சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

எஸ். டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்


திண்ணை இணைய இதழில் நாங்கள் எழுதிய சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும் பற்றிய ஆய்வு மற்றும் இந்தக் கட்டுரை ஆசிரியர்களுள் ஒருவரான நெல்லை நெடுமாறன் எழுதிய நம்மாழ்வார் பற்றிய ஆய்வு ஆகியவை குறித்து திரு. சதுரகிரி வேல் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் வெளிவந்துள்ளது.

எங்களது நிலைப்பாட்டை இந்துத்துவம், இந்து முன்னணித்துவம் என்ற சொற்களால் அடையாளப்படுத்துகிறார் சதுரகிரி வேல். எந்த ஓர் இயக்கத்துக்கும் பிரசாரகர்களாக செயல்படவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களுடைய ஆய்வுக் கருத்துகளை சில இயக்கங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத்தக்கவை என்று கருதிப் பயன்படுத்திக் கொண்டால் அதில் எங்களுக்கு ஆட்சேபனையுமில்லை. நாங்கள் ஈடுபட்டிருப்பது வரலாற்று ஆய்வு. எனவே எங்கள் ஆய்வுக்கு உள்நோக்கம் கற்பிப்பதிலோ அல்லது எங்களது எண்ண ஓட்டங்கள் பற்றிய கிறிஸ்தவக் கண்ணோட்டத்திலமைந்த உளவியல் ஆய்வில் ஈடுபடுவதிலோ யாருக்கும் எந்தவிதப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை. எடுத்துக்காட்டாக, அணுசக்தி பயன்படுத்தப்படுகிற விதத்தை வைத்து அணுசக்தியைக் கண்டுபிடித்தவர்களுடைய சாதனையை எடை போடுவது எப்படி சிறுபிள்ளைத்தனமாகக் கருதப்படுமோ அப்படித்தான் எங்களுடைய ஆய்வுக் கருத்துகளின் சாதக பாதகங்களைப் பற்றிய விமர்சனங்களையும் நாம் குறிப்பிட விரும்புகிறோம்.

அதே கடிதத்தில் சதுரகிரி வேல் பாண்டியர்களைப் புரவலர்களாகக் கொண்ட மதுரை மீனாட்சியம்மன் கோவிலுள் நாடார்கள் நுழைவதற்குக் கூட அனுமதிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி. 14ஆம் நூற்றாண்டில் மதுரை சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் மறவர்களும், கள்ளர்களும் தலை தூக்கி எழுச்சி பெற்று பாண்டிய அரச குலத்தவர்களை வீழ்த்தித் தஞ்சையிலிருந்து மதுரை வரை கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினர் என்று மதுரைத் தல வரலாறு குறிப்பிடுவதைச் சதுரகிரி வேல் குறைந்தபட்சம் கேள்வியாவது பட்டிருக்கிறாரா என்பதை அறிய விரும்புகிறோம். அப்படிக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால் முக்கியமான ஒரு செய்தியையும் சேர்த்து அவர் தெரிந்து கொள்வது அவசியம். பழமையான ஒரு வரலாற்று நூலாகிய மதுரைத் தல வரலாற்றைப் பதிப்பித்தவர் மறவர் குலத்தைச் சேர்ந்தவரும், பாலவநத்தம் ஜமீன்தாருமான பாண்டித்துரைத் தேவர் ஆவார்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டிலிருந்து பாண்டிய அரச வம்சத்தவரும் அவர்களின் உடன் கூட்டத்தாரும் திருநெல்வேலிப் பகுதியை, குறிப்பாக தென்காசி, கரிவலம் வந்த நல்லூர், கயத்தாறு ஆகிய ஊர்களை மையமாக வைத்தே தமது ஆட்சியைத் தொடர்ந்தனர். 15, 16ஆம் நூற்றாண்டுகளில் மறக்குல அகம்படிய சமூகத்தவரான மாவலி வாணாதிராயர்களின் தலைநகரமாக மதுரை மாறிப் போயிற்று. இதற்கான ஆதாரம் திண்டிமகவி என்பவரால் இயற்றப்பட்ட ‘அச்சுதராய அப்யுதம் ‘ என்ற சமஸ்கிருத நூலில் உள்ளது (மறவாய தத்வாம் மதுரான்ஸ ஷாகே). மாவலி வாணாதிராயர்களின் கல்வெட்டுகளிலும் அவர்கள் பாண்டியர்களைக் கொற்கைப் பகுதிக்கும் (கடற்கரை), மலையும் காடும் சூழ்ந்த பகுதிக்கும் (பொதிகை மலை மற்றும் திரிகூட மலை என்கிற குற்றாலம்) துரத்திய வீரச் செயலைப் பெருமைப்படக் குறிப்பிடுகின்றனர். பாண்டிய குலத்தவரை மட்டுமின்றிச் சேர, சோழ அரச குலத்தவரையும் – சுருக்கமாகச் சொல்வதானால் மூவேந்தர் குலத்தையும் தாங்களே வேரறுத்தவர்கள் என வாணாதிராயர்கள் பெருமை பேசினர். ‘ராஜகுல சர்ப்ப கெருடன் ‘ என்பது வாணாதிராயர்களின் பட்டப் பெயர்களில் ஒன்றாகும். இதன் பொருள் அரச குலமாகிய நாகத்துக்கு வாணாதிராயர்களே கெருடன் போன்றவர்கள் என்பதாகும். சேர நாட்டில் இன்றைக்கு முதன்மையான சாதியினராகக் கருதப்படுகிற, ‘நாயர் ‘ என்ற சாதிப்பட்டத்தைப் புனைந்து கொள்ளும் அகம்படியர் குலத்தவர்கள் மகாபலியையே தங்கள் குல முதல்வனாகக் கருதி மரியாதை செலுத்தி வருவது ஓணம் விழா நடைமுறைகளைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரிந்த செய்தியே.

