சங்கச் சுரங்கம் – 17: குருதிப் பூ

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

சு. பசுபதி, கனடா



என் வீட்டுக்கு வந்து, சோபாவில் ‘தொப்’பென்று சோர்வுடன் விழுந்த என் இளம் நண்பன் நம்பியை “எந்தக் கப்பல் கவிழ்ந்தது?” என்று பரிவுடன் விசாரித்தேன். அன்று காலை, தன் காதலி கோதையின் பிறந்தநாளை முன்னிட்டு — முதல் காரியமாக — அவள் வீட்டுக்குச் சென்று, பன்னிரண்டு சிவப்பு ரோஜாக்களைக் கொடுத்தானாம் நம்பி ; “கொஞ்சமும் கற்பனா சக்தியே கிடையாதா உமக்கு? ஆண்டுதோறும் இவை தாமா? போய்விட்டு அடுத்த ஆண்டு வாரும் ! “என்று திட்டி அனுப்பிவிட்டாளாம் கோதை!

“ கோதையைச் ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்று சொல்லித்தான் நான் கேட்டிருக்கிறேன்! உன் கோதையோ ‘சூடாய்க் கொடுத்த சுடர்க்கொடி’யாய் இருக்கிறாளே! ” என்று ‘கடகட’வென்று சிரித்த என்னைச் சுட்டெரித்தான் நம்பி.

நான் பேச்சின் போக்கை மாற்றினேன். “ நம்பி! உனக்கு என் ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகுக! உன் அநுபவம் –கிட்டத்தட்ட — ‘குறுந்தொகை’யின் ஒரு பாட்டில் உள்ளது போல் சோககீதம் பாடுகிறதே ? அதில் வரும் ஒரு தலைவியின் மறுபிறப்போ உன் காதலி? ” என்றேன். அரைகுறை உற்சாகத்துடன் விவரம் கேட்ட அவனுக்குச் சொன்னதை உங்களுக்கு (முழு உற்சாகத்துடன்!) கூறுகிறேன்.

குறுந்தொகையின் முதல் பாட்டில் திப்புத்தோளார் என்ற புலவர் சித்திரிக்கும் காட்சி இதோ.

மலைப் பிரதேசத்தைச் சார்ந்த ஒரு தலைவன், மிக்க ஆசையுடன் காந்தள் (Malabar Glory Lily; glorisoa superba ) மலர்க் கொத்தொன்றைப் பறித்து, தன் காதலியின் வீட்டுக்குச் சென்று, அந்த மலர்களைத் தன் கையுறையாக ( அன்புப் பரிசாக ) ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான். ஒரு புழுவைப் பார்ப்பது போல் அவனைப் பார்த்த தலைவி (மிஸ் கல்நெஞ்சத்தாள் !) , தன் தோழியைக் கூப்பிட்டு, ” இந்தப் பரிசை நான் ஏன் ஏற்கமுடியாது என்பதைச் சிறிது — ( மிஸ்டர் ‘ட்யூப்லைட்’டான !) இவருக்குக் கூட புரியும்படி, மிக மெதுவாக — விளக்கிச் சொல்லி, இந்த மனிதனை முதலில் இந்த இடத்திலிருந்து அனுப்பு ” என்று சொல்லிச் செல்கிறாள் . தோழியும் பரிவுடன் தலைவனைப் பார்த்துப் பகர்கிறாள்:

