அறிவியல் மேதைகள் -இப்போகிரட்ஸ் (Hippocrates)

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


இப்போகிரட்ஸ் என்ற அறிவியல் மேதை கிரேக்க நாட்டில் காஸ் எனும் தீவில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு கிறித்தவப் பாதிரியார். இளமையிலேயே இறை நம்பிக்கை மிகுந்தவராகவும் அறிவிற் சிறந்தவராகவும் இப்போகிரட்ஸ் விளங்கினார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மிகுதியாக ஏதும் தெரியவில்லை. மற்றுமொரு கிரேக்க மேதையான பிளாட்டோவின் கூற்றுப்படி, இப்போகிரட்ஸ் ஒரு மருத்துவர், கிரேக்கத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றித்திரிந்து தன் அறிவைப் பெருக்கிக் கொண்டவர். இப்போகிரட்ஸ் மருத்துவத் தொழிலை மேற்கொள்வதற்கு முன்னர், கிரேக்க நாட்டில் மருத்துவ சிகிச்சை அளிப்பது என்பது பாதிரிமார்கள் கையிலேயே இருந்து வந்தது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு உடல் நலத்திற்கு உரிய கடவுளான ஏஸ்குலாபஸ் (Aesculapus) என்ற தெய்வத்தை அவர்கள் வணங்கி வேண்டிக்கொள்ளுவர்.

மனிதர்களுக்கு நோய் வருவதற்கான காரணம் கடவுளின் அதிருப்தியே என்றும், அதிலிருந்து விடுபடுவதற்கு நோயாளிகள் தேவாலயங்களுக்குச் சென்று அங்கு பாதிரிமார்களால் தரப்படும் மருந்து, பூச்சு எண்ணெய் ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும் என்றும் அன்றைய கிரேக்கர்கள் நம்பி வந்தனர்.

இப்போகிரட்ஸுக்கு இச்சிகிச்சை முறையிலெல்லாம் நம்பிக்கை இல்லையெனினும், அவரது கடவுள் நம்பிக்கை அவற்றைப் பொறுத்துக்கொள்ளச் செய்தது. உலகப்புகழ் பெற்ற இப்போகிரட்ஸ் உறுதிமொழியின்படி இன்றும் அபோல்லோ (Apollo) என்ற கடவுளை வேண்டுவது இதனை உறுதி செய்கிறது. நோயாளிகளைக் கூர்ந்து நோக்கி, ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் சிகிச்சை தருவதிலேயே இப்போகிரட்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். நோயைக் கண்டுபிடிப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும் அப்போது நடைமுறையிலிருந்த மூடப் பழக்கங்களை அவர் எதிர்த்தார். “நோயைத் தருவதும், மீண்டும் அதை எடுத்துக் கொள்ளுவதும் கடவுளின் தொழிலல்ல. ஒவ்வொரு நோயும் அதற்குரிய காரணத்தாலேயே வருகிறது; அதனைக் கண்டுபிடித்து, சிகிச்சை அளித்தே நோயாளிகளைக் குணப்படுத்த முடியும். அதை விடுத்து, தேவாலயங்களில் அவர்களை உறங்கவைத்து, வேண்டுதல்கள் வாயிலாக நோயைக் குணப்படுத்த இயலும் என நான் நம்பவில்லை” என்பதே அவரது கூற்று. இவ்வகையில் “நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்” என்ற வள்ளுவமும் அவரது கொள்கையோடு ஒத்துப்போவதை அறியலாம்.

இப்போகிரட்ஸ் இயற்கையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்; இயற்கையைச் சிறந்த மருத்துவராகக் கருதியவர்; நோயைக் குணப்படுத்துவதில் இயற்கைக்குப் பெரும் பங்குண்டு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். சிகிச்சை அளிக்கும் மருத்துவர் நோயாளியிடம் தோன்றும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் மருத்துவ அட்டவணையில் தவறாது குறித்துக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினார். பல்வேறு வகையான நோய்களைக் குணப்படுத்துவதில், நோயாளி வாழுமிடம், பருவ காலங்கள், சுற்றுச்சூழல், தட்ப வெட்ப நிலை ஆகியவையும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது அவரது அசைக்க இயலாத கருத்தாகும்.

மக்கள் நல்வாழ்வு வாழ, கீழ்க்கண்ட இரண்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பது இப்போகிரட்சின் கருத்தாகும்:

1. நல்வாழ்வுக்கு உகந்த, நோய் வராமல் தடுக்கும் சுற்றுச்சூழல்

2. நல்வாழ்வை அளிக்கக்கூடிய சிறந்த பழக்க வழக்கங்கள்

மேற்கண்ட இரு கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதன் வாயிலாக, “நோய் வந்து சிகிச்சை பெறுவதைவிட நோய் வராமலே தடுத்துக்கொள்வது சிறந்தது (Prevention is better than cure)” என்ற “வருமுன் காக்கும்” கொள்கையையே அவரும் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது.

நீர் மருத்துவ முறையின் (hydrotherapy) மதிப்பு, அதன் அறிவியல் குண நலன்கள், விளைவுகள் ஆகியவற்றை இப்போகிரட்ஸ் நன்கு அறிந்திருந்தார்; காய்ச்சல், புண், உடல் வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி, மாற்றிப் பயன்படுத்தி சிகிச்சை அளித்து வெற்றி கண்டார். தண்ணீர்க் குளியல் மனிதனின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்வதுடன், உடல் நோவைத் தணித்து இயல்பாக இருக்கவும் உதவுகிறது என்பதைச் செயல்முறையில் விளக்கிக் காட்டினார்; காச நோயால் வருந்துவோர்க்கு சூரியக் குளியல் மிகச் சிறந்த பலனை அளிக்கும் என்பதை நிரூபித்தார்; மேலும் நல்ல உணவுடன், தூய்மையான நல்ல பாலை அருந்தி, காச நோயின் பிடியிலிருந்து விடுபட இயலும் என மருத்துவ அறிவுரை வழங்கினார். இப்போகிரட்ஸ் தான் மேற்கொண்ட எல்லா சிகிச்சை முறைகளிலும் பெரும் வெற்றி ஈட்டியதற்கு அவருடைய அறிவியல் அணுகுமுறை, கூர்ந்து நோக்கும் திறன், அயராத ஆராய்ச்சி, ஆய்வின் அடிப்படையில் கண்டுபிடித்த திடமான முடிவுகள் ஆகியனவே காரணமாகும்.

நோயைக் குணப்படுத்துவதில் இயற்கையை மிஞ்சிய மருத்துவர் யாருமில்லை என்பது அவரது திடமான முடிவு. இயற்கை தனது இயல்பான முறைகளினால் நோயிலிருந்து நோயாளிகளை விடுவிக்கும்; எனவே ஒரு மருத்துவரின் திறமை, அவர் இயற்கையையும் அதன் விதிகளையும் எவ்வளவு சிறப்பாகக் கையாளுகிறார் என்பதில் அடங்கியுள்ளது; இவையே அவரது முடிவான கருத்துகளாகும். எனவே இப்போகிரட்ஸை, மருத்துவத்தின் தந்தை என்பதைவிட இயற்கை மருத்துவத்தின் தந்தை என அழைப்பது சாலப் பொருந்தும்.

நோயாளிகளைக் குணப்படுத்தியவுடன், இப்போகிரட்ஸ் அந்நோயைப்பற்றி மறந்துவிடுவதில்லை; மாறாக அந்நோய் உண்டானதற்கான காரணங்கள், அந்நோயின் அறிகுறிகள் ஆகிய அனைத்தையும் கண்டுபிடித்து, குறித்துக் கொள்ளுவார். நோயாளிகளை நன்கு ஆய்வு செய்து நோயின் அறிகுறிகளை அறிந்து, நோயிற்கான காரணங்களைக் கண்டுபிடித்து பின்பு சிகிச்சையைத் துவக்குமாறு தனது மருத்துவத் தோழர்களையும் நெறிப்படுத்தினார்; ஒவ்வொரு நோயளியின் கண், தோல், உடல் வெப்பநிலை, உணவுச் செறிமான அளவு, ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்வதுடன், தட்பவெப்ப நிலை, நோயாளி இருக்குமிடம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளித்து சிகிச்சை வழங்கவேண்டுமென்பது அவர் மருத்துவர்களுக்கு வழங்கிய அறிவுரை. இத்தகைய ஆய்வுகளின் வழியே பிரபஞ்ச அறிவியலும், மருத்துவ அறிவியலும் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை என்பதை இப்போகிரட்ஸ் நிறுவினார்.

இப்போகிரட்ஸின் இத்தகைய ஆராய்ச்சி மற்றும் அயராத உழைப்பின் காரணமாக வருங்கால மருத்துவர்களுக்கான உலகப்புகழ் வாய்ந்த மருத்துவ உறுதிமொழி உருவாயிற்று. நோயின் துன்பம், வலியின் ஆற்றாமை, மன உளைச்சல் ஆகியவற்றால் நலிவுறும் நோயாளிகளுக்குச் சேவை செய்வதையே தமது குறிக்கோளாக மருத்துவர்கள் கொள்ளவேண்டும் என்பது அவர் விருப்பம். இப்போகிரட்ஸின் மருத்துவ உறுதிமொழி இவ்வாறு அமைகிறது:

“நான் எந்தவொரு இல்லத்திற்குச் சென்றாலும் அங்கே அவதியுறும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கவே செல்கிறேன்; யாராவது இம்மருத்துவத் தொழிலைக் கற்று சிகிச்சை அளிக்க வேண்டும் என விரும்பினால், அவர்களுக்கு இலவசமாக என் ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டுவேன்; நான் கற்ற மருத்துவக் கல்வி சட்டத்திற்கு உட்பட்டது.”

@@@@@@@@ @@@@@@@@ @@@@@@@@@

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித்துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

Dr R Vijayaraghavan BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர