என் வார்த்தைகள் சில, தொடங்கும் முன்

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

வெங்கட் சாமிநாதன்


‘பாரபக்ஷமின்றி’ என்னும் மந்திர வாசகம் நம்மிடையே வெகு சகஜமாகப் புழங்கும் ஒன்று. இது தன் குணமென்று சொல்லி ஒரு ஜரிகைத் தலைப்பாகையும் அங்கவஸ்திரமும் கொண்டு தம்மை அலங்கரித்துக் கொள்வார்கள். “நான் பாரபக்ஷமற்றவன் என்று சொல்லிக்கொள்ளவில்லை. பாரம் இருக்குமிடத்தில்தான் என் பக்ஷமும் இருக்கும்” என்று க.நா.சு. சொல்வார். இப்படியான அதிரடியான உண்மைகளை அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம். உண்மை ஏன் அதிரடியாக இருக்கவேண்டும்? அதிரடியாகத்தான் ஒரு சமூகத்தின் மேல் அது விழுகின்றதென்றால், அது எப்படிப்பட்ட சமூகம்? நாம், தமிழர் இது பற்றி யோசிக்கவேண்டும்?

நானும் பாரபக்ஷமின்றி இருப்பவனல்லன் தான். அதில் ஏதும் குணம் இல்லை. பாரம் இருக்குமிடத்தில் என் பக்ஷமும் இருக்கும். ஈழத் தமிழரிடம் எனக்கு பக்ஷமுண்டு, வெகு காலமாகவே. அனேகமாக, அது நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து என்று தான் சொல்லவேண்டும். இதன் சாட்சியத்தை “தமிழ் நாடும் ஈழமும்” என்ற தலைப்பில் நான் ஜனவரி, 1962 தேனருவி என்ற பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் காணலாம். அப்போதிருந்து இன்று வரை. இதை பலமுறை நான் வெளிப்படச் சொல்லியிருக்கிறேன். எழுதியுமிருக்கிறேன். “இந்த மனிதருக்கு ஈழத் தமிழ் எழுத்து பற்றி என்ன தெரியும்? தெரியும் என்று காட்டிக்கொள்ள தன்னைத் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறாரா?” என்று பரிட்சிக்கவே டோரண்டோவில் நடந்த கூட்டத்திற்கு வந்ததாக ஒருவர் ஒரு கூட்டத்தினரின் பிரதிநிதியாக ஒரு வாக்குமூலம் தந்துள்ளார். இம்மாதிரி மனிதர்களும் எந்த சமூகத்திலும் காணப்படுவார்கள். அவர்களிடம் காணும் பாரம் எதுவோ அதற்குத் தகுந்த பக்ஷம் என்னதாக இருக்கும்.

ஈழத்தவரிடம் எனக்கு பக்ஷம் உண்டு என்றேன். அ.முத்துலிங்கம் போன்ற சல சலக்காத, துள்ளித் தளும்பாத அமைதியும், வெளிக்காட்டிக்கொள்ளாத ஆழமும், வீணையின் சன்ன இனிய ஒலி எழுப்பும் ஒரு எழுத்தை நான் வேறு எங்கே காண்பது?. அந்த ஆழத்தை நான் என் அருகிலும் காண்கிறேன். ஆனால் அதன் ஆழம் பயமுறுத்தும், பொறாமைத் தீயை எழுப்பும் ஆழம். புதுமைப் பித்தனுக்குப் பிறகு அத்தகைய கலை மேதமையை ஜெயமோகனிடம் மாத்திரமே நான் காண்கிறேன். ஆனால் பெருமைக்குப் பதில் நம்மிடம் பொறாமைத் தீ கங்குகளைத் தெறிக்கிறது. ஒவ்வொரு விசயத்திலும் பார்க்கலாம். வெற்றுச் சவுடால்களும், வார்த்தை ஜாலங்களுமே நம் தலைமைகளில் பலரை, கண்ணகிக்குக் கோவில் கட்ட பாறையைத் தாம் தான் கனக விஜயனின் தலைமேல் தூக்கி வைத்து சந்தைக்கு மாட்டை ஓட்டி வருவது போல தமிழ் நாட்டுக்கு இட்டுவந்ததாகக் கற்பனையில் ஆழச் செய்துள்ளது. மரீனா கடற்கரையில் வாளுயர்த்தி பாயும் குதிரைமேல் தான் அமர்ந்திருக்கும் சிலை ஒன்றும் இத்தலைமைகளின் கனவில் உண்டு. அதற்குத் தூபம் காட்டும் கட்சிக் கூட்டங்கள். இது நம் பெரும்பான்மை. கடல் கடந்து அங்கு நான் சொன்ன கூட்டம் விதி விலக்கான சிறுபான்மை. இது மனம் பேதலித்தவர்களாலேயே ஆன நாடு. அது அப்படிப்பட்ட சிலரையும் கொண்ட சமூகம். அது தான் வித்தியாசம்.

