யுக யுகங்களாய்ப் பெயர்ந்த கண்டங்கள். மறைந்த விலங்கினங்கள். கண்டங்களை நகர்த்தும் அட்லாண்டிக் கடற்தட்டு. குறுகிச் சுருங்கும் பசிபி

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


காலக் குயவன் ஆழி சுழற்றி

ஓட்டி விட்ட

காலக் கடிகாரம்

ஓயாமல், உறங்காமல்

ஒரே கதியில்,

ஒற்றைத் திசை நோக்கி,

நிற்காமல், நிலை மாறாமல்,

பிசகு ஏதும் நேராமல்,

மசகு மையின்றி,

ஓடிக் கொண்டே உள்ளது!

ஆழியின் அச்சு முறிந்தால்

உயிரினத்தின்

நாடி நிற்கும்! ஒருங்கே

பரிதியின் ஒளிக்கண்ணும் குருடாகி

மூடி விடும்!

‘பூமியின் மேல் பிறழ்ச்சித் தட்டுகள் கடின மானதும், எரிமலை வாயுக்கள் கலந்த முகில் மண்டலம் சூழ்ந்து நீர்மை ஆவி (Moisture) பரவியது! அவற்றின் வெப்பம் தணிந்ததும் பெருமழைகள் பெய்ய ஆரம்பித்து, குழிந்த பரப்புகள் யாவற்றிலும் நீர்தங்கி கடற்பகுதிகள் உண்டாயின. உயிரினத் தோற்றத்தைப் பற்றி விளக்க வேண்டுமானால், அவற்றின் மூல காரணமான இரசாயன ஆர்கானிக் பொருட்கள் புரோட்டான்கள், நியூக்கிளிக் அமிலங்கள் [Proteins & Nucleic Acids] ஆகிய இரண்டும் எவ்விதம் பூகோளத்தில் உண்டாயின வென்று முதலில் ஆராயப்பட வேண்டும். தற்போது ஆய்வகத்தில் ஓர் ஆர்கானிக் இரசாயவாதி உயிரின உற்பத்திக்கு வேண்டிய முக்கிய உபரிச் சாதனங்களை முறையாகச் சேர்த்து யாவருக்கும் செய்து காட்ட முடியும்! ஆனால் அந்த மூலப் பண்டங்கள் பூகோளத்தில் எப்படித் தானாக உண்டாயின என்று கூறுவதுதான் மிக்க சிரமமாக இருக்கிறது ‘.

ஜார்ஜ் காமாவ் [ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி (1904-1968)]

‘உயிரின, பயிரின இம்மிகள் [Living Organisms] மாறும் சூழ்நிலைக்கு ஒப்ப படிப்படியாக, தம்மினத்தின் இடையே பிழைத்துக் கொள்ளும் சுயப் போராட்ட விளைவால் மாறுகின்றன! இந்த மாறுதல்கள் பல மில்லியன் ஆண்டுகளாக உயிரினங்கள், பயிரினங்கள் இடையே நிகழ்ந்து வந்திருக்கின்றன. பில்லியன் ஆண்டுகளாக ஒற்றை உயிரின இம்மியிலிருந்து [Single-Celled Organism] எண்ணற்ற இடைநிலை வடிவு மாறுதல் பெற்று, தற்போதுள்ள சிக்கல் நிறைந்த விலங்கினம், மனித இனம் தோன்றியுள்ளது ‘

சார்லஸ் டார்வின், ஆல்ஃபிரெட் வால்லஸ் [பிரிட்டாஷ் உயிரியல் இயற்கைவாதிகள் (1858)]

