நினைவுகளின் தடத்தில் (5)

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

வெங்கட் சாமிநாதன்


எப்போதோ யாரோ எழுப்ப கண்விழித்தபோது, ஒரு ஹரிகேன் விளக்கும் கையுமாக, அம்பி வாத்தியாருடன் மாமா நின்று கொண்டிருந்தார். “எழுந்திருடா, வா போகலாம், அம்மா வந்திருக்கா” என்றார். கோபம் இல்லை அவர் முகத்தில். குரலில் சீற்றம் இல்லை. வெகு சாதாரண பாவத்தில் பொழுது விடிந்து விட்டதைச் சொல்லி எழுப்பும் பாவனையில் சொன்னார். அம்பி வாத்தியார் தான் திட்ட ஆரம்பித்தார். ‘அறிவு இருக்காடா உனக்கு? ஏன் சினிமா பாத்துத் தான் ஆகணுமோ? ராஜாவைப் பாத்தியா? அவன் ஒன்னைப் போலவா இருக்கான்? புத்தி வேணும்டா? வீட்டை விட்டு ஓடறதுக்கு நேரம் பாத்தே பாரு, அம்மா ஊருலேருந்து வந்திருக்கப்போ. மாமாவப் பத்தி என்ன நினைச்சுப்பா? கொஞ்சமாவது நினைச்சுப் பாத்தியா? அம்மா ஊரிலேருந்து வந்ததும் வராததுமா அழுதுண்டு உக்காந்திருக்கா? போ. போய் சினிமாவுக்கு காசு குடுக்கலேன்னு ஒடினேன்னு சொல்லு உங்கம்மா கிட்ட” அவர் நிறுத்தவில்லை. திட்டிக்கொண்டே வந்தார். இடையில் “எல்லாம் நீங்க கொடுக்கற இடம் சார், அதான் இப்ப்டி கெட்டுப் போறான். நானா இருந்த வச்சு நாலு சாத்தற சாத்திலே, சினிமான்னு மூச்சு விடமாட்டான்.” என்று மாமாவைப் பாத்தும் சொல்லிக்கொண்டே வந்தார். என்னைத் திட்டுவதற்கு அவர் உரிமை எடுத்துக் கொள்வார். மற்ற சமயங்களில் அவர் செல்லமாக கிண்டலும் செய்வார். பள்ளிக்கூடத்தில் அவர் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வரும்போது மற்றவர்கள் சிரிக்க கிண்டலும் செய்வார். ‘சரிப்பா அம்பி, விடு போறும். அப்பறம் இதுக்கு வேறே கோவிச்சுண்டு நாளைக்கு வேறே என்கேயாவது ஓடினான்னா நான் எங்கேன்னு போய் தேடுவேன். அவன் அம்மா வந்திருக்கா? நல்லபடியா போகணும்” என்று மெல்லிய குரலில் தன் வேதனையைச் சொல்லி வந்தார். அம்மா ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்று எனக்குத் தெரிந்தது அப்போது தான். அம்மா ஒன்றும் சொல்ல மாட்டாள் என்றாலும், அவள் ஊரிலிருந்து வந்திருக்கும் போது, என்னை பாட்டியும் மாமாவும் ஏதோ குழந்தையைக் கொடுமைப்படுத்தித் தான் நான் வீட்டை விட்டே ஓடிவிட்டேனோ என்று நினைத்துவிடுவாளோ என்ற பயம் இருவருக்குமே இருந்திருக்கும். அந்த வேதனையில் மாமாவால் என்னைத் திட்டக் கூட முடியவில்லை என்று நான் அதைப் பற்றியெல்லாம் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது தோன்றும். ஆனால் நடு ராத்திரியில் எங்கெங்கோ தேடி கடைசியில் பார்க்கில் அகப்பட்டது அவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஆனால் அது வரை அவர்கள் எத்தனை வேதனைக்குள்ளாகியிருப்பார்கள் என்றெல்லாம் எனக்கு அப்போது நினைத்துப் பார்க்கமுடியவில்லை. என் துக்கம் எனக்கு. என்னால் சினிமா பார்க்க முடியவில்லை. அன்றுதான் கடைசி நாள். அது போய்விட்டது. இனி அது வருமா என்ன? வீட்டை விட்டு ஓடியும் பிரயோஜனமில்லாது போய்விட்டது. மாமாகிட்டவும் அம்பி வாத்தியார் கிட்டவும் திரும்பவும் மாட்டிக்கொண்டாய் விட்டது. இப்போ ஒன்றும் செய்ய முடியாது. அம்மாவும் ஊரிலேயிருந்து வந்திருக்கிறாள். அவளும் திட்டுவாள். இப்போது வழி நெடுக அம்பி வாத்தியார் திட்டிக்கொண்டு வருகிறார்.

நடராஜன் என்று பெயர் இருந்தாலும் அவரை எல்லோரும் ‘அம்பி’ என்று தான் அழைப்பார்கள். பள்ளிக்கூடத்திலும் மற்ற வாத்தியார்களும் பையன்களும் அவரை ‘அம்பி வாத்தியார்’ என்று தான் குறிப்பிடுவார்கள். ஆனால் அவரை மாமாவைத் தவிர வேறு யாரும் ‘அம்பி’ என்று அழைத்து நான் கேட்டதாக நினைவு இல்லை. நாங்கள் இருந்த தெருவில் சில வீடுகள் தள்ளி அவர் வீடு இருந்தது. நல்ல தாட்டியான சரீரம். நல்ல உயரம். மாமாவுக்கு உதவியாக இருப்பார் எப்போதும். ஏதும் உதவி தேவையானால், மாமா அவரைத் தான் கூப்பிடுவார். அவருக்கு மாமா ‘ஸார்’ தான்.

எல்லோரும் விழித்துக் கொண்டு இருந்தார்கள். நான் அகப்படுகிறேனோ என்னவோ, எங்கே போனேனோ என்று அவர்களுக்கு கவலை இருந்திருக்கும். அம்மாவும் பாட்டியும் ஆளுக்கு ஆள் மஞ்சள் துணியில் காசு முடிந்து ஸ்வாமிக்கு வேண்டிக் கொண்டிருப்பார்கள். ‘நல்ல படியா பிள்ளை திரும்பி வரணுமே, பகவான் தான் காப்பாத்தணும். இப்படி ஒரு புள்ளே கஷ்டப்படுத்துமோ’.

வீடு வங்ததும், ‘பார்க்கிலே படுத்துண்டு இருந்திருக்கான். நடு ராத்திரிலே வேறே எங்கே போவான். நல்லபடியா வந்து சேந்துட்டான். ஒண்ணும் சொல்லாதேங்கோ. நிம்மதியா தூங்குங்கோ இனிமே. நாளைக்குப் பாத்துக்கலாம், சார் நான் வரேன்” என்று சொல்லிக்கொண்டு அம்பி வாத்தியார் தன் வீ ட்டுக்குத் திரும்பினார். “ஏண்டா இப்படி படுத்தறே? கதி கலங்க வச்சிட்டயே” என்று பாட்டிதான் வேதனையோடு சொன்னாள். “வா, வந்து கொஞ்சமாவது சாப்பிட்டு படுத்துக்கோ, உனக்காக யாருமே சாப்படாம கொட்டு கொட்டுனு முழிச்சிண்டுருக்கா” வேறு யாரும் எதுவும் சொல்லவில்லை. இரவு வெகு நேரம் ஆகிவிட்டது.

அப்போது தீராத என் துக்கங்கள் எனக்கு. எனக்கென்று பெரிய ஆசைகள் ஏது இல்லையென்றாலும், ரொம்பவும் அடக்கமான பையன் என்று எல்லோரும் சொன்னாலும், சில சமயங்களில் எனக்கும் கூட சில ஏக்கங்கள் வந்து மாமாவை ரொம்பவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன் என்பது பின்னாட்களில் எனக்கு உறைத்தது.

மாமாவின் வாழ்க்கை ரொம்பவும் வேதனைகள் நிறைந்தது. சில சாதாரண, இயல்பான எதிர்பார்ப்புகள் கூட அவருக்கு நிறைவேறியதில்லை. வறுமை. பொறுப்புக்களை நிறைய தன் சக்திக்கு மீறி தன் மீது சுமத்திக் கொண்டார். அவரால் ஓரளவுக்கு மேலே அப்பொறுப்புக்களை சமாளிக்க முடிந்ததில்லை. அவர் இயல்பில் மிக சாதுவான மனிதர். வெளியே யாரோடும் அவர் சத்தமிட்டுப் பேசியோ, முரண்டு பிடித்தோ, சண்டை யிட்டோ பார்த்ததில்லை நான். ஆனால், வீட்டில் அவருக்கு வேதனை மிகும்போது அசாத்திய கோபம் வரும். முன் கோபி. பின்னால் வருந்துவார். அவர் கோபம் வந்துவிட்டால் அந்தக் கணங்களில் அவர் தான் என்ன செய்கிறோம் என்பதே அவருக்கே தெரியாது போய்விடும்.

எங்கள் தெரு ‘ட’ வடிவில் இருக்கும். அந்த ‘ட’வின் இரு கோடுகளின் சந்திப்பில் எங்கள் வீடு இருந்தது. தெருவின் ஒரு கோடி பெரியகுளம், வத்தலக்குண்டு போகும் மெயின் ரோடில் போய்ச் சேரும். இன்னொரு கோடியில் ஒரு பிள்ளையார் கோயில். சின்ன ஒரே ஒரு அறையே கர்ப்பக்கிரஹமாகக் கொண்ட கோயில். அதில் பிள்ளையாருக்குத் தான் இடம் இருந்தது. அது எப்படி எங்கள் பராமரிப்பில் வந்தது என்று எனக்குத் தெரியாது. சாவி எங்களிடம் இருக்கும். தினம் கோவில் கம்பிக் கதவைத் திறந்து, ஒரு குடம் தண்ணீர் பிள்ளையார் மீது கொட்டி அவரைக் குளுப்பாட்டி, விளக்கேற்றி வரவேண்டும். இது தினம் மாலை நடக்கும்.

ஒரு நாள் மாலை மாமா, ‘”போடா, கோவிலைத் திறந்து ஸ்வாமிக்கு விளக்கேத்திட்டு வாடா,” என்று சொன்னார்: பித்தளைக் குடம் ஒன்று சின்னதாக நான் தூக்கக்கூடியது. அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டேன். ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய். இடைகழிச் சுவற்றில் எனக்கு எட்டும் உயரத்தில் தான் கோவில் சாவியும் தீப்பெட்டியும் இருக்கும். ஒரு கையில் தண்ணீர் நிரப்பிய குடம். மற்றொரு கையில் எண்ணெய்க்கிண்ணம். எண்ணெய்க் கிண்ணக்கையோடு உயர இருந்த சாவியையும் தீப்பெட்டியைம் எடுத்தேன். என் சாமர்த்தியம் எனக்கு உதவவில்லை. கிண்ணம் சாய்ந்து எண்ணெய் கீழே சிந்தியது. அதை மாமா பார்த்துவிட்டார். ‘ஒரு காரியம் உனக்கு ஒழுங்கா செய்யத் தெரியுமாடா கழுதே” என்று சத்தமிட்டுக் கொண்டே வந்தவர், கிட்ட வந்தது தான் தெரியும். அடி விழுந்தது. சரமாரியாக அடித்துக் கொண்டே இருந்தார். குடத்தைக் கீழே வைத்தவன் அடி தாங்காமல் கீழே விழுந்தேன். அப்படியும் அவர் கோபம் அடங்கவில்லை. காலால் உதைத்தார். அடி விழுவதும் நிற்கவில்லை. இதற்குள் என் அலறலையும் மாமாவின் கூச்சலையும் கேட்டு புறக்கடையில் இருந்த பாட்டி ஓடி வந்தாள். மாமாவைப் பார்த்து சத்தம் போட்டாள், “ஏண்டா இப்படி அவனைப்போட்டுக் கொல்றே. இப்படியாடா ராக்ஷசன் மாதிரி. ஒன்னுக்கொன்னு எதாவது ஆயிட்டதுன்னுடா என்னடா பண்றது” என்ரு பாட்டியும் சத்தம் போட ஆரம்பித்தாள். “உனக்கொண்ணும் தெரியாது. நீ பேசாம இரு. நீ செல்லம் கொடுத்துக் கொடுத்துதான் அவன் ஒண்ணுக்கும் இல்லாமே போயிண்டு இருக்கான்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது எனக்கு அடி விழுவது நின்றது. ‘சரி போறது போ” எண்ணெய் என்ன கொஞச்ம் போறத்தானே சிந்தியிருக்கு. போடா, வேறே எண்ணெய் விட்டுத் தரேன். போய் விளக்கேத்திட்டு வா, போ” என்று பாட்டி அந்த இடத்தை விட்டு என்னை விரட்டினாள்.

எனக்கு அன்று விழுந்த அடி மாதிரி அங்கு மாமாவோடு இருந்த பன்னிரெண்டு வருஷங்களில் என்றும் விழுந்ததில்லை. மாமா முன் கோபக் காரர் தான். ஆனால் வெகு சீக்கிரம் அவர் கோபம் அடங்கிவிடும். கொஞசம் சத்தம் போடுவார். இரண்டு அடி கொடுப்பார். பின் சரியாகிவிடும். ஆனால் அன்று, கொஞ்சம் எண்ணெய் சிந்தியதற்கு நான் பட்ட அடியும் உதையும் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. “என்னடா அப்படி ஆயிடுத்துன்னு இப்படி போட்டு கொல்றே. செங்கல் தரையிலெ கொஞ்சம் எண்ணெய் சிந்தினாக் கூட அது வழிஞ்சி பரவிடும். ஏதோ வீசை எண்ணெய் போயிட்டாப்பலே. படாத இடத்திலே பட்டா என்ன ஆகும்” என்று பாட்டி திருபத் திரும்ப மாமாவைத் திட்டிக்கொண்டே இருந்தாள். மாமாவோ, “நீ பேசாமே இரேன்.உனக்கொண்ணும் தெரியாது போ” என்று தான் அவர் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்,.

மறு நாள் காலை மாமா பேப்பர் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். சின்ன மாமா எஸ் எஸ் எல் ஸி பரி¨க்ஷ எழுதிய ரிசல்ட் வந்திருந்தது. அம்பி வாத்தியார் வந்து கொண்டிருந்தார். வீட்டுப் படி ஏறிக்கொண்டே, ‘என்ன சார், பேப்பர் பாத்தேளா, சாமா நம்பரைக் காணோமே, நான் தான் சரியாப் பாக்கலையா, உங்க பேப்பர்லே இருக்கா” என்று கேட்டுக் கொண்டே படி ஏறினார். அவர் சாமா என்று சொன்னது என் சின்ன மாமாவை. சின்ன மாமாவின் பெயரும் சுவாமிநாதன்.

“எந்த பேப்பரைப் பாத்து என்ன? போயிடுத்து. போயிடும்னு நேத்திக்கே எனக்குத் தெரிஞ்சுடுத்து” என்று வெகு தீனக்குரலில் சுரத்தின்றி மாமாவிடமிருந்து பதில் வந்தது. “நேத்திக்கே தெரியுமா? ” என்று ஒன்றும் புரியாத திகைப்பில் கேட்டார், அம்பி வாத்தியார்.

வெங்கட் சாமிநாதன்/30.7.07


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்