‘அதற்குப் பிறகு! ‘

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

கரு.திருவரசு,


அதற்குப் பிறகு! அதற்குப் பிறகு!
அதுதான் கணக்கில் உண்மை வரவு!

உணர்ச்சியின் கிளர்ச்சியில் காதல் பிறக்குது
இணைப்பில் மலர்ச்சியில் எல்லாம் மறக்குது
இருமனக் காதல் மணத்தில் முடியுது
திருமண அரங்கிலே வாழ்க்கை தொடங்குது!
அதற்குப் பிறகு! அதற்குப் பிறகு!
அதுதான் கணக்கில் உண்மை வரவு!

பயணம் போகிறோம் பலவும் பார்க்கிறோம்
அயர்வை ஒதுக்கி அலைந்து திரிகிறோம்
கால இழப்பு கைப்பொருள் இழப்பு
நாலும் இழந்தும் அதிலொரு களிப்பு!
அதற்குப் பிறகு! அதற்குப் பிறகு!
அதுதான் கணக்கில் உண்மை வரவு!

வாழ்க்கைப் பயணம் வகைவகை யானது
சேர்ப்பது பெறுவது செய்வது அழிப்பது
எழுவது உறங்கி விழுவது ஒருநாள்
எழுவதை மறந்தே உறங்கிப் போவது!
அதற்குப் பிறகு! அதற்குப் பிறகு!
அதுதான் கணக்கில் உண்மை வரவு!

thiruv@pc.jaring.my

Series Navigation