அறம் செறிந்த அன்பும் மறமும்

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

செந்தில்


100 ஆண்டுகளுக்கு முன் “கர்மயோகி” என்ற பத்திரிகையில் அரவிந்தர் அவர்கள் எழுதிய “சத்திரிய தர்மம்” என்ற கட்டுரையை மகாகவி பாரதி மொழி பெயர்த்து தான் நடத்தி வந்த விஜயா பத்திரிக்கையில் வெளியிட்டு இருக்கிறார். அந்த கட்டுரை இன்றைக்கும் மிக தேவையான கருத்துகளை கொண்டிருப்பதால், அதன் சாயலில், தழுவலில் நம் அனைவருக்கும் தற்பொழுது தேவையான “அற உணர்வு” என்ற அடிப்படையில் இந்த கட்டுரை அல்லது சொல்லாடல் வரையபட்டுள்ளது. “அறம்” என்ற பதத்திற்கு தமிழில் பல பொருள் இருப்பினும், ‘நீதி சார்ந்த உணர்வு அல்லது செயல்’ என்பதே பொருத்தமான பொருளாகும்; இந்த நோக்கில், “சத்திரிய தர்மம்” என்பதைவிட “அற உணர்வு’ என்ற சொல் இன்றைய சூழலுக்கும் காலகட்டத்திற்கும் மிகவும் பொருத்தமாக இருப்பதால், இந்த கட்டுரையை அற உணர்வு ( moral intent/justice) என்ற கருவை மையமாகக் கொண்டு வரைகிறேன்.

” அறத்திற்கும் வீர மறத்திற்கும் அன்பே” அடித்தளம் என்பது சான்றோர் வாக்கு. இந்த அடிப்படையில் இந்திய துணக்கண்டத்தில் உருவாகிய இலக்கியங்களும், வாழ்க்கை நெறிகளும், மார்க்கங்களும், அமைப்புகளும், அரசியல் கோட்பாடுகளும் எண்ணற்றவை எனலாம். இருப்பினும், இந்தியாவின் விடுதலைக்கு முன்னும் சரி, பின்னும் சரி, அன்பே பிரதானம் என்ற கோட்பாடு திரிந்து பேராசை என்ற பேய் வடிவமெடுத்து, இந்திய மக்களின் வாழ்க்கை முறையிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும், பொருள் ஈட்டுவதற்காக தேர்ந்து எடுக்கும் முறைகள் யாவற்றிலும் நாம் கண்ட ஊழல்கள், சீரழிவுகள், இழப்புகள், பாதிப்புகள் ஏராளம். பாரதியும் அரவிந்தரும் விரும்பிய தர்ம எழுச்சி இந்திய விடுதலைக்கு முன் 50 ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களில் தோற்றமெடுத்தது என்பது பெருமளவிற்கு உண்மைதான். ஆனாலும், இந்திய விடுதலைக்கு பின்னர், கடந்த 60 ஆண்டுகளில் இந்த தர்ம எழுச்சி வீழ்ந்து, பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சிகள் தவிர, பல்வேறு சமூக தளங்களில் இந்தியா பின்னோக்கி சென்றிருப்பதாகவே பல சிந்தனையாளர்களும் கணிக்கிறர்கள்.

இத்தகைய பாதகங்களுக்கு பல்வேறு காரணங்கள். இவைகள் “சாதீயத்தால், வர்ணாஷ்ரமக்கோட்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புகள் எதிர்வினைகள் என்றும், கட்டற்ற தொழில் வளர்ச்சியினாலும், பொருள் ஈட்டும் பேராசையினாலும், மானுட பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள உலகளாவிய சிதைவுகள் என காரணங்கள் சொன்னாலும், இவைகள் உலகெங்கும் உள்ள சிக்கல்கள்தானே, நாம் மட்டும் என்ன விதவிலக்கா என காரணங்கள் பல சொல்லபட்டு, இந்த பாதிப்புகள் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், இந்த பாதகங்கள் மனித உறவுகளிலும், தனி மனித வாழ்விலும், குடும்ப அமைப்புகளிலும், சமூக ஒற்றுமையிலும், பொருளாதார வளங்களிலும், வாழ்க்கைதரத்திலும், உருவாக்கியுள்ள இழப்புகள், சிக்கல்கள், சீரழிவுகள் மிக மோசமானவை” என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த பாதகங்களுக்கு மூல முதல் காரணமாக நான் கருதுவது, சமூக தளங்களில் வாழ்வியலின் அடிப்படை காரண-காரணிகளாக நாம் பெரிது போற்றும், அன்பு மற்றும் மறம் (valor) என்ற பண்புகளின் மெய்ஞ்ஞான அடிப்படைகள் பிறழ்ந்து அவைகள் வெறும் சுயநலம் சார்ந்த விருப்பங்களாகவும் (desires), வெறும் ஆயுதம் சார்ந்த வன்முறை பலமாகவும் வடிவமெடுத்து விட்டன என்பதே. அன்பு வெறும் விருப்பம்/ஆசையாகவும், மறம் என்பது வெறும் வன்முறைக்கான பலமாகவும்(பண பலமாகவும் – கூலிகளை வைத்துகொள்ள) திரிந்து விட்டதாகவே தெரிகிறது.

இந்த திரிபுகளினால், அறம் காணாமல் போய்விட்டது என்பதே உண்மை. அறம் இழந்த/இல்லாத விருப்பமும், வன்முறைக்கான பலமும், மனித மற்றும் சமூக உறவுகளை மேலும் மேலும் வெறி சார்ந்த ஆசைகளாகவும், அழிவு/நாச சக்திகளாகவும் மாற்றிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, இப்படி சிலவற்றை சொல்லலாம். தன் மனவியின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்த நகைகள் வாங்குவதற்காக பிச்சைகாரர்களிடம் லஞ்சம் கேட்டு அவர்களை உதைக்கும் ஒரு காவல்காரரை போல. அது என்ன பாசமோ? இப்படி வந்த நகைகளில் காதலையும் பாசத்தையும் பார்க்கும் பெண் தெய்வங்களை என்ன வென்று சொல்வது? ஊரை அடித்து தன் உலையில்(சுவிஸ் வங்கி) போடுவதோடு மட்டுமல்லாமல், திருப்பதி உண்டியலிலும் போடும் அரசியல்வாதிகள், வியாபார திலகங்கள். இலங்கையில் நடந்த தமிழின அழிப்பை எந்த வித சலனமும் இன்றி பார்த்துக்கொண்டிரு(ந்த)க்கும், ரசித்து கொண்டிருக்கும் கிரிக்கெட் தூதுவர்கள், கிரிக்கெட் ரசிக வாக்காள தமிழ் பெருமக்கள். இதையெல்லாம் இயலாமை, வெகுளித்தனம் என்றெல்லாம் தள்ளிவிட முடியாது. இந்த மாதிரி திரிபுகள் நம் வாழ்க்கை, குடும்பம், அரசியல், கல்வி, மற்றும் பொருளாதார தளங்களில் மிகவும் இயல்பாகிவிட்டது. சொல்ல போனால், பொருளாதார, வளர்ச்சி, மற்றும் வெளியுறவு கொள்கைகள் திட்டங்கள் கூட இந்த திரிபுகளுக்கு விதி விலக்கல்ல. இந்த திரிபுகளை முன்னகர்த்தி செல்வதில் முன்னணியில் இருப்பது சந்தை பொருளாதாரமும், ஊழல் வியாபார நிறுவனங்களும், பிச்சை எடுக்கும் வாக்காளர் பெருமக்களும், தேர்தல் வியாபாரிகளும், இவைகளை வன்முறை பலம் கொண்டு காக்கும் அரசு இயந்திரங்களும், அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில்.

இத்தகைய பாதகங்களில் இருந்து நம்மையும், சமூகத்தையும், பாதுகாக்க, எல்லா உறவுகளிலும், பரிமாற்றங்களிலும், செயல்களிலும், சிந்தனையிலும் அற உணர்வை மீட்டு எடுக்க வேண்டியுள்ளது. அதாவது, அன்பிற்கும், வீர மறத்திற்கும் அறமே அடிப்படை. அற உணர்வினை / செயலினை மையமாக வைத்தே அன்பும், பாசபந்தமும், ஆளுமையும், அரசியலும், வீரமும், விவேகமும், திட்ட நோக்கங்களும், வளர்ச்சியும், வெற்றியும் அளவிடப்பட வேண்டும்.

அற உணர்வு வீரியத்தையும், விவேகத்தையும், பயமின்மையும், சுடர்விடும் சக்தியும் அளிக்கும். அறம் செறிந்த ஆண்மை, மானுடத்தன்மை யாதெனில் மனிதனுக்குள்ள மாண்பை இயற்கையிலேயே அறிந்து நடப்பதுதான். எந்த சமயத்தில் அடிக்க வேண்டும் என்பது அற உணர்வு மிக்க மானுடன் அறிவான். எந்த சமயத்தில் பணிய வேண்டும் என்பதும் அவனுக்கு தெரியும். பணிவில்லாமை சில சமயங்களில் இடையூறுகளையும், அணியில் ஓற்றுமையின்மையையும் ஏற்படுத்தும். வேறு சில சமயங்களில் பணிவும் குழைவும் இகழ்வதற்குரியதாக துர்க்குணமாகும். தேவையற்ற பணிவு நீசத்தண்மையையும் கெஞ்சிப் பிழைக்கும் அவலத்தையும் உருவாக்கிவிடும். பயமில்லாமல் இருப்பது, அற உணர்வின் அடித்தளம் மட்டுமே; ஆனால் அது மகுடமாகாது.

அறம் செறிந்த ஆண்மையின், மானுட நெறியின் மகுடம் எது? இலட்சியங்கள் என்ன? அநீதியை பகைத்தல், கருணை, ஆபத்திலிருப்போரை காத்தல், நியாயத்தை காக்கும் பொருட்டு போராடுதல். ஊழல் சுரண்டல்களுக்கு எதிராக போராடுதல். உழைப்பை உயர்த்து மதித்தல். மனித கண்ணியத்தை மேம்படுத்தல். சமூக மேண்மையே இலட்சியமாக கொள்ளல். அழுக்காறு, அற்ப சந்தோசம் இவற்றுக்கு அடிமையாகாமல் இருத்தல். கௌரவமே அவனுடைய தர்மம். மெலிந்தோரை காத்தல் அவனது முக்தி. தனது உடன் வருவோருக்கு உண்மையாயிருத்தல்; மற்றவர்களிடமிரிந்து பெருமையும் உண்மையுமே விரும்பியெதிர்பார்த்தல். உறக்கத்திலும் அவன் சமூக நலம், மேண்மை குறித்தே சிந்தனை செய்கிறான். போலிகள், ஏமாற்றுகாரர்களிடம் இருந்து சமூகத்தை காக்க சபதம் பூணுகிறான். அற உணர்வு மிக்க ஆண்மகன் பெண்களிடம் பலவீனத்தை விரும்புவதில்லை. பலத்தையே எதிர்பார்க்கிறான். அவளுடைய ஆத்மாவினிடத்தில் மதிப்பும், அவளது உன்னத குணங்களுக்கு ஆதரவும் செலுத்துகிறான். தன்னலம் இன்றி சமூக நலன் குறித்து சிந்தித்து செயல்படும் பெண்களுக்கு தலை வணங்குகிறான். பெண்கள் கல்வியிலும், குணத்திலும், ஞானத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என விரும்புகிறான். ஆத்ம லட்சியங்களை பெண்கள் தெளிவுற கண்டு, அதன் பொருட்டு பலமெய்தவும் வேண்டுமென்று விரும்புகின்றான். அற உணர்வோடும் ஆத்ம லட்சியத்தோடும் வாழும் வாழ்க்கையில் வர்க்க பேதம், சாதி பேதம், தொழில் பேதம் இல்லை. அற உணர்வோடும், ஆத்ம லட்சியங்களுடனும் வாழும் நண்பர்கள், தம்பதிகள், உறவினர்கள் பிரிய நேரிடுனும், தங்களது கடந்த கால நட்பையும், உறவையும் நினைத்து பெருமை கொள்ளும் விதத்திலேயே அறம் வழி செல்பவர்கள் தங்களது உறவுகளையும், எண்ணங்களையும், கொள்கைளையும் அமைத்துக் கொள்வார்கள். அற உணர்வு மிக்க ஆண்மகனின் உண்மையான உறவு பெண்ணிற்கு அரணாகவும், உறமாகவும் விளங்கும். ஒரு பெண்ணை அடிமைபடுத்தவோ, அவள் பலவீனத்தை சாதகமாக்கி சுயலாபம் அடையவோ, சுயகாரியம் ஆற்றி கொள்ளவோ அற உணர்வு உள்ளவன் எண்ணுவதில்லை. அற உணர்வு உள்ள பெண், தனது லாபங்களுக்காக ஒரு ஆண்மகனை தவறான பாதைக்குச் செல்ல உந்துவதில்லை.

அறம் என்ற பெயரில் சமூக நலன் குறித்த சிந்தனையில்லாத துறவறம் ஏற்புடையதன்று. சமூக உயர்வை காட்டிலும் சந்நியாசம் மேம்பட்டதாகாது. சர்வேசனுடைய எந்த ரூபமும் பூமிதேவி ரூபத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகாது. அன்று காந்தாரி பாடியது போல, இன்றும் பூமிதேவி இக்காலத்து துரியோதனர்களிடம், “எங்கு அறம் அங்கு வெற்றி” என பாடுகிறாள். ஆங்கிலத்தில் சொல்வதானால், “Strength of a strategy is in its moral intent” !

senthil.thiruchenthil@gmail.com

Series Navigation