அரசூர் வம்சம் (தொடர் நாவல் -1)

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் – அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.

அத்தியாயம் ஒன்று

குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறார்கள்.

ராணி சொன்னாள்.

ராஜா பல்லாங்குழிப் பலகையில் சோழிகளை நிறைத்தபடி நிமிர்ந்து பார்த்தார்.

அழகான ராணி. இளவயசு கடந்து கொண்டிருக்கிறது. முலைகள் இறுக்கம் தளர்ந்து தொங்க ஆரம்பித்து விட்டன. அரைக்கட்டு பெருத்துக் கொண்டு வருகிறது.

ஆனாலும் ராணி. ஐம்பதுகளின் அந்தப் பக்கம் இருக்கும் தன்னோடு ஒப்பிட்டால் இன்னும் சின்னஞ் சிறிசு தான்.

அவள் குளிக்கும்போது ஏன் பார்க்க வேண்டும் ?

தான் இதுவரை அவளைக் குளியலறையில் கதவைத் திறந்து போய் ஒரு தடவை கூடப் பார்த்தது இல்லை என்பது நினைவுக்கு வரச் சோழிகளைத் தரையில் பரத்தி வைத்தார் ராஜா.

அதில் ஒன்று உருண்டு வாசலுக்கு ஓட ஆரம்பித்தது.

முன்னோர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சோழிக்குள் அவர்களில் யாரோதான்.

ராஜாவுக்கு இந்தக் குறுக்கீடு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தரங்கமாகப் புருஷனும் பெண்சாதியும் கதைத்துக் கொண்டிருக்கும்போது முன்னோர்கள், பின்னோர்கள், அரண்மனை ஜோசியன், மிளகாய்மண்டிக்காரன், சேடிப்பெண் யாரும் வருவது முறையானதில்லை.

பின்னோர்கள் சொன்னால் கேட்பார்கள். உடனே புரிந்து கொண்டு அவர்கள் காலத்துக்குத் திரும்பிப் போய்விடுவார்கள்.

முன்னோர்கள் விஷயத்தில் இது எடுபடாது. அவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பவர்கள். எந்த நிமிடமும் எங்கேயும் நுழைந்து அதிகாரமாக ஆலோசனை சொல்லி, பயமுறுத்தி, நம்பிக்கை அளித்து வழி நடத்திப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள்.

ராணி குளிப்பதை யாரோ பார்த்தாலும் அவர்களுக்கு ஒன்றும் இல்லை. ஏதோ தலை போகிற விஷயம் இருப்பதாக வெள்ளைச் சோழியில் புகுந்துகொண்டு அறிவிக்கிறார்கள்.

ராணி வாசலுக்கு உருண்ட சோழியைக் காலால் தடுத்து நிறுத்தினாள். அதை அப்படியே வலது கால் கட்டை விரலுக்குக் கீழே மிதித்தபடி திரும்பவும் சொன்னாள்.

நான் அரண்மனைக் குளத்தில் குளிக்கும்போது தினமும் மேலே இருந்து பார்க்கிறார்கள்.

ராஜா அவள் காட்டிய திசையில் பார்த்தார்.

வடக்கில் பெரிதாக எழும்பியிருந்த கட்டிடம் ஜன்னல் வழியே தெரிந்தது.

கடல் கடந்து போய் புகையிலை விற்றுப் பிழைத்துக் கை நிறையப் பணத்தோடு திரும்பி வந்த யாரோ அங்கே மனையை வளைத்துப் போட்டுப் பெரிய வீடாக எழுப்பி இருக்கிறார்கள்.

நாலு மாடி. ஏகப்பட்ட அறைகள். தோட்டம். எப்போதும் ஒப்பாரிப் பாடல்களை மட்டும் பாடும் கிராமபோன் பெட்டி.

ராஜாவை விடப் பணத்தில் கொழுத்தவர்கள். செல்வாக்கும் கூடியிருப்பவர்கள். ராஜாவிடம் இல்லாத கிராமபோன் பெட்டி அவர்களிடம் உண்டு. அந்த ஒப்பாரிப் பாடல்கள் உள்ளத்தை உருக்குகிறவை. எத்தனையோ முறை ராஜாவே ஜன்னல் பக்கம் அவற்றில் மனதைப் பறிகொடுத்து நின்றிருக்கிறார்.

ஆனாலும் கிராமபோன் பெட்டி இருந்தால் ராஜாவுக்குச் சமானமாகி விடவோ ராஜாவை மிஞ்சிவிடவோ முடியுமா என்ன ?

ராணி சோழியைக் காதுக்கு அருகில் வைத்துக் கொண்டு கேட்டாள்.

முன்னோர்கள் அவளோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

காலில் போட்டு மிதித்தாலும், அவளிடம் ஏனோ அவர்கள் கோபப்படுவதில்லை. முன்னோர்களுக்கும் பிரியமானவள் ராணிதான். அவர்களும் அவள் குளிக்கும்போது பார்க்கிறார்களோ ?

இல்லை என்றாள் ராணி. அவர்கள் எல்லாம் என் முப்பாட்டன், அவனுக்கும் முந்திய தலைமுறைக்காரர்கள். என்னை ஒரு குழந்தையாகப் பாவிக்கிறவர்கள். பக்கத்து வீட்டு புகையிலைக் காரர்கள் போல் இளவயசில் அவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது.

ஆக, புகையிலைக்கார வீட்டுப் பிள்ளைகள் ராணி குளிக்கும்போது மாடியில் ஏறிப் பார்க்கிறார்கள்.

பிள்ளைகள் தானே. கவலை எதற்குப் படுகிறாய் ? மேலே இருந்து கல்லை, மரத் துண்டை ஏதாவது மேலே விட்டெறிகிறார்களா ?

ராஜாவுக்குக் குழந்தைகள் இல்லாவிட்டாலும் குழந்தைகளின் குறும்பும் விளையாட்டும் புரியும்.

அவர் மாதம் ஒருதடவை வெள்ளைக் குதிரை சாரட்டில் நகர் வலம் போகிறபோது வீட்டு வாசலில் நின்று சிறுநீர் கழித்தபடி சிரிக்கும் சிறுவர்களை அறிவார்.

பெரியவர்களும் மதிப்பதில்லைதான். வெற்றிலை போட்டபடியோ, வீட்டுக்குள் மனைவியை இறுக்க அணைத்துக்கொண்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபடியோ, சமைக்க மீனை வாசலில் உட்கார்ந்து சுத்தம் செய்து கொடுத்தபடியோ, எண்ணெய்க் குளியலுக்குத் தயாராக கெளபீனம் அணிந்து திண்ணையில் உட்கார்ந்தபடியோ ஆண்பிரஜைகள் தட்டுப்படுவது வழக்கம்.

பெண்களோ, அழுக்குத் துணிகளைத் துவைக்க எடுத்து ஆற்றங்கரைக்கு நடந்தபடியும், தூரம் குளித்து வந்த சலிப்பான முகத்தோடு கையில் குழம்புக்குக் கரைக்க எடுத்த புளியுருண்டையுடனும், ஒருவருக்கு ஒருவர் தலையில் பேன் பார்த்துத் தரையில் நசுக்கியபடியும் இருப்பார்கள்.

தான் பிரஜைகளால் மதிக்கப்படுகிற ராஜா இல்லை என்பது ராஜாவுக்குத் தெரியும்.

ராஜா, ராணி எல்லாம் ஒரு வசதிக்கு வைத்துக் கொண்ட பட்டம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

துரைத்தனத்தார் பார்த்துக் கொடுக்கிற பட்டங்கள் ஜமீந்தார், மிட்டாதார் என்று மட்டும் இருக்கும். சுற்றி இருப்பவர்கள் ராஜா என்று விளிக்க ஆரம்பித்து அது தலைமுறைக்கும் தொடரும்.

தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராஜாவோடு அது நின்று போகலாம். சந்ததி இல்லாத ராஜா என்பதால் அது சாத்தியம் தான்.

ராணியைக் குளிக்கும்போது பார்த்தால் சந்ததி இல்லாமல் வம்சம் நின்று போகாது என்று ராஜாவுக்குப் பட்டது.

அதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். புகையிலைக்கார வீட்டுப் பிள்ளைகள் விஷயத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் ? கட்டையாக மீசை வைத்த தடிதடியான ஆண்கள் எல்லோரும்.

ராணி கண்டிப்போடு சொன்னாள்.

அவள் கையில் இருந்து துள்ளி உருண்ட சோழி திரும்ப வாசல் பக்கம் நகர ஆரம்பித்தது. ஏதோ ஒப்பாரிப் பாடல் சன்னமாக அதில் இருந்து வந்தது. புகையிலைக்கார வீட்டு கிராமபோன் ரிக்கார்டுகள் முன்னோரையும் பாதித்திருக்க வேண்டும்.

நான் நாளைக்கு காரியஸ்தனை அனுப்பி விசாரிக்கிறேன். நீ நாளைக்குக் குளிக்க வேண்டாம்.

ராஜா முக்கியமான முடிவை அறிவித்த திருப்தி முகத்தில் தெரிய அவளைப் பார்த்துக் கனிவாகச் சிரித்தார்.

விசாரிப்பு. வெறும் விசாரிப்பு. அதுவும் கிழட்டுக் காரியஸ்தனை அனுப்பி.

ராணி எரிச்சல் அடங்காமல் பார்த்தாள்.

ஒரு ராஜாவாகக் கட்டளை போட்டு அந்த வீட்டை இடித்துப் போடச் சொல்லுங்கள் உடனே.

கோபத்தில் குரல் கிறீச்சிடக் கத்தினாள்.

ராஜா அவள் பக்கத்தில் போய் ஆதரவாக அவள் தலையைத் தடவினார்.

ஈரமான தலைமுடி. சிகைக்காயும் வாசனைப் பொடியுமாகத் தொடுவதற்கு இதமாக இருந்தது அவளுடைய முடி. இப்படியே இவளை உள்ளே அழைத்துப் போய்க் கூடினால் வம்சம் விருத்தியாகக் கூடும்.

காலை நேரத்தில் சம்போகத்தில் ஈடுபட்டால் முன்னோர்கள் குறைச்சல் பட்டுக் கொள்வார்கள். அததுக்கு நேரம் இருக்கு. நடுராத்திரியில் வெளிக்குப் போவாயா என்று கடிந்து கொள்வார்கள்.

காலைநேரக் கலவி சுகாதாரத்துக்குக் கேடு வரவழைக்கும் என்று துரைத்தனத்தாரும் சேர்ந்து சொல்வார்கள். மானியத்தை நிறுத்தி வைப்பார்கள்.

மனைவியோடு சுகிக்கக் கூட இன்னொருத்தரிடம் அனுமதி வாங்க வேண்டுமா என்ற சலிப்போடு ராஜா சோழியை ஓரமாக வீசினார். போகம் போகம் என்று சொல்லிக்கொண்டு அது உருண்டது. இதோ இப்பவே என்றார் ராஜா.

ஆனால் காலைச் சாப்பாடு இன்னும் முடிந்த பாடில்லை. வெறும் வயிற்றோடு அதெல்லாம் செய்ய முடியாது. சமையல்காரன் இன்றைக்குத் தாமதாமாகத்தான் வந்தான். கேப்பைக் கிளி கிண்ட ஆரம்பித்து இன்னும் முடித்த பாடாக இல்லை.

ராணி தலையில் சீயக்காய் இன்னும் போகாமல் நறநறத்தது. தலையில் இருந்து அவர் கையைத் தட்டி விட்டாள் அவள். கழுத்தின் ஊர்ந்த பேனை நசுக்கி அரண்மனைச் சுவரில் கோடு கிழித்தாள்.

காரியஸ்தன் வேண்டாம் என்றால் நானே போய் விசாரிக்கிறேன்.

ராஜா கேப்பைக் களி நினைவோடு நாவில் எச்சில் ஊறச் சொன்னார்.

தானே போய் விசாரிக்க, பக்கத்து வீட்டுப் படி ஏற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த கிராமபோன் பெட்டியைப் பக்கத்தில் இருந்து பார்க்கலாம். அவர் போன நேரத்தில் ஏதாவது ஒப்பாரிப் பாடலை அண்டை வீட்டுக்காரர்கள் வைத்துக் கொண்டிருந்தால் அதையும் பக்கத்தில் இருந்து கேட்கலாம்.

நீங்கள் ராஜா. மகாராஜா. அவர்கள் வெறும் பிரஜைகள். ஒரு காசுக்கும் இரண்டு காசுக்கும் புகையிலை விற்றுச் செங்கல் செங்கலாகச் சேர்த்து வீடு கட்டி சீவித்துக் கிடப்பவர்கள். நீங்கள் அந்த வீட்டுப்படி எல்லாம் ஏற வேண்டாம். யாரையாவது அனுப்பி அந்த வீட்டு சொந்தக்காரனைச் சபைக்கு வரவழைத்து உடனே வீட்டைக் காலி செய்யச் சொல்லி உத்தரவு போடுங்கள்.

ராணி நிலைவாசலில் ஒரு காலும் உள்ளே ஒரு காலுமாக அறிவித்துக் கொண்டிருக்க, சமையல்காரன் கேப்பைக்களி நிறைத்த பித்தளைத் தட்டும், மண் சட்டியில் புளிக்குழம்புமாக உள்ளே நுழைந்தான்.

சபை கூட்டுவது, விசாரணை செய்வது போன்ற சமாச்சாரம் எல்லாம் அப்புறம் நடத்திக்கொள்ளலாம் என்று ராஜாவுக்குத் தோன்றியது. அதற்கெல்லாம் செலவு பிடிக்கும். துரைத்தனத்தார் அனுமதிப்பார்களோ என்னமோ.

இப்போதைக்குச் செய்யக் கூடியது, ராணி ஒரு நாளைக்குக் குளியலை ஒத்தி வைப்பது. மற்றும் கேப்பைக் களி சாப்பிடுவது. ராணியும் இங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

அவள் வேண்டாம் என்பது போல் தலையை அசைத்து திரும்ப நடந்து போனாள்.

சோழிகள் தாமே நகர்ந்து பல்லாங்குழிப் பலகையில் இரு வசத்துக் குழிகளையும் நிறைத்தன. நகர்ந்து வாசலுக்குப் போன சோழி தயங்கி நின்று திரும்பி அவசரமாக வந்தது.

முன்னோர்கள் பல்லாங்குழி விளையாட ஆரம்பித்து விட்டார்கள். ராணியும் போய் விட்டாள். எந்த இடையூறும் இல்லாமல் கம்பங்களி சாப்பிடலாம்.

ராஜாவுக்கு ஆசுவாசமாக இருந்தது.

இப்போது பக்கத்துப் புகையிலைக்கார வீட்டு கிராமபோனில் நல்ல ஒப்பாரிப் பாடலாகச் சுழல விட்டால் பரமானந்தமாக இருக்கும்.

ருசியாகச் சாப்பிட்டுக் கொண்டே துயரத்தைப் பொழியும் இசையைக் கேட்பது போல் சந்தோஷமான காரியம் எதுவும் கிடையாது.

புகையிலைக் காரவீட்டில் கட்டை மீசை வைத்த தடிதடியான ஆண்பிள்ளைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்களில் கிராமபோன் பெட்டியை இயக்குகிறவர் யார் ?

உருக்கமான, காலத்தை உறைய வைக்கக் கூடிய ஒப்பாரிப் பாடல்களை விடவா இளமை கழிந்து கொண்டிருக்கும் ராணியில் சீயக்காய் வாடையடிக்கும் நிர்வாணம் மனதைக் கவரக் கூடியது ?

புகையிலைக்கார வீட்டில் கம்பங்களி செய்வார்களோ என்னமோ ? மூன்று வேளையும் அரிசிச் சோறு சாப்பிட்டால் மாடி ஏறி பக்கத்து வீட்டுக் குளியல் அறையில் கண்ணை ஓட்டச் சொல்லுமோ.

ராஜா புளிக்குழம்பை மண்சட்டியில் இருந்து எடுத்து ஊற்றிக் கொண்டிருந்தபோது வாசலில் யானை பிளிறும் சத்தம்.

பனியன் சகோதரர்கள்.

(தொடரும்)

eramurug@yahoo.com

Series Navigation