தனித்து தெரியும் உண்மையின் இருண்மை

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

ரெ.செல்வம்


நிகழ்வு : இளங்கோவனின் ஆங்கில நாடகம் O$P$ (Owe money Pay Money)
தேதி & இடம் : 5 டிசம்பர் 06, சப்ஸ்டேஷன் அரங்கு, சிங்கப்பூர்
நாடக இயக்கம் : க. இளங்கோவன்

இலக்கியத்திற்கும் வரலாற்று மையங்களுக்குமான தொடர்புகள் குறித்த நீண்ட விவாதங்களுக்கு பிறகும் இயல்பான வாழ்வியல் சாரங்களுக்கு புறம்பான தனிமனித ஆளுமைகளால் சூழப்பட்டுள்ள இவ்வுலகின் நேர்மையான வரலாற்றை ஆவனப்படுத்த வேண்டிய பொறுப்பை கவனத்தில் கொள்ள வேண்டியவனாகவே இலக்கியவாதி அறியப்படுகிறான். இதனால் ஆளுமைகளின் வன்மத்தால் அலைக்கழிக்கப்படுவதும் அதுவே அவனது சமூகம் குறித்த மீள் பார்வைக்கு மூலமாக அமைந்து விடுவது உண்டு. இன்று பரவலாக அறியப்படும் பல இன சமூக கட்டமைப்புகள் உள்ள சமூகங்களுக்கு இடையிலான அகவயமான கருத்தாக்கங்களை முன் வைப்பது குறித்த அச்சம் மிகுந்த சூழலில் தனது சூழலை தீவிர தன்மையோடு முன் வைக்கும் படைப்புகள் வாசகன் மீதான மன எழுச்சியை ஏற்படுத்த கூடிய ஆளுமையுடையவையே. சிங்கப்பூரின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களில் ஒருவரான க. இளங்கோவனின் O$P$ (Owe money Pay Money) என்கிற ஆங்கில நாடகம் மீள் நிகழ்வாக சமீபத்தில் நிகழ்த்தப்பெற்றது.

புறக்காரணிகளின் அழுத்தங்களை உதறி விடுபட துடிக்கும் தேடல் நிறைந்த சமூகத்தின் அகமன பதிவுகளே இந் நாடகத்தின் மையமாக இருந்தது. கருத்து சுதந்திரத்தின் மீதான கேள்விகளும் மௌனங்களை சுமந்துகொண்டுவிட்ட இச்சூழலில், தீவிரமான கருத்தியல் சார்ந்த இந்நாடகத்தின் ஆளுமை சிங்கப்பூரின் தொய்வான இலக்கியச் சூழலில் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. அல்லோங் ஒருவனிடம் வசூல் மன்னனாக வேலை செய்யும் zilo என்பவனின் கொடூரமான முகமூடியும் அதன் அகம் புறம் சார்ந்த நிகழ்வுகளையும் அதனூடாக இச்சமூக மன போக்கினை எந்த புள்ளி விவரங்களாலும் முன்மொழியப்படாத உண்மைகளையும் ஆராய்கிறது இந் நாடகம்.

தனது முதலாளியின் பணத்தை வசூலிப்பதில் zilo வின் திறமையான அணுகுமுறையும் இரக்கமற்ற ஆளுமையும் அதன் துணை நிகழ்வான வன்முறையும், கொலைகளும் சட்டங்களால் உறுதிப்படுத்தப்படும் பாதுகாப்பிற்கு அப்பாற்பட்ட அவனது உலகத்தின் வலிமை இச்சமூகத்தின் மீதான இவனை போன்றவர்களின் ஆளுமையை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கிறது.

வன்முறையால் சூழப்பட்ட தனது தனிப்பட்ட உலகத்தின் மீதான ஆளுமை நிறைந்த zilo தனது சொந்த வாழ்வில் தனது உறவுகளின் பிரிவினால் தனிமையிலும், வெறுப்பிலும் தனது உண்மையான முகத்தை தேடி அலைபவனாக அடையாளம் காணமுடிகிறது. பின்பு தனது மனைவியை அவளுடைய காதலனோடு எதேச்சையாக சந்திக்கும் zilo தனது வன்முறையின் உச்சமாக அவளுடைய பிறப்பு உறுப்பை சிதைக்க தன் கத்தியை வீசுகிறான். அது தவறுதலாக அவனது ஒரே குவிமையமான மூளை வளர்ச்சியற்ற அவனுடைய குழந்தையின் மேல் பட்டு இறந்து போகிறது.

தனது தீராத குற்றங்களின் மூலம் கட்டுப்பாடுகள் நிறைந்த தனது நவீன சூழலின் முரண்பாடுகளின் முடிவின்மையோடு போராடிக்கொண்டிருக்கும் ziloவின் முகமூடிகளின் ஊடாக வாழ்வின் எல்லைவரை நாம் அணியும் சூழ்நிலைகளின் முகமூடிகளை அடையாளங்கொண்டு கொள்ள முடிகிறது.

zilo என்கிற ஒற்றை கதாபாத்திரத்தின்மூலம் அரூபமான பாத்திரங்களின் முழுமையான உணர்வுகளை பார்வையாளன் அடையக்கூடிய MAX LING-ன் நடிப்பு முழுமையான படைப்பனுபவம் நோக்கி பார்வையாளனை நகர்த்துகிறது. ஆழமற்ற சுயபுலம்பல்களும் படைப்பிலக்கியத்தின்மீதான தீவிரமற்ற செக்குமாட்டுத்தனங்களும் நிறைந்த சிங்கப்பூரின் படைப்பிலக்கியச் சூழலில் தீவிரத்தன்மையோடு தனித்து நிற்கும் படைப்பாளியாக க.இளங்கோவனை இந் நாடகம் அடையாளப்படுத்துகிறது.


raeselvam@yahoo.com.sg

Series Navigation

ரெ.செல்வம்

ரெ.செல்வம்