ஒரு தாயின் புலம்பல்

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

எஸ் ஜெயலட்சுமி


.

”மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை தானே தாம் வாழும் நாளே”

என்கிறான் பாண்டியன் அறிவுடைநம்பி. யாரையாவது வாழ்த்தும் போதும் ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.பதினாறு பேறுகளுள் மக்கட் பேறும் ஒன்று.இப்படிப் பெறுவதற்கறிய பேற்றைப் பெற்றும் ஒரு தாய் புலம்புகிறாள். ஏன்? ஒருவனுக்கு ஒன்று இல்லை என்றால் கூடக் கவலையில்லை. ஆனால் ஒன்று இருந்து அதை அனுபவிக்க முடியவில்லையென்றால் அமைதியேயில்லை.

இந்தத்தாய் ஒரு குழந்தைக்கல்ல எட்டு குழந்தைகளுக்குத் தாய்! பின் இவள் ஏன் புலம்புகிறாள்?இவள் பெற்றெடுத்த குழந்தையும் சாமானியமானவன் இல்லை.அவன்
”இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத்
தன் எழிலாரும் உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன்

அவன்,மாயன் மன்னு வடமதுரை மைந்தன்,தூய பெருநீர் யமுனைத் துறைவன்,ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு,தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரன்!பின் இவள் ஏன் புலம்புகிறாள்?முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்து பெற்ற ஒரு குழந்தை நோயில் இறந்துவிட்டால் அந்தத்தாய் எப்படியெல்லாம் துடி துடிப்பாள் கதறுவாள் என்றூ பார்க்கிறோம்.இவள் தான் பெற்ற ஏழு குழந்தைகளையும் கொல்லப் படுவதற்காகவே தூக்கிக்கொடுத்து விட்டாள்.அப்படி ஒரு ஒப்பந்தம் அவளுக்கும் அவள் அண்ணனுக்கும்!அதன்படி தான் பெற்ற ஏழு குழந்தைகளையும் அவனிடமே கொடுத்து விட்டாள்.

எட்டாவதாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.ஸ்ரீமன் நாராயணனே தனக்கு மகனாக வந்து பிறந்திருக்கிறான் என்பதையும் தெரிந்து கொள்கிறாள்.ஆனால் அசரீரி சொன்னபடி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்துத் தன் கணவர் வசுதேவரிடம் கொடுத்து அனுப்பி விட்டாள்.காவலர்கள் விழித்துக்கொண்டு விடுவார்களோ என்ற பயம்!அந்தக் குழந்தையின் அழகு முகத்தைக்கூட இவள் நன்கு ஆசைதீரப் பார்க்கவில்லை.

குந்தியும் தேவகியும்:

உலகறியத் திருமணம் ஆகாத நிலையில் ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டால் அதை சமூகம் அங்கீகரிக்காது என்பதால் சூரியபகவானால் தனக்கு அளிக்கப்பட்ட குழந்தை கர்ணனை ஒரு பெட்டியிலே வைத்து ஆற்றோடு விட்டு விட்டாள் குந்தி.ஆனால் இவளோ ஊரறிய வசுதேவரை மணந்து அன்றிலிருந்தே அவரோடு சிறைவாசம் செய்தாள்.உலக அபவாதத்துக்குப் பயந்து குழந்தை
கர்ணனை ஆற்றோடு விட்டாள் குந்தி என்றால்,உலக நன்மைக்காக குழந்தை கண்ணனை யமுனையைக் கடக்கவிட்டாள் தேவகி.ஆற்றோடு விட்ட கர்ணனுக்குப்பின் ஐந்து குழந்தைகளுக்குத் தாயனாலும் கூட ஆற்றிலேவிட்ட அந்தக்குழந்தையின் நினைவாகவே யிருக்கிறாள் குந்தி என்றால் பெற்றஏழுகுழந்தைகளையும் அண்ணன் கம்சனுக்குக் கொடுத்துவிட்டு எட்டாவதாகப் பிறந்த குழந்தையை உயிரோடு இழந்து நிற்கும் இந்தத்தாய் எப்படியெல்லாம் புலம்பித் தவித்திருப்பாள்?குந்திக்காவது ஒரு குழந்தை கைவிட்டுப் போனாலும் அதன் பிறகு ஐந்துகுழந்தைகள் பிறந்தன.ஆனால் தேவகிக்கோ ஒன்பதாவது குழந்தை பிறக்கவேயில்லை.இந்தத் தாயின் சோகத்தையெல்லாம்,அவளின் உணர்வுகளை யெல்லாம் தானே அனுபவித்துப் பார்க்கிறார் குலசேகர ஆழ்வார்.அவர் அனுபவித்ததெல்லாம் ”தேவகியின் புலம்பலாக”
வெளிப்படுகிறது.

கண்ணன் பிறந்தான்

: ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் வளர ஆயர்பாடிக்கு வந்துவிட்டான் கண்ணன்.அந்தக் குழந்தையை யசோதையிடம் விட்டுவிட்டு அங்கிருந்த பெண்குழந்தையை எடுத்துக்கொண்டு மதுரைக்கு வந்துவிட்டார் வசுதேவர்.ஆயர்பாடியில் உள்ளவர்கள் மாயையிலிருந்து விடுபட்டு யசோதைக்குக் குழந்தை பிறந்து விட்டதைத் தெரிந்து கொள்ளுகிறார்கள்.அவ்வளவுதான்
எண்ணை,சுண்ணம் எதிரெதிர் தூவிட கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே!
நந்தகோபன் வீட்டு வாசலிலெல்லாம் ஒரே சகதி!வாசனைப் பொடியையும்,வாசனைத் தைலங்களையும்ஒருவர் மேல் ஒருவர் வீசி எறிகிறார்கள் அதனால் வாசலிலெல்லாம் ஒரே சகதி.

நிஜத்தாலாட்டும் மானசீகத் தாலாட்டும்:

ஆயர்பாடியிலே கண்னனைத் தொட்டிலிலே போட்டிருக்கிறார்கள் குழந்தை கண்வளர தாலாட்டுப்பாடுகிறார்கள்.
மாணிக்கம் கட்டி வயிரமிடை கட்டி ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடுதந்தான்,மாணிக்குறளனே தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ
இங்கு சிறையிலே தன் குழந்தையை மானசீகமாக நினைத்து தாலாட்டுப் பாடுகிறாள் தேவகி.அவளால்
வாய் விட்டுப் பாடக் கூட முடியாதே!அப்படிப் பாடினால் அந்தக் குழந்தை எங்கே என்று கம்சன் இம்சை செய்வானே!
”ஆலை நீள் கரும்பன்னவன் தாலோ, அம்புயத் தடங்கண்ணினன் தாலோ
வேலை நிறத்தன்னவன் தாலொ,வேழப் போதகம் அன்னவன் தாலோ
ஏலவார்குழல் என்மகன் தாலோ என்றூன்னை என் வாயிடை நிறையத்
தாலொலித்திடும் திருவினையில்லாத் தாயரிற் கடையாயின தாயே!
எட்டு குழந்தைகளைப் பெற்றவள் இந்தத் தாய்.ஆனால் ஒரு குழந்தைக்குக் கூட இவள் தாலாட்டுப் பாட முடியவில்லை.பூதனைக்குக் கிடைத்தபேறு கூட இவளுக்குக் கிடைக்க வில்லை.இதை என்ணி தன்னையே வெறுத்துப் பேசுகிறாள்.
வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார் நரம்பெழக் கரிந்துக்க
நஞ்சமார் தரு சுழிமுலை அந்தோ சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள்கவர் கருமுகில் எந்தாய் கடைப்பட்டேன் வறிதே முலைசுமந்து
தஞ்சமேலொன்றிலேன் உய்ந்திருந்தேன் தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே
பெற்ற இந்தத் தாயிடம் பால் குடிக்காமல்விஷம் கலந்த பாலை அல்லவா நீ குடித்து வளரும்படி ஆயிற்று.அவளுடைய முலையை நீ சுவைத்ததால் அவளுக்கு உன் அருள் கிடைத்தது.எனக்கு அந்த அருளும் கிட்டவில்லையே.இப்படி ஒரு நல்லதாயைப் பெற்றாயே என்று இகழ்ந்து பேசுகிறாள்.தான் ஒரு நல்ல தாயாக இருக்கவில்லையே என்று கலங்குகிறாள்.

ஆய்ச்சியரை அழைத்து கண்ணன்
அழகைக் காட்டுதல்
ஆயர்பாடியிலே தாலாட்டுப் பாடிய கண்ணனை யசோதை ஆர்வமாகப் பார்க்கிறாள்.அவன் பிஞ்சு விரல்கள் தான் எவ்வளவு மென்மையாகவும் அழகாகவும் வாழைப்பூப்போல் வரிசையாகவும் இருக்கிறது!இந்தக் குழந்தை பாதத்தைப் பிடித்துச் சுவைப்பது தான் எவ்வளவு அழகாக இருக்கிறது!இங்கேவந்து பாருங்களேன் என்று ஆய்ச்சிமார்களைக் கூப்பிடுகிறாள்
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள் ஒத்திட்டிருந்தவா காணீரே! ஒள்நுதலீர் வந்து காணீரே!
இங்கே இந்தத்தாயும்நினைக்கிறாள்.கண்ணனின் கையும் காலும் எப்படியிருக்கும்?கண்ணன் எப்படி படுத்துக் கொண்டிருப்பான்?ஒரு நீருண்ட மேகம்போல கைவிரல்களை மடக்கிக் கொண்டு படுத்திருப்பானோ?
”முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள் பொலியும் நீர்முகில் குழவியே போல
அடக்கியாரச் செஞ்சிறுவிரலனைத்தும் அங்கையோடணைந்தாணையிற் கிடந்த
கிடக்கை கண்டிப்பெற்றிலேன் அந்தோ கேசவா!கெடுவேன்!கெடுவேனே!

என்று ஏங்குகிறாள்.

வசுதேவர் இழப்பு.

அருகிலிருக்கும் வசுதேவரைப் பார்க்கிறாள்.துயரம் இரு மடங்காகிறது.அந்தத் தந்தையின் இழப்பை எண்ணிப் பார்க்கிறாள்.பிறந்த தன் குழந்தையை இரவோடிரவாக ஒரு கூடையில் வைத்து யமுனையாற்றைக் கடந்து போய் ஆயர்பாடியிலே கொண்டு விட்டு விட்டு வந்தவர் அல்லவா?என்ன ¦¡டுமை அது!ஒருகாட்சி தோன்றூகிறது.கோகுலத்துப் பெண்கள், உறவினர்கள் பலரும் வந்து கண்ணனைத் தம் மடியிலிருத்தி”எங்கள்செல்லமே,என் தங்கமே,உங்க அப்பா யாரு சொல்லு என்றூ கேட்கிறார்கள்.கண்னன் தன் கடைக்கண்ணாலும் பிஞ்சு விரலாலும் நந்தகோபனைச் சுட்டிக்கட்டுகிறான்.இதைக்கண்ட நந்தன் இந்த உலகையே வென்றுவிட்டதைப் போல மகிழ்ந்து போகிறான். பெற்றதந்தையான வசுதேவர் இங்கிருக்க குழந்தையோ நந்தகோபனை அல்லவா சுட்டிக் காட்டுகிறான். இப்படி தன் குழந்தை அப்பா என்று சுட்டிக் காட்டும் அழகைப் பார்க்கக் கூட கொடுப்பினையில்லையே.என்று மறுகுகிறாள்.
முந்தை நன்முறை அன்புடை மகளிர் முறைமுறை தந்தம் குறங்கிடையிருத்தி
எந்தையே!எந்தன் குலப்பெரும் சுடரே! எழுமுகில் கணத்தெழில் கவரேறே
உந்தையாவன்?என்றுரைப்ப நின் செங்கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே!

தன் இழப்போடு வசுதேவர் இழப்பையும் எண்ணி¢ப் பெருமூச்செறிகிறாள்

குழந்தையின் கை,கால்,மார்பு.

வசுதேவரின் இழப்ப்பை நினைக்கும்போதே அந்தக்குழந்தையின் அழகை நினைவுக்குக் கொண்டு வருகிறாள்.அந்தக் குழந்தையின் கணைக்கால்களையும்,குருமாமணிப்பூண் திகழும் மார்பையும் நினைத்துப் பார்க்கிறாள்.ஒரே ஒரு நிமிடம் சங்கு சக்ரதாரியாகக் காட்சி தந்தானே! அந்தநீலநிறத்துச் சிறுபிள்ளையின் சங்கும் சக்கரமும் நிலாவிய தாமரைக் கைகளைத் தொட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும்?குழந்தையின் கண்களும் மூக்கும் சந்திரமண்டலம் போல நெற்றியும் சுருண்ட குழல்களும் கேசமும் எப்படி யிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறாள்.
”கண்ணா!உன் திண்கை மார்பும் திண்தோளும் தனிமலர்க் கருங்குழல் பிறையதுவும்
தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த இளமையின்பத்தை இழந்த பாவியானேனே
கண்ணன் எங்கிருக்கிறான்,நாம் எங்கிருக்கிறோம்?

தளர்நடை

ஒக்கலையில் இருந்த பிள்ளை தளர்நடை நடக்க ஆரம்பித்து விட்டான்.எப்படி நடக்கிறான் பாருங்கள்?தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்ன தூங்கு பொன்மணி ஒலிக்க படு மும்மதப்புனல் வாரணம் பைய நின்று ஊர்வது போல உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப,உடை மணி பறைகறங்க,பின்னல் துலங்கும் அரசிலையும்,பீதகச் சிற்றாடையோடும் மின்னில் பொலிந்ததோர் கார்முகில் போல
கழுத்தினில் காறையோடும், தளர்நடை நடந்து வருகிறான் கண்னன்.கண்ணன் கூட அண்னன் பலராமனும் நடந்து வருகிறான்.பலராமன் வெளுப்பு நிறம் வெள்ளிப் பெருமலை போல பலராமன் முன்னே செல்ல அவன் பின்னே ஒரு கருமலை போலச் செல்கிறானாம் கண்ணன். கண்ணன் கழுத்திலே சங்கிலி போட்டிருக்கிறார்கள்.ஒருகுட்டியானை மதநீர் ஒழுக வருவது போல் கண்ணன் வாயிலிருந்தும் நீர் ஒழுகுகிறது.இடுப்பிலே கட்டியிருக்கும் கிண்கிணி ஆரவாரம் செய்ய முகத்திலே சிரிப்போடும் ஐம்படைத்தாலியோடும் வருகிறான்.கருமேகத்திலேமின்னல் மின்னினால் எப்படியிருக்குமோ அப்படி நீலநிறக் கண்ணன் கழுத்திலே போட்டிருக்கும் காறை மின்னுகிறதாம்.அவன் தளர்நடை பயின்ற இடத்திலே சங்கும் சக்கரமும் பொறித்த அடையாளம் காணப்படுகிறதாம்
ஒருகாலில் சங்கு,ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இருகாலும் கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை படநடந்து
உடைமணி கணகணவெனத்தன் நெற்றிச்சுட்டி அசைய

தளர்நடை பயின்று வருகிறான்.

தெய்வ நங்கை
கண்ணன் யசோதை நந்தன் இருவருக்கும் முத்தம் தருகிறான்.கண்ணன் வாயிலே வெண்ணையும் தயிரும் மணக்கிறது ”கண்ணா, வெண்ணை தின்றாயா”? என்று யசோதை கேட்கிறாள்.அதிகமாக வெண்ணை தின்றால் அஜீரணமாகி விடுமே என்ற கவலை அவளுக்கு.இவன் அண்ட சராசரங்களையுமே வயிற்றில் அடக்கியவன் என்ற உண்மை அவளுக்குத் தெரியாதே!கண்ணன் வாயிலே விரலைச் சப்பியவாறே ”இல்லையம்மா,நான் வெண்ணையே திங்கலை” என்று சூதுவாது ஏதும் அறியாதவன் போல் வெகுளித்தனமாகச் சொல்கிறான் இப்படியெல்லாம் மனக்கண்ணால் கண்ட தேவகி
”மருவும் நின் திரு நெற்றியில் சுட்டிஅசைதர மணிவாயில் முத்தம் தருதலும்
விரலைச் செஞ்சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் அவ்வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வநங்கை யசோதை பெற்றாளே!

என்று பொறுமுகிறாள்.திருக்கோளூர் பெண்பிள்ளை 22வது ரஹஸ்யமாக”தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போல”என்கிறாள்.ஆனால் தேவகியோ அந்த தெய்வத்தின் லீலைகளையெல்லாம் அனுபவிக்க முடியாமல் ”திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே என்று குமுறுகிறாள்.

மயக்குறு மக்கள்

ஒரு சிறு பையன் வெகுநேரமாக விளையாடிக் கொண்டிருக்கிறான்.பசிவந்தால் அழுது ரகளை பண்ணுவானே என்று அவன் தாய் சாதம்பிசைந்து தயாராக எடுத்து வைக்கிறாள்.பசிவந்ததும் ஓடி வந்து புழுதியோடு அம்மாவைக் கட்டிக் கொள்கிறான்.பசி மிகுதியால் தானே எடுத்துச் சாப்பிடுகிறான்.நண்பனைக் கண்டதும் பாதிச் சாப்பாட்டில் ஓடிவிடுகிறான்.நல்ல பருப்பும் நெய்யும் போட்டுப் பிசைந்த சாதம்!மகன் கைபோட்டு அளைந்த சாதம் என்று நினைக்காமல் மீதியைத் தானே சாப்பிடுகிறாள்.
”இட்டும் தொட்டும் கவ்வியும்துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்ர்க்கும்
மயக்குறு மக்கள்”
என்று இதைத்தான் சொல்கிறான் பாண்டியன் அறிவுடை நம்பி.இப்படி என் மகனை வாரி அணைக்கவில்லையே என்று அலமந்து போகிறாள்.
”தண்ணந்தாமரைக் கண்ணனே!கண்ணா!தவந்தெழுந்துதளர்ந்ததோர் நடையால்
மண்ணில் செம்பொடியாடி வந்து எந்தன் மார்பினில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ!
வண்ணச்செஞ்சிறு கைவிரலனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப்பெற்றிலேன் ஓ! கொடுவினையேன்

என்று தன்னையே நொந்துகொள்கிறாள்.


கண்ணனும் வெண்ணையும்:

யசோதை வெகு நேரமகக் கடைந்து வெண்ணையெடுத்து வழக்கமாக வைக்கும் பாத்திரத்தில் வைக்காமல் வேறோர் பாத்திரத்தில் வைக்கிறாள்.கண்ணன் தூங்குவதாக நினைத்து வெளியே போகிறாள்.அதுவரையும் பொய்யுறக்கம் உறங்கிய கண்ணன் மெள்ள எழுந்து வென்ணையை எடுத்துச் சாப்பிடுகிறான்.எப்படி?தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைவிட்டு எடுத்துச் சாப்பிடுகிறான்.மறுநாள் இவனுக்கு எட்டாத இடத்தில் உயரத்தில் வைத்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் வெளியே செல்கிறாள்.கண்ணன் என்னசெய்கிறான்?
”பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேலேறி தித்தித்த பாலும் தடாவில் வெண்ணையும்
மெத்தத் திருவயிறார விழுங்குகிறான்”,

அங்குவந்த யசோதை கண்ணனைக் கையும் களவுமாகப் பிடித்து விடுகிறாள்.மத்தோடும் கயிரோடும் வரும் யசோதையைக் கண்டு பயப்படுகிறானாம் கண்ணன்.கையிலும் வாயிலும் வெண்ணை,கண்களிலே பயம் கலந்த மருட்சி.அழுகை பொங்கிவருகிறது.உதட்டை நெளிக்கிறான்.அதிலும் ஒரு அழகு!”அம்மா,அடிக்காதே அம்மா என்ற கெஞ்சல் பார்வை.கண்ணனை வாரிஎடுத்து அணைத்துக் கொள்கிறாள் யசோதை.
முழுதும் வெண்ணை அளைந்தொட்டுண்ணும் முகிழிளஞ் சிறு தாமரைக் கையும்
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கும் நிலையும் வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சிநோக்கும் அளிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே

இப்படி ஒரு காட்சி கண்முன் விரிகிறது தேவகிக்கு.