‘மனித இனங்கள் தோன்றுவதற்கும் நீண்ட காலத்துக்கு முன்பு பூதளம் எங்கும் இயற்கையின் மகத்தான படைப்புகளைக் காட்ட புதைந்த எலும்புகளையும், பூர்வ படிவத் தடங்களையும் விட்டுச் சென்ற விந்தையான விலங்கினங்கள் கம்பீரமாக உலவி வந்தன. பறப்பது, நகர்வது, விரைவது, நீந்துவது போன்ற திறமைகள் பெற்று, ஊர்ந்து செல்லும் பூதகரமான விலங்கினங்கள் தக்க முறையில் வாழும் சூழ்வெளி நிலைக்கேற்ப மாறும் தகுதி பெற்று, அனைத்தும் அழிவதற்கு முன்பு 135 மில்லியன் ஆண்டுகள் பூதளத்தை ஆண்டு வந்தன! ‘

ரூத் மூர் [Ruth Moore]

முன்னுரை: 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே, இந்தப் பூகோளம் நாமறிந்தது போலின்றிக் கடூரமான சூழ்நிலையைக் கொண்டிருந்தது! பெரும்பான்மையான பிரதேசங்கள் நீர்மயமாக மூழ்கிக் கிடந்தன. தளப் பகுதிகள் எங்கும் மலைப் பாறைகள் சூழ்ந்து, எரிமலைகள் குமுறி எழுந்து தடுப்புப் பீடங்களாய்ப் பிளந்தும், அப்பாறைகளைப் புயல் காற்று, பனிப்புயல், மழை அடுத்தடுத்து அரித்தும், சரித்தும் மாறி மாறி நிகழ்ந்து வந்தன! உயிரனங்கள் எவையும் மூச்செடுத்து உயிர் வாழாவண்ணம், பிராண வாயுவற்ற சூழ்வெளியில் வெறும் ஹைடிரஜன், மீதேன், அம்மோனியா, நீர்மை ஆவி [Methane, Ammonia & Water Vapour] மட்டும் பரவி இருந்தன. அந்தப் பயங்கரப் பலனற்ற பூதளச் சூழ்வெளியில்தான் முதன்முதல் இரசாயன இயக்கங்கள் உண்டாகிப் படிப்படியாக உயிரினத் தோற்றங்கள் உதயமாயின!

எளிய இரசாயனக் கூட்டியக்கங்கள் மின்னல், ஒளிச்சேர்க்கை போன்ற இயற்கையின் வினை ஆக்கிகளால் மாறுபாடுகள் அடைந்து உயிரினங்கள் தோன்ற மூல காரணிகளை உண்டாக்கின என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. உயிரனத் தோற்றங்களின் ஆதிக் கோட்பாடுகள் பல்வேறு கருத்துக்கள் கொண்டவை. கண்ணுக்குப் புலப்படாத இம்மி உயிர்க் கிருமிகள் இயற்கையாகவே உதித்தன என்பது ஒரு கோட்பாடு. அந்த நியதியை ஆதரிப்போர் அழுகிப் போன ஆர்கானிக் பிண்டத்திலிருந்து உயிர் இம்மிகள் நேரடியாக உண்டாயின வென்று நம்பினர். அதை மெய்ப்பிக்கும் வகையில் நீரில் பாக்டாரியா எழுவதும், புழுத்துப் போன இறைச்சியில் மாக்கட் ஈசல் [Maggots], புழுக்கள் உற்பத்தியாவதும் காட்டப்பட்டன. 1860 இல் பிரென்ச் விஞ்ஞானி லூயி பாஸ்டர் (1822-1895) மெய்வருத்திப் பல சோதனைகள் செய்து, உயிர் இம்மிகள் தாமாகவே தோன்றின என்னும் கோட்பாடை நிராகரித்தார். அதே சமயத்தில் பிரிட்டனில் சார்லஸ் டார்வின் (1809-1882), ஆல்ஃபிரெட் வால்லஸ் [Alfred Wallace (1823-1913)] ஆகியோர் இருவரும் பலர் ஒப்புக்கொள்ளும் தமது உயிரின மலர்ச்சி நியதியை [Theory of Evolution of Species] 1858 ஆம் ஆண்டில் லின்னியன் இணைக்குழு [Linnean Society] முன்பாக ஒருங்கே அரங்கேற்றினர்.

