அவமானத்துடன் ஓர் அாிவாள்…..

This entry is part [part not set] of 18 in the series 20010204_Issue

சேவியர்.


மனிதர்களே…

உங்கள் மனங்களைக்
கூர்தீட்டி
தயவு செய்து எங்களை
துருப்பிடிக்க விடுங்கள்.

மொழிக்குள் மட்டும் இருக்கட்டும்
ஆயுத எழுத்து
அதை மட்டுமே உபயோகிப்பேன் என்று
அடம் பிடிக்காதீர்கள்.

உங்களைப் புாிந்து கொள்ள
முடியவில்லை….
என் முகத்துக்குக்
குருதித் திலகமிடுவதை
ஏன் வெற்றி என்கிறீர்கள் என்பது புாியவில்லை.

அறுவடைக்காய்
அாிவாள் எடுக்கச் சொன்னால்
தலைகள் தான் வேண்டுமென்று
தகராறு செய்கிறீர்கள்.

வெட்டாிவா மீசை
என்று சொல்லி
வீணான வீரத்தை
வளர்த்துக் கொள்கிறீர்கள்

மதத்துக்கும் ஜாதிக்கும்
சண்டையிட்டு சண்டையிட்டே
என் முதுகு மொத்தமும்
சர்வ மதத் துணுக்குகள்…

உங்கள் முதுகுக்குப் பின்னால்
சொருகப் பட்டு சொருகப் பட்டே
உங்கள் முதுகெலும்பாகிப் போனேன்
எனக்கு முதலுதவி செய்யுங்கள்…

ஆயுத பூஜைக்குத் தான்
எங்களை தரையிறக்குகிறீர்கள்
பூஜை முடிந்ததும் மீண்டும் என்னை
பூசி மெழுகுகிறீர்கள்…

என்னை சகதியில் பூசுங்கள்
விறகுப் பொடிகளுக்குள் வீசுங்கள்
வேண்டுமானால்
கசாப்புக் கடைக்கு விற்றுவிடுங்கள்
இந்த மனித அறுவடைக்கு மட்டும்
அனுப்புவதை நிறுத்துங்கள்…

ஆயுதமாய் இருந்தால்
விவசாயிடம் இருக்கவே விருப்பப்படுவேன்.
ஜாதிப் பலகைகளில்
மதக் கோபுரங்களில்
அவசர இரத்தம் பூசும்
அதிகாரத் தூாிகையாவதில்
எனக்கு உள்ளத்தால் உடன்பாடில்லை….

சிரச்சேதங்களில் சேதப்பட்டு,
பாமரர்களை பாடைக்கு அனுப்பி,
இரத்தப் பொட்டுக்களால்
பல
சுமங்கலிப் பொட்டுக்கள் அழித்து
என் தேகமெங்கும்
சிதைந்து போன போன மனிதாபிமானத் துளிகள்.

போதும்….
இந்த அாிவாள் கலாச்சாரம்
நரைத்துப் போன
இந்த தலைமுறையோடு
மாித்துப் போகட்டும்…

மரணக் குரல் மட்டுமே கேட்டு
ரணமாகிப் போன என் மனதுக்கு
வயல் காட்டின் சலசலப்பை
அறிமுகப்படுத்துங்கள்

இல்லையேல்
சூாியன் தற்காலிகமாய்ச் செத்துப்போயிருக்கும்
இந்த இரவில்
தெற்குமூலையில் என்னைப் புதைத்து
ஓர்
தென்னங்கன்று நடுங்கள்…

அதுவும் இல்லையேல்
நான் தற்கொலை செய்துகொள்கிறேன்
எனக்கொரு
தூக்குக் கயிறு தயாராக்குங்கள்….

Series Navigation