அங்கிச்சி

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

பூரணி


என் ஓரகத்தியின் சித்தப்பாவின் மகள் ஒரு நாள் மூட்டை முடிச்சு, கைக் குழந்தை சகிதம் வந்து இறங்கினாள். குழந்தைக்கு ஐந்து மாதம் என்று சொன்னாள். அவளது கணவன் மாதவன் இதே ஊரில்தான் வேலை பார்த்து வந்தான்.

அந்தப்பெண் என் ஓரகத்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள், “ குழந்தை பிறந்து ஐந்து மாதம் ஆகிவிட்டது. என்னைக் கூட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இவருக்கு இல்லை போல் இருக்கிறது. நான் எப்போது கடிதம் போட்டாலும் ‘ இன்னமும் வீடு கிடைக்கவில்லை; கிடைத்தவுடன் உன்னை அழைக்க வருகிறேன்’ என்று பதில் எழுதுகிறார். அதனால் நானே புறப்பட்டு வந்துவிட்டேன். உன் வீட்டில் தங்கிக்கொண்டு வீடு பார்த்துக் கொள்ளட்டுமா ?” என்று கேட்டாள். என் ஓரகத்தி “ தாராளமாய் இருந்து கொள்” என்று சொன்னாள்.

மனைவி வந்துவிட்ட செய்தி கிடைத்து மாதவன் சில மணி நேரத்திலேயே அவளைப் பார்க்க வந்து விட்டான். “ நான் தான் வீடு கிடைக்கவில்லை என்று எழுதினேனே ஏன் திடாரென்று வந்து நிற்கிறாய் ?” என்று சற்று கோபமாகவே கேட்டான். அதற்கு அவள் “ என் அக்காள் மூலம் நானே வீடு பார்க்கலாம் என்றுதான் வந்துவிட்டேன், கிடைக்கும்வரை அக்காள் வீட்டில் இருக்கப்போகிறேன்” என்று பதில் சொன்னாள்.

மாதவன் மறுநாளே வீடு கிடைத்து விட்டதாகக் கூறி மனைவியை கூட்டிச் சென்று பக்கத்துத் தெருவில் ஒரு வீட்டில் குடியமர்த்தி விட்டான். என் ஓரகத்தியும் மைத்துனரும் “ இந்த ஊரில் வீடு கிடைப்பதில் என்ன சிரமம் ? காலிப்பயல்! மனைவி வந்தால் தன் குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற எண்ணம்” என்று சொல்லிக்கொண்டார்கள்.

ஒரு மாதம் சென்றிருக்கும். ஒரு நாள் அங்கிச்சி ஒரு கல்யாணமாகாத, சுமார் இருபது வயதுப் பெண்ணோடு வந்திருந்தாள். அவள் தன்னுடைய ஒன்றுவிட்ட நாத்தனார் என்றும், நதிக்கு அப்பால் உள்ள ஊரில்தான் இருப்பதாகவும், தன்னோடு சில நாட்கள் இருந்துவிட்டு போக வந்திருக்கிறாள் என்றும் சொன்னாள். அங்கிச்சி அந்தப் பெண்ணுக்கு தனது நகைகளை அணிவித்தும், தனது பட்டுப் புடவையை உடுத்துக் கொள்ளக் கொடுத்தும், அழகு பார்ப்பதாக அவளுடைய பக்கத்துவீட்டுப் பெண்மணி மூலம் தெரிந்துகொண்டோம்.

***

‘திடார்’ என்று ஒரு நாள் தெருவே பதட்டம்கொண்டது; அங்கிச்சி தூக்குப்போட்டுக் கொண்டு தொங்குகிறாள் என்று. எங்கள் வீட்டு ஆண்கள் அங்கு விரைந்து சென்றனர். ஊரே கூடிவிட்டது. மாதவன் அழுது துடித்தான்; மூர்ச்சையாகி விழுந்தான். போலீஸ் வந்து விட்டது. இது பெரிய கேஸாகிவிடக்கூடாது என்று ஊர்ப் பெரியவர்கள், அவர்களுக்கு பணம் கொடுத்து விஷயத்தை மூடி மறைத்துவிட்டனர்.

பின்னர், அங்கிச்சியின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுப் பெண்மணியின் மூலம், முந்திய நாள் மாதவனின் தாயாருக்கு சிரார்த்தம் நடந்தது என்றும், அன்று மாலையே தனது நாத்தனார் பெண்ணை அவள் வீட்டில் கொண்டுபோய் அங்கிச்சி விட்டு விட்டு வந்ததாகவும், சோர்ந்த குரலில் ‘எண்ணம் யாவும் கனவு போல மண்ணில் மாய்ந்ததே’ என்ற பாடலை பாடிக்கொண்டிருந்ததாகவும் தெரிந்து கொண்டோம். மாதவனும் தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இருந்த தகாத உறவை ஒப்புக்கொண்டதல்லாமல் என் மைத்துனரிடம், “ என் மனைவிக்கு இது தெரியாது என நம்பியிருந்தேன். அவள் அந்தப் பெண்ணைக் கூட்டிவைத்துக் கொண்டு அவளை சிங்காரித்து விட்டு இரவெல்லாம்

உறங்காமல் வேவு பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். நான் முந்தாநாள் என் கட்டுப்பாட்டை இழந்து அவளோடு இருந்தபோது எங்களை கையும் களவுமாகப் பிடித்துவிட்டாள். என்னுடன் மூர்க்கமாக சண்டையிட்டுவிட்டு, மறு நாள் அவளை கூட்டிச் சென்று அவள் பெற்றோரிடம் விட்டுவிட்டு அவர்களையும் கண்டபடி ஏசிவிட்டு வந்தாள்” எனச் சொல்லி வருந்தினானாம்.

***

ராமகிருஷ்ணன், முத்துலட்சுமி தம்பதியருக்கு நான்கு ஆண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்தவள் அங்கிச்சி. எனவே மிகுந்த செல்லமாக வளர்க்கப்பட்டாள். அவளது ஐந்தாவது வயதிலேயே பெற்றோரை இழந்த அவள் சகோதரர்களின் ஆதரவில் வளர்ந்தாள். தங்கையின் மீது உயிரையே வைத்திருந்த அவர்கள் அவள் திருமணத்தின் போது தாயாரின் நகைகளோடு தாங்களும் நகைகள் செய்து, மிகச் சிறப்பாகக் கல்யாணம் செய்து மகிழ்ந்தனர்.

மாதவனும் தனி மனிதன். உடன் பிறந்தவர்கள் இல்லாதவன். பெற்றோரும் காலமாகிவிட்டனர். எனவே அவனது ஏழு மாதக் குழந்தையை எடுத்து வளர்க்க யாரும் முன் வரவில்லை.குழந்தையின் மாமன்களோ சகோதரியின் திருமணத்தில் செய்த சீர் வகைகளைத் திரும்பப்பெறுவதிலேயே முனைப்பாக இருந்தனரே தவிற குழந்தயை பரமரிக்க முன் வரவில்லை. மாதவனுக்கு வேண்டிய உறவினர் முன்வந்து குழந்தை இருக்கும் போது தாயின் நகைகளும் பொருள்களும் அதற்குத்தான் சேரவேண்டும் என வாதித்து,சிலரை சாஷிவைத்துக்கொண்டு, ‘லிஸ்ட்’ எடுத்து மாதவனிடம் ஒரு பிரதியும் அங்கிச்சியின் அண்ணமார்களிடம் ஒரு பிரதியும் ஒப்படைத்துவிட்டு, பொருள்களை அவள் அக்காள் புருஷனிடம் கொடுத்து பத்திரப்படுத்தினர்.

நிர்கதியான அந்தக் குழந்தயை மாதவன் வீட்டிற்குப் பால் ஊற்றிவந்த குழந்தை இல்லாத பால்காரி தான் வளர்ப்பதாகச் சொல்லி எடுத்துச் சென்றாள். மாதவன் குழந்தையின் பராமரிப்புச் செலவை ஏற்றுக்கொண்டான். குழந்தை வந்த நேரம் பால்காரியும் கர்ப்பமாகி ஒரு ஆண்குழந்தைக்குத் தாயானாள். என்றாலும் தொடர்ந்து மாதவனின் குழந்தையையும் பராமரித்துவந்தாள். ஆனால் மூன்று வயதில் அது நோய்கண்டு இறந்துவிட்டது. என் அக்காள் புருஷனிடமிருந்து அவன் பொருள்களை வாங்கிக்கொண்டு போய்விட்டான்.

மாதவனின் காதலியான அந்தப் பெண்ணும் கன்னியாகவே கர்ப்பமாகி விடவே அதைக் கலைக்கமுயன்றும் அதையும் மீறிக் குழந்தை வளரத்தொடங்கியது. அவளுடைய பெற்றோர் அவளுக்கு வயிற்றில் கட்டிவந்து உள்ளதாக வைத்தியர் கூறுவதாகச் ஊருக்கு செய்தி பரப்பிவிட்டு வேறு ஊருக்குச் சென்று குழந்தை பிறந்தவுடன் அதை ஆஸ்பத்திரியிலேயே கொடுத்துவிட்டு ஊர் திரும்பினார்கள். பிறகு வெகு தொலைவில் ஒரு வரன் முடிவு செய்து அந்தப் பெண்ணை மணமுடித்தும் விட்டனர்.

( பூரணி)

***

nagarajan62@hotmail.com

Series Navigation