எம்.ரிஷான் ஷெரீப்,
கரடியையொத்தவொரு செத்த காட்டு மிருகம். நாற்பட்ட அதன் உடலிலிருந்து வீச்சமெடுக்கும்படி அழுகிப் புழுக்கள் நெளியும் வயிற்றின் குடல்பகுதிகள். சரி. அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு ஒரு போட்டி. உங்களிலிருந்து பத்து மீற்றர் தூரத்திலொரு பெரிய வட்டம் நிலத்தில் வரையப்பட்டிருக்கிறது. அந்த நீல நிற வட்டத்துக்குள்ளே அதை விடச் சிறிய ஒரு மஞ்சள் நிற வட்டம். அந்த மஞ்சள் வட்டத்துக்குள்ளே சிவப்பு நிற மிகச் சிறிய வட்டம். நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்குத் தரப்படும் பொருளை கடப்பாறையால் அள்ளி, பத்து மீற்றர் தொலைவில் இருக்கும் அந்த வட்டத்தை நோக்கி எறியவேண்டும். அப் பொருள் போய் விழும் இடத்தினைப் பொறுத்து உங்கள் போட்டி ஆரம்பமாகும்.
அப் பொருள் நீல நிறப் பெரிய வட்டத்துக்குள் விழுந்தால், ஒரு தட்டு நிறைய உங்களுக்குத் தரப்படும் முழு உணவினை சற்றும் மிச்சம் வைக்காமல் நீங்கள் உண்ணவேண்டும். மஞ்சள் நிற வட்டத்துக்குள் விழுந்தால் அதே உணவின் சிறிய பகுதியை உண்டால் போதும். சிவப்பு நிற வட்டத்துக்குள் விழுந்தால் உண்ணவே தேவையின்றி நீங்கள் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அடுத்த சுற்றுக்குப் போக உங்களுக்குச் சவாலாக இருக்கும் அந்த உணவைப்பற்றிச் சொல்லவில்லையே. அந்த உணவுதான், நான் முன்னர் சொன்ன பல நாட்களுக்கு முன்னர் செத்த விலங்கின், வீச்சத்தோடு புழு வடியும் குடல் பகுதி.
இது போன்ற பல போட்டிகளில் தேர்ச்சி பெற்று, இச் சுற்றுக்கு ஆறு இளம்பெண்கள் வந்திருந்தார்கள். முதல் பெண் எறிந்த பொருள் நீல வட்டத்துக்குள் விழுந்தது. முகம் அஷ்டகோணலாகிப் போக, பார்க்கும் என்னையும் அறுவெறுக்க வைத்தபடி அவர் வேறு வழியின்றி அந்தக் குடல்பகுதியை உண்ணத் தொடங்கினார். உதடுகளில் தொங்கிக் கொண்டு புழுக்கள் நெளிந்தன. உணவு, தொண்டையைத் தாண்டிப் போகும் பொழுதெல்லாம் வாந்தி வருவது போலச் சத்தமிட்டார். இரு கைகளையும் இறுகப் பொத்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே போட்டிக்கு வந்திருந்த சக பெண்களும் மூக்கோடு வாயையும் இறுகப் பொத்தியபடி பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் சாப்பிட்டு முடித்து, நடுவரால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றாரென அறியக் கிடைத்ததும் அந்த இடத்தின் ஒரு மூலைக்குப் போய் சாப்பிட்டதையெல்லாம் வாந்தியெடுக்கத் தொடங்கினார். அடுத்த பெண் எறிந்ததும் நீல வட்டத்துக்குள் விழுந்தது. அவர் தன்னால் இதனை உண்ணமுடியாதெனச் சொல்லி போட்டியை விட்டும் விலகிப் போனார். அடுத்தடுத்த பெண்கள் எறிந்ததுவும் நீல நிற வட்டத்துக்குள் விழுந்து, அதே உணவு உண்ணக் கொடுக்கப்பட்டது. மூக்கைப் பிடித்து ஒக்காளித்தபடி உண்டவர்கள், வெற்றி அறிவிப்பு வந்ததும் உடனே போய் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அன்று மதியம் சோறு இறங்கவில்லை.
இன்னுமொரு சுற்று இப்படி. செத்த விலங்குகளின் உடல்கள் ஒரு அறைக்குள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அதன் உடலிலிருந்து விழுந்த புழுக்கள் தரையெங்கும் நெளிகின்றன. மேலாடையில்லாமல் வெற்றுடம்போடு அந்தத் தரையில் ஊர்ந்துபோகவேண்டும். பிறகு அறையின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய உருளையான பாத்திரத்தின் அடி ஆழத்தில் இருக்கும் சாவியை எடுக்க வேண்டும். அந்த ஆழமான பாத்திரம் முழுவதுமாக இறந்த விலங்குகளின் கொழுப்புக்களாலும், கழிவுகளாலும் நிரம்பி வழிபவை. அதனுள்ளேதான் அந்தச் சாவி ஒளிந்திருக்கிறது. அதற்குள் தலையோடு மூழ்கித் தேடி சாவியைக் கண்டுபிடித்து எடுத்துப் பின் அறையின் ஒரு மூலையில் உறைந்த பனிக்கட்டியிருக்கும் பெட்டியைத் திறக்கவேண்டும். அந்தப் பனிக்கட்டியை விரல்களால் குடைந்து அதன் மத்தியில் இருக்கும் இன்னுமொரு சாவியைக் கண்டுபிடித்து எடுத்துப் போய் அதன் மூலம் வாசல் கதவைத் திறந்தால் அந்த அறையை விட்டும் வெளியே வரலாம். இவ்வளவையும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்துமுடித்தால் அடுத்த சுற்றுக்கும் போகலாம்.
இந்தப் போட்டியில் இது போலப் பல சுற்றுக்கள். விஷத் தேள்களை உடலில் ஊர்ந்துசெல்ல விட வேண்டும். பாம்புகளோடு, கொடிய விலங்குகளோடு ஒரு சிறு பெட்டிக்குள் இருந்து காட்டவேண்டும். கரப்பான் பூச்சி, சிலந்தி போன்ற சிறு பிராணிகளை தயங்காமல் உயிரோடு உண்டு காட்டவேண்டும். எந்தவித மறுப்பும் சொல்லாமல் சாக்கடைக்குள் இறங்கிக் காட்டவேண்டும். அவர்கள் சொல்லும் உயரமான இடங்களிலிருந்து குதித்துக் காட்டவேண்டும். நிர்வாணமாக தெருவில் நடந்துசெல்ல வேண்டும். கண்கள் கட்டப்பட்ட, முடி திருத்துபவர்களிடம் தைரியமாகத் தலையைக் கொடுக்கவேண்டும். பல இளைஞர்களும் , யுவதிகளும் பின்வாங்காமல் இவற்றையெல்லாம் செய்துகாட்டுகிறார்கள். காரணம் வெற்றி பெற்றால் கிடைக்கும் பெருந்தொகைப் பணம் மற்றும் பிரபலம் !
நான் மேற்சொன்னவையெல்லாம் அமெரிக்கத் தொலைக்காட்சியொன்று தனது பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகச் செய்த Fear Factor தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சில பகுதிகள் மட்டுமே. அதே போன்ற நிகழ்ச்சியொன்றை நேற்று விஜய் டீவியிலும் பார்த்தேன். நிகழ்ச்சியின் தலைப்பு ‘அணுவளவும் பயமில்லை’. ‘காபி வித் அனு’ நிகழ்ச்சி நடத்தும் அனு ஹாசனின் நிகழ்ச்சியென்பதால் ‘அனுவளவும் பயமில்லை’ எனத் தலைப்போ என்று இத் தலைப்பை மீண்டும் மீண்டும் கவனித்தேன். நல்லவேளை, அணுவளவும் பயமில்லைதான். நான் மேற்சொன்ன அமெரிக்கப் போட்டிகளின் ஆரம்ப நிலையில் இந் நிகழ்ச்சி இருந்தது. அதைப் போலவே தொடருமோ என அவர்களுக்கு இல்லாமல் போனாலும் எனக்குப் பயமாக இருக்கிறது.