நான் மிகைப்படுத்தவில்லை. கடந்த 25 வருடங்களாக உள்நாட்டுப் போரில் வீடுகளை இழந்து மக்களை இழந்து, வீட்டில் அடுப்பு மூட்ட தீக்குச்சிகளை எண்ணிப் பாதுகாக்க வேண்டிய நிலையில் இரவு நடமாட்டம் இல்லாத காரணத்தால் பிற்பகல் நேரத்தில் ஒரு நாற்சார் வீட்டில் நாடகம் போடுகிறார்கள் ஈழத்து மக்கள். இங்கு மாக்ஸ் ம்யூல்லர் பவன் என்று இடம் கொடுக்கும், எப்போது அந்த ·பவுண்டேசன் பணம் வரும், நாற்பது பேரை அழைத்து ஒரு நாள் கூத்தாட என்று காத்திருப்பது முத்தமிழ் கண்ட தமிழ் நாடு. டோரண்டோவின் பனிகொட்டும் காலை இருட்டில் வீடுகளுக்கு தினசரி பத்திரிகை போட்டுவிட்டு, பகலிலும் இரவிலும் தொழிற்சாலை சென்று வேலை பார்க்கும் மெக்கானிக்குக்கு கவிதை எழுத நேரமும் மனமும் கிடைக்கிறது. அந்தக் கவிதை ·பாஸிச சக்திகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறது. இங்கு ஆபாச சினிமா வசனம் எழுதி ‘நான் பிழைக்கவேண்டாமா?’ என்று நியாயம் கற்பிக்கிறவர்களைக் கொண்டிருக்கிறது தமிழகம். இவர்கள் நமக்கு ‘நக்ஷத்திரங்கள்” தம் மனச்சாட்சிக்கு எதிராகவே நியாயங்களையும் நாம் கற்பித்துக் கொள்கிறோம்.

ஈழ மக்களிடையே அறுபதுகளில் தமிழ் வாணனைப் போல கறுப்புக்கண்ணாடி அணிந்த தம் புகைப் படம் போட்ட பத்திரிகையில் அதே டைப் கேள்வி பதில் சமாச்சாரங்களும் இருந்தன. இங்கு ஹிந்தி எதிர்ப்பு நடந்த போது, அங்கும் ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி செய்ய ஒரு திராவிட முன்னேற்ற கழகம் அந்நாளில் இருந்தது என்று கேள்விப்பட்டேன். பெரியார் அங்கும் சென்று ‘பாப்பான் ஒழிக’ கூட்டங்கள் போட்டிருக்கிறார். ஒழிக்க பாப்பான்கள் தான் அங்கு யாரும் இல்லை. இந்த வேடிக்கைகள் நடந்த நாடு தான் இன்று குணம் மாறியுள்ளது. மொழிக்காக, தம் நாட்டுரிமைக்காக, சுதந்திர வாழ்வுக்காக போராடுகிறது. நாடிழந்து புலம் பெயர்ந்தாலும் மொழியை இழக்கத் தயாரில்லை அவர்கள். தமிழ் நாட்டில் தமிழ் பேசுவாரைத் தான் காணோம். உலகத் தமிழ் நாடு நடந்தபோது நாம் அவமானப்படுத்திய ஐராவதம் மகாதேவனுக்கு அரங்க நாயகம் அறக்கட்டளையின் முதல் பரிசை அம்மக்கள் அளிக்கிறார்கள். அவர்களும் தமிழ் மக்கள் தாம்.காஆனால் புலம் பெயர்ந்து விட்டார்கள். கணிணியில் தமிழ் வாழ்கிறது அவர்களால். கணிணியில் தமிழ் பத்திரிகைகள் பெருக்கெடுத்துள்ளன அவர்களால். முன்னோடிகள் அவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஈழமக்களுடனும், கனடாவிலிருந்து சிங்கப்பூர் மலேசியா வரை உள்ள தமிழ் மக்களோடும், அவர்கள் எழுத்துக்களோடும் வாழ்க்கையோடும் பரிமாறல் கொள்ள வேண்டும். அது இப்போது சாத்தியமும் தேவையும், என நான் நினைக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் வாழும் தமிழ் மக்களின் அன்றாட உறவாடல் வேற்று மொழிக்காரர்களுடன், கலாச்சாரத்துடன் இருப்பதால் அதிலும் கொடுக்கலும் வாங்கலும் சாத்தியம், இருக்க வேண்டும். கருணாகர மூர்த்தி, திருமாவளவன், அ.முத்துலிங்கம், கலாமோகன், ஷோபாசக்தி, சேரன் இப்படி பலருடைய எழுத்துக்களில் அந்த கலாச்சார மோதலும் ஒன்றிணைவும் பதிவு செய்யப்படுகின்றன. தனித் தனித் தீவுகளாக நம்மை எண்ணிக்கொள்வது கலாச்சார பாதுகாப்பாகாது. நம் தமிழகத் தமிழர்கள் இதுகாறும் பதிவு செய்யாத சரித்திரத்தை தேவகாந்தன் பதிவு செய்கிறார். கௌரவிப்பதிலும் சிறப்பிப்பதிலும் தமிழகம் காட்டாத நேர்மையை, அமெரிக்க விளக்கு அமைப்பாளர்களும், கனடா இயல் விருது அமைப்பாளர்களும் தம் தேர்வில் காட்டுகிறார்கள். அவர்கள் தமக்கே கிரீடம் சூட்டிக்கொள்வதில்லை. அவர்கள் கௌரவித்தவர் எவரும் தகுதியற்றவர் இல்லை. இதையும் நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

இங்கு தொகுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் அனைத்தும் இத்தகைய ஒரு பாலமாக ஒரு பரிமாற்றமாக அமைகிறவை தான். அவர்களும் எழுதுகிறர்கள், அவையும் சிறப்பானவை என்பதைச் சொல்வன. அத்தோடு நம்மிடையே சிறப்பானவற்றையும் அவர்களுக்கு எடுத்துச் செல்லும் பாலம் தான், பகிர்ந்து கொள்ளும் பரிமாற்றம் தான். இவற்றில் நாம் வெகுவாக மதிக்கும் சில தமிழக கலைஞர்கள் இடம் பெறவில்லை. காரணம் நான் எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லாதே அவர்கள் அங்கு பிரபலமானவர்கள் தாம். இதை நான் தொடரும் உரையாடலின் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கிறேன். தமிழினியின் மிகச் சிறப்பான வெளியீடுகளான, கொங்கு தேர் வாழ்க்கை இரண்டு பாகங்களையும் தொகுத்த சிவகுமாரையோ ராஜமார்த்தாண்டனையோ, அல்லது அந்த தொகுப்பையோ புலம் பெயர்ந்தவர்கள் அறியும் வாய்ப்பிருக்கும் என எனக்குத் தோன்றாததால் அவற்றை அங்கு எடுத்துச் சென்றிருக்கிறேன். இது போலத்தான் என் தேர்வுகள் இருந்திருக்கின்றன. இங்கிருந்து புத்தகங்களை மலேசியாவிலும் கனடாவிலும், ஐரோப்பாவிலும் விற்பதுடன் நம் அக்கறைகள் குறுகிவிடக்கூடாது. பரிமாற்றமும் பெற்றதை உள்வாங்கி வளர்தலும் வேண்டும்.

வெங்கட் சாமிநாதன்/24.11.06

(வெளிவரவிருக்கும் கடல் கடந்து.. என்ற என் கட்டுரைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை )

vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்