பூகோளக் கண்டங்களின் பூர்வீகத் தோற்றமும் மறைவும்

துவக்க காலத்தில் எல்லாவற்றுக்கும் முன்னதாகத் தோன்றிய பூதக்கண்டம் ‘ரொடினியா ‘ 750 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு துண்டுகளாகப் பிரிய ஆரம்பித்து, அவற்றின் இடையே பிரம்மாண்டமான கடற்பகுதிகள் எழுந்தன. அப்போது ஒரு பகுதி வட துருவத்தை நோக்கியும், மறுபகுதி தென் துருவத்தை நோக்கியும் நகர்ந்தன. குன்றுகள் உயர்ந்தன. பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள மலைச் சிகரங்களில் கூட பனிமூட்டம் பெருகிற்று. வடக்கில் சென்ற துண்டுக் கண்டங்கள் ஆஃப்பிரிக்கா கண்டம் மீது மோதின. 600 மில்லியன் ஆண்டுகளுக்குள் மீண்டும் துண்டுகள் இணைந்து பன்னோசியா [Pannotia] என்னும் பூதக்கண்டம் உருவானது.

550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே பாலியோஸோலிக் யுகத்தில் [Paleozolic Era] வட அமெரிக்காவின் மகத்தான செம்பாறைப் பள்ளத்தாக்கு [Grand Canyon] யூரோ அமெரிக்காவின் [Euroamerica] ஒரு பகுதியாக இருந்தது. 514 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பன்னோசியாவின் ஒரு பகுதி பிரிந்து, கோந்துவானப் பெருங்கண்டம் தென்துருவத்திலே விடப்பட்டது. வட அமெரிக்காவின் மேற்குக்கரை 90 டிகிரி சாய்ந்து, பூமையக் கோடு [Equator] மீது படிந்திருந்தது! அலைகள் உள்நுழைந்தும், வெளியேறியும் கடற்கரைகள் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கின. கடலில் வாழும் டிரைலோபைட்ஸ் பூர்வப் படிவங்கள் [Trilobites Fossils] தோன்ற ஏதுவானது. கடற்தள ஜந்துகளின் [Mollusks] பூர்வ படிவங்களும் காணப்பட்டன. பாலியோஸோலிக் யுகத்தின் [Paleozolic Era] இறுதியில் கண்டங்கள் மீண்டும் சேரத் துவங்கி பாங்கியா பெருங்கண்டம் உருவானது.

390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு லெளரென்சியா [வட அமெரிக்கா] பால்டிகா [வட ஐரோப்பா] கண்டத்துடன் மோதியது. பின்னால் அவலோனியா [பிரிட்டன், நியூ இங்கிலாந்து (Avalonia)] பகுதியுடன் மோதியது. கண்டங்கள் மோதிச் சுருங்கிய போது, கடல் தடாகங்கள் அகண்டு கடலில் ஆழம் குறைந்து, பல நிலப் பகுதிகள் தெரியும்படித் தலை தூக்கின! அப்போது நதிகளும், ஏரிகளும் உப்புநீர்க் கரை அரண்களை இழந்தன. இனிப்புநீர் மீன்கள் விடுதலையாகப் புலம்பெயர்ந்தன. பயிரினங்கள் நிலத்தில் குடியேறின. பின்னால் கார்பன் நிரம்பிய பயிரின வகை புதைபட்டுப் போய், சூழ்வெளியில் கார்பன் டையாக்ஸைடு அளவு குன்றி பூமியின் உஷ்ண நிலை குறைந்தது.

