குலாமின் உள்மனத்தூண்டல்

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

இப்னு பஷீர்



“காபிர் என்பவர் பிறர் ஒருவரின் கருத்தை நிராகரிப்பவரே.” குலாம் அவர்களின் அக்டோபர் 26 திண்ணை கடிதத்தில் உள்ள இந்த வாசகத்தை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன். ‘காபிர் ‘ என்ற அரபு வார்த்தைக்கு பொருள் ‘நிராகரிப்பவர்’. முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஓரிறைக் கொள்கையை நிராகரிப்பவர்கள் காபிர். மற்றவர்களின் பார்வையில் பல கடவுள் கொள்கையை நிராகரிக்கும் ஒரு முஸ்லிம் காபிர்.

தனது இந்தக் கருத்திற்கு உதாரணமாக குலாம் அவர்கள், ‘ சர் சையத் அகமத்கான் , குலாம் அகமது பர்வேஷ் போன்றோரின் கருத்துக்களை நிராகரிக்கும் ஹாபி, இப்னு பஷீர் – தான் காபிர்கள் என்று அர்த்தம் பெறுகின்றனர் ‘ என்கிறார். ‘ நபிமுகமதுவிற்கு அல்லா அருளிய உள்மனத் தூண்டலே திருக்குர்ஆன் என்பதை இஸ்லாமிய நவீனத்துவ அறிஞர்கள் சர் சையத் அகமத் கான் , குலாம் அகமது பர்வேஸ் உள்ளிட்ட பலர் விளக்கியுள்ளனர் ‘ என்கிறார் குலாம்.

உள்மனத் தூண்டல் என்றால் என்ன என்பதைப் பார்க்குமுன் ஒரு சிறு அறிமுகம்: சர் சையது அஹமது கான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர். உருது மொழியில் பல நூற்களை இயற்றியிருக்கும் இவர் குர்ஆன் விளக்கவுரை எழுதத் தொடங்கி 7 தொகுதிகள் முடிவுற்ற நிலையில் மரணமடைந்தார். இவர் மேல் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டிருந்தன. அவற்றுள் முக்கியமானது, இவர் மேற்கத்திய சிந்தனை கொண்டவராகவும், ஆங்கிலேயருடன் மிக இணக்கமாகவும் இருந்தார் என்பது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை முன்மாதிரியாக கொண்டுதான் அவர் அலிகார் பல்கலைக் கழகத்தைத் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் ஆங்கில மொழியை கற்பதே ஹராம் என மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுத்திருந்த சூழலில், இவர் முஸ்லிம்கள் படிப்பதற்காக ஆங்கிலேய பல்கலைக் கழகத்தை மாதிரியாக கொண்ட ஒரு பல்கலைக் கழகத்தை துவங்கினார் என்றால், எந்த விதமான எதிர்ப்புகளை சந்தித்திருப்பார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இனி, குலாம் அவர்களின் ‘ உள்மனத்தூண்டல்’ என்ற கூற்றுக்கு வருவோம். திருக்குர்ஆன் முழுவதும் இறைவனிடமிருந்து ஜிப்ரயீல் எனும் வானவர் மூலமாக ‘ வஹி’ என்னும் இறைச்செய்தியாக நபிகளாருக்கு அருளப்பட்டது என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை. ஆனால் குலாம் அவர்கள் இதற்கு மாற்றமான ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறார். குர்ஆன் வசனங்கள் ‘ அல்லாவின் உள்மனத் தூண்டல் பெற்ற நபிமுகம்மதுவின் வார்த்தைகள்’ என்பது குலாம் அவர்களின் கருத்து. நபி முஹம்மது அவர்களின் உள்மனத்தில் புதைந்திருந்த வசனங்களை அல்லாஹ் தூண்டி வெளிப்படச் செய்தான் என்பது இதன் பொருள். இதற்கு நேர்மாறான பொருள் தரும் பல குர்ஆன் வசனங்களை நம்மால் காட்ட இயலும். ஆனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.

குலாம் அவர்கள், மேற்கண்ட தனது கருத்துக்கு ஆதரவாக சர் சையது அஹமது கான் போன்றவர்களும் இதே கருத்தைக் கொண்டிருந்ததாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆதாரத்தை குலாம் அவர்கள் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

சர் சையது அஹமது கான் தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

The blessed person of the Prophet of God (the blessing and peace of God be with him) was endowed with three attributes:

I. The Prophecy, i.e. the commandments of God were revealed to him.

II. The Communication, i.e. he communicated or announced to he people what was revealed to him.

III. Government of the country, i.e. he ruled the country, en­forced the revealed commandments and looked after their pro­per observance, protected the people of the country and repulsed the enemy by force.

இறைத்தூதருக்கு வழங்கப் பட்ட தன்மைகளாக அவர் குறிப்பிடுவது;

இறைக் கட்டளைகள் அவருக்கு அருளப் பட்டன.
அந்த இறைக்கட்டளைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பு.
நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு.

திருக்குர்ஆனுக்கு உருது மொழியில் விளக்கம் எழுதிய சர் சையது அஹமது கான் இந்தக் கட்டுரையில் இறைக் கட்டளைகள் இறைத்தூதருக்கு அருளப்பட்டதாக சொல்கிறாரே தவிர, இறைத்தூதரின் உள்மனதில் புதைந்திருந்தவை தூண்டி விடப்பட்டு வெளிக் கொணரப் பட்டதாக சொல்லவில்லை. சர் சையது அவர்களின் கருத்துக்களை குலாம் தவறாக புரிந்து கொண்டு மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.


ibnubasheer@gmail.com

http://ibnubasheer.blogsome.com/

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்