ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் : சுப்ரபாரதிமணியனின் :” ஓடும் நதி ” நாவல்

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

பால்கி



..
==============================

=================================
=பால்கி ( மாநில செயலாளர்SNEA =BSNL அதிகாரிகள்
தொழிற்சங்க அமைப்பு )
======

சென்னை அமிருதா பதிப்பகத்தால் வெளிவந்திருக்கும் சற்று பெரிய நாவலான “ஓடும் நதி” வாசிப்பு சில பல தொழிற்சங்க தொடர் நடவடிக்கைகளால் தடைபட்டாலும், சுவாரசியமாய் வாசிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அற்புத நாவல் என்பதை படித்து அறிந்தேன்.
சென்ற திண்ணை இதழில் சுந்தர் அர்னவா குறிப்பிட்டிருக்கும் தலித் பாத்திரம் வெளியேற்றப்பட்டிருப்பது, பொதுவுடமைவாதிகள் மீதான ஜாதீய விமர்சனம்
போன்றவற்றை மீறி மனதில் கொள்ளப்பட பல விசயங்கள் இந்த நாவலில் உள்ளன.

நதியின் இரு மருங்கிலும் உள்ள கரைகள் பலரால், பல நோக்கங்களுக்கு பயன்பட்டிருப்பதைப்போல இந்த நாவலில் ஆசிரியரால் கொண்டு வரப்பட்டிருக்கும் பாத்திரங்களான செல்லம்மிணி, மேரி, நீலியக்கா, ராஜேஷ்குமார், இப்ராகிம், செல்வம், சொக்கன் இப்படி ஏராளமானவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள். ஆறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டிருக்கும் நாவலின் முதல் பிரிவில் செல்லம்மிணி மனது, செல்வம் இவர்களுக்கிடையேயான கடித உறவுகள் அதில் தங்களுது பிரச்சனைகள் பகிர்ந்து கொள்கிற லாவகம் அற்புதமாய் கையாளப்பட்டிருக்கிறது. இயல்பாகவே ஆசிரியரின் பல நூல்களில் அவர் காட்டும் சுற்றுப்புறசூழல் அக்கறை பல சமயங்களில் வாசகருக்கு உணர்த்தும் வகையில், காற்றில் கலந்த விஷம்-இராசாயன நெடி-தொழிற்சாலையின் பிரசவத்தால் ஏற்பட்டுள்ளது என்று எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. திருப்பூர் நெரிசலில் மூக்கினை சொறிபவர்கள் யாராக இருந்தாலும் – இந்த எழுத்துக்கள் நினைவுக்கு வரும் வகையில் இது அமைந்துள்ளது. நாகாலாந்தினை பார்க்காதவர்கள், நகரத்தின் நாசத்தில் வாழ்பவர்கள், இரைச்சலில் இரையாகும் நபர்கள் மட்டுமல்ல அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாக நாகாலாந்து வாழ்கின்ற பகுதி இருந்துள்ளது என உணர முடிகிறது.

செகந்திராபாத் பகுதியில் சொக்கனுடன் சென்றதும், சொந்த காரணத்தில் சொக்கன் திரும்பிவிட்டாலும் அங்குள்ள நபர்களுடன் இருந்த நாட்கள் செல்லமிணியின் நிலை எப்படி இருந்தது என்பதை அற்புதமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

படிப்பறிவில்லாத சூழலில் சிக்கித்தவிக்கும் ஒரு பெண் தனது ஆசையின் தொடர்ச்சியாய் ஏற்படும் அதிர்வுகளாய் நிகழ்ச்சிகள் அமைகின்றன. மொழிதெரியாத இடத்தில் வாழும் பெண்களின் மனநிலை, சந்தடிசத்தங்கள் அதிகமாய் இருக்கும் இடத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் நிலைகள் அவற்றுடனே எழுதப்பட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகள் இதனுடன் ஒத்துப்போகும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் பெண் என்பதை இந்த நாவலின் மையப் பாத்திரத்தின் வழியாக சொல்வதில் ஆசிரியர் அடைந்திருக்கும் வெற்றி பாராட்டுக்குரியது.

சுற்றுச்சூழலை மாசுபாடுத்தும் பணக்கார கணவான்களை ஆலயத்தில் அறிமுகமாக்கும் எழுத்துக்களில் தன்மனச்சாட்சியை பேசவைத்து சமூகத்தின் மீதான அக்கறையை ஆசிரியர் ஜெயபால் வக்கீல் மூலம் கொண்டு வந்துள்ளது புதுமையானது மட்டுமல்ல சமூக விரிவாக்கம் என்ற பெயரில் லாப கொள்ளையை உறுதிப்படுத்தும் ஆட்களுக்கு எதிராக போராடுவதற்கு உதவியானதும் கூட.

நாவலில் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர், சுற்றியுள்ள பல இடங்கள் புழங்கப்பட்டிருப்பினும் அமைதி, கலவரம், மாசுபடும் நகரம் என்ற வகைகளுக்குள் அவை அடங்குகின்றன. நதியின் நீர் எல்லா இடங்களிலும் புதியதானதாகும் என்ற விதிக்கு ஏற்ப நாவலின் மையக்கருவான செல்லம்மிணி தான் சந்தித்த ஆட்கள் அனைவருக்கும் உதவும் வகையில் வாழ்வினை அமைத்திருப்பதை லாவகமாகவும் சற்றே பெண்களின் அவலத்தை உணரும் வகையிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

வாழ்வின் மிச்சங்களில் நதியின் மகத்துவத்தை உணருகிறோமோ இல்லியோ நாவலின் மூலம் ஓடும்நதியின் இயல்பை உணர்ந்திருக்கிறோம்.

( ஓடும் நதி: ரூ150/- அமிர்தா பதிப்பகம் சென்னை பக்கங்கள் 350 )

( மாநில செயலாளர்SNEA =BSNL அதிகாரிகள் தொழிற்சங்க அமைப்பு )


Series Navigation

பால்கி

பால்கி