சங்க இலக்கியமாகிய மதுரைக் காஞ்சியில் மதுரையிலிருந்த பாண்டிய மன்னனின் யானைப் படைப் பிரிவைச் சேர்ந்த மறவர்கள் ஓண நாள் விழாவைக் கொண்டாடினர் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது. இதனை நாம் மேலே குறிப்பிட்ட மலை நாட்டு அகம்படிய சமூகத்தவரின் மரபுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சேர அரசகுலத்தவர்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பறியவர்களும் மகாபலி வம்சத்தவர்களே என்ற வரலாற்று உண்மை விளங்கும். இந்தப் பின்னணியில் பார்த்தால் வீழ்த்தப்பட்ட அரச குலத்தவர்களுக்கு வெற்றி பெற்ற புதிய அதிகார வர்க்கத்தவரால் உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கான காரணமும் புரியும், அந்தஸ்து பறிக்கப்பட்ட பின்னணியும் தெரிய வரும். தென்காசிப் பாண்டியர் ஆட்சியும் முழுமையாக வீழ்ச்சியடைந்த பின்னர் (18ஆம் நூற்றாண்டு) கயத்தாற்றிலும் கழுகு மலையிலும் சான்றார் சமூகத்தவர் பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் 1895ஆவது ஆண்டு தொடங்கி 1908ஆம் ஆண்டு முடிய நிகழ்ந்த கோவில் நுழைவுப் போராட்டம் குறித்த சில விவரங்களையும் திரை மறைவில் நிகழ்ந்த சதி வேலைகள் பற்றியும் தெரிந்து கொள்வது சில தவறான புரிதல்களை மாற்றிக் கொள்வதற்கு உதவும். மார்க்ஸியச் சார்புடைய வரலாற்று ஆய்வாளரான (இதை இங்கே வலியுறுத்திச் சொல்வதன் காரணம் இந்துத்துவச் சார்பான ஆய்வாளர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வழியில்லாதவர் என்பதைக் குறிப்பிடுவதற்காகவே) திரு ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘கிறிஸ்தவமும் சாதியும் ‘ என்ற நூலில் (காலச்சுவடு பதிப்பகம், 2003) பக்கங்கள் 86 முதல் 88 வரை குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் சில உண்மைகளை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. (நாடார் என்ற சொல் வழக்கினை ஆ. சிவசுப்பிரமணியன் கையாண்டுள்ளார். ஆங்கிலேயர் கால ஆவணங்களில் சாணார் [shanar] என்ற வழக்குதான் காணப்படுகிறது. இதன் சரியான வடிவம் சான்றார் அல்லது சான்றோர் என்பதே. எனவே, எங்கள் கட்டுரையில் சான்றார் அல்லது சான்றோர் என்ற வழக்கினையே கையாண்டுள்ளோம்.)