300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கோந்துவான கண்டமும், வட கண்டங்களும் மோதி, பங்கயா வென்னும் ஒற்றைப் பெருங்கண்டம் சேர்ந்து, வட துருவம் முதல் தென் துருவம் வரை பரவிய மாபெரும் நிலப்பகுதி உருவானது! அவற்றிடையே ஏற்பட்டது, டெதிஸ் கடலான [Tethys Sea] மத்திய தரைக் கடல். அப்பெருங் கண்டத்தைச் சுற்றி யிருந்தது பந்தலாஸிக் கடல் [Panthalaasic Ocean]. அதுவே இப்போதைய பசிபிக் கடலானது. பரந்தகன்ற கடலின் ஆழம் குறைந்து, வட தென் நிலப்பகுதிகள் ஆக்ஸிஜென் உள்ள கடலோட்டத்தைத் தடுத்து நிறுத்தியது. பிராண வாயு குறைந்து போன அப்போது, சைபீரியாவில் பலத்த பயங்கரமான எரிமலைகள் கொட்டிய தீக்குழம்பாலும் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் பிரளயம் ஏற்பட்டுப் பேரழிவு நிகழ்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள். அப்பெருஞ் சிதைவில் தப்பிப் பிழைத்த ஊர்வன விலங்குகளே பங்கயா கண்டத்தில் பரவி, வேறுபட்ட விலங்கினங்களாக மாறி, டைனோஸார்ஸ் பிறப்பதற்குக் காரணமாயின என்று கருதப்படுகிறது.

220 மில்லியன் ஆண்டுகளில் தோன்றிய டிரையாஸிக் யுகத்தில் [Triassic Era], டைனோஸார் வகைகள் ஊர்வன, பறப்பன, ஓடுவன, நீந்துவன பங்கயா கண்டத்தில் உலவ ஆரம்பித்தன என்று கருதப் படுகிறது. பால் கொடுக்கும் விலங்கினங்கள் [Mammals] அதற்கும் முன்னதாகவே பிறந்து விட்டன. குறிப்பிட்ட பயிரினங்கள் [Ferns, Palm like Cycads] நிலத்தில் முளைத்தன. மர வகைகள் [Conifers] விருத்தி யாயின.

190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டிரையாஸிக் யுகம் முடிந்து, ஜுராஸிக் யுகம் [Jurasic Era] உதயமானது. அப்போது மாபெரும் கடற்தட்டுப் பிளவு ஏற்பட்டு, பங்கயா கண்டம் வடக்கிலும், தெற்கிலும் இரு துண்டாய்ப் பிரிந்தது. வட அமெரிக்கா கண்டமும், யுரேசியா கண்டமும் தோன்றின. தென்னமெரிக்கா, ஆஃப்பிரிக்கா மற்றவையும் சேர்ந்து ஒரு கண்டமானது. பிறகு தென்பகுதி பிரிய ஆரம்பித்து, அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவைத் தனியே தம் பாதையில் நகர்ந்தன. இலை, குலை, மரங்களைத் தின்னும் [Ferns, Palm like Cycads] டைனோஸார்கள் எண்ணற்றவை உலவி வந்தன. கடல்கள் நிரம்பி மீன்வளங்கள் பெருத்தன. புராதனப் பால் கொடுக்கும் விலங்கினங்கள் பரவின. முதன் முதலாகப் பறவை இனங்கள் உதித்தன.

136 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே ஜுராஸிக் யுகம் முடிந்து, கிரிடேஸிசஸ் யுகம் [Cretaceous Era] பிறந்தது. பங்கயா பெருங்கண்டம் பிரியத் தொடங்கியது. வட அமெரிக்கா கண்டமும், யுரேசியா கண்டமும் பிரிந்தன. இடைக்காலத்தில் பலவித பயிரின வகைகள் பெருகின. தலைதூக்கி உலாவிய டைனோஸார்கள் கிரிடேஸிசஸ் யுகத்தின் இறுதியில் அனைத்தும் திடாரன ஒரு பிரளயத்தில் அழிந்தன!

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரிடேஸிசஸ் யுகம் முடிந்து செனோஸாயிக் யுகம் [Cenozoic Era] பிறந்ததும், கண்டங்கள் தனித்தனியாக முழுமை பெற்றன. மைய அமெரிக்கா, அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று கண்டங்களும் இணைந்து, அவை தற்போதுள்ள பகுதிகள் இன்னும் நீர்மயம் சூழப்பட்டிருந்தன. ஆனால் இந்திய உபகண்டம் மட்டும் வடபுறம் பிரிந்து, யுரேசியாவை நோக்கி மோதுவதற்கு நகர்ந்து கொண்டிருந்தது! பூதளத்தில் பால் கொடுக்கும் விலங்கினங்கள் விருத்தியாகி, பலவகைப் பயிரினங்கள் பெருகின.

டைனோஸார்கள் முற்றிலும் எப்படி அழிந்து போயின என்பது புதிராகவும், பூதளவாதிகள் கூறும் வெவ்வேறு காரணங்கள், கருத்துக்கள் யாவும் விவாதனைக் குரியதாகவும் உள்ளன! மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் டிரில்லியன் டன் [1 மில்லியன் பில்லியன் (1 பின்னால் 18 பூஜியம்)] எடையுள்ள விண்கல் அல்லது வால்மீன் [Astroid or Comet] மணிக்கு 100,000 மைல் வேகத்தில் விழுந்து, பயங்கரச் சுனாமியும், பூவதிர்ச்சியும் உண்டாகிக் கடலும், நிலமும் பேயாட்டமாடி ஏற்பட்ட பிரளயத்தில் யாவும் அழிந்தன வென்று ஒரு கருத்து உலவி வருகிறது! அந்த பேரதிர்ச்சி விளைத்த சூறாவளிப் புயல்கள், சுனாமிப் பேரலைகள், பூகோளக் கானக எரிப்புகள் உற்பத்தி செய்த புகை மண்டலம், பூமியை இருட்டாக்கி உஷ்ணத்தைத் தணித்து குளிர்வித்து விட்டதாகவும் ஊகிக்கப் படுகிறது!

கண்டங்களை நகர்த்தும் அட்லாண்டிக் கடற்தட்டு

கடற்தளப் பகுதிகள் கண்டங்களின் பூதளப் பரப்பு போல் கரடு முரடாக வடிவம் கொண்டவை! குன்றுகள், குழிகள், சமதளங்கள், பீடபூமிகள், ஆயிரக் கணக்கான அடி ஆழமுள்ள கடலடிச் செங்குத்துப் பள்ளத்தாக்குகள் [Submarine Canyons], கடல் மட்டம் தொட்டுத் தலைநீட்டும் எரிமலைத் தீவுகள் ஆகியவற்றை கடற்தள உளவாய்வு செய்த போது கண்டுபிடித்துள்ளார்கள். மையக்கடல் பிறழ்ச்சிப் புடைப்புகள் [Mid-oceanic Ridge] எனப்படும் குன்றுகள் 13,000 அடி உயரம் வரை எழுந்து, 40,000 மைல் தூரம் கடல்மடியில் நீண்டுள்ளது வியக்கத்தக்க, விந்தையான ஓரியற்கை வடிவ மாற்றமே! எல்லாவற்றிலும் அட்லாண்டிக் கடற் பகுதியே பூகோளத்தில் மிகப்பெரும் மலைப் புடைப்புப் பரப்பாக இருந்து வருகிறது.

பசிபிக்கடல், மத்தியதரை கடல் ஆகிய டெதிஸ் கடல்களுடன் [Tethys Seas] ஒப்பு நோக்கினால், அட்லாண்டிக் கடலே இளவயதானது! 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாங்கயா பெருங்கண்டம் [Pangaea Supercontinent] கடற்தட்டுப் பிறழ்ச்சிப் புடைப்புகளால் [Oceanic Plate Rifts] அகண்டு பிரிந்து, இடையே அட்லாண்டிக் பெருங்கடல் உருவாகியது! அதே அகற்சி இயக்கம் இப்போதும் நேர்ந்து அட்லாண்டிக் கடல் மடியில் நிகழ்ந்து வருகிறது. பூமியின் உட்கருத் திரவப் பாறை [Molten Rock (Magma) from the Earth ‘s Interior Mantle] மேலெழுந்து குளிர்ந்து உண்டாகும் மையத்தட்டுப் புடைப்பால் [Mid-Alantic Ridge], ஆண்டுக்கு 2 செ.மீ. வீதத்தில் கடல் இருபுறமும் விலகி வருகிறது!