முதற்கட்டமாக பிரபலமான ஏழு தொலைக்காட்சி நடிகைகளை அழைத்து வந்து அவர்களுக்கு போலிஸ் பயிற்சிமுறையின் போது கொடுக்கப்படும் சில கட்டப் பயிற்சிகளைச் செய்யச் சொன்னார் அனு. உயரமான இடத்தில் அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் ஊர்ந்து செல்லல், கம்பி வளையங்களில் ஏறி, இறங்குதல் போன்றவற்றைச் செய்தார்கள் அப் பெண்கள். அடுத்து ஒரு உயரமான சுவற்றிலிருந்து கயிற்றில் தொங்கிப் போய் எதிர்ப்புறத்திலிருந்த அடுத்த உயரமான சுவரில் உட்காரவேண்டும். இரு நடிகைகள் இதில் கீழே விழுந்து, காலிலும் தோள்பட்டையிலும் அடிபட்டு, காயங்களோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். காயப்பட்ட அந்த இரு நடிகைகளையும் தமது தொடர்களுக்காக ஒப்பந்தம் செய்திருக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வயிறு கலங்கியபடி பார்த்திருந்திருப்பார்கள். மீதி நடிகைகள் இன்னும் பல சாகசங்களைச் செய்து, பாம்புப் பெட்டிக்குள் கைகளை விட்டுக் காட்டி, அடுத்தடுத்த சுற்றுப் போட்டிகளுக்காகக் காத்திருக்கிறார்கள். எப்படியோ எதிர்வரும் காலங்களில் விஜய் டீவியின் அமெரிக்க உத்திகளால், பார்வையாளர் எண்ணிக்கை இன்னுமின்னும் அதிகரித்து, அவர்களது பணப்பெட்டி நிறையப் போவது மட்டும் உறுதி.
அனு ஹாசன் மற்றும் விஜய் டீவிக்கு இரண்டு கோரிக்கைகள். எப்படியும் அடுத்தடுத்த காலங்களில் நான் மேற்சொன்னபடி அமெரிக்கத் தரத்துக்கு இந் நிகழ்ச்சியும் வந்துவிடும். அடுத்த போட்டிகளின் போதாவது ஒரு மருத்துவரையும், ஆம்புலன்ஸ் வண்டியையும் அருகிலேயே வைத்திருங்கள். கலந்து கொள்பவர்கள் அந்தரத்தில், உயரத்தில் கால்கள் உதற நீங்கள் சொல்லும் சாகசங்களைச் செய்துகொண்டிருக்கும்போது ‘இப்பொழுது எப்படி உணர்கிறீர்கள்?’, ‘அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?’ என ஒலிவாங்கியைக் கொடுத்து, அவர்களிடம் அபத்தமான கேள்விகளைக் கேட்காதீர்கள். அத்தோடு இனிமேலாவது, கலந்துகொண்டவர்களுக்கு இப் பயிற்சிகளைச் செய்து காட்டிய போலீஸாருக்குத் தொப்பை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பயிற்சியாளர்களைப் பார்க்கும்போதும் இவ்வளவு சாகசமான பயிற்சிகளைச் செய்துமா இந்தளவு பருத்த தொப்பை வந்திருக்கிறதென ஆச்சரியமாக இருக்கிறது. முடிந்தால், கொஞ்சமாவது சமூகப்பற்று இருந்தால் இந் நிகழ்ச்சியை நிறுத்திவிடுங்கள். தொலைக்காட்சி பார்த்து, எல்லாவற்றையும் செய்துபார்க்கும் பல குழந்தைகளின், சிறுவர் சிறுமிகளின் உயிர்கள் காப்பாற்றப்படட்டும். அவர்களுக்குத்தான் உண்மையில் அணுவளவும் பயமில்லை பாருங்கள்.
இது போன்ற சாகசங்களை, வீர தீரச் செயல்களை எல்லாம் இப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான் பார்க்கவேண்டும் என்றில்லை. கடந்த ஜூலை மாத இறுதியில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்துக்கருகே பலவிதமான பயங்கர ஆயுதங்களோடு பஸ்ஸுக்குள் ஏறி பயணிகளிடம் தம் வீரதீரம் காட்டிய கல்லூரி மாணவர்களை நேரில் பார்த்துத் தெறித்தோடிய மக்களுக்கு இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளெல்லாம் பெரும் அதிர்ச்சியைத் தந்துவிடாது. அதுபோலவே கடந்த அதே ஜூலை மாதத்தில் பீகாரின் தலைநகரம் பாட்னாவில், பொது இடத்தில் எல்லோரும் பார்த்திருக்க 22 வயதுப் பெண்ணொருவரை ஆடைகள் கிழித்து அசிங்கப்படுத்தி, ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் எல்லோரும் பார்க்க ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தி, வீதியில் வைத்து ஒரு கும்பல் மானபங்கப்படுத்திய கொடூரக் காட்சியைக் கண்டவர்களுக்கு மேற்படி சாகச நிகழ்ச்சிகள் பெரிதாக ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை.
இதிலென்ன விஷேசம் என்றால் அப்பெண்ணை, அவர் கதறக் கதற அந்தளவு மானபங்கப்படுத்தும் காட்சியைக் கூட சுற்றிலுமிருந்த ஊடகவியலாளர்கள் புகைப்படங்களாகவும், வீடியோக் காட்சிகளாகவும் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்களே தவிர, எவரும் அவரைக் காப்பாற்ற முன் வரவில்லை. இந்த வெறித் தாண்டவத்தைச் செய்தியாக்கி விற்றுப் பணம் பார்க்கும் ஆர்வம் அவர்களை வழி நடத்திய அளவு கூட மனிதாபிமானம் அவர்களை வழி நடத்தவில்லை. இந் நிகழ்வில் பொதுமக்களும் சூழ நின்று ஏதோ சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதுபோல அந்த அநீதமிழைக்கும் கும்பலுக்கெதிராக எதுவுமே செய்யாமல் பார்த்திருந்தது கூட மிகவும் வேதனைக்குரியது. பொதுமக்களை விடுவோம். போலிஸ்காரர்களே இந் நிகழ்வின்போது அருகிலிருந்திருப்பின் அவர்களும் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்திருப்பர் எனத் தோன்றுகிறது. முன்பு இவர்கள் வேடிக்கை பார்த்த அழகை சென்னை, அம்பத்தூர் சட்டக் கல்லூரி மோதலில் நாம்தான் கண்டிருக்கிறோமே.
சட்டக் கல்லூரி கலவரத்தின் போதே, அரசும் போலிஸும் இதுபோன்ற கல்லூரி மாணவர்களின் வெறித்தனமான வன்முறைகளுக்கெதிராக ஏதேனும் உயர்மட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தால், எழும்பூர் இரயில் நிலைய அட்டகாசம் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. கல்லூரி மாணவர்கள் மேல் பெரிய அளவில் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற தைரியம் இருக்கும் காரணத்தால் அவர்கள் மேலும் மேலும் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். அதிரடிச் சண்டைக் காட்சிகளோடும், வெட்டுக் குத்துக்களோடும் எடுக்கப்படும் சினிமாக்கள் அவர்களது இள ரத்தங்களைத் தூண்டிவிடுகின்றன. எதிர்காலம் குறித்த அச்சங்களெதுவுமின்றி தம்மை, எல்லாம் வல்ல கதாநாயகர்களாகச் சித்தரித்துக் கொண்டு மோதல்களில் இறங்கிவிடுகிறார்கள். இப்பொழுதாவது இதற்கொரு சட்டம் கொண்டுவரப்படட்டும். இல்லாவிட்டால் காவல்துறையைச் சிரிப்புப் போலிஸாக மட்டுமே கண்டு வளரும் கல்லூரி மாணவர்களிடம் சட்டங்கள், தண்டனைகள் குறித்து கேட்கப்படுமிடத்து இப்படிச் சொல்லுவார்கள். ‘அணுவளவும் பயமில்லை’.
எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com
03.08.2009
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)
- அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி
- முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு
- சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’
- நாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்
- சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு
- நியூஜெர்ஸி பாரதி தமிழ் சங்கம் – தமிழ் வகுப்புகள்
- PRESTIGE GROUP Presents “Katha Collage” & Ismat Apa Ke Naam – II
- சிங்கப்பூர் கவிமாலை விருது விழா
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
- விவேகனுக்கு எனது பதில்
- அப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா?
- முத்துசாமி பழனியப்பன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>
- ரசனை
- தவறியவர்களுக்கு
- நட்புடன் நண்பனுக்கு
- ஆயுதங்களால் போரிடுவது எளிதானது
- கடவுளிடமிருந்து பறிக்கப்பட்டவர்கள்
- விஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு
- நல்லாசிரியர்
- அணுவளவும் பயமில்லை
- கடற்பறவையின் தொழுகை
- தொலைக்காட்சி
- கண்ணோடு காண்பதெல்லாம்
- அப்படியே….!
- ‘தேவனி’ன் நாவல் ‘கல்யாணி’
- அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்
- பட்டாளத்து மாமா
- வேத வனம் விருட்சம் -51
- பணமா? பாசமா?
- விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)
- அண்ணா – வேலுமணியின் வரைபடம்
- அறிவியல் புனைகதை:8 ஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்