விஸ்வாமித்ரா வின் ஈ.வெ.ராவின் முரண்பாடுகள் பற்றி…

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

பரிமளம்


பெரியார், மணியம்மை திருமணத்தைப் பற்றித் திண்ணையில் முன்பே பல விவாதங்கள் நடந்துள்ளன என்பதால் சுருக்கமாகச் சில குறிப்புகளே மட்டும் முன்வைக்கிறேன்.

விஸ்வாமித்ராவின் கட்டுரையில் பெரியாரின் கூற்றாக வரும் ஒரே மேற்கோள் இது.

(மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்து விட்டார்களாததால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற நிர்ப்பந்த முறையில் நடப்பது சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்றே சொல்லலாம்)

சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் பெருவழக்கிலிருந்த குழந்தைத் திருமணங்களை எதிர்ப்பதற்காகவும் சிறுமிகளை வயதானவர்களுக்கு முதல்தாரமாகவோ அல்லது இரண்டாம் மூன்றாம் தாரமோகவோ கட்டாயமணம் செய்துகொடுக்கும் அநாகரிக வழக்கத்தை எதிர்ப்பதற்காகவுமோ திருமணத்திற்கான வயதுப்பொருத்தம் பற்றி திராவிடக் கழகத்தினர் அன்று ஓயாது பேசினர்.

இதைக் கருத்தில்கொண்டு பெரியாரின் திருமணத்தைப் பார்ப்போம்.

பெரியார் சிறுமியை மணந்துகொள்ளவில்லை எனவே வயதுப்பொருத்தம் இங்குத் தேவையில்லாதது. பெண்ணின் சம்மதமில்லாமலும், பெண்ணைக் கட்டாயப்படுத்தியும் இவரது திருமணம் நடைபெறவில்லை. எனவே பெரியாரின் பேச்சுக்கும் மணியம்மையை மணந்துகொண்டதற்கும் ஏதும் முரண்பாடுகள் இல்லை.

குழந்தைத் திருமணங்களைப் பற்றி ஏதும் கூறாது சோற்றில் அமுக்கும் விஸ்வாமித்ரா (ம.வெங்கடேசின்) வின் நோக்கம் கபடமானது.

****

என் பதின்ம வயதுக்காலத்தில் அண்ணாவின் பெரும்பான்மையான நூல்களைப் படித்திருக்கிறேன். ஓரிடத்தில்கூட சட்டபூர்வமாக வயதுக்கு வந்த ஒரு இளம்பெண் ஒரூ முதியவரை விரும்பி மணமுடிக்கும் ஒரு காட்சியையோ இப்படி மணமுடிப்பது தவறு என்று கூறும் குறிப்பினையோ நான் கண்டதில்லை.

சிக்கல் இங்குதான் ஆரம்பிக்கிறது. பெரியார் மணியம்மை திருமணத்திற்கு முன்பு ஒரு இளம்பெண் ஒரு முதியவரை மணந்துகொள்ள விரும்பக்கூடும் என்று யாரும் கற்பனை செய்ததில்லை. (ஈ.வெ.ராவுக்கே இந்தக் கற்பனை வந்திருக்குமாவென்று தெரியவில்லை) கற்பனை செய்யாத ஒன்றைப் பற்றி யாருமே பேசியிருக்கமுடியாது. திருமணத்துக்குப் பிறகு பேசிய பேச்சுகள் அனைத்தும் பிறகு பேசப்பட்டவை. திருமணத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து மேற்கோள் காட்டி ஒப்பிட்டுப்பார்க்க ஒன்றுமே இல்லாத நிலையில் முரண்பாடுகளைக் கண்டுபிடிப்பவர்கள் யூகங்களைக் கூறுகிறார்களேயொழிய உண்மைகளையல்ல.

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்