‘ க்ராஃபிக்ஸ் ‘

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue

ருத்ரா.


ஊர்த்துவ தாண்டவம்.
உடுக்கை ஒலிக்கிறது.
தூரத்தில் அல்ல.
ஸ்டெதெஸ்கோப்பில்.
என் நுரையீரல்கொத்துகளின்
‘ரத்ன சபையில் ‘.
இதயத்தின் மின் துடிப்புகள்
துப்பிய இ.சி.ஜி.வாிகளில்.
நாடிகளுக்குள்
அருவமாய்
கரு தாிக்கும்
உத்திரகோச மங்கை
மரகத லிங்கத்தில்.
‘ஆஞ்சியோ கிராம்களில் ‘
அகப்படாத
ஆத்மாவின் வலிப்புகளில்.
எருமை வாகனத்தின்
முரட்டுக் கொம்புகளோடு
மானசீகமாய்
டாக்டர் நடத்தும்
ஜல்லிக்கட்டுகளில்.
குடல் கிழிகிற சத்தம்
எனக்குள்ளே கேட்கிறது.
‘ஹிம்ஸை த்வனி ‘யின் ஆலாபனை…
என் கூட
இப்போது
கொத்துசாவிகள் இல்லை.
பாஸ்புக்குகள் இல்லை.
புருஷ சூக்தங்கள் இல்லை.
ஹெரால்டு ராபின்ஸ் புத்தகங்கள் இல்லை.
இந்த
மேஜை விளக்கு கூட
இப்போது
திடாரென்று
ஒரு கொள்ளிச்சட்டி .
கண்முன்னே
கணினியின் ‘ஸ்கிாீன் சேவர்கள் ‘
பிசைந்து பிசைந்து
பிதுக்கும்
‘பிக்காஸோ ‘க் கனவுகள்.
விறைத்துப் போன
கணங்களின்
‘ஃபாசில் ‘ அடுக்குகளாய்
எங்கும் வரட்டிகள்.
‘ஃப்ராக்டல் ஜாமெட்ாி ‘யின்
சின்னா பின்ன சித்திரங்களாய்..
கலர் கலர் மகர ஜோதிகளாய்..
அந்த புலித்தோலின்
ஒவ்வொரு புள்ளிக்குள்ளும்
புளகாங்கிதத்தின் சொக்கப்பனைகளாய்…
‘மேண்டல்ப்ராட் செட் ‘டின்
பூதம் காட்டும் கிறுக்கல்களாய்…
இந்திரன் மேனியில்
கண்களாய் மொய்த்த
எய்ட்ஸ் ஊர்வலங்களாய்…
இந்த வானத்தை
செதுக்கிகொண்டிருக்கும்
உளிகள் எங்கே ?
என் கடைசி மூச்சை
இத்தனை அழகாய் ‘க்ராஃபிக்ஸ் ‘செய்த
மென்பொருளின்
மெய்ப்பொருள் யாது ?
……….
அதிகாலை
சன்னல் வழியே
சூாியன் பற்றியொிந்தது.
என் சிதை
வானத்திலா ?

Series Navigation

ருத்ரா

ருத்ரா