திருக்குறள் ஒரு மறை நூலா ?

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

அருளடியான்


திருக்குறள் ஒரு மறை நூல் என்றும், அது தமிழ் மறை என்றும் தமிழறிஞர்களில் பெரும்பாலானவர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் திருக்குறளுக்கு செம்பதிப்பு வெளியிட்ட ராணி வார இதழின் ஆசிாியர் அ.மா. சாமி கூட திருக்குறளை மறை என்றே குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாது திருக்குறளுக்கு, பைபிள், குர்ஆன் ஆகிய சமய மறை நூல்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது போல வாிசை எண் இட்டுள்ளார்.

மறை நூல் என்றால் இறைவனால் அருளப்பட்டிருக்க வேண்டும். ஒரு இறைத் தூதரால் அல்லது தீர்க்கதாிசியால் மக்களுக்கு கூறப்பட்டிருக்க வேண்டும். இந்து மதமென்றால், ஒரு கடவுள் அவதாரத்தால் வேதம் வழங்கப்புடும். உதாரணமாக கிருஷ்ணர் வழங்கியது ‘பகவத் கீதை ‘.

திருவள்ளுவர், ஒரு இறைத் தூதர் என்றோ, தீர்க்கதாிசி என்றோ யாரும் இதுவரை நிரூபிக்கவில்லை. கடவுள் அவதாரம் என்பதற்கும், திருக்குறளிலோ, திருக்குறளுக்கு வெளியிலோ எந்தக் குறிப்பும் இல்லை. திருக்குறளுக்கு வெளியே அவரைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் அவரை அவமதிப்பதாகவும், அவரை பார்ப்பனருக்கு பிறந்தவர் என்று காட்டுவதாகவும் உள்ளன. இவை உண்மையில்லை. எனவே தான் பிற்காலத்தில் வந்த பெரும்பாலான தமிழறிஞர்கள் இவற்றை ஒரு செய்தியாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

திருக்குறள் ஒரு மறை நூல் அல்ல. திருவள்ளுவர் இறைத்தூதரோ, தீர்க்கதாிசியோ அல்லது கடவுளின் அவதாரமோ கிடையாது. ஆனால், அவர் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் (Icon). இந்துத்துவவாதிகள் ராமரை தங்கள் பண்பாட்டு அடையாளமாக முன்னிறுத்துவது போல நாம் திருவள்ளுவரை தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக முன்னிறுத்த வேண்டும். தமிழர்களை சாதி, மதம் வேறுபாடு பார்க்காமல் ஒன்றுபடுத்துவது திருக்குறள். நான் திருக்குறளை முழுவதுமாகப் படித்துள்ளேன். திருக்குர்ஆனையும் முழுவதுமாக பொருளுடன் படித்துள்ளேன். திருக்குறள் கருத்துகள் 95% இஸ்லாமிய சமயத்தோடு ஒத்துப் போகிறது. பைபிளையும் முழுவதுமாகப் படித்துள்ளேன். திருக்குறள் கிறிஸ்தவ சமயத்துடனும் பொிய அளவில் முரண்படவில்லை. தமிழ் நாட்டில், இந்துக்கள் தங்கள் கோயில்களில் திருக்குறள் சொற்பொழிவு நடத்துகின்றனர். பொியார் தொண்டர்களும் திருக்குறளை போற்றுகின்றனர். அவர்கள் திருக்குறளின் ‘கடவுள் வாழ்த்து ‘ உள்ளிட்ட அதிகாரங்களுக்கு அளிக்கும் பொருளை மற்றவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது தனி செய்தி. திருக்குறளை ஒரு நீண்ட இடை வெளிக்குப் பிறகு தமிழர்களிடம் கொண்டு சென்றவர் பொியார் தான் என்பதை நன்றியுடன் நாம் இங்கு நினைவு கூர வேண்டும்.

திருக்குறள் ஒரு மறை நூல் என்று சொல்வது தமிழர்களை ஒன்றுபடுத்தாது. அது தமிழர்களை பிளவுபடுத்தவே செய்யும். ஆனால், அது தமிழர்களின் வாழ்வியல் நூல் என்று சொன்னால் அதனை தமிழர்கள் அனைவரும் ஏற்பர். திருக்குறள் தன்முன்னேற்றக் கருத்துக்களையும், மேலாண்மைக் கருத்துக்களையும், உளவியல் கருத்துக்களையும், குடும்பவியில் கருத்துகளையும், அரசியல் கருத்துக்களையும், பாலியல் குறிப்புகளையும் தமிழர்களுக்கு கொடுத்துள்ளது. தமிழர்கள் அனைவரும் திருக்குறளை ஒரு வாழ்வியல் நூல் என்று ஏற்போம். திருக்குறளை மனப்பாடம் செய்தல், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல், திருக்குறளுக்கு பூசை செய்தல் போன்ற பொருளற்ற பழக்கங்களை கைவிட்டு, திருக்குறளை பொருளுடன் பயில்வோம். திருக்குறள் கருத்தரங்குகள், திருக்குறள் மாநாடுகள் நடத்துவோம். திருக்குறள் அஞ்சல் வழி பட்டய வகுப்புகள் தொடங்குவோம். இவையே திருக்குறளையும், திருவள்ளுவரையும் உண்மையில் மதிப்பதாய் அமையும். மற்றவையெல்லாம், திருக்குறளையும், திருவள்ளுவரையும் அவமதிப்பதாகவே இருக்கும்.

-அருளடியான்- aruladiyan@netscape.net

Series Navigation

அருளடியான்

அருளடியான்