அவள் சாமான்யள் அல்ல

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

ராம்ப்ர‌சாத்


அவளிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது.
இப்படித் தோன்றிய நொடிகளில் பசித்த வயிறால் தூக்கம் கலைந்திருந்தது எனக்கு. அந்த விடிகாலையில், சுற்றிலும் தூவப்பட்டு பரவிக்கிடந்த மெளனத்தினூடே, உத்தரத்தில் தொங்கும் மின்விசிறியின் உடலை வெறித்துப் பார்த்தபடி கிடந்திருந்தேன் நான்.
இப்ப‌டி நான் க‌ண்விழிப்ப‌து ஒன்றும் புதித‌ல்ல‌ தான். ஆனால் வழக்கமாக என் நினைவில் அந்த நாள் வரை வந்திராத அவ‌ளிட‌ம் நான் சொன்ன‌ அந்த‌ வார்த்தைகள் அன்று நினைவில் தங்காத ஏதோ ஒரு க‌ன‌வின் முற்றுப்புள்ளியிலிருந்து தொட‌ர்பே இன்றி எழுந்து வ‌ந்து என் நினைவுக‌ளை பூதாகார‌மாய் ஆக்ர‌மித்துவிட்டதான உணர்வில் இருந்தேன் நான்.
நிகழ்காலத்தின் மணித்துளிகளில் என்னுடலைக் கிடத்திவிட்டு பின்னோக்கி சற்றேரக்குறைய 15 வருடங்கள் பயணித்திருந்தது என் மனம். நினைவுகள் தானாகவே அந்த நாட்களை அசைபோடத்துவங்கியிருந்தன. அப்போது எனக்கு 12 வயதிருக்கும். அவள் என்னை விட 7 வயது மூத்தவள். பெயர் அனு.அப்போதிருந்த இளையவர்கள் அவளின் வீட்டை வைத்துத் தான் ஏனையோர் வீட்டை அடையாளம் சொல்வர். அத்தனை அழகு அவள். வெளிர் ரோஜா நிறம். நல்ல உயரம், வளர்த்தி. அவளது குடும்பம் மிக மிக சாதாரணமான குடும்பம். அப்பா இல்லை. அம்மா மட்டுமே. இரண்டு சகோதரன்கள். இளையவர்களா மூத்தவர்களா நினைவில்லை. ஆனால் இருவரும் ஒரு நான்குசக்கர வாகன சர்வீஸ் மையத்தில் வேலை செய்திருந்தனர். இருவரும் படிக்கவில்லை. நான் வீட்டு வாசலில் அமர்ந்து படிக்கையில் அவர்கள் ஸ்போகன் இங்கிலீஷ் புத்தகம் வைத்து படிப்பது என் நினைவுகளில் பதிந்திருந்தது. நான் அப்போது 7வது படித்துக்கொண்டிருந்தேன்.
அவள் வீடு என் வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி. நான் வீட்டுப்பாடம் செய்யும்போதெல்லாம் அவள் என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பாள். பேச்சுவாக்கில் அடிக்கடி என்னை வம்புக்கிழுப்பாள். ஏதாவது சொல்லி சிரித்துவிட்டு வழக்கம்போல் வீட்டுப்பாடத்தில் மூழ்கிவிடுவேன். அம்மாவிடமே அவள் அதிகம் கதைப்பதால், அவள் என்னிடம் எத்தனை பிரியமாய்ப் பேசினாலும் அம்மாவின் தோழி என்ற அளவிலேயே பார்த்திருந்ததாய் மட்டுமே என் நினைவுகளில் பதிந்திருந்தது. அதனால் அவ‌ளைப் ப‌ற்றி அதிக‌ காட்சிக‌ள் என் நினைவுக‌ளில் ப‌திவாகியிருக்க‌வில்லை இந்த‌ சில‌ வார்த்தைக‌ளைத் த‌விர‌. இருந்தாலும் நான் அப்ப‌டி சொல்லியிருக்க‌கூடாதுதான்.

வ‌ழ‌க்க‌மாக‌ தெருவே அவ‌ள் போகும் போதும் வ‌ரும் போதும் பார்க்கும். என‌க்குத் தெரிந்து, தெருவில், அப்போது இருவ‌து வ‌ய‌தைக் க‌ட‌ந்த‌ வாலிப‌ர்க‌ள் இர‌ண்டு மூன்று பேர் அவ‌ளின் க‌டைக்க‌ண் பார்வைக்காய் மிக‌ப்பிர‌ய‌த்த‌ன‌ப்ப‌ட்டுக் கிட‌ப்ப‌தைப் பார்த்திருக்கிறேன். அவ‌ள் யாரிட‌மும் பேசிய‌தில்லை. அவ்வ‌ப்போது அம்மாவிட‌ம் அவ‌ள் க‌தைக்கையில் அவ்வாலிப‌ர்க‌ளைப் ப‌ற்றி அவ‌ள் பேசிச்சிரிப்ப‌தை ர‌க‌சியமாய்க் க‌ண்டு ர‌சித்திருக்கிறேன் என்ப‌தும் என் நினைவில் இருந்த‌து.

அவ‌ளுக்கும் அவ‌ர்க‌ளுள் யாரையேனும் பிடித்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். என்றேனும் இவ‌ளை பெண்கேட்டு அம்மூவரில் யாரேனும் வருவ‌ரோ அல்ல‌து என்றாவ‌து ஒரு நாள் அவ‌ளும் அவ‌ர்க‌ளுள் ஒருவ‌னுட‌ன் காணாம‌ல் போன‌தாய் செய்தி வ‌ருமோ என்று கூட‌ நினைத்திருக்கிறேன். இதெல்லாம் என் நினைவ‌டுக்குக‌ளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு தொட‌ர்ச்சியே இல்லாம‌ல் ப‌திந்திருந்த‌து. அவ‌ளைப் ப‌ற்றிய‌ நினைவுக‌ளில் க‌டைசியாய் ப‌திந்திருந்த‌ நிக‌ழ்வுதான் இந்த‌ அதிகாலையில் ஒரு அமானுஷ்ய‌ உண‌ர்வாய் என்னை ஆக்ர‌மித்திருந்த‌து.
அந்த நிகழ்வு நடந்த‌ அன்று ஒரு ஞாயிற்றுக்கிழ‌மை.
மாலை நான்கு மணி இருக்கும். நான் வீட்டு வாசலில் அமர்ந்து, சித்தெறும்புகள் போல் ஒரு சீராய் ஊர்ந்திருந்த மாலை வெயிலை ரசித்துக்கொண்டிருந்தபோது அவளின் ஒரு சகோதரன், முருகன் என்னைக் கடந்து அவள் வீட்டை நோக்கிப் போனான். அவன் அவ்வப்போது இப்படி சற்று முந்நேரத்தில் வீட்டுக்கு வருவது வழக்கம் தான். கடந்து போன அவன் என்னை கவனியாமல் போனதை பார்த்ததும் ஏதோ யோசனையில் இருக்கிறான் போலும் என்று நினைத்தபடியே நான் வேனல் எறும்புகளை ரசிப்பதை தொடர்ந்திருந்தேன்.
சற்று நேரங்கடத்தி திடீரென்று யாரோ வீட்டுக்கதவை ஓங்கி பலமாய் உதைப்பது போன்ற சத்தம் கேட்டது. நான் அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தேன். அம்மா அந்நேரம் உறங்கி விட்டிருந்தாள். வீட்டில் வேறு யாரும் இல்லை. சற்றைக்கெல்லாம் மீண்டும் கதவை பலமாய் உதைக்கும் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்து வீட்டிலிருந்தெல்லாம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தனர். வீட்டை திறந்து போட்டுவிட்டு என்ன நடக்கிறதென்று பார்க்கப் போக தயங்கியபடியே எழுந்து நின்றேன். சிலர் பெருத்த சத்தம் வந்ததைத் தொடர்ந்து முருகன் வீட்டை கடந்து எதையோ தேடியபடி ஓடி, பின் முருகன் வீட்டிலிருந்துதான் அந்த சத்தம் வருகிறதென்று சமிஞையாய் திரும்பி முருகன் வீட்டை எட்டிப்பார்த்தபடி நின்றிருந்தனர். அவர்கள் பார்வைக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது அவர்கள் முகத்தில் படர்ந்த கேள்விக்குறியில் தெரிந்ததை கவனித்தபடி நானும் நின்றிருந்தேன். அம்மா இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள்.

சற்றைக்கெல்லாம் முருகனின் குரல் ஒரு அதிர்ச்சி கலந்த ஆழ்ந்த ஓலமாய் கேட்டது ‘ஐயோ………….’.
பார்த்துக்கொண்டிருந்த சில ஆண்கள் முருகன் வீட்டுக்குள் புகுந்ததையும், மீதமிருந்தவர்களின் முகங்களில் அதிர்ச்சி வெகு வேகமாக படர்வதையும் பார்த்தபடியே நின்றிருந்தேன். வீட்டை திறந்தே விட்டு வெளில போகாதே என்ற என் அம்மாவின் எச்சரிக்கை இன்னமும் என்னை தயக்கத்திலேயே நிறுத்தியிருந்தது. நடந்து கொண்டிருந்த நிகழ்வுகள், ஏனோ நான்கு மணி நேரம் முன்பு நடந்த ஒரு நிகழ்வை வலுக்கட்டாயமாய் என் நினைவில் புகுத்தின. அப்போதுதான் நான் அந்த சொல்லக்கூடாத வார்த்தைகளை சொல்லியிருந்தேன்.
நான் ஒரு கால்ச‌ட்டையும், ப‌னிய‌னும் அணிந்த‌வாறே த‌ரையில் ச‌ப்ப‌னிக்கால் போட்ட‌ம‌ர்ந்து விட்டுப்போன வீட்டுப்பாட‌ம் செய்துகொண்டிருந்தேன். ம‌ணி ம‌திய‌ம் 12 இருக்கும். அம்மா என்ன‌ருகில் அம‌ர்ந்து கீரை ந‌றுக்கிக்கொண்டிருந்தாள். அப்போது அனு வ‌ந்தாள். வ‌ழ‌க்க‌ம்போல் அம்மாவுட‌ன் க‌தைக்க‌த் தொட‌ங்கினாள். நான் அவ‌ர்க‌ள் பேச்சை மேலோட்ட‌மாய் கேட்டுக்கொண்டே என் வீட்டுப்பாட‌ங்க‌ளை செய்துகொண்டிருந்தேன். அவ‌ர்க‌ள் சிரிப்பாய் பேசினார்க‌ள், க‌தைத்தார்க‌ள். என் க‌வ‌ன‌த்தில் எதுவும் நிற‌க‌வில்லை. என் வீட்டுப்பாட‌ங்க‌ளை நான் முடித்திருந்த‌ நேர‌ம், அவ‌ர்க‌ள் பேச்சு முடிவுக்கு வ‌ந்திருந்த‌து போலும்.
‘ச‌ரிக்கா, நான் போறேன்’ என்றாள்.
வ‌ழ‌க்க‌மாய் பேச்சுவாக்கில் என்னை வ‌ம்புக்கிழுப்ப‌வ‌ள், அன்று அவ‌ளை முந்திக்கொள்ள‌லாமென்று நான் நினைத்திருந்தேன் போல. எத‌னால் அப்ப‌டிச் சொன்னேன் என்று நினைவில்லை. போய்ட்டுவரேன் என்று வழக்கமாக சொல்லாமல் போறேன் என்று சொன்னதால் இருக்கலாம் என்று பிற்பாடு தோன்றியது. ஆனாலும் சொன்னேன்.
‘எங்க‌ கா ஒரேய‌டியா மேல‌யா?’ என்றேன் நான். சொன்னபிறகு தான் அதன் அர்த்தம் சட்டென என் அறிவை எட்டியது. வ‌ம்பிழுக்கும் நோக்கில் உட‌னே யோசிக்காம‌ல் சொல்லிவிட்ட‌தாய் என் நாவை நானே க‌டித்துக்கொண்டேன்.
க‌ளுக்கென்று சிரித்தாள் அவள் . என் அம்மா ‘ஆஆய்’ என்று என்னை க‌டிந்து கொண்டாள். ஆனாலும் அவ‌ள் என்னைக் காப்பாற்றும் தோணியில் ‘ப‌ர‌வால்ல‌ கா’ என்ற‌ப‌டியே என்னைப்பார்த்துச் சிரித்துவிட்டுப் போனாள் . அம்மா என்னை மிக‌வும் க‌டிந்து கொண்டாள் யோசிக்காம‌ல் வ‌ய‌தில் பெரிய‌வ‌ர்க‌ளுட‌ன் பேசிய‌த‌ற்காய். அவ‌ள் என்னை காப்பாற்றும் தோணியில் பேசிய‌து என‌க்குப் பிடித்திருந்த‌து. ஆனால் வழக்கமாய் ‘போய்ட்டு வரேன்கா’ என்பவள் ஏன் போறேன் என்கிறாள் என்று சற்றே வித்தியாசமாய் தோன்றவே செய்தது. ஆனாலும் அதை என் அம்மா உட்பட நானும் பெரிதாக நினைத்திருக்கவில்லை. இப்போது நான் பார்க்கப் பார்க்க, என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்கமுடிந்தது. அவளிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்று தோன்றியது. அவள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டு விட்டிருந்தாள்

இப்போது, 15 வருடங்கள் கழித்து அதை நினைத்தாலும் அந்த அதிர்ச்சி என்னை எவ்வித திரிபும் இன்றி அப்படியே சூழ்ந்துகொள்கிறது. அவளுக்கு என்ன பிரச்சனை என்பதை அவள் குடும்பம் உட்பட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவள் சாவு மர்மமாகவே இருந்தது. அதன்பிறகு நடந்த எதுவும் என் நினைவில் இல்லை. ஆனால், அவளிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்றுமட்டும் திரும்பத்திரும்பத் தோன்றியது. அந்த எண்ணமே இன்று காலை கனவு கலைந்து விழித்தது முதல் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் அவள் சாவு ஒரு புதிர்தான்.
பெற்ற தாய்,கூடப் பிறந்த‌ சகோதரனிடம் கூட சொல்ல முடியாத அளவுக்கு அவளுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டிருக்க முடியும். ஊர் ப‌ல‌வாறாக‌ பேசிய‌து. அக்க‌ம்ப‌க்க‌த்தில் ப‌ல‌வாறாக‌ பேசிக்கொண்டார்க‌ள். அவள் மாசுபட்டதாயும் அதனாலேயே தற்கொலை செய்துகொண்டதாயும் பேசினார்கள். பேசுப‌வ‌ர்க‌ள் முக‌த்தில் ஓங்கி ஒரு குத்துவிட‌ வேண்டும் போல் தோன்றியது எனக்கு. அவ‌ள் நிச்ச‌ய‌மாய் மாச‌டைந்திருக்க‌மாட்டாள். மாச‌டைய‌த் துணிப‌வ‌ளாக‌ இருந்தால், எப்படியும் வாழலாமென்று நினைத்திருந்தால் பிழைத்திருக்க‌லாமே. வ‌ல்லூறுக‌ள் நிறைந்த‌ இவ்வுல‌கில் ஒரு அழ‌கான‌ பெண் எப்ப‌டியும் பிழைத்திருக்க‌லாம். அவ‌ள் த‌ற்கொலை செய்துகொள்ள‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌ வ‌ந்த‌து?
அகவை பதினைந்தான அந்த சம்பவம் இன்று அதிகாலையில் என் சிந்தனை வயல்களை உழுதுகொண்டிருந்தது. மனிதன் என்பவன் தான் உலகில் தோன்றியுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் மிகவும் வினோதமானவன். எந்த உயிரினமும் தன்னைத் தானே கொல்வதில்லை. ஆனால் மனிதனுக்கு அது தேவைப்படுகிறது. த‌ன்னைத் தானே கொலை செய்வ‌து ஒரு வ‌கையில் ஒரு உண்மையின் ரூப‌ம். ஊரை ஏய்க்க‌வோ, அடித்துப் பிடுங்க‌வோ, ஏமாற்றி வாழ‌வோ த‌ற்கொலைக‌ள் தேவைப்ப‌டுவ‌தில்லை. பொய்க்கும், புர‌ளிக்கும், ஆக்ர‌மிப்பிற்கும், கொடுங்கோலிற்கும், பேராசைக்கும், ஆணவத்திற்கும், அகம்பாவத்திற்கும் த‌ற்கொலைக‌ள் தேவைப்ப‌டுவ‌தில்லை. ஆனால் உண்மைக் காத‌லுக்கும், வாழ‌ வ‌ழியில்லை என்ப‌த‌ற்கும், வாழ்க்கை பெரிதில்லை என்பதற்கும், உயிர் துச்சமென்பதற்கும் த‌ற்கொலைக‌ள் தேவைப்ப‌டுகின்ற‌ன‌. உயிர் துச்ச‌மாகையில் த‌ற்கொலைக‌ள் மிச்ச‌மாகிற‌து.

உயிர் துச்ச‌மாகும்போது, உயிரை விட‌ வேறு ஏதோ ஒன்று பெரிதாகிற‌து. அந்த‌ ஏதோ ஒன்று ஏன் பெரிதாக‌ வேண்டும் என்ப‌தே கேள்வி. த‌ற்கொலை செய்யும் ஒவ்வொருவ‌ருக்கும் இப்ப‌டி ஏதோ ஒன்று பெரிதாக‌ ஆகிற‌து. சாமான்ய‌னுக்கு உயிரே பெரிது. உயிரை விட‌ வேறொன்று பெரிதாகையில் அவ‌ன் சாமான்ய‌ன் என்ற‌ நிலையைக் க‌ட‌ந்தே விடுகிறான்.
பதினைந்து வருடங்கள் கழித்து, நினைவுக்கு வ‌ந்த‌ அந்த‌ ச‌ம்ப‌வ‌ம், வாழ்க்கையில் இனிமேல் என் நினைவுக்குத் திரும்ப வந்தாலும், அதன் முற்றுப்புள்ளி ஒரு விஷயத்தை நிச்சயம் உணர்த்தும். அது, அவ்வகையில், அவள் சாமான்யள் அல்ல என்ப‌து.

– ராம்ப்ர‌சாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation