அருகிப் போன ஆர்வம்

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


அருட்செல்வர் நா. மகாலிங்கம் தலைமையிலான இராமலிங்கர் பணி மன்றம் ஆண்டுதோறும் தேவார மூவர் இசை விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு (2009), 17ஆவது ஆண்டு விழா. நவம்பர் 27 முதல் நவம்பர் 30 வரை சென்னை நாரத கான சபாச் சிற்றரங்கத்தில் நான்கு நாளும் இசைக் கச்சேரிகள், பேருரைகள், ஆய்வுரைகள், ஹரிகதை, நாட்டியம் எல்லாம் இனிதே நடைபெற்றன. நிறைவு விழாவுக்கு, சென்னை பலகலைக்கழகத் துணைவேந்தர் டாகடர் திருவாசகம் தலையேற்றுப் பேசினார்.

அப்போது, சென்னைப் பலகலைக்கழகத்தில் ‘அப்ளைடு தமிழ்’ என்ற புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதைப் பற்றித் தெரிவித்தார். அப்ளைடு தமிழில் ஐம்பது சதவிகிதம் வரை தமிழும், மிச்சமிருக்கும் ஐம்பது சதவிகிதத்துக்கு அக்கவுண்டன்சி, கம்பியூட்டர் எல்லாம் சொல்லித் தரப்படும். அதன் மூலம், தமிழ்மொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு சுலபத்தில் கிடைக்கும் என்றார் திருவாசகம்.

முதலில் இது புது திட்டம் இல்லை. ஏற்கெனவே, க.ப.அறவாணன் இதை இலயோலா கல்லூரியில் அறிமுகப்படுத்தினார். மூன்றே ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலும் குறைந்துபோய், இந்தக் கோர்ஸையே நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு நல்ல விஷயம் நடந்துகொண்டு இருக்கிறது. மக்கள் மனத்தில் தெளிவு பிறந்துகொண்டு இருக்கிறது. அதில் எதற்கு எல்லோரும் போய் தலையை நீட்டி தன் பங்குக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

இன்றைய மாணவர்கள் எந்தப் படிப்பு படித்தால் வேலை கிடைக்குமோ அதை மட்டுமே படிக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, படிப்பு என்பது வேலைக்கு மட்டும்தான். அதில் இருந்து கிடைக்கும் ஞானம் என்பதெல்லாம் வேலைக்கும், அதில் கிடைக்கக்கூடிய முன்னேற்றத்துக்கும் உதவுவதாக இருந்தால்தான், அதைப் படிக்கவே செய்கிறார்கள். அப்படி முன்னேற்றம் தராத படிப்பின் பக்கம் அவர்கள் தலைவைத்தே படுப்பதில்லை.

பல கல்லூரிகளில், பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஹிஸ்டரி) போன்ற படிப்புகள் எல்லாம் ஈயோட்டுகின்றன. மாணவர்கள் சேர வராததனால், அந்தப் படிப்புகளையே மூடிவிடலாமா என்று பல்கலைக்கழகத்தைக் கேட்கின்றன கல்லூரிகள். அல்லது ஒரு சில கல்லூரிகளில், அந்தப் படிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று, மிக மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை அங்கே சேர்த்துக்கொள்ளுவார்கள். விரும்பி, ஆசையாக வந்து படிக்கக்கூடிய ஒன்றிரண்டு மாணவர்கள் இருக்கவும் செய்யலாம். மொழிப்பாடத்தை முக்கியமாக கருதும் ஒரு சில பெற்றோர்கள் வேண்டுமானால், தம் பிள்ளைகளை இந்தப் படிப்புகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்தியா போன்ற வறுமை மிகுந்த நாட்டில், ஒவ்வொருவரும் வேலை செய்தே தம் வாழ்க்கையை நடத்தவேண்டிய தேவை இருக்கும் நாட்டில், மொழிப் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பது என்பது கொஞ்சம் ஆடம்பரமான ஆசைதான். நமக்குத் தேவை ஸ்கில் பேஸ்டு எடுகேஷன். தொழில் சார்ந்த படிப்பு மிக முக்கியம். பி.ஏ, எம்.ஏ., மட்டுமல்ல பி.எஸ்சி., எம்.எஸ்சி. கூட ஓரளவுக்கு உபயோகமற்ற படிப்புதான்.

மேலும் தமிழ்நாட்டில், ஐம்பது, அறுபது ஆண்டுகாலமாக, தமிழ், தமிழர் என்று பேசிப் பேசியே அரசியல் வளர்த்தாயிற்று. அதனால், தமிழ் மொழி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்கு கடும் நெருக்கடி. அரசினால் மட்டும் எவ்வளவுதான் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்?

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த தாட்சர், தனது பதவிக் காலத்தில், ஆங்கிலம் படித்த பேராசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளை எல்லாம் நீக்கினார் என்று சொல்லப்படுவதுண்டு. பிரிட்டனில் இதுதான் நிலைமை.

அப்படி இருக்கும்போது, படிக்கக் கூடிய மாணவர்களும் அவர்தம் பெற்றோரும்தான் இங்கே முடிவெடுக்கவேண்டியவர்கள். அவர்கள் மொழிப் பாடத்தை விலக்கி வைக்க ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆயிற்று. இப்போது மீண்டும் நான் மொழிப் பாடத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறேன் என்று சொல்லி, அப்ளைடு தமிழ் என்றெல்லாம் அறிமுகப்படுத்துவது தேவையான வேலையாகத் தோன்றவில்லை.

மக்கள் மத்தியில் இல்லாத ஆர்வத்தை, அருகிப் போன ஆர்வத்தை எப்படி ஒரு பல்கலைக்கழகத்தால் தூண்டிவிட முடியும்? சாத்தியமே இல்லை.

இப்போதும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (வைணவம்), எம்.ஏ (சைவம்), எம்.ஏ (ஜெயினம்) என்றெல்லாம் படிப்புகள், அதை நடத்தும் துறைகள் இருக்கின்றன. ஆர்வமுள்ள மாணவர்கள் அதில் போய் சேர்ந்து பயின்று தேர்ச்சி பெற்று வருகின்றனர். நான் அப்ளைடு வைணவம், அப்ளைடு சைவம் சொல்லிக்கொடுக்கிறேன் என்று யாரும் சொல்கிறார்களா என்ன?

மொழியைப் பற்றிய படிப்பு என்பது ஸ்காலர்லியான படிப்பு. அது ஆய்வு நோக்குடையதாக இருக்க முடியும். அல்லது, இண்டர் டிசிப்பிளினரியாக இருக்க முடியும். மொழியைப் படித்துவிட்டேன் என்பதற்காகவே அந்த மாநில அரசு வேலை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் அபத்தம்.

ஆர்வம் வேறு, வருமானம் வேறு. ஆர்வமே வருமானமும் தந்தால் நல்லதுதான். அதுதான் அதிகபட்ச மகிழ்ச்சி தருவது. ஆனால், இரண்டும் எப்போதும் எதிர் எதிர் துருவங்கள். இணைய வாய்ப்பே இல்லை என்பது பலருடைய வாழ்க்கை அனுபவம். உண்மையை, யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்