குன்றுக்குடை

கண்ணனின் பாலலீலைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவவே இவள் காதுக்கும் எட்டுகிறது.ஆயர்கள் இந்த்ரனுக்கு விழா எடுக்கவேண்டும் என்கிறார்கள்.”இந்த கோவர்த்தனத்தில் உள்ள மரங்களால் தான் மழை பெய்கிறது.அதனால் கோவர்த்தன மலைக்குத் தான் படையல் போட வேண்டும்” என்கிறான் கண்ணன்.கோபாலர்களும் அப்படியே படையல் போடுகிறார்கள்.மலைக்குளிருந்து அவ்வளவையும் சாப்பிட்டு விடுகிறான் கண்ணன்.தன்னை அவமானப்படுத்தியதால் இந்திரன் கோபம் கொண்டு ஏழு நாட்கள் விடாமல் மழை பொழிவிக்கிறான்.ஆயர்கள் அனைவரும் கன்று காலிகளோடு”கண்ணா அபயம் என்று ஓடி வருகிறார்கள்”கவலைப் படாதீர்கள்” என்று கண்ணன் அந்த மலையைத்தூக்கி குடை போல் கவித்து கோகுலத்தைக் காப்பாற்றுகிறான்.கன்றாகவந்த அசுரனை விளா மரத்தில் எறிந்து,ஒரேகல்லில் இரு மாங்காய் என்பதுபோல் இரண்டு அசுரர்களையும் வீழ்த்தினான்.காளியன் தலையில் நடனமாடிய வீர விளை
யாட்டும் இவள் கேள்விப்படுகிறாள்.கண்ணா,உன்னுடைய இந்த வீர விளையாட்டையெல்லாம் பிறர் சொல்லித்தானே நாங்கள் தெரிந்து கொண்டோம்.நேரிலேயிருந்து பார்க்க நாங்கள் கொடுத்துவைக்க வில்லையே. உன் விளையாட்டுக்களை யெல்லாம் கண்டு மகிழுமாறு எங்களுக்கு அருள் செய்ய மாட்டாயா?
”குன்றினால் குடை கவித்ததுவும் கோலக்குரவை கோத்ததுவும் குடமாட்டும்
கன்றினால் விளவெறிந்ததுவும் காளியன் தலை மிதித்ததுவும் முதலா
வென்றிசேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கென் உள்ளம் உள்குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டெனில் அருளே

என்று கதறுகிறாள்.இப்படியெல்லாம் புலம்பி அழுத இந்தத்தாய் தன் மகனுக்குப் பாலூட்டி,சீராட்டி,அவன் பாலலீலைகளை யெல்லாம் அனுபவிக்கவேயில்லை.கம்சவதம் ஆனபிறகே கண்ணன் வந்து தேவகி, வசுதேவர் இருவரையும் சிறையிலிருந்து விடுவிக்கிறான்.அப்பொழுது கண்ணனுக்கு ஏழெட்டு வயதிருக்கலாம்.

உலகநன்மைக்காகத் தன் தலைவனைப் பிரிந்து மாற்றான் சிறையில் ஒரு வருடம் வாடினாள் சீதாப்பிராட்டி.இந்தத்தாயும் கம்சவதம் என்ற உலக நன்மைக்காகவே திருமணம் முடிந்த நாளிலிருந்தே தன் உடன் பிறந்த சோதரன் வைத்த சிறையில் தான்பெற்ற அனைத்துக் குழந்தைகளையும் இழந்து சுமார் 15 ஆண்டுகள் சிறையில் வாடினாள்.சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் இராமாயணம் என்கிறார்கள். சீதையைச் சிறையிருந்த செல்வி என்கிறார்கள்.இந்தத்தாயின் தியாகமும் போற்றப்படவேண்டியது தானே?


vannaijaya@gmail.com

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி