கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய திறனாய்வு நூல் அறிமுகம்

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

ஜாகிர் ராஜா


நண்பர் ரசூல் தான் எழுதும் ஒவ்வொரு கட்டுரையையும் பலதரப்புகளுடன் ஆய்வு நோக்கில் எழுத வல்லவர். கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் என்னும் இத்தொகுப்பில்13 சிறந்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன்.முக்கியமான மூன்று நாவல்களை அவர் அணுகியிருக்கிற விதத்தை வாசிக்கையில் படைப்பாளிகளாகிய நாங்கள்பெருமிதம் கொள்ளத்தக்க வகையிலும்புதிய கோணங்களை தரிசிக்கத்தருவதாகவும் உள்ளது.

பின்நவீன இஸ்லாமிய கதையாடல்களை அதன் போக்கில் அலசத் தொடங்கிய ரசூல் இஸ்லாமியச் சிறுகதையாளர்களை அவர்தம் படைப்புகளை பேசிவிட்டு இவ்வாறு முடிக்கிறார்.
வார்த்தை அடுக்குகளிலும் சம்பவங்களிலும் படைப்பாளியைவிட மதப்பிரசாரகனே மேலோங்கி நிற்பது படைப்பாக்க அழகியலை சிதைப்பதாகவே தெரிகிறது.
இக்கூற்றிலிருக்கும் நிஜத்தைத் தயக்கமின்றி ஒப்புக் கொள்ள மார்க்க இதழ்களின் எழுத்தாளர்கள் முன்வந்தால் எதிர்காலத்திலேனும் பிரச்சாரமற்ற கலை ஆக்கங்களாக சிறுகதைகள் எழுதுவதற்கு வாய்ப்பமையும்.

பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் இந்தியாவிலும் பின்னர் பாகிஸ்தானிலும் வாழ்ந்த உலகத்தரமான கதைச் சொல்லி சதாத்ஹஸ்ன் மாண்டோவின் படைப்புலகம் இத் தொகுப்பில் விரித்துக் காட்டப்படுகிறது. மகாகவி இக்பால், வங்கக் கவி நஸ்ருல் இஸ்லாம்,சமகால இஸ்லாமியக் கவிஞர்கள்,அரபு பாலைநிலக் கவிகள்,அண்மையில் மறைந்த பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வேஷ் என்று இந்த இலக்கியத்தடத்தின் எல்லைகளை விரித்துக் கொண்டே செல்லும் ரசூல்,அந்த வெவ்வேறு உலகங்களில் தோய்ந்து வெளிப்படுத்தும் கருத்துக்கள் வெறுமனே சிலாகிப்பின் உதிர்வுகளாக இல்லாமல் மெல்லிய விமர்சனத்தொனியிலும் இருப்பதே தனிச்சிறப்பு.உதாரணத்துக்கு மாண்டோவின் கம்யூனிச எதிர்ப்பை ரசூல் எவ்வாறு பொருள் கொள்கிறார் என்பதில் இந்த தன்மை வெளிப்படுகிறது.

பல்சந்த மாலை முதல் பரண்களில் கிடக்கும் மற்றும் பல மாலைகள் கட்டுரை காப்பியங்கள்,மசலா,கிஸ்ஸா.முனாஜாத்து,நாமா போன்ற புதுவகை சிற்றிலக்கிய வடிவங்கள் நாட்டுப்புற வீரக்கதைப் பாடல்கள்,நொண்டி நாடக வகை,பிள்ளைத்தழிழ்,கோவை,கலம்பகம்,மாலை,சதகம்,குறம்,மெய்ஞான இலக்கியங்கள்,நாட்டார் இலக்கியங்கள்,தாலாட்டு,ஊஞ்சல்பாட்டு என தமிழ்மொழிக்கு இஸ்லாமியரின் பங்களிப்பை விவரிக்கிறது.இத்தனை கலை இலக்கிய வடிவங்களும் இன்றைக்கு சென்ற மூலை தெரியாமல் ஏங்கிக் கிடக்கிறோம் இசையை இஸ்லாம் வெறுக்கிறது என்னும் தட்டையான வாதத்துடன்.

இந்துபுராணநிகழ்வுகளை கற்பனை என மறுதலிக்கும் ஒருசாரார் இஸ்லாமியப் ப்னித நூலான குரான்,கிறித்துவ வேதமான பைபிள் இவர்றுள் பயணித்துப் பார்த்து அற்புதங்களையும் அதிசயங்களையும் அறிதலுக்கு உட்படுத்த முன்வராததில் பெருமளவு அரசியல் இருக்கிறது.இது சிறுபான்மை வாக்குவங்கிகளைக் குறிவைத்து செய்து கொள்ளும் சமரசமின்றி வேறென்ன..?இஸ்லாமியப் புனித நூலான குரானிலும் பல நூறு அதிசயங்கள் யதார்த்தம் மீறியவை நிகழ்கின்றன.
ஈசாநபி இறந்தவர்களை உயிர்ப்பித்தார்,மூசாநபி தன் கைத்தடியைப் பாம்பாக மாற்றினார்,கடலில் வீசப்பட்ட யூனூஸ் நபி மீனின் வயிற்றில் வாழ்ந்தார்,முகமது நபி புராக் வாகனத்தில்விண்ணுக்குச் சென்றார். இவை யாவும் இஸ்லாமியத்தொன்மங்களாக காலங் காலமாக நம்பகம் பெற்றுள்ளது. ரசூலின் கடைசிக் கட்டுரை இவ்வகை மாந்திரீகங்களை மட்டுமின்றி மகான்களின் அற்புதங்களையும் பேசுகிறது.

தமிழில் இஸ்லாமியரைக்குறித புரிதல்கள் குறைவு என்பதைப் போலவே இஸ்லாமிய இலக்கிய விமர்சனப்பதிவுகளும் குறைவு.தமிழ்வேர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஹெச்.ஜி.ரசூலின் விமர்சனத் தடப் பிரதி படைப்பாளிக்கும்,இதை வெளியிடும் ஆழி பதிப்பகத்திற்கும் பெருமைதரத் தக்கதாய் அமையும்.இத்தகைய முயற்சியில் என் பங்கும் இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.ந்ல்ல பதிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து முனைப்பும் ஆர்வமும் காட்டி வரும் ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கு நன்றி
(தொகுப்புக்கான் முன்னுரையின் ஒரு பகுதி)

கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும்
கட்டுரைகள்
ஆசிரியர் ஹெச்.ஜி.ரசூல்
பக்கங்கள் 144
விலை ரூ 70
வெளியீடு
ஆழி பப்ளிசர்ஸ்
12 முதல் பிரதான வீதி
யுனைடெட் இந்தியா காலனி
கோடம்பாக்கம்
சென்னை 600024
தொலை பேசி 044 – 23722939
மின்னஞ்சல்: aazhieditor@gmail.com

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>

ஜாகிர் ராஜா

ஜாகிர் ராஜா