நாசமத்துப் போ !

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

அப்துல் கையூம்



“உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?” – பாடலொன்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம்மைப் பார்த்து கேட்கின்ற கேள்வி இது.

ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் அமெரிக்கன் வீசினானே அதுபோன்ற வலிமைமிக்க அணுகுண்டா அல்லது கண்டம் விட்டு கண்டம் பாய எந்நேரத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ராட்சஸ ஏவுகணைகளா என்று நாம் விடையைக் குடைவதற்கு முன்பே “நிலை கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குதான் அது!” என்று நாம் சற்றும் எதிர்பாராதவண்ணம் ஒரு பதிலைத் தருவான் அந்த பாட்டாளிக் கவிஞன்.

நயவஞ்சகர்களின் நாக்கு மட்டும்தான் கொடியதா? சிற்சமயம் நல்லவர்களின் நாக்கும் கொடிய ஆயுதமாக உருமாறி விடுகிறதே? கோபத்தில் கொந்தளிக்கும் சாபம் பலித்திருப்பதாகவும் பகர்கிறார்களே? உண்மைதானோ?

வரம்பு மீறி வீசப்படும் வசைமொழிகள் இருக்கிறதே அது அணுகுண்டைக் காட்டிலும் ஆபத்தானது; ஏவுகணையைக் காட்டிலும் நாசம் விளைவிக்கக் கூடியது. சிலர் கடுமையான வார்த்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கக்கி விடுவார்கள். கணநேர ஆத்திரம் அவர்களின் கண்களை மறைத்து விடும். அதன் பின்னர் அவர்கள் அறியாமல் சொன்னதை நினைத்து மனம் வருந்துவார்கள்.

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”

என்று வார்த்தைகளின் கொடூரத்தன்மையை விளக்குவான் ஐயன் திருவள்ளுவன்.

மனமாரச் சொன்ன வாழ்த்தும், மனமெரிந்து சொன்ன சொல்லும் கட்டாயம் பலிக்கும் என்பார்கள். இரு மனங்களுக்குள் ஏற்படும் திருமண பந்தத்தை, ஊரறிய, உலகறிய ‘சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்’ என்று அழைப்பிதழ் அச்சடித்து, அனைவரையும் வரவேற்று, ஆனந்தம் அடைகிறோம். ஏன்? நான்கு பேர்கள் கூடி நின்று நாவால் முழங்கும் நல்லாசிகள் இளம் தம்பதியினரின் வாழ்க்கையில் வளம் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பில்தான். “நூறாண்டு காலம் வாழ்க” என்றும் “பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என்றும் ஆன்றோர்களின் ஆழ்மனதிலிருந்து வரும் ஆசிகளுக்கு ஈடு இணையேது?

நான் பிறந்த மண்ணான நாகூரில் சில விசித்திரமான பழக்க வழக்கங்கள் காணக் கிடைக்கும். வாசலில் நின்று யாசகம் கேட்கும் ஆசாமிகளுக்கு ஈவதற்கு ஏதும் இல்லாதபோதும் கூட இல்லத்திலிருப்பவர்கள் இசைக்கின்ற பதில் நம் இதயத்தைக் கவரும்.

“மாப்பு செய்யுங்க பாவா” என்று மனம் நோகாத வண்ணம் கூறுவார்கள். “பாவா” என்றால் தந்தைக்குச் சமமான சொல். “மாப்பு செய்யுங்கள்” என்றால் மன்னித்துவிடுங்கள் என்று பொருள். ஒரு சாதாரண பிச்சைக்காரனிடம் சென்று தாங்கள் ஏதோ தகாத செயல் செய்து விட்டதைப் போன்று மன்னிப்பு கேட்பது விந்தையாக இருக்கிறதல்லவா? உயர்ந்த பண்பாட்டுக்கு இது ஒரு உன்னத அளவுகோள்.

“ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்” – என் தாயார் எனக்கு அடிக்கடி கூறும் அறிவுரை இது. நம்மைச் சுற்றிலும் இரு வானவர்கள் இருக்கிறார்கள். நாமுரைக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் ‘அப்படியே ஆகட்டுமென்று’ ஆசி வழங்குகிறார்கள் என்பார். உள்ளத்திலிருந்து அல்லாமல் உதட்டளவில் உச்சரிக்கும் வார்த்தைகள் கூட ஒரு சில நேரத்தில் உண்மையாகி விடுவது இதனால்தான்.

நல்ல விஷயங்களை நடைமுறையில் இருப்பதைப்போன்று களைய வேண்டிய கேடு கெட்ட பழக்கங்களும் எங்களூரில் கண்கூடு.

“களிச்சல்லே போவா”, “கொள்ளையிலே போவா”, “படிய விழுகுவா”, “கட்டையிலே போவா”, “கசங்கொள்ளுவா”, “கர்மம் கொள்ளுவா”, “பலா கொள்ளுவா”, இதுபோன்ற வசைமொழிகள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதில் காணலாம். இதன் ஆழ்பொருளை உணருபவர்கள் ஒருக்காலும் இவ்வார்த்தைகளை தங்கள் நாவால் மொழியவே மாட்டார்கள்.

ஒருகாலத்தில் “டயேரியா” என்ற ஒரு கொடுமையான வியாதி பரவி தொடர்பேதி வந்து உயிரைக் குடித்தது. அவ்வியாதி வந்து மாய்ந்துப்போ என்ற அர்த்தத்தில் அமையப்பட்ட ஒரு சொற்றொடர் இந்த “களிச்சல்லே போவா” என்ற வசைமொழி. இன்னும் ஒரு படி மேல் சென்று “ஒரு களிச்சல்லே போவா” என்று திட்டுவார்கள். வியாதி தாக்கிய மாத்திரத்தில் உடனடியாக ஒரு வயிற்றுப்போக்கிலே நீ செத்து மடி என்ற பொருள் பதிந்த மிகக்கொடிய சொற்றொடர் அது.

கொள்ளை நோய் என்பது பிளேக் (Plague) நோயைக் குறிக்கும். ஒரு காலத்தில் இந்நோய் தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம். “கொள்ளையிலே போவா” என்றால் இதைத்தான் குறிக்கும்.

Brain Hemorrhage ஒரு மனிதனை தாக்கும் போது மூளைக்குச் செல்கின்ற நரம்பு மண்டலக் குழாய்கள் வெடித்துச் சிதறும். தடாலென்று கீழே விழுந்து இறந்து விடுவார்கள். இதைத்தான் “படிய விழுகுவாய்” என்று ஏசுவது.

மோசமான மரணமென்பது ‘கோமா’ ஸ்டேஜில் சென்று மடிவதுதான். மரணத் தருவாயில் இறை நாமத்தைக் கூட உச்சரிக்க இயலாது. கோமாவில் இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு மட்டுமே இருக்கும். மற்ற பாகங்கள் செயலிழந்து விடும். உணர்வு அறவே இருக்காது. உடம்பு மரக்கட்டையாக போய் விடும். அதைத்தான் “கட்டையிலே போவா” என்று வசை பாடுவது.

மிகக்கொடுமையான நோய்களில் ஒன்று குஷ்டம். பாதிக்கப்பட்டவனின் தேகத்தை சிறுகச் சிறுக குலைத்து அவன் மேனியழகை சிதைத்து விடும். “கசங் கொள்ளுவா“ “பலா கொள்ளுவா” “கர்மம் கொள்ளுவா” என்று சொல்லுவதும் இக்கொடிய நோய் தாக்கி அவலட்சணமடைந்து சாவாயாக என்ற பொருள்தான்.

பிற்பாடு இந்த உள்ளர்த்தங்களை உணரத் தொடங்கியதும் இத்தகைய வசைமொழிகள் குறையத் தொடங்கின. திட்டுவதிலும் ஒரு சுகம் இருக்கின்றது போலும். அந்த சுகத்தை இழக்க இவர்கள் தயாராக இல்லை. திட்டுகின்ற அதே கடுமையான பாணியில் சில நல்ல வார்த்தைகளையும் கூறத் தொடங்கினர். “அட நீ நல்லா இருப்பே” போன்ற வாசகங்கள் திட்டுகின்ற அதே தொனியில் இருக்கும். ஆனால் வாழ்த்துக்களாக இருக்கும்.

பற்பல ஊர்களில் “நீ நாசமாப் போவா” என்ற ஏசுதலை “நீ நாசமத்துப் போ” என்று சொல்லக் கேட்கலாம் “நாசம் அற்றுப் போ” என்றால் “நாசமெலாம் கலைந்து நீ நன்றாக இருப்பாயாக” என்று பொருள்.

பெரும்பாலான வீடுகளில் தம் பிள்ளைகள் வெளியே போகும்போது “நான் போகிறேன்” என்று விடைபகர்ந்தால் “அப்படிச் சொல்லக் கூடாது. போய் வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள்.

சில வீடுகளில் பிள்ளைகளைப் பார்த்து “எங்காவது போய்த் தொலை” என்று திட்டுவார்கள். இதுவும் திருத்தப்பட வேண்டிய வழக்கங்களில் ஒன்று.

“எண்ணத்தின் அளவே செயல்” என்பார்கள். எண்ணங்களும் பேச்சுக்களும் நல்லவைகளாக இருந்தால்தான் நம்முடைய செயல்களும் நல்லதாக இருக்க முடியும்.

“யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”

என்பது புறநானூற்றுப் பாடல். யானையை வேட்டையாடி வருவேன் என்று காட்டுக்குப் போகின்றவனின் நோக்கம் நிறைவேறுவது திண்ணம். அவனுள் ஏற்படும் அந்த உயர்ந்த எண்ணத்தின் மனபலமானது அவனுக்குள் ஒரு உத்வேகத்தை உண்டு பண்ணுகிறது. முயலை வேட்டையாடி வருவேன் என்று போகின்றவன் வெறுங்கையோடுதான் வருவான். எண்ணம் எப்பொழுதும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டுமென்பது இப்பாடலின் கருத்து.

கம்பராமாயணம், பெரியபுராணம், நெடுநல்வாடை போன்ற நூல்களில் ‘வையம்,’ அல்லது ‘உலகம்’ என்ற மங்கல வார்த்தைகளோடு தொடங்குவதைக் காணலாம் இவைகளை “அமுதச் சொற்கள்” என்று பகுத்தறிந்து சொல்வார்கள்.

இதே ‘சென்டிமென்ட்’ தமிழ்த் திரையுலகிலும் பரவலாகவே காணப்படுகிறது. படப்பதிவின் ஆரம்பத்தில் “வெற்றி! வெற்றி! வெற்றி!” என்று சொல்வதைப் போன்றோ அல்லது “ஆத்தா நான் பாஸாயிட்டேன்” என்றோ வசனங்களை பதிவு செய்வது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது.

‘தூறல்நின்னு போச்சு’ என்றெல்லாம் படப் பெயர் வைப்பது முறையல்ல. பலபேர்களின் வாயிலிருந்து இவ்வார்த்தைகள் வரப்போக மழையே இல்லாமல் போய்விட்டது என்று ‘டணால்’ தங்கவேலு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நல்ல வார்த்தைகள் மாத்திரமே நம் வாயிலிருந்து வெளி வரவேண்டுமென்பது அவரது ஆதங்கம்.

“பாடமாட்டேன்.. நான் பாடமாட்டேன்” என்ற ஒரு பாடலை நடிப்பிசைப் புலவர் K.R. ராமசாமி ஒரு படத்திற்காகப் பாடினார். அவரது வாக்கு பலித்ததாலோ என்னவோ மேற்கொண்டு அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. இத்தகவலை கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் சொன்னார்.

பாலச்சந்தர் இயக்கிய ‘நீர்க்குமிழி’ என்ற படத்திற்காக வி.குமார் இசையமைக்க பாடல் பதிவு தொடங்குகிறது. சீர்காழி கோவிந்தராஜன் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்று பாடத் தொடங்கியதும் மின்சாரம் நின்று போனதாம்.

டி.எம்.எஸ். மேடையில் எந்தப் பாடலை வேண்டுமானாலும் பாடுவார். ஒரே ஒரு பாட்டைத் தவிர. டி.ராஜேந்தரின் ‘ஒருதலை ராகம்’ என்ற படத்தில் அவர் பாடிய நேரம் பொல்லாத நேரம் போலும். “நான் ஒரு ராசியில்லா ராஜா” என்று அவர் பாடியதற்குப் பிறகு அவருக்கு இறங்குமுகம்தான்.

பெருந்தலைவர் காமராஜர் இறந்து போவதற்கு முன்பு கடைசியாக சொன்ன வார்த்தை “விளக்கை அணைத்து விடுங்கள்” என்பது. இதனை தீர்க்கதரிசன வார்த்தைகள் என்று சில பத்திரிக்கைகள் அப்போது எழுதின. ஒத்தமைவு (Coincidence) என்பதைத் தவிர வேறென்ன இதில் இருக்க முடியும்?

“அழிந்துடுவாய் வேண்டாம்; கெட்டுடுவாய் கெட்டுடுவாய் என்றால் கெட்டேபோவார்கள்” என்று கண்ணதாசன் ஒரு முறை கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட அறிவுரை வழங்குகின்ற கவிஞர் பிறிதோரிடத்தில்

“மன்னவன் பசியால் சாக
மடையர்கள் கொழுத்து வாழ
தென்னவர் நாடு செய்தால்
தீயில்தான் சாம்ப லாகும்
அன்னையே தமிழே இந்த
அறம் வெல்ல வேண்டு கின்றேன்”

என்று தென்னவர் நாடு தீயில் சாம்பலாகுமென அறம் பாடுகிறார். அவர் முரண்பாடுகளின் மொத்த உருவமென்பது இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகிறது.

பாரதி மாத்திரம் என்னவாம்? தமிழ் வாழ வேண்டும் என்ற உள்ளூர எண்ணம் கொண்டிருந்த அந்த மகாகவிஞன் ‘மெல்லத் தமிழினி சாகும்’ என்று சொல்லியிருக்கக் கூடாதுதான். இன்று ஊடகங்களில் உச்சரிக்கப்படும் தமிழை காது கொடுத்து கேட்கையில் பாரதியின் வாக்குதான் பலித்து விட்டதோ என்ற ஐயம்தான் எழுகிறது.

எனது நண்பர் ஒருவர் எதற்கெடுத்தாலும் “எழவு” என்ற வார்த்தையை பயன் படுத்துவார். “என்ன இது ஒரே எழவா போச்சு” – இது அவர் வாயிலிருந்து அடிக்கடி வந்து விழும் வாசகம். ஒருநாள் அவருடைய வீட்டில் உண்மையிலேயே ஒரு “எழவு” விழுந்து விட்டது, அதற்குப் பிறகு அவரது வாயிலிருந்து அந்த வார்த்தை அறவே போய் விட்டிருந்தது.

அறம் பாடிய புலவர்கள் என்று தமிழ் இலக்கியத்தில் நாம் படித்திருக்கிறோம். அறம் என்றால் தர்மம். அரம் என்றால் சாபம். அரம் பாடிய புலவர்கள் என்று சொல்வதே சரியான வழக்கு என்று சிலர் வாதாடுவதுண்டு. எது சரியான சொற்பதம் என்று ஆராய்ந்து நான் குழம்பிப் போனதுதான் மிச்சம். பிரபலமான படைப்பாளிகள் அனைவரும் “அறம்” என்றே கையாண்டிருப்பதால் நானும் “அறம்” என்றே இங்கே கையாண்டிருக்கிறேன்.

“அவன் பொடி வைத்து பேசுகிறான்” என்று பலர் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறோம். உள்ளர்த்தம் வைத்து பேசுவதைத்தான் இப்படிச் சொல்கிறோம். இதே போன்று அறம் வைத்து பாடுவதென்றால் பிறருக்கு கேடு ஏற்படும் வண்ணம் வசை பாடுவது.

அறம் பாடுவதில் பலவகை உண்டு. கடுமையான வார்த்தைகள் அறியாத வண்ணம் வாயிலிருந்து வந்து விழுந்து விடுவது முதல் வகை. போற்றுவது போலும் தூற்றுவது போலும் இருபொருள் பட பாடுவது இரண்டாவது வகை. வேண்டுமென்றே பிறர் நாசமடையும் வண்ணம் நேரடியாகவே சாபம் விடுவது மூன்றாவது வகை. தனக்குத்தானே தீமை உண்டாவதற்கு தானே அறம் பாடிக் கொள்வது நான்காவது வகை.

ஒரு தமிழ்ப் பண்டிதர் தன் மாணவனைப் பார்த்து கீழே அமர்ந்து படி என்ற அர்த்தத்தில் “இரும் படியும் பிள்ளாய்” என்று சொல்வதற்கு பதிலாக சேர்த்தாற்போல் “இரும்படியும் பிள்ளாய்” என்று சொல்லப்போக அவர் வார்த்தை பலித்து பிற்காலத்தில் அவன் இரும்படிக்கும் தொழிலாளியாக ஆகிவிட்டானாம். அறியாமல் வரும் வார்த்தைகள் சிற்சமயம் “சொற்பலிதம் “ ஆகி விடுவதுண்டு.

இன்னொரு தமிழ்ப்புலவர் தன் வறுமையை போக்க வேண்டி ஒரு தனவானிடம் சென்று ஒரு தொகை கேட்டிருக்கிறார். புலவரைப் பார்த்து “காசு என்றால் உனக்கு அவ்வளவு லேசாக போய் விட்டதா?” என்ற பொருளில் “காசா லேசா?” என்று இளக்காரமாக தனவான் கூறியிருக்கின்றார். பணம் படைத்தும் மனம் படைக்காத கருமியின் வார்த்தைகள் புலவரின் உள்ளத்தை முள்ளாய் தைத்துவிட “காசாலே சா” என்று அவர் சொன்ன வார்த்தைளை வைத்தே சாபம் விட்டாராம்.

பிறர் வாயிலிருந்து இதுபோன்ற வார்த்தைகள் வந்து வீழாத வண்ணம் நம்மை நாமே காத்துக் கொள்வது நம் தலையாய கடமை. ஏனெனில் வஞ்சிக்கப்பட்டவனின் உள்ளத்திலிருந்து வேதனை கலந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கு இறைவனின் சபையில் உடனடி அங்கீகாரம் கிடைத்து விடுகிறது.

“தேரா மன்னா! செப்புவதுடையேன்” என்று பாண்டியன் நெடுஞ்செழியனின் சபையில் தன் கணவனுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக வாதாடுகிறாள் கண்ணகி. தீர ஆராயாமல் தவறான ஒரு தீர்ப்பினை கோவலனுக்கு தந்து விட்ட மன்னன்

“யானோ அரசன், யானே கள்வன்
கெடுக என் ஆயுள்”

என்று தனக்குத்தானே அறம் பாடிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வை சிலப்பதிகாரத்தில் நாம் காண்கிறோம்.

அதே போன்று நல்லோரை விலக்கி தீயோரை தீக்கிரையாக்குவதற்கு கண்ணகி விடும் சாபம் இவ்வாறாக இருக்கிறது :

“பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டீர்
மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க ..”

என்று கண்ணகி விட்ட சாபத்தில் மதுரை மாநகரமே தீப்பிடித்த கதையை தன் காவியத்தில் வடிக்கிறார் இளங்கோவடிகள்.

முன்னொரு காலத்தில் நாகூரில் வாழ்ந்த இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் மீது வேறொருவர் பொய்வழக்கை தொடர்ந்து விட, வெகுண்டுப் போன கவிஞர்

“செல்லா வழக்கை என்மீது தொடுத்தானோ?
அல்லா விடுவானோ அம்புவீர்
நில்லாமல் போகும் அவன் வாழ்வும்…”

என்று அறம் பாட, பாடப்பட்டவரின் சந்ததியே சின்னா பின்னமாகி விட்டதாம்.

சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் தம்புச் செட்டி என்பவரிடம் ரமலான் மாதத்தில் பள்ளிவாயிலில் வினியோகிக்க வேண்டி மாம்பழம் தருவித்திருக்கிறார். அவை யாவுமே அழுகிப்போன பழங்களாக இருக்க பாவலருக்கு வந்ததோ கோபம்.

“கும்மியடிப் பெண்ணே கும்மியடி
தம்புச்செட்டி தலைதெறிக்க கும்மியடி”

என்று பாட அச்சமயம் மாடிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த செட்டியார் கீழே உருண்டு விழுந்தார் என்பார்கள்.

வேறொரு முஸ்லிம் புலவர் சாத்தான் குளம் என்ற ஊருக்கு வந்த போது அவருக்கு அங்கு கொடுமை நிகழ்ந்துப் போக மனம் புழுங்கி

“சாத்தான் குளத்தாரே சங்கைகெட்ட தீனோரே
சோத்தாரே நீங்கள் சுகம்பெறவே மாட்டீர்கள்”

என்று அறம் பாடிச் சென்றதாக ஏடுகள் பகர்கின்றன.

தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராக நக்கீரர் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். குயக் கொண்டான் என்னும் வடமொழிப் புலவனொருவன் தமிழகத்திற்கு வருகை புரிகிறான். தமிழ் மொழியை நீசர் பாஷை என்றும் வடமொழிக்கு நிகர் அது சற்றும் இல்லையென்றும் இழித்தும் பழித்தும் கூறுகிறான். தமிழைத் தரக்குறைவாக கூறுவதைக் கேட்ட நக்கீரருக்கு வந்த கோபத்தை கேட்கவா வேண்டும்? சினங் கொண்ட நக்கீரர்,

“முரணில் பொதியன் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி – அரணிய
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆனந்தஞ் சேர்க்க சுவாஹா”

என்று அறம் பாடி விடுகிறார். வடமொழிப் புலவனின் உடல் தீயிற் பட்டால் போல எரியத் தொடங்கி விடுகிறது.

பாடுவார் முத்தப்பச் செட்டியார் என்ற புலவரொருவர் செட்டிநாட்டுப் பகுதியிலுள்ள செவ்வூர் என்ற ஊருக்குச் சென்றிருக்கிறார். நண்பகல் நேரம். புலவருக்கு கடும்பசி. அவரவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவரை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மனிதருக்கு வந்ததே கோபம்;

“எவ்வூர்க்குப் போனாலும் எத்தேசம் சென்றாலும்
செவ்வூர்க்குச் செல்ல மனம் செல்லாதே – அவ்வூரார்
பாத்திருக்க உண்பார்; பசித்தமுகம் பாரார்;
கோத்திரத் துக்கேற்ற குணம்.” –
என்று பாடி விட்டார்.

அட்டூழியம் புரிந்துக் கொண்டிருந்த லிங்காநாயக்கன் மீது பாடுவார் முத்தப்பச் செட்டியார் அறம் வைத்து பாடிய வசைப்பாடல் இதோ :

“பத்தலார்க்கு உதவுபதி எரசு மேவும்
பாக்கியனே இம்முடிலிங்கேந்த்ரா நின்,
தத்துவாம் பரிகளெங்கே கிரீடமெங்கே
தண்டிகை பல்லக்குமெங்கே தனந்தான் எங்கே,
மெத்தை கொண்ட வீடுமெங்கே யதனுள்மேவும்
மேலான பவுசோடு பண்டாரமெங்கே
சுத்தவீரங்களெங்கே சும்மா போச்சோ
தொப்பைவீரனை வதைத்த தோடந்தானே!”

என்று சபிக்க அவருடைய செல்வமும் பதவியும் பறிபோய் துன்ப நிலையை அடைந்தார் என்ற செய்தியை ஏடுகள் மூலம் அறிகிறோம்.

‘ஆசுகவி வீசு புகழ்க் காளமேகம்’ என்றும் ‘வசைக்கொரு காளமேகம்’ என்றும் அழைக்கப் பட்டவர் கவிக்காளமேகப் புலவர். அபார கவித்திறன் பெற்றிருந்த இப்புலவரை கண்டால் எல்லோருக்கும் குலை நடுங்கும். கோபம் வந்தால் புலவர் அறம் பாடிவிடுவார், எங்கே ஏதாவது கடுமையானதொரு வார்த்தை அவர் வாயிலிருந்து வந்து விடுமோ என்று அஞ்சி அவர் கேட்கும் முன்பே அவருக்கு உணவளிப்பார்களாம்.

ஒருநாள் நாகை வீதியில் சிறுவர்கள் சிலர் பாக்கு கொட்டைகளை வைத்து ‘கோலி விளையாட்டு’ விளையாடிக் கொண்டிருக்க, பசிபொறுக்க மாட்டாத காளமேகம் “சோறு எங்கே விக்கும்?” என்று கொச்சைத் தமிழில் சிறுவர்களுக்கு விளங்கும் வண்ணம் கேட்டிருக்கிறார்.

நாகை வாழ் சிறுவர்களுக்கு கிண்டல் பேச்சுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? “சோறு தொண்டைக் குழியிலே விக்கும்” (விக்கல் எடுக்கும்) என்று நக்கல் செய்து விட்டார்கள். சினமடைந்த புலவர் ஒரு கரித்துண்டை எடுத்து தெருச் சுவற்றில் எழுத ஆரம்பித்து விட்டார்.

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு….”

என்று எழுதிக் கொண்டிருக்கும் போதே பக்கத்திலிருந்த கோவிலில் ‘ஆலயமணி’ ஒலிக்க புலவர் அங்கே பிரசாதம் வாங்கிச் சாப்பிட விரைகிறார். அதைக் கண்ட சிறுவர்கள் முற்றுப் பெறாமால் இருந்த வாக்கியத்தில்

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு தமிழ் மணக்கும் நன்நாகை”

என்று எழுதி வைத்து விட்டனர். திரும்பி வந்து பார்த்த காளமேகம் திகைத்துப் போய் நின்று விட்டார். ஏனெனில்

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு தெறிக்க …..”

என்று வசைபாடும் எண்ணத்தில் எழுதத் தொடங்கிய வரிகளை தலக்கீழாக மாற்றிவிட்ட சிறுவர்களின் சமயோசித புத்தியை எண்ணி வியந்துப் போகிறார்.

கண்ணதாசனின் அண்ணன் மகனுக்கு மகன் பிறந்திருந்தான். கவிஞர் தன் பேரக் குழந்தையைக் காணச் செல்கிறார். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்கிறார்.

“அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்”

என்று தொடங்கி குமுதம் இதழில் ஒரு பாட்டாகவே வடித்து விட்டார். அவர் எழுதிய ஏழே நாட்களுக்குள் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது.

“அவனை எழுப்பாதீர்;
அப்படியே தூங்கட்டும்
என்றே நான் எழுதியதன்
ஈரம் உலரவில்லை;
ஏழுநாள் ஆகுமுன்னே
இளங்கன்று தூங்கி விட்டான்!
அறம் பாடி விட்டேனோ!
அறியேன்”

என்று துடிதுடித்துப் போய் விடுகிறார். அறம் பாடும் திறம் தனக்குமுண்டு என்ற கவிஞரின் கற்பனையாகவும் இது இருக்கக் கூடும்

தண்டிவர்மனின் மகன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனுக்கு தன்மேல் அறம்பாடி கேட்கவேண்டும் என்ற விபரீத ஆசை வந்தது. நந்திவர்மனின் தம்பி, நாட்டை அபகரிக்க வேண்டி தன் தமையனின் தமிழார்வத்தை பயன்படுத்தி அறம் பாடுதலை கேட்க ஏற்பாடு செய்தான். அரண்மனையில் இருந்து மயானம் வரை நூறு பந்தல்கள் போடப்பட்டன. நூறாவது பந்தலின் மேல் நந்திவர்மனை இருத்தி புலவரைக் கொண்டு அறம் பாடசெய்தான். ஒவ்வொரு பாடலின் போதும் ஒரு பந்தல் எரிந்து போனது. இறுதியாக

“வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
வையகம் அடைந்ததுன் கீர்த்தி
கானுறுபுலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந் ததுன் கரங்கள்
தேனுறுமலராள் அரியிடம் சேர்ந்தாள்
செந்தழல் புகுந்ததுன் மேனி
யானுமென்கவியும் எவ்விடம் புகுவேம்
எந்தையே! நந்தி நாயகனே…”

என்ற பாடலை அப்புலவன் பாடியதும், பந்தல் தீப்பற்றி எரிந்தது. மன்னனும் தீயில் சிக்கி உயிர்நீத்தான். இதனை நந்திக்கலம்பகத்தில் காணலாம்.

“செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்
அய்யா அரனே அரைநொடியில் – வெய்யதழல்
கண்மாரி யால்மதனைக் கட்டழித்தாற் போல்தீயோர்
மண்மாரி யால்அழிய வாட்டு.”

என்று காளமேகம் அறம் பாட திருமலைராயன் ஆண்ட ஊரை நாசமுறச் செய்தான் என்ற தகவல் வேறு நமக்குக் கிடைக்கிறது.

அக்காலத்தில் அறம் பாடிய புலவர்கள் என்று பலபேர்கள் இருந்திருக்கிறார்கள். ஜவ்வாதுப் புலவர், ‘வெண்பாப்புலி’ வீர கவிராயர், வசைக்கவி ஆண்டான், சிங்கம்புணரி சித்தர் முத்தவடு நாதர், பாடுவார் முத்தப்பச் செட்டியார், கவிக் காளமேகம், இரட்டைப் புலவர்கள், என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.

இது தமிழ் மொழியின் சிறப்பென்றும், தமிழ் மொழியைக் கையாண்ட புலவர் பெருமான்களின் கவியாற்றல் என்றும் கற்றவர்கள் கருத்துரைக்கிறார்கள். இதனால்தானோ என்னவோ கவிபாடும் வல்லுனர்களிடம் கவித்திறனோடு சேர்த்து கர்வத்தையும் காண முடிகிறது. “படைப்பதினால் என் பெயர் இறைவன்” என்பார் கண்ணதாசன். பிறிதோரிடத்தில்

“கவிஞன் யானோர் காலக் கணிதம்
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை! அறிக!
நானே தொடக்கம்; நானே முடிவு!
நானுரைப்பது தான் நாட்டின் சட்டம்!”

இதனைக் கவிச்செருக்கு என்பதா? அல்லது தன் கவியாற்றலின் மேல் அவர் கொண்டிருந்த அதிகப் படியான மமதை கலந்த நம்பிக்கையா என்று சொல்லத் தெரியவில்லை. மேலும் அவர் நிதானத்தில்தான் இதை எழுதினாரா என்ற சந்தேகம்கூட பிறக்கிறது,

‘அறம் பாடுவது’ என்ற ஒரு துருப்புச்சீட்டினை வைத்துக் கொண்டே மக்களை அச்சுறுத்தி காரியத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில கீழ்த்தரமான புலவர்களும் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள். இம்முறைகேடுகளை தமிழ்த் தாத்தா உ.வே.சா. ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

எதற்குத்தான் அறம் பாடுவதென்ற ஒரு வரைமுறை இன்றியும் போயிருக்கிறது. காளமேகப்புலவர் இதற்கு நல்லதோர் உதாரணம். இஞ்சிகுடி என்ற ஒரு சிற்றூருக்கு அவர் சென்றிருந்த சமயத்தில் கலைச்சி என்ற தாசியிடம் உறவு கொள்ள ஆசைப் பட்டிருக்கிறார். இவரை அவள் உதாசீனப் படுத்த உடனே அவள் மீது அறம் பாடி விட்டார்.

“ஏய்ந்த தனங்கள் இரண்டும்இரு பாகற்காய்
வாய்ந்தஇடை செக்குலக்கை மாத்திரமே – தேய்ந்தகுழல்
முக்கலச்சிக் கும்பிடிக்கும் மூதேவியாள் கமலை
குக்கலிச்சிக் கும்கலைச் சிக்கு.”

அவலட்சணம் பொருந்திய மூதேவி கலைச்சியை நாய்தான் விரும்பும் என்ற அர்த்தத்தில் பாடலை முடித்திருப்பார். பயந்துப் போன கலைச்சி அவருடைய ஆசைக்கு இணங்க காளமேகம் ‘பல்டியடித்து’ அவளைப் புகழ்ந்து தொலைத்தாராம்.

தகாத செயல்களுக்குக் கூட தமிழ் மொழியின் தெய்வீகத் தன்மையை புலவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் அது தமிழுக்கே இழுக்குதானே?

அல்லலுற்றவன் அழுத கண்ணீர் கொடுஞ்செயல் புரிந்தவனை அழித்துவிடும் என்பது இயற்கையின் விதி. அந்த சாபம்/ அறம் தமிழில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தமிழுக்கு மட்டுமே அந்த ஆற்றலுண்டு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தவறு செய்தவனை தண்டிக்க இறைவனுக்கு தமிழ்ப் புலவனது பரிந்துரைதான் தேவை என்பதில்லை. தமிழின் சிறப்பாக கூறப்படும் அறம் பாடும் கலையில் மிகைப் படுத்தப்பட்ட சில விஷயங்கள் காப்பிய நடைக்காக மெருகேற்றப்பட்டு இருப்பதென்னவோ முற்றிலும் உண்மை.


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்