1895ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நுழைந்து வழிபடும் உரிமை வேண்டி அக் கோவிலின் பரம்பரை அறங்காவலரான பாஸ்கர சேதுபதியிடம் சான்றோர் குலத்தவர் மனு சமர்ப்பித்தனர். அதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் 1897ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி தீவட்டிகள் ஏந்தி மேளதாளத்துடன் சான்றோர் சமூகத்தவர் சிலர் கோவிலுக்குள் நுழைந்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். பாஸ்கர சேதுபதியின் சார்பில் கோவில் நிர்வாகத்தினரால் முதுகுளத்தூர் சப்-மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் சான்றோர் சமூகத்தவர் 13 பேர் மீது ‘குற்றவியல் வழக்கு ‘ தொடரப்பட்டது. சான்றோர் சமூகத்தவர் கருவறைக்குள் நுழைந்து வழிபட்டதாகவும் வழக்கின் உறுதிப் பத்திரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த சப்-மாஜிஸ்த்ரேட் (நீதிபதி) சான்றோர் சமூகத்தவர் இந்து சமயக் கோயிலுக்குள் நுழைவதற்கும் வழிபடுவதற்கும் சாஸ்திரபூர்வமான தடை இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கருவறைக்குள் நுழைந்து தெய்வச் சிலையின் அருகில் சென்று புனிதத்தைக் குலைத்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். இது ‘கிரிமினல் வழக்கு ‘ என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இதனை அடுத்து பாஸ்கர சேதுபதி ‘சிவில் வழக்கு ‘ ஒன்றை மதுரை நீதிமன்றத்தில் தொடுத்தார். தமது ஜமீன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தமது நிர்வாகத்தில் இருக்கின்ற ஒரு கோவிலில் தம்முடைய ஆணையே முதன்மையாகக் கருதப்பட வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி கருதினார். விவேகானந்தராலேயே ஒரு ராஜரிஷி என்று பாராட்டப்பட்ட பாஸ்கர சேதுபதி, சிகாகோவில் நடைபெற்ற அகில உலக சமயங்களின் மாநாட்டில் இந்து சமயத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். அதாவது இந்து சயம தத்துவங்கள், சாஸ்திரங்கள் தொடர்பான ஞானம் உடையவர் எனக் கருதப்பட்டவர். இவை மட்டுமின்றி தென்னிந்திய பிராமணரல்லாதார் சங்கத்தின் தலைவராக இருந்தவர். இந்தப் பின்னணியை நாம் தெரிந்து கொள்வது ஆய்வுக் கண்ணோட்டத்தில் அவசியமான ஒன்றாகும். கமுதி கோவிலினுள் தாழ்ந்த சாதியினராகிய சான்றார்கள் நுழைந்ததால் அக் கோவில் புனிதத் தன்மையை இழந்துவிட்டது என்பதும், அதனைத் தூய்மைப்படுத்தி புனிதத்தன்மையை மீட்க சான்றார் சமூகத்தவர் 2500 ரூபாய் வழங்க வேண்டும் என்பதுமே நீதிமன்றத்தில் பாஸ்கர சேதுபதி வைத்த கோரிக்கையின் சாராம்சமாகும். ஆங்கிலேய அரசின் ஓர் அங்கமாகிய மதுரை நீதிமன்றம் இக் கோரிக்கையை ஏற்றது. 1899ஆம் ஆண்டு ஜுலை 20ஆம் நாளன்று அந்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் கமுதிக் கோவிலுக்குள் சான்றார்கள் நுழைவது தடை செய்யப்பட்டது. கோவிலைப் புனிதப்படுத்தும் சடங்குக்காக 500 ரூபாய்களை சான்றார்கள் தர வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. ‘பிராமணரல்லாத ‘ ஒரு நிர்வாகி, ஓர் அன்னிய ஆதிக்க சக்தியின் அங்கமான நீதிமன்றத்தின் மூலம் மற்றொரு ‘பிராமணரல்லாத ‘ சாதிக்கெதிராகப் பெற்ற நிர்வாக ரீதியான ஓர் உத்தரவு இது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சான்றோர் சமூகத்தவர் மேல் முறையீடு செய்தனர். இதுவும் சிவில் வழக்குதான். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே, தஞ்சை மாவட்டம் பொறையாறு ராவ்பகதூர் ரத்தினசாமி நாடார் தலைமையில் சான்றோர் சமூகத்தவர் ஒரு முயற்சியை மேற்கொண்டனர். இலங்கை சென்றிருந்த பாஸ்கர சேதுபதியை அங்கு சென்று சந்தித்து 5000 ரூபாய் கொடுத்து சமரசபத்திரம் ஒன்று தயாரித்தனர். சான்றார்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபடும் உரிமையை நீதிமன்றத்தின் முன் மறுப்பதில்லை என்று பாஸ்கர சேதுபதி உறுதியளித்தார். இந்த சமரச உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த பிறகு, அதாவது நீதிமன்றத்திற்கு வெளியே சமாதானம் பேசி தீர்வு கண்ட பிறகு 30,000 ரூபாய் வரை பாஸ்கர சேதுபதிக்கு வழங்குவதாகச் சான்றோர் சமூகத்தவர் ஒத்துக் கொண்டனர். வழக்காடுவதற்கு ஆகும் செலவுத் தொகையை இவ்வாறு பயன்படுத்துவது உசிதம் என்றும், ஆங்கிலேயரிடம் நீதியை எதிர்பார்ப்பதை விட பாஸ்கர சேதுபதியிடம் சமாதானமாகப் போய்விடலாம் என்றும் சான்றார் சமூகத்தவர் தீர்மானித்தனர் என்பதுதான் இதன் பொருளாகும். இச்சமரச உடன்படிக்கையை விரும்பாத மதுரை மாவட்ட கலெக்டர், பாஸ்கர சேதுபதிக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார். இக் கடிதங்களில் வழக்கு தொடர்ந்து நடைபெற வேண்டுமென்றும், வழக்கில் சான்றார் சமூகத்தவர் தோற்றுப் போனால் அதன் காரணமாக சட்ட ஒழுங்குச் சிக்கல் எதுவும் ஏற்படாது என்றும், சான்றார் சமூகத்தவர் இந்து மதத்தை விட்டு விலகி தமக்கென தனியே கோயில்கள் கட்டிக் கொள்வார்கள்; அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுவார்கள்; எப்படிப் பார்த்தாலும் பாஸ்கர சேதுபதிக்கும் அதனால் நன்மைதான்; மாறாக இச் சமாதான உடன்படிக்கையால் சான்றார் – மறவர் மோதல்கள் அதிகரிக்கும் (இந்துக் கோவில் வழிபாடுகளில் முதல் அந்தஸ்து பெறுவது யார் என்ற போட்டி, சான்றார் – மறவர்களிடையே ஏற்படும்). இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளில் சிக்கல்கள் அதிகரிக்கும் என்றும் மாவட்டக் கலெக்டர் குறிப்பிட்டார். (இக் காலகட்டத்தில் மாவட்ட கலெக்டர் பதவி வகித்த ஆங்கிலேயர்களின் நேரடி அதிகாரத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவை இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.) இக் கடிதத்தின் விளைவாக பாஸ்கர சேதுபதி சான்றார் சமூகத்தவருடன் செய்து கொண்டிருந்த சமரச உடன்படிக்கையை ரத்து செய்தார். எதிர்பார்க்கப்பட்டபடியே, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை நீதிமன்றத் தீர்ப்பையே வழிமொழிந்தது.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து லண்டனிலுள்ள ப்ரைவி கவுன்ஸிலில் சான்றோர் சமூகத்தவர் மேல்-முறையீடு செய்தனர். மிகுந்த பொருட் செலவு செய்த பின்னரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே ப்ரைவி கவுன்ஸில் வழி மொழிந்தது. இந்தத் தீர்ப்பின் சில வாசகங்களை Casters and Tribes of Southern India தொகுதிகளில் எட்கர் தர்ஸ்டன் மேற்கோள் காட்டியுள்ளார். அவர் மேற்கோள் காட்டும் பகுதியை கீழே தருகிறோம்:

‘ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்படுகிற புதிய துறைகளுக்கான கல்வியைக் கற்றுத் தேர்வதால் அடையும் முன்னேற்றமே தவிர, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் அப்படி இருந்தோம், இப்படி இருந்தோம் என்று பொய்யான கதைகளைப் பேசி இல்லாத ஆதாரங்களை இருப்பதாகக் கூறித் திரிவது முன்னேற்றமாகாது. (சான்றார்) சமூகத்தில் இவ்வாறு மாறிவரும் சமூக நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களையும் மாற்றிக் கொண்டு பலர் முன்னேறி வருவதை பிரத்யட்சமாக பார்த்த பிறகும் அவ்வாறு முன்னேறுவது முன்னேற்றமாகாது என்றும் பழங்காலத்திய அநாகரிக நிலையே உண்மையான முன்னேற்றம் என்றும் புரளி பேசி வழக்குத் தொடுப்பது கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி சமூக அமைதியைக் குலைக்கும் செயலாகவும் கருதப்படும். எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. ‘

தீர்ப்பின் இப்பகுதியை வாசிக்கின்ற நடுநிலையாளர் அனைவருக்கும் ஆங்கிலேய நீதித்துறையின் கோரமான முகமும் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய கல்வித் திட்டத்தின் அடியில் மறைந்திருந்த மதமாற்ற உள்நோக்கமும் தெளிவாகப் புலப்படும். இப்படிப்பட்டவர்களிடம் நீதியை எதிர்பார்த்தவர்களைக் கண்டு பரிதாபப்படுவதா அல்லது இன்றைக்கும் அவர்களின் ஆணவ அதிகாரச் சான்றிதழ்கள் மட்டுமே அதிகாரபூர்வமான ஆவணச் சான்றிதழ்கள் என நம்பும் ஆய்வாளர்களைக் கண்டு பரிதாபப்படுவதா எனப் புரியவில்லை.

சான்றோர் சமூகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்தவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர் சிதம்பரம் நடராசர் கோவிலின் தலைமைத் தீட்சிதராகிய நடராஜ குஞ்சித தீட்சிதர் ஆவார். இவரது சாட்சியம், ‘சாஸ்திரம் பற்றி ஏதும் அறியாத, தட்சிணை வாங்கிக் கொண்டு பொய் சொல்லத் தயங்காதவர்களான பிராமணர்களின் சாட்சியம் ‘ என வெள்ளைக்கார நீதிபதியால் கண்டிக்கப்பட்டது. இந்து மத ‘சாஸ்திரங்கள் பற்றிய அறிவு ‘ தில்லை தீட்சிதர்கள் உட்பட யாருக்குமே இல்லையென்றால் வேறு யாருக்குத்தான் அந்த அறிவு இருந்தது ? ஆங்கிலேய மிஷனரிமார்களுக்கா ? ‘ராபர்ட் கால்டுவெல் ‘லை அழைத்து அவரை ஒரு சாட்சியாக விசாரிக்கலாமே என்றால் அவரும் 1891ஆம் ஆண்டிலேயே கர்த்தருக்குள் நித்திரை அடைந்து விட்டார். ஆங்கிலேய நீதிபதி வசம் இந்தக் கேள்வியை ‘ராஜரிஷி ‘ பாஸ்கர சேதுபதி உட்பட யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அன்றைய நிலையில் யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். ரிபெல் சேதுபதி எனப்பட்ட முத்துராமலிங்க சேதுபதியையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும், மருது சகோதரர்களையும் கூடச் சட்டப்படி ‘சாஸ்திரோக்த ‘மாக விசாரித்து விட்டு ‘நியாயமான ‘ முறையில் தண்டித்த ‘நீதிமான் ‘களிடம் இத்தகைய கேள்வியை பாஸ்கர சேதுபதியோ, ராவ்பகதூர் ரத்தினசாமி நாடாரோ, வழக்குத் தொடுத்த இருளப்ப நாடான் முதலிய சான்றோர்களோ கேட்டிருந்தால் ‘சிவில் வழக்கு ‘ மீண்டும் ‘கிரிமினல் வழக்காக ‘ மாற்றப்பட்டு இரு சாராருமே ‘சமூக அமைதியைக் குலைத்ததாக ‘க் குற்றம் சுமத்தப்பட்டு ‘நியாயமான முறை ‘யில் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போதுதான் பொறையாறு நகராட்சி மன்றத் தலைவராக இருந்த ராவ்பகதூர் ரத்தினசாமி நாடார் சான்றோர் சமூகத்தவரின் சார்பில் பாஸ்கர சேதுபதியுடன் சமரச உடன்படிக்கை செய்து கொள்ள முனைந்தது எவ்வளவு விவேகமான, முதிர்ச்சியான, நிர்வாகரீதியாக சமயோசிதமான நடவடிக்கை எனப் புரிகிறது.

கி.பி. 17-18ஆம் நூற்றாண்டுகளில் நெல்லைச் சீமையிலுள்ள ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றிற்கு நிகழ்ந்த திருப்பணிகளில் சான்றோர் சமூகத்தவர் முதன்மையான பங்கு வகித்ததோடு கோயில் வழிபாடுகளிலும் திருவிழாக்களிலும் உரிய மரியாதைகளுடன் கலந்து கொண்டனர் என்பதற்கான கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்கள் உள்ளன. இவை பற்றி அறிய விரும்பினால், கல்வெட்டு ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் எழுதிய ‘மடத்து அச்சம்பாடு கல்வெட்டு ‘ (பக்கம் 5-10, ‘வரலாறு ‘ இதழ் 9-10 – டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றுப் பேரவை, திருச்சிராப்பள்ளி – 17) மற்றும் ‘திருச்செந்தூர் கோயில் மேலைக் கோபுர ஆய்வு ‘ (பக்கம் 2-4, ‘கல்வெட்டு ‘ இதழ் 62, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை – 113) ஆகிய கட்டுரைகளைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவை ஒருபுறமிருக்க இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் ‘பொன்னுசாமி நாடார் ‘ என்ற சான்றார் குலத்தவர் அறங்காவலராக இருந்துள்ளார் எனத் தெரிய வருகிறது. அவர் சாரங்கபாணி கோயிலுக்குள் நுழையாமல் வெளியிலேயே இருந்து வழிபட்டுச் சென்றாரா என்ற விவரத்தைச் சதுரகிரி வேல் போன்றவர்கள் ஆராய்ந்து தெரிவித்தால் நல்லது.

இந்த ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரையில் விவாதித்துள்ளோம். எங்கள் முதல் கட்டுரையில் தெரிவித்திருப்பது போல, சமூக வரலாற்றாய்வு தொடர்பான வெளிப்படையான வாதத்துக்கு நாங்கள் ஆயத்தமாகவே உள்ளோம். மிஷனரிமார்களின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற கருத்தரங்குகளில் கூட, நாங்கள் அழைக்கப்பட்டால் எங்கள் ஆய்வுக்கான ஆதாரங்களை அங்கு வந்தும் தெரிவிப்பதற்கும் தயாராக இருக்கிறோம்.

nellai.nedumaran@gmail.com

எஸ்.டி. நெல்லை நெடுமாறன் படைப்புகள்

நெல்லை நெடுமாறன், எஸ். இராமச்சந்திரன் படைப்புகள்

Series Navigation

எஸ்.டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்

எஸ்.டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்