” ஏனய்யா, போயும் போயும் இதையா கையுறையாகக் கொணர்ந்தீர்? குருதி (இரத்தம்) போல் சிவந்திருப்பதால் ‘குருதிப் பூ’ என்று பெயர் பெற்ற இச் செங்காந்தள் பூவா எங்களுக்குப் பஞ்சம்? எங்கள் மலை முழுவதும் இம்மலர்கள் நிறைந்திருப்பது உங்கள் கண்களில் படவில்லையா? ( அவள் ஒரு கனடாப் பெண்ணாக இருந்தால் ‘ கனடாவிற்குப் பனிக்கட்டியைப் பரிசாகக் கொண்டு வருவது போலல்லவா இருக்கிறது ’ என்று சொல்லியிருப்பாள்! :-)) மேலும், இந்நிறம் கொண்ட பொருள்கள் எங்களுக்கு மிகவும் பழக்கமானவை அல்லவா? ‘சேய்’ என்ற சொல்லுக்கு, ‘சிவப்பு’ ,’குழந்தை’, ‘முருகன்’ என்று பல பொருள்கள் உண்டு. சேயோனான முருகன் ‘செவ்வேள்’ என்ற பெயரும் கொண்டவன் என்பதும் உமக்குத் தெரிந்திருக்கும். குறிஞ்சிக் கடவுளான எங்கள் முருகன், சூரபத்மன் போன்ற அவுணர் ( அசுரர்) களுடன் போரிட்டதால் போர்க்களமே செங்களமாக மாறியது; அவன் வேலின் நுனி சிவந்தது; அம்பு நுனியும் இரத்தத்தில் தோய்ந்து சிவப்பாயிற்று. முருகனுக்கு வாகனமான யானையும் கோபமாக அசுரர்களைக் குத்திச் சாய்த்தபோது, அதன் கொம்பும் (கோடு) குருதி படிந்து செங்கோடாயிற்று. இப்படிச் சிவப்பிலேயே ஊறின குறிஞ்சி நில வஞ்சியான என் தலைவிக்குப் போயும் போயும் சிவப்பு மலர்களைக் கையுறையாகக் கொணர்ந்தால், அவள் ஏற்றுக் கொள்வாளா? நிச்சயமாக மாட்டாள் ! இந்த மலர்க்கொத்தை நான் அவள் சார்பில் ஏற்றுக் கொண்டால் என் ‘சீட்டை’ அல்லவா கிழித்து விடுவாள்? ” என்று சொல்லித் தலைவனை விரட்டினாள் தோழி.

மூலம் இதோ.

“செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.” ( குறுந்தொகை, 1 )

[ செங்களம் – போர்க்களம், அவுணர் – அசுரர், செங்கோல் அம்பு – இரத்தத்தால் சிவந்த திரண்ட அம்பு, தொடி – வீர வளையம், சேஎய் – முருகன் ]

இப்புலவர் பாடிய வேறு எந்தப் பாட்டும் சங்க நூல்களில் இல்லை; இவரைப் பற்றி வேறு எந்த விவரங்களும் நமக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் குறுந்தொகையின் முதற் பாடலாக இது இருப்பதாலேயே, இவர் பெருமை நமக்குப் புலப்படுகிறது.

நான் நினைத்தபடி நம்பியின் துக்கத்தைச் சிறிது சிதற அடித்தது இக்கவிதை.
“ பாட்டு முழுதும் ஒரே ‘சிவப்பா’க இருக்கிறதே, சார்! ” என்றான் நண்பன்.

“ நன்றாய்க் கவனித்திருக்கிறாய், நம்பி! ஆம், ஆம்! உண்மையில், குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து ஒரு முருகன் பாடல். அது முழுதும் ஒரே ‘ செம்மை’ நிறம்தான்! அதனை அடுத்திருக்கும் இந்தப் பாடலும் அப்படியே இருக்கிறது! முருகனும், சிவப்பும் தாண்டவமாடும் காரணத்திற்காகவே கடவுள் வாழ்த்தின் தொடர்ச்சியாக, இதை நூலின் முதல் பாடலாக இந்நூலைத் தொகுத்தவர் வைத்தாரோ, என்னவோ? மேலும், ஒரு காதலனின் அன்புப்பரிசை ஒரு காதலி மறுக்கும் பாடலோடு ஓர் அகப்பொருள் நூல் தொடங்குவது சுவையாகத் தோன்றவில்லையா உனக்கு? எல்லாக் காதல் சமாச்சாரமும் இப்படி ஒரு தோல்வியில் தான் தொடங்கும் என்று அது நமக்குச் சொல்கிறதோ, என்னவோ?”என்று நம்பியைச் சமாதானம் செய்யும் தொனியில் பேசினேன்.

“இன்னொரு விஷயம், பார். இந்தச் செய்யுள் ‘நான்கு’ அடிகளில், ‘ஐந்து’ தடவை ‘சிவப்பு’ என்று சொல்லி, ‘ஆறு’ முகனின் புகழைப் பாடுகிறது! ” என்றேன்.

” ஆமாம், முருகனுக்கு வாகனம் மயில் என்றல்லவா நான் நினைத்தேன்? ” என்று நெற்றியைச் சுருக்கினான் நம்பி. சோகத்தை அவன் மெல்ல மறக்கத் தொடங்கியதில் மகிழ்ந்த நானும் விடை சொல்லத் தொடங்கினேன்.

” முருகனுக்கு மயில், யானை, ஆடு என்று மூன்று வாகனங்கள் உண்டு. இவற்றுக்கு உட்பொருள்கள் உண்டு. மனம், புத்தி, சித்தம் என்று உருவகப் படுத்தியதாக வைத்துக் கொள்ளலாம். மனம் தூண்ட, புத்தி அதனை ஏற்க, சித்தம் செயல்படுகிறது என்பர் அறிஞர். ‘பிணிமுகம்’ என்ற யானை மேலுள்ள முருகனின் கோலத்தைக் குமார தந்திரம் போன்ற பல நூல்கள் சொல்கின்றன. “வேழம் மேல்கொண்டு”, ” அங்குசம் கடாவ ஒரு கை” “ஓடாப் பூட்கைப் பிணி முகம் வாழ்த்தி” என்றெல்லாம் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் பாடியுள்ளார். திருத்தணிகை, சுவாமிமலை, உத்தரமேரூர் போன்ற பழங் கோயில்களில் முருகன் சன்னதியின் முன் யானை வாகனமே உள்ளது. இந்திரனின் ஐராவதத்தைக் கந்தனின் வாகனமாகக் காட்டுகிறது கந்தபுராணம். தேவயானையின் திருமணத்திற்குச் சீதனமாகக் கொடுக்கப் பட்டது அந்த ஐராவதம் என்பர். சிதம்பரம் கீழ்க் கோபுர வாயில் அருகில், கஜாரூடர் அல்லது ‘களிற்றூர்திப் பெருமா’னான முருகனின் திருவுருவம் அற்புதமாக இருக்கும். அருணகிரிநாதர் ஒரு சிதம்பரத் திருப்புகழில் ” சிந்துரத்தேறி ….” ( சிந்தூரம் = யானை) என்று இந்த உருவைக் குறிப்பிடுகிறார். ஆமாம், திருத்தணியில் உள்ள யானை வாகனம் ஏன் கிழக்கு நோக்கி இருக்கிறது தெரியுமா ? ..” என்று கிருபானந்த வாரியார் போல் ‘மடமட’வென்று சொல்லிக் கொண்டே போன என்னைப் பயத்துடன் பார்த்த நண்பன், சோர்வெல்லாம் போனவனாக, சோபாவிலிருந்து சுறுசுறுப்பாக எழுந்து, “ அவசரமாக வேறு ஒரு இடம் போகவேண்டும்; நன்றி, சார் ”என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுச் சென்றான்.

எப்படியோ நம்பி தன் சோகத்தை மறந்தானே, அது போதும்! அடுத்த தடவை அவனைப் பார்க்கும்போது, முருகனின் யானை வாகனத்தைப் பற்றிய மீதி விஷயங்களைச் சொல்லலாம் என்று காத்திருக்கிறேன். ஏனோ தெரியவில்லை, நம்பி என் வீட்டுப் பக்கம் இன்னும் வரவில்லை!

~*~o0O0o~*~

s dot pasupathy at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா