அருணகிரியின் அலங்காரம்

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

எஸ் ஜெயலட்சுமி.

அம்பாள் கோவில்களில் நவராத்திரி ஒன்பது நாட்களும் பவிதமாக அம்பாளுக்கு அலங்காரம் செய்கிறார்கள்
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் இராப்பத்து உத்சவம் நடக்கும்.இரவில் இரண்டுவிதமான அலங்காரம் செய்
வார்கள்.முக்கியமாக வாமனாவதாரம்,காளிங்க நர்த்தனம்,ஆண்டாள் அலங்காரம்.மோகினி அலங்காரம்.நவநீதகிருஷ்ணன் அலங்காரம் என்று
வித விதமான அலங்காரம்!

தசரா சமயம் மைசூர் அரண்மணையில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம்.திருவனந்தபுரம் பத்மநாப
ஸ்வாமி கோவிலில் லக்ஷதீப அலங்காரம்!சுதந்திர தின விழா, குடியரசு தினவிழா போன்ற தேசீயத் திருவிழாவில் தலைநகர் தில்லியில்
தோரணங்களாலும்,வண்ண விளக்குகளாலும் செங்கோட்டை,ஜனாதிபதி மாளிகை இங்கெல்லாம் அலங்காரம்!வட இந்தியாவில் தீபாவளி
அன்றும் தென் இந்தியாவில் திருக்கார்த்திகையன்றும் தீப அல்ங்காரம்!

அலங்காரம் என்றால் என்ன?அழகு செய்வதே அலங்காரம்.மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அவரவர் சம்பிர
தாயப்படி அலங்காரம் செய்வதையும், மாலை நேர வரவேற்பில் அழகுநிலையங்களுக்குச் சென்று நவநாகரீகமாக அலங்காரம் செய்வதையும்
பார்க்கிறோம்.இப்படி பூவாலும் பட்டாடைகளாலும் வண்ணப்பொடிகளாலும், தோரணங்களாலும், தீபங்களாலும் இறைவனின் திருமேனிக்கும்,
கட்டிடங்களுக்கும் அலங்காரம் செய்து மகிழ்கிறோம்.ஆனால் இந்தஅலங்காரங்கள் எல்லாம் கொஞ்ச நேரத்திலோ,கொஞ்ச நாட்களிலோ
மாதங்களிலோ வருடங்களிலோ பொலிவிழந்து போய்விடுகின்றன.பூமாலைகளால் செய்யப்பட்ட அலங்காரம் வாடிவிடும்.ஆனல் பாமாலகளால்
செய்யப்பட்ட அலங்காரம் வாடுவதேயில்லை என்றுணர்ந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் காலத்தை வென்று நிற்கும், என்றும் வாடாத
பாமாலைகளால் இறைவனுக்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்கள். அந்த வரிசையிலே வந்தவர் முருக பக்தரான அருணகிரியார்.முருகன்
என்றாலே அழகும் இளமையும் பொருந்தியவன் என்று பொருள்.அழகனான முருகனுக்கு 100 பாடல்கள் அடங்கிய பாமாலையால் அலங்கா
ரம் செய்து பார்க்கிறார் அருணகிரிநாதர்.இப்பாடல்கள் அடங்கிய தொகுப்பு கந்தர் அலங்காரம் என்று போற்றப் படுகிறது.இப்பாடல்கள் எளிமையான தமிழ் நடையிலே அமைந்து படிப்போர் உள்ளத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவை.

கருணைக்கோர் அருணகிரி

கருணைக்கோர் அருணகிரி என்றும் வாக்கிற்கு அருணகிரி என்றும் புகழ்ந்து போற்றப்படுபவர் அருணகிரிநாதர்.
இக் கந்தர் அலங்காரத்தைத் தவிர, திருப்புகழ்,கந்தர் அந்தாதி,கந்தர் அனுபூதி,திருவகுப்பு போன்ற பல பாடல்களையும் பாடியுள்ளார்.
முருகன் கோவில் கொண்டிருக்கும் பல தலங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார்.கந்தரலங்காரப் பாடல்களிலே அவ
ருடைய பல்வேறு நிலைகளைப் பார்க்கிறோம்.பல பாடல்களிலே அருணகிரியார் தமது நிலையை எண்ணி மிகவும் பச்சாதாபப் படுகிறார்.
நான் இவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறேனே என்னைக் கடைத்தேற்றக் கூடாதா என்று முருகனிடம் வேண்டிக் கொள்கிறார்.சில
பாடல்களில் முருகனின் வாகனமான மயிலையும்,ஆயுதமான வேலையும், முருகனின் விளையாட்டையும் போற்றிப் புகழ்ந்து பாடுகிறார்
முருகனின் பெருமையைப் பற்றிப் பேசப் பேச, நினைக்க நினைக்க அவருக்கு ஆனந்தானுபவம் ஏற்பட ஆரம்பிக்கிறது.அந்த அனுபவத்திலே
ஊறித்திளைக்க ஆரம்பித்தவர் அந்த அனுபவத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.சொல்லொணாத அனுபூதியிலே திளைக்க ஆரம்பித்த
அவருக்கு யமபயமோ, மரணபயமோ இல்லாமல் போய்விடுகிறது.இந்த பயமின்மையையும் தம் பாடல்களில்வெளிப்படுத்துகிறார்.உலக
மக்களுக்கும் பலவகையான உபதேசங்களைச் செய்கிறார்.முருகனை வழிபடுவதால் ஏற்படும் பயன்களையும் எடுத்துச் சொல்கிறார்.

அருணாகிரியாரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி வேறு வேறு கருத்துக்கள் சொல்லப் படுகிறது.ஆரம்ப நாட்களில் அவர் பெண்ணாசை மிக்கவராக இருந்தார் என்று சொல்லப் படுகிறது.விலை மாதரோடு தொடர்பு கொண்டிருந்தார் என்றும் சொல்லப் படு
கிறது.இல்லை, இல்லை இவ்வளவு அழகான,பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய அருணகிரியார் பெண்பித்தராக இருந்திருக்க
முடியாது, உலக மக்களின் தவறுகளையெல்லாம் தன்மேல் ஏற்றிப் பாடிய கருணையாளர் என்று சொல்வாரும் உண்டு.எப்படியானாலும்
அருணகிரியார் பல பாடல்களிலே தான் எவ்வளவு பெண்ணாசை கொண்டவராக இருந்தேன் என்பதையெல்லாம் மிகவும் வேதனையோடு
சொல்வதை நாம் பார்க்கிறோம்.

”ஏ மனமே! நீ செந்திலாண்டவனின் கையிலிருக்கும் வேலைப்பற்றி ஏதாவது பேசுகிறாயா? இல்லை.அவனுடைய
வெற்றி பொருந்திய மயிலைப் பற்றி ஏதாவது சொல்லுகிறாயா?இல்லை.வெட்சியும் தண்டையும் அணிந்த அவனுடைய திருவடியைப் பற்றி
யாவது பேசுகிறாயா என்றால் அதுவும் இல்லை.ஆனால் நீ என்ன செய்கிறாய்? பெண்களுடைய மொழியையும் அவர்களுடைய கண்களை
யும் பற்றி எப்படியெல்லாம் புகழ்ந்து பேசுகிறாய்!அவர்களுடைய மொழி பாலைப்போல் இனிமையாக இருக்கிறது என்றும் பாதங்களோ
பஞ்சைப் போல் மென்மையானவை என்றும் கண்களோ கெண்டை மீனைப்போல் உள்ளன என்றும் உவமை நயத்தோடு வருணிக்கின்றாயே?

பாலென்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையர்கண்
சேலென்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேலென்கிலை, கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டை
கால் என்கிலை, மனமே எங்கனே முக்தி காண்பதுவே
மனமே உனக்கு எப்படி முக்தி கிடைக்கும் என்று வருந்துகிறார்.

மணிவாசகரும் அருணகிரியும்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதிலும் கூன், குருடு, ஊமை, முடம் நீங்கிப் பிறப்பது மிகவும் அரிது.
நமக்கு நல்ல ஊனமில்லாத, குறைபாடில்லாத மனிதப்பிறவி கிடைத்திருக்கிறது.ஆனால் வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும் தந்த
தலைவனை வாழ்த்தி வணங்காமல் நான் இப்படி அவமே காலத்தைப் போக்கி விட்டேனே என்று பரிதவிக்கிறார்.
மணிவாசகர் சொல்கிறார்,தந்தது எந்தன்னைக் கொண்டது உந்தன்னை, சங்கரா ஆர்கொலோ சதுரர்?
”ஈசா நான் கேவலம் என்னை உனக்குத் தந்துவிட்டு உன்னையே பெற்றுக் கொண்டு விட்டேனே!நம்மிருவரில் யார் சாமர்த்தியசாலி? என்று
பெருமிதத்தோடு கேட்கிறார்.எனக்கு அப்படிப்பட்ட சாமர்த்தியமும் இல்லையே என்று ஏங்குகிறார் அருணகிரி.

பெறுதற்கரிய பிறவியைப் பெற்று நின் சிற்றடியைக்
குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன்

புத்தியை வாங்கி நின் பாதாம்புயத்தில்புகட்டி அன்பாய்
முக்தியை வாங்க அறிகின்றிலேன்
முருகா! என் மனதை, என் புத்தியை உன் பாதாரவிந்தங்களிலே செலுத்தி உன்னைப் பெறவில்லையே?வீடுபேற்றை, முக்தியின்பத்தைப்
பெறத்தெரியவில்லையே”, என வருந்துகிறார்.என் மனமும் புத்தியும் தான் இப்படியென்றால் என் மற்ற அங்கங்களாவது என்னொடு
ஒத்துழைக்கிறதா என்றால் அதுவும் இல்லை

அப்பரும் அருணகிரியும்.

தலையே நீ வணங்காய், கண்காள் காண்மின்களோ,மூக்கே நீ முகராய்,செவிகள் கேண்மீர் என்றெல்லாம்
நாவரசர் தம் அங்கங்களுக்குக் கட்டளையிடுகிறார். இறைவனையே வணங்க வேண்டும், காண வேண்டும் இறைவனைப் பற்றியே கேட்க
வேண்டும் என்றெல்லாம் உத்திரவு போடுகிறார்.ஆனால் எனக்கோ?

குமரன் பாதாம்புயத்தை வணங்காத்தலை வந்து இது இங்கே
எனக்கு இங்ஙன் வந்து வாய்த்ததுவே

குன்றெறிந்த தாடாளனே!தென் தணிகைக் குமரா!
நின் தண்டையந்தாள் சூடாத சென்னியும்
நாடாத கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே.

முருகனைப் போற்றி அன்பால் குவியாக்
கரங்கள் வந்தெங்கே எனக்கிங்கன் கூடியவே
என்று வருந்துகிறார்.

சிந்தனை நிந்தனக்காக்கி என்ற மணிவாசகரைப்போல் என் சிந்தனையை உனக்கு ஆக்கவில்லை.நின்று சேவித்
தேனா?இல்லையே. இறைவனை நின்று நிதானமாக சேவிக்க வேண்டும். ஆனால் நாமோ? சினிமாக் கொட்டகையில் கால் கடுக்க நின்று டிக்கெட் வாங்குவோம்,ஆடிக்கழிவு நாட்களில் அலை மோதும் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ஜவுளி வாங்குவோம்.ஆனால்
ஆபீசுக்கோ பள்ளிக்கோ போகும் போது போகிறபோக்கில் செருப்பை பாதி கழற்றிய நிலையில் கும்பிடு போட்டுவிட்டுப் போவோம்.அப்படிச் செய்யாமல் நின்று சேவிக்கவேண்டும்.யார் யாரையெல்லாமோ கொஞ்சமும் தகுதியில்லாதவரை யெல்லாம்கூட இந்திரன், சந்திரன்
கர்ணன் என்றெல்லாம் புகழ்ந்து பேசுகிறோம்.ஆனால் ஆண்டவன் பெருமை பாராட்டுகிறோமா என்றால் இல்லை.அருணாகிரியும் இதைப்
பற்றிப் பேசுகிறார்.

சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச்
சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்
இப்படி ஒன்றும் செய்யவில்லையே என்று வருந்துகிறார்.

வேலும் மயிலும்

இப்படி வருந்திய அருணகிரியார் கொஞ்சம் கொஞ்சமாக முருகனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கிறார்,முருகனின்
வேலைப் பற்றி நினைக்கிறார். இந்த வேலின் மகிமைதான் கொஞ்சமா?இந்த வேல் சென்று கூர்மையாகத் தைத்ததும் கிரொளஞ்ச மலை
யானது அணு அணுவாகப் பிளந்து தூளாகி விட்டது.அசுரர்களுடைய வட்டவடிவமான சேனை தளர்ந்து தறிகெட்டு ஓடியது.தேவேந்திர
னுடைய உலகமாகிய அமராவதி அசுரபயம் நீங்கி உய்வு பெற்றது.

தேரணியிட்டுப் புரமெரித்தான் மகன் செங்கையில் வேல்
கூரணியிட்டு அணுவாகிக் கிரொளஞ்சம் குலைந்து அரக்கர்
நேரணியிட்டு வளைந்த கடக நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே
முருகப் பெருமானின் மயில் வாகனம் புறப்படுகிறது. அது குதிரையை விட அதி வேகமாகச் செல்லக் கூடியது. அம்மயிலின் தோகை
அசைகிறது.அந்த அசைவில் உண்டாகும் காற்றுப் பட்டு மகாமேரு மலை அசைகிறதாம்..அந்தமயில் அடியெடுத்து வைக்க எட்டுத்திசைக
ளிலும் உள்ள மலைகள் தூளாகிறதாம். அப்படி எழுந்த புழுதியால் கடலெல்லாம் மேடாகி விடுகிறதாம். இப்படி மயிலின் பெருமையைப்
பேசுகிறார்.

வாகனப் பீலியின் கொத்தசைபடு கால்பட்டசைந்தது மேரு, அடியிட எண்திசைவரை
தூள்பட்ட,அத்தூளின் வாரி திடர்பட்டதே.

கரும்பும் தேனும்

வேலின் பெருமையும், மயிலின் பெருமையுமே இப்படியென்றால் அந்த வேலையும் மயிலையும் செலுத்தும் முருகனின்
பெருமையைச் சொல்லவா வேண்டும்! குழந்தை முருகன் இடுப்பிலே மணிகள் பொருந்திய கிங்கிணி கட்டியிருக்கிறார்கள். முருகன் கையையும் காலையும் அசைக்கிறான். அப்படி அவன் அசைக்கும் போது அவன் இடுப்பிலே கட்டியிருக்கும் மணிகளும் அசைந்து இனிய ஒலி
எழுப்புகிறது.அந்த ஒலியால் அசுரர்கள் திடுக்கிட்டு நடுங்குகிறார்கள்.எட்டுத்திசையில் உள்ளவர்களும் செவிடு பட்டுப் போகிறார்கள்.குலமலை
கள் எட்டும், பெரிய மலையாகிய மேருபர்வதமும் அடிபெயர்ந்து போகின்றனவாம்.

குமரனுடை மணிசேர்
திருவரைக் கிண்கிணியோசை படத்திடுக்கிட்டு அரக்கர்
வெருவரத் திக்குச் செவிபட்டு எட்டுவெற்பும் கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர்பயம் கெட்டதே

இப்படி முருகனைப் பற்றி மெல்ல மெல்ல நினைக்க நினக்க என்ன நடக்கிறது?அவரே சொல்கிறார் கேட்போம்.

குமரனை மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ள
அரும்பும் தனிப்பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே

அனுபூதி

பல்வேறு ஆசைகளால் அலைக்கழிக்கப் பட்ட அருணகிரிநாதருக்கு முருகணைப் பற்றிய சிந்தனை வளர வளர
கரும்பு, தேன் போன்ற உலக இன்பங்களெல்லாம் அறவே வெறுக்க ஆரம்பித்து விட்டது.உலக இன்பங்களில் நாட்டம் குறையக் குறைய இறையனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட ஆரம்பிக்கிறது.எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுள் செல்லும் அனுபூதி பிறக்கி
றது.மெளனமாக இருந்து அவனையே உணர்ந்து உணர்ந்து உருக ஆரம்பிக்கிறார்.

கடம்பின் மலர் மாலை மார்ப!மெளனத்தையுற்று
நின்னை உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு
என்னை மறந்திருந்தேன்

என்று அதிசயிக்கிறார்.அனுபூதி பெற்ற அருணகிரியாருக்கு இப்பொழுது எதற்கும் அச்சம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது.அவருடைய
மனக்கிலேசங்கள் குழப்பங்கள் எல்லாம் ஆதவனைக் கண்ட பனிபோல் மறைய ஆரம்பிக்கிறது.

அருணகிரியும் அந்தகனும்.

பொதுவாக மனிதர்கள் முக்கியமாக பயப்படுவது மரணத்தைப் பற்றித்தான்.ஆனால் அருணகிரிநாதருக்கோ
மரணத்தைக் கண்டும் பயமில்லையாம்

மரணப்ரமாதம் நமக்கிலையாம் என்றும் வாய்த்த துணைக்
கிரணக்கலாபியும் வேலுமுண்டே

வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, கந்தனுண்டு கவலையில்லை’ என்று மரணபயத்தை¨யும் வென்று விடுகிறார்.வாய்த்த துணையாக கிரணக்கலாபியான மயிலும் வேலும் இருப்பதால் அருணகிரிநாதருக்கு யமபயம் இல்லாமல் போனதோடு அமையாமல்அந்த
யமனையே அழைத்துச் சவால்விடும் அளவுக்குத் துணிவும் வந்து விடுகிறது.அந்தத்துணிவிலே அவர் பேசுவதைக் கேட்போமா?

தண்டாயுதமும் திரிசூலமும் விழத்தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டிவிழ விடுவேன் செந்தில் வேலனுக்குத்
தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாயடா!அந்தகா!வந்துபார் சற்றே என் கைக்கெட்டவே!

”அடே! அந்தகனே!கொஞ்சம் என் கிட்டே வந்துபார்! வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? எந்த தண்டாயுதமும், திரிசூலமும் உன்னிடம்
இருக்கிறது என்று பெருமையோடு நீ வளைய வருகிறாயோ அந்த இரு ஆயுதங்களையும் நான் வெட்டி வீழ்த்தி விடுவேன்.என்னிடம்
ஞானச்சுடர் வடிவாள் இருக்கிறது தெரியுமா?” என்று யமனையே மிரட்டுகிறார்.உலகிலுள்ள உயிர்களின் உயிரையெல்லாம் பறித்துச்
செல்லும் அந்த யமனுடைய உயிரையே வாங்கி விடுவேன் என்றும் அச்சுறுத்துகிறார்.

பாலன் அரையில் கட்டும்

சீராவும் கையிற் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே
வாராது அகல் அந்தகா, வந்தபோது உயிர் வாங்குவனே
என் பக்கத்திலேயே வராதே என்று விரட்டுகிறார்.

நாளும் கோளும்.

மரணத்தையும் யமனையும் பற்றியே கவலைப் படாதவர் நாளையும் கோளையும் பற்றியா கவலைப் படப்போகிறார்.?
அதனால்,
நாளென் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும் கொடுங்கூற்று என்செயும்?

என்று பெருமிதத்தோடு கேட்கிறார்”.முருகப் பெருமானின் இரண்டு பாதங்களும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் ஷண்முகமும், தோளும் கடம்ப மாலையும் நம்முன் தோன்றும் போது எந்தத்தீவினை தான் அல்லது எந்தத்தீய சக்திதான் நம்மை என்ன செய்துவிட முடியும்?
வினாத்தொடுக்கிறார்.அப்படி அவன் வந்து தோன்ற வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

அயில்வேலன் கவியை அன்பால் எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும்
குன்றெறிந்தோன் கவி கேட்டு உருக வேண்டும்

என்று அதற்கான வழியையும் சொல்கிறார். மேலும் மனித குலத்துக்குப் பலவகையான உபதேசங்களையும் அறிவுறுத்துகிறார்.

உபதேசங்கள்.

மக்களே,நீங்கள், நான் என்றும் எனது என்றும் அகங்காரத்தோடு இருக்கின்றீர்களே! இந்த உடலையே பெரிதாக
எண்ணி அதை ஆராதிப்பதிலேயே உங்கள் காலத்தையெல்லாம் செலவிடுகிறீர்களே! இது என்ன சாசுவதமானதா?ஒருபிடி சாம்பலும்
காணாத மாய உடம்பு இது.குடிசை கட்டும் பொழுது மண்ணால் சுவர் வைக்கிறார்கள்.மனித தேகத்திற்கும் தோலால் சுவர் வைக்கப்
பட்டிருக்கிறது.பத்து விதமான வாயுக்களால் இந்த மனித உடம்பு இயங்குகிறது.வீட்டிற்குத் தூண் வைப்பது போலவே நமக்கும் இருகால்க
ளாகிய தூண்கள் மேல் நிற்கிறோம்.வீட்டிற்கு மேல்கூரை அமைந்திருப்பது போல் நமக்கும் வளைந்த முதுகெலும்பாகிய மேல் முகடு.
வீட்டிற்கு பனங்கை வைப்பது போலவே நமக்கும் இரு கைகள்.குடிசையிலே ஓலைகளையெல்லாம் நார்களால் இழுத்துக் கட்டுவது போல்
நமது உடம்பும் தசை நார்களால் கட்டப் பட்டுள்ளது.வீட்டிற்கு மேல் பூச்சுப் பூசுவதுபோல் நமது உடம்பும் மாமிசம் என்ற பூச்சு வேலை
யால் மூடப்பட்டுள்ளது. வீட்டிற்கு மேலே உள்ள மஞ்சம் புல்லைப்போல் நம் தலைமயிர்.இப்படியெல்லாம் வேயப்பட்ட தேகமாகிய(அகம்)
வீட்டிலிருந்து உயிர் பிரிந்தால் யார் துணை?

தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு
காலால் எழுப்பி வளைமுதுகு ஓட்டிக் கை நாற்றி நரம்
பால் ஆர்க்கையிட்டுத் தசை கொண்டுவேய்ந்த அகம் பிரிந்தால்
வேலால் கிரி துளைத்தோன் இரு தாளன்றி வேறில்லையே

என்வீடு,என்மனைவி,என்மக்கள் என்று சதா பந்த பாசத்திலே உழலும் மக்களைப் பார்த்து அருணகிரி கேட்கிறார்,
”மக்களே நீங்கள் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்துச் சேர்த்து வைக்கிறீர்களே அந்தப் பணமோ வீடோ, வயல்களோ, நகைகளோ எவையா
வது நீங்கள் இந்த உலகை விட்டுப் போகும் போது உங்களுடன் வருமா?வராது.ஆனால், நீங்கள் எங்கோ, என்றோ,உதவி செய்த தருமம்
உங்களுடன் வரும்.உங்களுக்கு அருள் செய்யும்.எப்படி வரும்?

வேலையில் வேலை விட்டோன் அருள் போல் உதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது.

தானம் செய்ய வேண்டிய அவசியத்தைப் பலவாறு வலியுறுத்துகிறர்.தானம் என்பது பொன்னும் பொருளுமாகத்தான்
இருக்க வேண்டும் என்பதில்லை.ஒரு பிடி சோறு கொடுத்தாலும் போதும் என்கிறார்.உங்களால் பிடியரிசிச் சோறு கொடுக்க முடியவில்லை
என்றால் பரவாயில்லை.குருணை இருக்கிறதா? போதுமே!அதுவும் இல்லையா,பரவாயில்லை நொய் இருந்தாலும் போதும்.கீரையிருந்தாலும்
போதும்

வறிஞர்க்கென்றும் நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்
இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்தேற்றவர்க்கே

என்று அறிவுரை சொல்கிறார்.

பரந்த சமயநோக்கு.

அருணகிரிநாதரின் மற்றொரு சிறப்பு அவருடைய பரந்த சமய நோக்கு.அவர் தீவிர முருக பக்தராக இருந்தபோதி
லும் சைவ வைணவ பேதம் அவரிடமில்லை.திருமாலின் அவதாரங்களான வாமன அவதாரம். நரசிம்ம அவதாரம்.ராமாவதாரம்,கிருஷ்ணாவ
தாரம்,பாற்கடல் கடைந்த வைபவங்களையும் போற்றிப் பரவுகிறார்.முருகனுடைய சிற்றடிப் பெருமையைப் பேசவந்த அருணகிரியார் அந்தச்
சிற்றடி எங்கெங்கெல்லாம் பட்டது என்று சொல்கிறார்.தாவடியோட்டும் மயிலிலும்,தேவர்கள் தலைமீதும் பட்டதோடு அமையாமல் என்
பாவடியேட்டிலும் என் பாடல்கள் அடங்கிய ஏட்டிலும் பட்டதே என்று அதிசயிக்கிறார்.அந்தச் சிற்றடிகள் யாருடையவை?அன்றொரு நாள்
மகாபலியிடம் வந்து தன் சின்னஞ்சிறிய அடிகளால் மூவடி கேட்டுப் பின் பேருருக்கொண்டு திரிவிக்கிரமனாகி மூதண்ட கூட முகடு முட்டச்
சேவடி நீட்டிய பெருமானான திருமாலின் மருகன் என்று வாமனாவதாரத்தைப் போற்றுகிறார்.

திருப்பாற்கடல் கடைந்ததை

வெற்பு நட்டு உரக
பதித்தாம்பு வாங்கி நின்று அம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திரு மருகா மயிலேறிய மாணிக்கமே

வெற்பு என்பது மேருமலை.உரக பதித்தாம்பு என்பது வாசுகி என்ற பாம்பை.அம்பரம் என்பது பாற்கடல்.மேருமலையை மத்தாகவும் வாசுகி
யைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்த அற்புதத்தைச் செய்த திருமாலின் மருகா என்று மாலின் பெருமையைப் பேசு
கிறார்.”வெய்ய வாரணம் போல் கைதான் இருபதுடையான் தலை பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன்” என்று ராமாவதாரப் பெருமை
பேசிகிறார்.

பலன்கள்
எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குரிய பலனை எதிர் பார்பது மனித இயல்பு.முருகனைப் பாடிப் பரவுவதால் ஏற்படும்
பயன்களையும் தன் பாடல்களிலே சொல்கிறார் அருணகிரியார்.முருகப் பெருமானைப் பாடிப் பரவும் அடியார்கள் கடக்க முடியாத பிறவி
யாகிய பெருங்கடலில் மூழ்க மாட்டார்கள்.வறுமைப் பிணியால் வேதனைப் பட மாட்டார்கள்.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர் வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே

முருகப் பெருமானை மறவாதவர்களுக்கு ஒரு குறைவும் வராது என்கிறார்.இத்துணை சிறப்பு வாய்ந்த கந்தர் அலங்காரப் பாடல்களை
அன்போடு கற்று ஓதி இன்பமும் அருளும் பெறுவோம்.


vannaijaya@hotmail.com

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி