அந்த நாளும் அண்டாதோ ?

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

பசுபதி


பவனிவரும் நடையழகு; பைந்தமிழின் மொழியழகு;
. . பத்து மூன்று சொல்லழகு.
சிவனுடனே வாதிடலாம்; திருக்குறளை ஓதிடலாம்;
. . சிறுவர் பாட்டு யாத்திடலாம்.
நவநவமாய் எழுதிடலாம்; நாவல்கள் குவித்திடலாம்;
. . நோபல் பரிசும் நாடிடலாம்.
அவனிமிகு தமிழர்கள் முத்தமிழை அரவணைக்கும்
. . அந்த நாளும் அண்டாதோ ?

சுரங்களிலே ஒன்றிழைந்து சுருதிலயம் பெற்றெடுத்த
. . தொன்மை இசையில் களித்திடலாம்.
மரபுவழித் தென்னிசையாம் மாளிகையில் உட்புகுந்து
. . வண்ண ஜாலம் வனைந்திடலாம்.
தரங்குறையாக் கனமிகுந்த சங்கீத நிதியுள்ள
. . தமிழில் பாடத் தயங்குவதேன் ?
தரணிநிறை தமிழர்கள் தண்டமிழ்த்தேன் குடித்தாடும்
. . தங்க நாளும் வாராதோ ?

கன்னியென்பர்; அன்னையென்பர்; கல்தோன்றாக் காலமென்பர்;
. . காப்போம் என்றே சூளுரைப்பர்.
தன்னகத்தில் நாடோறும் தம்மனைவி மக்களுடன்
. . தமிங்கி லத்தில் திளைத்திடுவர்!
என்றிவர்கள் அறிவியலை எண்ணெழுத்தின் நுண்மைகளை
. . இனிய தமிழில் கற்றிடுவர் ?
அன்னைமொழி அனைத்துலகத் தமிழர்தம் மனையாளும்
. . அந்த நாளும் அண்டாதோ ?

Series Navigation