அரைகுறை நிஜங்களின் ஊர்வலம்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

கற்பக விநாயகம்


****

1991-2001 காலகட்டத்தில், முகமதியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 29.3 சதமாக அதிகமாகி இருக்கிறது என்றும், இந்துக்களிடையே மட்டும் குடும்பக் கட்டுப்பாடு கறாராய்ப் பின்பற்றப்படுவதாகவும், முஸ்லிம்கள் சமயக் கோட்பாட்டின்படி அதிகமாகக் குழந்தைகள் பெற்று எண்ணிக்கையில் பெருகுவதாயும், காசிக்குப் போகாமல் திரும்பிய கையுடன் அரைகுறை உண்மைகளை அள்ளிப்போட்டு எழுதிய கட்டுரையில் ம.ம. சொல்கிறார்.

இதே வேலையை சங் பரிவார அமைப்பினர் ரொம்ப நாளாகவே செய்து வருகின்றனர்.

இக்கூற்றுகளின் நிஜம் குறித்துப் பார்ப்போம்.

1981 ஆம் ஆண்டில் இருந்து 1991 வரை 32.9 % ஆக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி வீதம், அடுத்த 10 ஆண்டுகளில் 29.3% ஆக சரிந்திருக்கின்றது. முஸ்லிம்களிடையே குடும்பக் கட்டுப்பாடு பின்பற்றப்படுவது அதிகரித்த வண்ணமுள்ளதே, இதற்குக் காரணம் ஆகும்.

ம.ம., இந்துக்களின் வளர்ச்சி விகிதத்தைச் சொல்லி விட்டு அதனுடன் முசுலீம் கணக்கை எடுத்து விட்டிருந்தால் அது நியாயமாய் இருந்திருக்கும். இதையெல்லாம் நாம் அவரிடம் போய் எதிர்பார்ப்பது வீணே என்பதால் அக்கணக்கையும் நாமே சொல்லி விடுவது நல்லது.

1981 ஆம் ஆண்டிலிருந்து 1991 வரை இந்து மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 22.8% என இருந்து, அடுத்த பத்தாண்டில் இது 20.0% ஆக சரிந்துள்ளது.

அதாவது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் இந்துக்களிடையே 1981- 91 க்கும் 1991-2001 இடையில் 2.8 % மும், இதே காலகட்டத்தில் முஸ்லிம்களிடையே இச்சரிவோ 3.7 % மும் ஆகும். இதில் இருந்தே தெரியவில்லையா, எந்த மக்கள் கடந்த 20 ஆண்டாய் கு.க.வில் தீவிரமாய் இருக்கின்றனர் என்பது!!

ஆச்சா! ம.ம. நிறுவ முயன்ற புள்ளி விவரம் எப்படிப்பட்ட அரைகுறை உண்மை என்பது தெரிந்ததா ?

இன்னொரு விசயம் புரிய மாட்டேன் என்கிறது. குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொள்ள முஸ்லிம்களுக்கு மதக்காரணம் இருக்கிறதாம்.

அது சரி! இந்துக்களின் எந்த சாஸ்திரம், குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்துகின்றது என்பதை ம.ம. விளக்குவாரா ?

அம்மை நோய்க்கு மாரியாத்தா, கல்விக்கு சரஸ்வதி என்று துறைவாரியாக சாமிகள் இருப்பது போன்று குடும்பக்கட்டுப்பாடு சாமி எதுவும் உருவாகியிருக்கிறதா என ம.ம. விளக்க வேண்டும்.

உண்மை என்ன என்றால், கல்வி அறிவுப் பரவல்,பண்பாட்டு வளர்ச்சி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் சிக்கல்கள் ஆகிய காரணிகளே, குடும்பக்கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்தி, மக்கள் தொகையைக் குறைத்திருக்கின்றது.

சான்றாக தென் இந்தியா Vs வட இந்தியா – எழுத்தறிவு வீதம், மக்கள் தொகை வளர்ச்சி வீதக் கணக்கை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கல்வி அறிவு அதிகமாய் உள்ள தமிழ் நாடு, கேரளா மாநிலங்கள் கு.க.வில் முன்னணியிலும், கல்வியில் பின் தங்கி இருக்கும் ராஜஸ்தான், பீகாரில் பிள்ளைப்பேறு அதிகமாயும் உள்ளன.

****

ம.ம. குறிப்பிடுவது போல ஏற்கெனவே முஸ்லிம்கள், ராணுவத்தில் கணிசமாய் இருப்பது உண்மையானால், ராணுவ தளவாட/தேசத் துரோக வழக்குகளான போபர்ஸ் பீரங்கி பேரம், ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல் பேரம், தெஹெல்கா ராணுவ ஊழல், கார்கில் போரின் சவப்பெட்டி ஊழல் ஆகிய தேசிய சாதனைகள் ஒன்றில் கூட அந்த முஸ்லிம் அதிகாரிகளுக்கு நமது இந்து தர்மத்து ஆசாமிகள் பங்கே தராமல் இருந்து விட்டார்களா என்ன ? ஏன் இந்த ஊழல்களில் எல்லாம் அவர்கள் பெயர் ஒன்றும் இடம் பெறவில்லை. உங்கள் பாணியிலேயே இதை – முஸ்லிம் ராணுவ அதிகாரிகள் மட்டும் கறை படியாத கைகள்-இந்து ராணுவ அதிகாரிகள் எல்லாம் ஊழல் பெருச்சாளிகள்- என விளங்கிக் கொள்ளலாமா ? ? இல்லை என்றால், ஊழலைப் பங்கிட்டுக் கொள்ள மருந்துக்குக் கூட அங்கு முஸ்லிம்களே இல்லை எனலாமா ?

****

எல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப்பிரிவு டி.ஜி. விபூதி நாராயண ராவ் என்பவர் 1995ல் ‘வகுப்புக் கலவரங்களில் போலீசின் நடு நிலைமை ‘ குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் ‘எந்தக் கலவரத்தையும் 24 மணி நேரத்துக்குள் அடக்கி விட முடியும். அதற்கு மேல் நீடிப்பது என்பது, போலீசும், அரசும் விரும்பினால் மட்டுமே ‘ என்று இந்த ‘இந்து ‘ அதிகாரியே விசயத்தைத் தெளிவாக்கிவிட்டார்.

ஏற்கெனவே முஸ்லிம்கள், ராணுவத்திலும், போலீஸிலும் ம.ம. சொல்வது போல் உண்மையாய் கணிசமான அளவில் இருந்து இருந்தால், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் எல்லாம் வாரக்கணக்கில்/மாதக்கணக்கில் நீண்டதன் ரகசியம் என்ன ?

1997ல் கோவையில் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டவுடன் இந்து முன்னணியும், ‘இந்து ‘ போலீசும்ிணைந்து கோவை முஸ்லீம் மக்கள் மீது போர் தொடுத்து, 19 முஸ்லிம்களைக் கொன்ற கலவரத்தில், தமிழ் நாடு அரசு முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்ததும், போலீசை நம்பாமல் தமிழ் நாடு முதல்வர், துணை ராணுவத்தை வரவழைத்ததும், இந்துத்துவ சக்திகளின் போலிஸ் ஊடுருவலுக்குச் சான்றாகும்.

****

முஸ்லிம் பெற்றோர்களே விரும்பித் தமது குழந்தைகளை ராணுவம்/போலீசுக்கு அனுப்பி வைப்பதற்குத் தயக்கம் காட்ட மாட்டார்களாம். அடேங்கப்பா! இவங்க அனுப்பின மறுகணமே அந்த வேலைகளை எல்லாம் என்னமோ கொடுத்து விடப் போவது மாதிரி எழுதும் மாய்மாலம்தான் என்னே! என்னே!

இந்தியாவின் அதிகார வர்க்கம், ராணுவ-போலீசு என அனைத்தும், ம.ம. போல் பார்ப்பனீய இந்து மதத்தை இயல்பாகக் கருத்திலும், செயலிலும் ஆதரிக்கின்றன. அதன்படியே இந்துத்துவ சக்திகளின் சித்தாந்தத்திற்கு வெகு நெருக்கமாகவே நின்று சேவை செய்கின்றன. ராணுவ-உளவுத்துறைகளின் உயர் பதவிகளுக்கு முஸ்லிம்கள் வரமுடியாது எனும் எழுதப்படாத விதிகளுக்கு இந்நெருக்கமே காரணம்.

ஓய்வு பெற்ற ராணுவ/காவல் துறை அதிகாரிகள் ஓடோடிப் போய்ச் சேரும் இடமாய் பா.ஜ.க. இருப்பதை நாடே அறியும்.

1949ல் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாய் வைக்கப்பட்ட ராமன் சிலையைப் பாதுகாத்த மாவட்ட மாஜிஸ்திரேட் நாயரும், 1987ல் பூட்டை உடைத்து ராமனைக் கும்பிடத் தீர்ப்பளித்த நீதிபதியும் ஓய்விற்குப்பின் சேர்ந்த இடம் பா.ஜ.க. என்பதும் தெரிந்த விசயம்தானே.

இவர்கள் குடி இருக்கும் ராணுவத்தில் முஸ்லிம்கள் அவர்களாகவே போய் சேர்வதும் பகலில் காணும் கனவில் மட்டுமே நடக்கலாம்.

****

கடந்த 50 வருடங்களாக நடந்த முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் அனைத்திலும் அதிகார வர்க்கம்-போலீசு-ராணுவம்-நீதித்துறை ஆகியன, ஆர் எஸ் எஸ்-ன் கிளைக் கழகங்களாகவே செயல்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

1987ல்- மீரட் கலவரம் – ஹஷிம்புரா மலியானா படுகொலையிலும், 1989 ல் பகல்பூரிலும் போலீசு-அரை ராணுவப்படைகள் ஏராளமான முஸ்லிம்களைக் கொன்றன.

1992ல் பாபர் மசூதியை இடிப்பதை வேடிக்கை பார்த்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் பின்பு வழிபாடும் நடத்தினர்.

ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில், பம்பாய் கலவரத்தில் 20 போலீசு அதிகாரிகளே முஸ்லிம்களை கொன்றது குறிப்பிடப்பட்டிருந்தது.

இவை எல்லாம் யதார்த்தத்தில் இந்த ஆயுதம் தாங்கிய பட்டாளத்தில் யார் உள்ளனர் என்பதன் ஆதாரங்கள்.

****

1984ல் இந்திய ராணுவம், பொற்கோவிலுக்குள் தாக்குதல் நடத்தியபோது, சீக்கிய ரெஜிமெண்ட் ராணுவத்துக்குள் கலகம் செய்தது. அவர்களுக்கு ராஜீவ்-லோங்கோவால் ஒப்பந்தம்தான் மன்னிப்புக் கொடுத்தது என்பதும் நமக்குத்தெரியும்.

ம.ம. போன்றவர்களின் கவலையே என்ன என்றால், ராணுவத்தில் முசுலீம்கள் அதிகமாகி விட்டாலோ / அவர்களின் ஜனத்தொகை வீதப்படி வந்து விட்டாலோ, அப்பாவி முசுலீம்களைக் கொல்ல மறுத்துக் கலகம் செய்து விடுவார்களே என்பதுதான். ஏற்கெனவே இதே மாதிரி சம்பவம் நடந்துள்ளது – காஷ்மீரில்.

இந்திய அரசின் ராணுவ, துணை ராணுவப் படைகள், காஷ்மீர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, அவர்களுடன் காஷ்மீர் போலீசு ஒத்துழைக்க மறுத்து வேலை நிறுத்தத்தில் குதித்திருக்கின்றது.

****

பிரிட்டிஷ் ராணுவம் செய்த அதே பிரிவினையைத்தான் இந்திய அரசும் ராணுவத்தில் பின்பற்றுகிறது என்கிறார் ம.ம.

6 ஆண்டுகளாய் ம.ம.வின் இயக்கம்தானே ஆண்டது. அதை சரி செய்திருக்கலாமே..

செய்ய மாட்டார்கள்.

இவர்களுக்கு/இவர்களின் ஒன்றுபட்ட இந்திய நலனுக்கு ராணுவத்தில் மராட்டா/சீக்கிய/ராஜபுதன பிரிவு முறை அவசியமாய் இருக்கின்றது.

தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்க, மலபார் போலீசையும்,

வட கிழக்கின் தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்க மராட்டா ரெஜிமெண்டையும்,

காஷ்மீரில் கொட்டமடிக்க மதராஸ் ரெஜிமெண்டையும்,

ஒரு தேசிய இனத்துக்கு எதிராய் மற்றொரு தேசிய இனத்தை நிறுத்துவதற்கு இவை வசதியாய் இருக்கின்றன.

****

1999 ஜூலையில் தாமிரபரணி ஆற்றில், மாஞ்சோலை தலித் தொழிலாளர்கள் 17 பேரை அடித்துக் கொன்ற தமிழ் நாடு போலீசின் அன்றைய நாள் ஆப்பரேசனுக்கு, மணிமுத்தாறு போலீசு கேம்ப் ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசு எல்லோருமே ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாய் இருந்ததன் ரகசியமும் இதுதான்.

அன்றைய முதலமைச்சர் கருணாநிதி ‘போராட்டக்காரர்கள், முன் வரிசையில் நின்றிருந்த ‘உசிலம்பட்டியை ‘ சேர்ந்த ‘பாண்டியம்மாள் ‘ எனும் பெண்போலீசாரிடம் தகாதமுறையில் நடக்க முயன்றதால் இச்சம்பவம் ஆரம்பித்தது ‘ என்று எல்லோருக்கும் புரியும்படி, சாதியை வைத்து இப்பிரச்சினையை சமாளிக்கப் பார்த்தார் என்பதும் வரலாறு.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்