிய குடுமிப்பிடி போராட்டங்கள் இப்போது இணையத்தின் மூலம் உலகம் முழுக்கவும் உள்ள வாசகர்களுக்குப் பரவி விட்டது ஒரு முன்னேற்றமா பின்னடைவா என யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் வரவேற்பறையில் இந்தக் கலவரம்.

“இனிமே இப்படிப் பண்ணினே, ரோத்தானை எடுத்து வெளுத்திடுவேன்” அழுகையின் பின்னணியில் மருமகளின் குரல் ஆத்திரமாகச் சீறியது.

பேத்தியின் அழுகுரலைக் கேட்டபின்னும் கணினியில் உட்கார்ந்திருக்க மனமில்லை. திண்ணை வலையகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வெளியே வந்தார். மல்லி கண்ணைக் கசக்கி அழுது கொண்டிருந்தது. அவரைக் கண்டதும் அழுகையின் சுருதி கூடியது. செல்ல அழுகைச் சேர்ந்து கொண்டது. அருகில் வந்து அணைத்துக் கொண்டார். “ஏம்மா பிள்ள கிட்டச் சத்தம் போட்ற ?” என்று மருமகளைக் கோபித்தார்.

“பாருங்க மாமா, என்ன பண்ணி வச்சிருக்கின்னு..” என்று மருமகள் சுவரைக் காட்டினார். அண்மையில்தான் புதுப்பிக்கப்பட்ட மகனின் சொகுசு அடுக்குமாடி வீட்டில், எந்த வண்ணம் பொருத்தமாக இருக்கும் எனத் தேடித்தேடி யோசித்து முடிவுபண்ணி வாங்கிய விலையுயர்ந்த ஒருவாறான மஞ்சள் கலந்த வெள்ளை வர்ணம் பூசப்பட்ட சுவரில் மல்லி தன் கருப்புக் கிரேயோனால் மூன்று கோடுகள் தாறுமாறாகக் கிறுக்கி வைத்திருந்தது.

“என்னம்மா இப்படி பண்ணிட்ட..” என்று கேட்டார்.

“ஆ”னா எழுதினேன் தாத்தா என்றது. உச்சியில் முத்தமிட்டார்.

*** *** ***

மகனும் மருமகளும் கூட்டாகக் கடன் வாங்கி இந்தப் புதிய அப்பார்ட்மண்ட் வாங்கிக் குடி வந்து ஆறு மாதம்தான் ஆகியிருந்தது. வீட்டைப் புதுப்பித்துப் புதுச்சாயம் பூசி புதிய சோபா செட்டெல்லாம் போட்டு வைத்திருந்தார்கள். புது வாசனை இன்னும் மாறாத வீடு. அவர்களுக்கு இது முதல் சொத்து. பார்த்துப் பார்த்துப் பூரித்தார்கள். தங்கள் நண்பர்களையெல்லாம் அடிக்கடி கொண்டு வந்து காட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த அரிய சொத்தின் ஒரு பகுதியை மல்லி இப்படிப் பாழ் படுத்திவிட்டது மருமகளுக்குப் பொறுக்க முடியவில்லை.

ஆனால் மல்லிக்கும் அது கையில் வைத்திருந்தது புதிய பொருள்தான். இந்தக் கிரேயோன் பெட்டியை நேற்றுத்தான் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். நேற்று இரவு முழுவதும் பெரிய அளவு சித்திரப் புத்தகத்தில் ஒரு பத்துப் பக்கத்திற்குக் கிறுக்கியாகிவிட்டது.

போன இரண்டு மாதமாகத்தான் விளையாட்டுப் பள்ளிக்குப் போகத் தொடங்கிய மூன்று வயதுக் குழந்தை. இவ்வளவு பிஞ்சு வயதில் அதைப் பள்ளிக்கூடத்தில் விடுவது அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. இருந்தாலும் அதன் பெற்றோர் அங்கு போய் மற்றக் குழந்தைகளோடு விளையாடி சமுகப் பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்வது நல்லது என்றார்கள்.

அவர் யார் அதை மறுக்க ? மனைவியை இழந்தபின் மகனுடன் ஒன்றிவிட்ட ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரி அவர். ஏதோ அவர் செலவுக்கு ஓய்வூதியம் வருகிறது. பொழுது போகத் தமிழ்க் கணினி கற்றுக் கொண்டு அவரது பழைய பொழுதுபோக்கான புத்திலக்கியங்களைப் படிப்பதை இணைய இதழ்களில் தொடரவும், இணைய செய்திக் குழுமங்களில் கடிதங்கள் கருத்துக்கள் பரிமாறிக் கொள்வதுமாக அமைதியாக அடங்கி விட்டார்.

மகன் மருமகளின் குடும்ப விவகாரங்களில் முடிந்தவரை உதவியும் வந்தார். ஆனால் தலையிடுவதில்லை. தலையிட என்ன இருக்கிறது ? இருவரும் அவரை விட அதிகம் படித்தவர்கள். பொறுப்பான பதவிகளில் இருந்து கடுமையாக உழைக்கிறார்கள். நல்லவர்கள். சில நேரங்களில் அவர்களின் நடவடிக்கைகள் அவருக்குப் பிடிப்பதில்லை என்றாலும் அவர் கருத்தை மிக இலேசாகத்தான் தெரிவிப்பார். எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பொருட் படுத்துவதில்லை. அவர்கள் வாழ்க்கை. அவர்கள் விவேகத்திற்கு எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்கிறார்கள். அதை மாற்றத் திருத்த அவருக்கு என்ன தகுதி ?

மேலும் அந்த நர்சரி பள்ளிக் கூடத்தில் ஓர் ஆசிரியை தமிழ்ப் பிள்ளைகள் விரும்பினால் தனியாகத் தமிழ்ச் சொல்லிக்கொடுக்கிறார் என்று அறிந்ததும் அவசரமாகச் சம்மதித்துவிட்டார். அங்கு கற்றுக் கொண்டதுதான் மல்லியின் ஆனா.

மல்லி அவருடைய செல்லம். மனைவி மறைந்த பின் ஏற்பட்ட தனிமைக்கு ஒரு மாற்று மருந்து போல அது. மருமகளின் பேறு கால விடுமுறைக்குப் பின் குழந்தையை எப்படிக் கவனிப்பது என அவர்கள் யோசித்த போது அவர் முன் வந்து கவனித்துக் கொள்ளுகிறேன் என்று சொன்னார். மருமகளின் பெற்றோர்கள் ரொம்ப தூரத்தில் இருந்தார்கள். ஆகவே அவர்கள் கவனித்துக் கொள்ள முடியாது. ஒரு பணிப்பெண்ணை அமர்த்தினாலும் குழந்தையைத் தனியே அவரிடம் விட்டுப்போகப் பயந்தார்கள். பகல் நேரங்களில் குழந்தைப் பராமரிப்பு இல்லத்தில் கொண்டு விடலாம் என அவர்கள் யோசனை செய்த பொழுதுதான் அவர் தடுத்தார்.

ஒரு இந்தோனேசியப் பணிப்பெண்ணை அமர்த்துங்கள். அவரின் உதவியோடு குழந்தையைப் பார்த்துக் கொள்ளுகிறேன் என்றார். ரொம்பத் தயங்கினார்கள். “என்ன அப்பா! குழந்தைக்கு மூத்திரம் மலம் துடைக்க உங்களால் முடியுமா ?” என மகன் கேட்டார். “முடியும்பா. உனக்கும்

உங்க அக்காவுக்கும் மூத்திரம் மலம் துடைக்க உங்க அம்மாவுக்கு நான் உதவி பண்ணியிருக்கேன்!” என்று சொல்லி சம்மதிக்க வைத்தார்.

இதுவரை இரண்டு பணிப்பெண்கள் மாற்றியாகி விட்டது. உதவிகள் செய்வார்கள். ஆனால் பராமரிப்பு அவரதுதான். குழந்தை வளர வளர, புரண்டு படுக்க, வாயில் பாலை வழியவிட்டுக் கைகளைக் கொட்டிச் சிரிக்க, தவழ, தத்தித் தத்தி நடை பழக, மழலை பயில அவர் மெழுகாய் உருகி அதோடு ஐக்கியமாகிப் போனார். இந்த அணுக்கமான பராமரிப்பினால் ஒரு முதிய ஆணின் மனதிலும் தாய்மை சுரக்க முடியும் எனபதைத் தெரிந்து கொண்டார். சில வேளைகளில் நினைத்துப் பார்த்தால் அவர் மல்லியைப் பராமரிப்பதை விட வறண்டு போன அந்திம காலத்தில் அதுதான் அவரைப் பராமரிக்கிறது என்று தோன்றும்.

பெற்றோரும் வீட்டில் இருந்த நேரங்களிலும் வார இறுதியிலும் பிள்ளையோடு அதிக நேரம் செலவிட்டார்கள். அந்த நேரங்களில் அவர் ஒதுங்கி விடுவார். அப்படி ஒதுங்கும் வேளைகளில் ஏற்பட்ட ஏக்கத்திற்காகத்தான் கணினி வாங்கி வைத்துக் கொண்டார்.

*** *** ***

“அழகம்மா, அழகு. கண்ண முழி.. யாரு.. இது யாருன்னு பாரு”

“அசையச் சக்தியற்றவளாய் இமை திறக்கவும் திராணியற்றவளாய் கயிற்றுக் கட்டிலில் கிடந்த அழகம்மாள் “இஸ்ஸு புஸ்ஸெ”ன்று முனகினாள். குழந்தை முகத்தில் வெளிச்சம் படும்படி லாந்தரை உயர்த்திப் பிடித்த முருகாயி “ஒனக்குப் பேத்தி பிறந்திருக்கா தாயி ஒங்க வம்ச லட்சணத்தோட..” என்று உசுப்பினாள்.

தன் கையருகே குழந்தையைக் கொண்டு வருமாறு அவள் முனகியதைக் கேட்டு , குனிந்து குழந்தையைத் தாழ்த்தினார் பேயத் தேவர்.

“குழந்தையும் கண் திறக்கவில்லை; அவளும் கண் திறக்கவில்லை. ஆனால் சக்தியில்லாத கைகளால் தன் குலவிளக்கைத் தடவித் தடவிப் பார்த்தாள் அழகம்மாள். சிலிர்த்தாள்; பரவசமானாள்; கண்ணீர் வராமல் அழுதாள்.”

படித்து அயர்ந்திருந்தார். என்ன அற்புதமான காட்சி வார்ப்பு! தன் இளமைக் கால கிராமத்து வாழ்வை, அதன் அருமையை, அதன் வெகுளித்தனத்தை, அதன் அறியாமையை, அதன் சிதைவை எத்தனை கவிதா நயத்தோடு சொல்லியிருக்கிறார்!

காலைப் பரபரப்பு ஓய்ந்திருந்தது. மல்லியைக் குளிப்பாட்டி ஆடை அணிவித்து நர்சரிப் பள்ளிக்கு அழைத்துப் போய்விட்டார்கள். மத்தியானம் வரை அங்கிருந்து அங்கேயே சாப்பிட்டுவிடும். இனி மதியம் ஒரு மணி அளவில் அவர் கார் எடுத்துப் போய் அதை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும்.

கிடைத்த ஓய்வில் திண்ணைக் கடிதம் உசுப்பிவிட்டதால் புத்தக அலமாரிக்குப் போய் “கள்ளிக்காட்டு இதிகாசம்” எடுத்து குருட்டாம்போக்கில் திறந்து படித்தபோதுதான் இந்த வருணனை.

மல்லி பிறந்த போது அவரும் தடவிப் பார்த்துச் சிலிர்த்திருக்கிறார். பரவசப் பட்டிருக்கிறார். அழுதிருக்கிறாரா ? இல்லை. ஏனோ நம் கலாச்சாரத்தில் எந்தக் கட்டத்திலும் ஆணுக்கு அழுகை விதிக்கப் பட்டிருக்கவில்லை. கண்களில் நீர் அரும்பியிருக்கக் கூடும். ஆனால் செயற்கையாகத் தடுத்திருப்பார்.

அவர் மக்கள் இருவரையும் அவர் அடித்து வளர்த்ததில்லை. கோபத்தில் மிரட்டி அப்புறம் தடவிக் கொடுத்துப் பொறுமை காத்து அவர்கள் மனம் முறியாமல் வளர்த்தெடுத்து விட்டார். அவர் மனைவியும் அவர்க்கிணைதான். அந்தப் பாரம்பரியத்தில் அவர் மகனும் தன் குழந்தையை அளவுக்கு மீறிக் கண்டிப்பதில்லை. மல்லி உயிர்ப்பான ஓய்வில்லாச் சின்னச்சின்னக் குறும்புகளாலான குழந்தை.

அவர்கள் மென்மையினால் அவரும் மகனும் மல்லியிடம் நிறையக் கடிபட்டதும் அடிபட்டதும் தலைமயிரைப் பறி கொடுத்ததும் உண்டு. எல்லாம் முதலில் முறைப்பிலும் பின்னர் சிரிப்பிலும் முடியும். எந்தக் குறும்பின் இறுதியிலும் பிள்ளையை அழுகையோடு விட்டதில்லை.

ஆனால் மருமகள் வேறு அணுகு முறையால் வளர்க்கப் பட்டவராக இருக்க வேண்டும். கண்டிப்புதான் பிள்ளைகளை வளர்க்கும் வழி என்று நம்பியிருந்தார். தாய்ப் பாசத்திற்குக் குறைவில்லை. ஆனால் கோபம் வந்துவிட்டால் கத்தலும் அடியும்தான். ரோத்தான் ஒன்றும் வீட்டில் இருந்தது. ஆனால் அதைப் பயன் படுத்த அவர்கள் அனுமதிப்பதில்லை. ஒரு பார்வைக்கு மிரட்டும் சாதனமாக “கடிதோச்ச” மட்டும் பயன்பட்டது. அந்த சந்தர்ப்பங்களில் மல்லி அவரையோ அதன் தகப்பனையோ சரணடைந்து அம்மாவுக்கு வெவ்வெவ்வே காட்டி விடும். “நீங்க ரெண்டுபேரும்தான் அதைக் கெடுக்கிறிங்க!” என்று தாய் முகத்தை வெட்டிக் கொண்டு வேறு வேலை பார்க்கப் போவார்.

இன்று வீட்டைவிட்டு வெளியேறும்போது அவருக்கும் அம்மாவிடமிருந்து கண்டிப்பான கட்டளை பிறந்தது. “மாமா! மல்லி சுவர் பக்கம் கிறுக்காம பாத்துக்குங்க! இந்த இடத்த இனி மறு பெயிண்ட் பண்ண அனாவசியமா காசு செலவழிக்க வேண்டியிருக்கு. அதுகிட்ட இருந்து கிரேயோனப் பிடுங்கி ஒளிச்சி வைங்க!”

மகனும் அப்படித்தான் சொன்னார். “சரியான ஷேட் கிடைக்கிலன்னா முழுச் சுவருக்கும் சாயம் அடிக்கணும் அப்பா! ரொம்பச் செலவு வரும். பாத்துக்குங்க!”

இருவருக்கும் சரி சரியென்று தலையாட்டினார்.

*** *** ***

மல்லியை விளையாட்டுப் பள்ளியிலிருந்து அவர் அழைத்து வந்ததும் பணிப்பெண் உடல் கழுவி உடை மாற்றிவிட்டார். இனி கொஞ்ச நேரம் விளையாட விட்டு, மத்தியானப் புட்டிப்பால் கொடுத்துத் தூங்க வைக்க வேண்டும். இதுதான் தினசரி நியதி. அவரும் ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணயர அதுதான் சந்தர்ப்பம்.

கொஞ்ச நேரம் அன்று நர்சரி பள்ளியில் படித்த பாடல்களை உரக்கப் பாடிக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தது. ஹம்ப்டி டம்ப்டி சுவரில் ஏறி உட்கார்ந்தான். ஹம்ப்டி டம்ப்டி கீழே தொம்மென்று விழுந்தான். அரசரின் குதிரைப்படை காலாட்படை ஒன்றும் ஹம்ப்டி டம்ப்டியை நிறுத்தி உட்கார வைக்க முடியவில்லை என்ற பாட்டில் ஏதாவது பின் நவீனத்துவக் கருத்து, மாந்திரீக யதார்த்தக் கருத்து இருக்கிறதா என்று யோசித்து ஒன்றும் இல்லை, வெற்று வார்த்தைகள் என்ற முடிவுக்கு வந்தார். இப்படியெல்லாம் சிந்திப்பது அதிகமாகத் தமிழ்ச் சிறுபத்திரிகைகள் படிப்பதனால்தான் என்று தோன்றியது.

விளையாடிக் கொண்டிருந்த பிள்ளையை விட்டுவிட்டு அறைக்குப் போய் கொஞ்ச நேரம் ஏதோ வேலை பார்த்துவிட்டு திரும்ப மல்லி என்ன செய்கிறது என்று பார்க்க வந்தால் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இப்போது ஒரு நீலக் கிரேயோனை கையில் வைத்துக் கொண்டு எதிர்ச் சுவரில் இன்னும் பெரிதாக ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தது.

“ஐயோ மல்லி, என்னம்மா செய்ற ?” என்று ஓடினார்.

அவர் குரல் உயர்ந்ததைப் பார்த்து மல்லி மலைத்து நின்றது. கொஞ்சம் மருண்ட விழிகளால் பார்த்தது. குரலை அடக்கி சாதாரண ஆனால் கொஞ்சம் கண்டிப்புக் கலந்த குரலில் கேட்டார்: “ஏம்மா மறுபடி சுவர்ல கிறுக்கின ?”

சிரித்தது. “இது “ஆ”வன்னா தாத்தா! பாருங்க” என்றது. பார்த்தார். அன்போடு பார்த்தால் ”ஆ” போலத்தான் இருந்தது. அணைத்துத் தலையில் முத்தமிட்டார்.

“அம்மாகிட்ட சொல்லாதிங்க தாத்தா!” என்றது. “ஆகட்டும்” என்றார். மல்லியோடு ஒரு அந்தரங்கக் கூட்டுச் சதியில் உடன்பட்டவர் போல மனதில் கிளுகிளுப்பு வந்தது..

*** *** ***

மாலையில் கணவனும் மனைவியும் சேர்ந்துதான் வருவார்கள். வந்தவுடன் ஒரு சிறிய பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் மருமகளுக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லித் தர இது மிகவும் வசதியான தருணம் என்று அவருக்குப் பட்டது. பயம் தெளிந்திருந்தது. காத்திருந்தார்.

எப்போதும் வந்தவுடன் பிள்ளையைத் தூக்கி அணைத்துக் கொஞ்சிக் கதை பேசுவது போலவே அன்றைக்கும் நடந்தது. சுவரின் புதிய வர்ண வேலைப்பாடுகளை இன்னும் யாரும் கவனிக்கவில்லை. அவர் ஒன்றும் தெரியாதது போல இருந்தார்.

பிள்ளை சும்மா இருக்கக் கூடாதா ? “அம்மா பாருங்க ‘ஆ ‘வன்னா!” என்று தானே அழைத்துக் காட்டியது.

மருமகள் வெடித்தார். “ஐயோ, பாருங்க. இவ்வளவு சொல்லியும் இப்படி பண்ணி வச்சிருக்கே!” தொப்பென்று முதுகில் போட்டார். மல்லி ஓடிவந்து அவரைக் கட்டிக் கொள்ள துரத்தி வந்த தாயைத் தடுத்தார்.

“எல்லாம் நீங்க குடுக்கிற எடம்தான் மாமா!” என்று கத்தினார்.

“ஆமாப்பா! ரொம்ப செல்லம் குடுக்கிறிங்க! புது வீடு என்ன கதியா இருக்கு பாருங்க!” என்று மகனும் குரலை உயர்த்தினார்.

“ஏம்மா சத்தம் போட்றிங்க ? இப்ப என்ன ஆச்சி ? குழந்தைக்குக் கற்பனை பெருக்கெடுத்து வரும்போது தடுக்கக் கூடாது. முளையிலேயே கிள்ளின மாதிரி ஆயிடும்” என்றார்.

“அதுக்காக புது வீட்ட அசிங்கம் பண்ண விட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கிறதா ?”

ஒரு டூயட் பாட்டின் அனுபல்லவிபோல இருவரும் ஒரே சுருதியில் கத்தினார்கள்.

“குழந்தை எழுத்து அசிங்கம் இல்ல. பாசத்தோட பார்த்தா அதுவும் அழகுதான். அதோட..” எழுந்தார். ஒரு துணியை எடுத்து வாஷ் பேசினில் நனைத்து எடுத்து வந்து துடைத்தார். கிரேயோன் அழிந்து சுவர் பழைய மாதிரி பளிச்சென்று இருந்தது.

இருவரும் வாய் பிளந்து பார்க்க “இது உயர்ந்த ரகச் சாயம் மட்டுமில்ல! எதுவும் ஒட்டாத சாயம்!” என்றார்.

மல்லி எல்லாரையும் மாறி மாறிப் பார்த்துச் சிரித்தது.

(முடிந்தது)

3/5/2004

Series Navigation

author

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு

Similar Posts