‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

இந்திரா பார்த்தசாரதி


‘வியாக்கியான இலக்கியம் ‘ பற்றிய என் கட்டுரை குறித்து ஒரு விவாதம் எழுந்துள்ளது. ‘கார்த்திக்ராமாஸ் ‘ என்ற வலைப் பதிவில் காணப்படும் குறிப்பினின்றும் என் கட்டுரை தவறான புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை என்னால் அறிய முடிகிறது.

வைணவம் முந்தியதா, சைவம் முந்தியதா என்ற கால ஆராய்ச்சி என் கட்டுரையின் நோக்கமன்று. இரண்டிலுமே அருமையான பாடல்கள் பக்தி மணமும் தமிழ்மணமும் நனிச் சொட்டச் சொட்ட எழுதப்பட்டிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. பக்தி இயக்கத்துக்குக் காரணமே சைவ, வைணவ நூல்கள்தாம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

முதல் முதலாக வைணவத்தில்தான் வட்டார மொழியாகிய தமிழில் பக்திப் பாடல்கள் எழுதப்பட்டன என்று நான் என் கட்டுரையில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. வட்டார மொழியாகிய தமிழில் எழுதப்பட்ட வைணவப் பக்திப் பாடல்களுக்கு, முதல் முதலாக, தேவ பாஷையாகக் கருதப்பட்ட சம்ஸ்கிருதத்திலிருந்த வேதங்களுக்கு நிகரான தகுதி கொடுக்கப்பட்டது என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன். இதற்குக் காரணமாக இருந்தவர்கள் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் நன்கு கற்று உணர்ந்த இராமனுஜர் உள்ளிட்ட வைணவத் தலைவர்கள்தாம் என்று உறுதியாகக் கூறமுடியும்.

பிள்ளைலோகாசாரியர், பெரியவாச்சான் பிள்ளை, மணவாளமாமுனிகள், வேதாந்த தேசிகர் போன்றவர்கள் ஆழ்வார் பாடல்களின் ஆழ்ந்த கருத்துக்களை சம்ஸ்கிருதத்திலும்,மணிபிரவாளத்திலும் தந்து, தத்துவார்த்தக் கோட்பாடுகள் சம்ஸ்கிருத்தத்தின் ஏக போக உரிமையன்று என்பதை ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார்கள். நம்மாழ்வார் இயற்றியுள்ள ‘திருவாய்மொழி ‘ , ‘திராவிட(தமிழ்) உபனிஷத் ‘ என்றே வைணவப் பாரம்பரியத்தில் குறிப்பிடப்பட்டு வருகின்றது.

அடுத்து ,தமிழ், வட்டாரமொழியாகக் குறிப்பிடப்படலாமா என்ற கேள்வி எழுகின்றது. ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு என்று அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் மொழிகள் யாவுமே வட்டார மொழிகள்தாம்(regional languages).

சம்ஸ்கிருதம் இந்தியாவில் எந்த மாநிலத்து மொழியாகவோ அல்லது இதைத் தாய்மொழியாகக் கொண்டவர்களோ எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. ‘ Sanskrit was never the language of the bedroom, nursery or the field ‘ என்கிறார் ஷெல்டன்

போலக். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்த அறிவு ஜீவிகள் தங்கள் தங்கள் கருத்துப் பரிமாற்றத்துக்காகாக உருவாக்கிக்கொண்ட பொதுமொழி( இப்பொழுது ஆங்கிலம் இருப்பது போல) சம்ஸ்கிருதம். இது இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, ஜாதியினருக்கோ அல்லது பிராந்தியத்துக்கோ மட்டும் சொந்தமான மொழியில்லை. கன்னியாகுமாரியிலிருந்து காஷ்மீர் வரை அக்காலத்திலிருந்த அறிவு ஜீவிகள் அனைவருக்கும் சம்ஸ்கிருதம் மிகவும் பரிச்சியமான மொழி. வடமொழி கடந்து தமிழுக்கு எல்லை நேர்ந்தவன் கம்பன். சம்ஸ்கிருதம் தெரியாமல், மூலத்தை விஞ்சிய ஒரு காவியத்தை அவனால் பாடியிருக்க இயலாது. சம்ஸ்கிருதத்தில் முதல் முதலாக நாடகங்கள் ஆக்கிய பாஸர் ( இவர் காளிதாஸனுக்கு முந்தியவர்) கேரளாவைச் சேர்ந்தவர். தாய்மொழி, சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியுள்ள வல்லுநர்களும் உண்டு. குலசேகராழ்வார்( சேரநாடு), ஸ்ரீநாதர்(ஆந்திர தேசம்), வித்யாபதி(மகதம்), வேதாந்த தேசிகர் போன்றவர்கள் தங்கள் தங்கள் தாய்மொழியிலும்( குலசேகரர்-தமிழ், ஸ்ரீநாதர்- தெலுங்கு, வித்யாபதி-மைதிலி, வேதாந்த தேசிகர்-தமிழ்) சம்ஸ்கிருததிதிலும் மிக அற்புதமாக எழுதியுள்ளனர்.

இன்னொரு மொழியில் தேர்ச்சி பெறுவதினால் தங்களுடைய தாய்மொழி அடையாளம் தொலைந்து போய்விடுமோ என்ற அச்சமோ, அல்லது தாழ்வு மனப்பான்மையோ அவர்களுக்கு இருக்கவில்லையென்று நாம் பெருமையுடன் கூறலாம்.

நாதமுனிகள், ஆளவந்தார், இராமானுஜர் போன்ற வைணவத் தலைவர்கள், ஆழ்வார் பாடல்களை ஒரு நீண்ட தத்துவார்த்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகக் கண்டு, இப்பாரம்பரியத்தின் பழகு மொழியாக இருந்த சம்ஸ்கிருதத்தில் இப்பாடல்களின் ஏற்றத்தைக் கூறியது போல், இப்பாடல்களின் தரத்துக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத தேவாரம், திருவாசகம் போன்றவற்றிற்கு அகில இந்திய ஏற்றம் அளிக்க இருமொழி வல்லுநர்களாகிய சைவர்களில் யாரும் முயலவில்லை என்பதுதான் வருந்தத் தக்கது. தமிழ் எல்லையைத் தாண்டிப் போற்றப்படுவதற்குத் திருவாசகம், போப் வரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது!

—-

ps0710@yahoo.com

Series Navigation