1960 இல் குளோமர் சாலஞ்சர் கடலடி ஆய்வு கப்பல் நூற்றுக் கணக்கான துளைகள் தோண்டி எடுத்த செதுகுப் புழுதிமண் மாதிரிகள் [Sediment Samples] அட்லாண்டிக் கடல் அகண்டு வருவதை நிரூபித்திருக்கின்றன. பசிபிக் கடல்மடியில் கடற்தளத் தட்டுகள் கண்டங்களுடன் மோதி, எரிமலைகள், பூகம்பங்கள், சுனாமிகள் உண்டாக்குவது போலின்றி, அட்லாண்டிக் கடல்மடி அதிர்வுகளின்றி அமைதியாக இருக்கிறது! காரணம் அட்லாண்டிக் கடலும், கண்டமும் ஒரே பிறழ்ச்சித் தட்டுமீது சவாரி செய்கின்றன! உலகத்தின் மாபெரும் நதிகளான அமேஸான், மிஸ்ஸிஸிப்பி, ஸெயிண்ட் லாரென்ஸ், காங்கோ, ஒரினாகோ போன்றவை தொடர்ந்து செதுகுப் புழுதிகளை அட்லாண்டிக் கடலில் கொட்டிக் கொண்டு வருகின்றன. அதே சமயத்தில் பசிபிக் கடல் மலைத்தொடர் நதிகள் கடலுக்கு எதிராக வேறு திசையில் ஓடி விழுகின்றன.

1978 இல் அமெரிக்கன் கடற்தள ஆய்வு விண்வெளிச் சிமிழ் [Seasat Satellite] மூன்று மாதங்கள் 500 மைல் உயரத்தில் பூமியைச் சுற்றி வந்து, கடற்தளங்களை உளவு செய்தது. விண்சிமிழில் கடற்தள மட்டத்தை அளக்கும் ரேடார் உயரமானி [Radar Altimeter] ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. அதன் மூலம் விண்சிமிழுக்கும், கடற்தளத்துக்கும் உள்ள இடைவெளியை 4 அங்குல [10 செ.மீ] துல்லிமத்தில் பதிவு செய்ய முடியும். விண்வெளிச் சிமிழ் அகண்ட பகுதிகளை உளவக் கூடியதாய் உள்ள போது, குறிப்பிட்ட பகுதிகளை விளக்கமாக வரைபடம் அமைக்க, குளோரியா பக்க உளவு ஒலிக்கருவி [Side-Scan Sonar Gloria] பயன்படுத்தப் பட்டது. அது கருவிக்கு இருபுறமும் 19 மைல் [30 கி.மீ] அதாவது 38 மைல் [60 கி.மீ] அகலத்தில் இருக்கும் பகுதிகளின் மேடு பள்ளங்களை அளந்து வரைபடம் அமைக்க உதவியது. குளோரியா கருவி நகரும் வேகம் மணிக்கு 18 மைல். அட்லாண்டிக் கடற்தளத்தின் மையத் தட்டுப் புடைப்பை உளவு செய்து கடல்மடியில் ஓடிய நதிகள், மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்குகள், கடற்தட்டுக் குழிகள் ஆகியவற்றைக் காட்டி யுள்ளது.

குறுகிச் சுருங்கும் பசிபிக் மாக்கடல்

அட்லாண்டிக் கடல் இன்னும் விரிந்து கொண்டு அகலும் போது, பசிபிக்கடல் மேலும் சுருங்கிக் கொண்டு குறுகி வருகிறது! பேரளவு பரவிய பசிபிக் பெருங்கடல், 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பங்கயா பெருங்கண்டத்தைச் சூழ்ந்த அதன் பூர்வீகப் பூதக்கடல் ‘பந்தலாஸாவில் [Panthalaasa] பாதிப் பரப்பைக் கொண்டது. உலகிலுள்ள அனைத்து கடலிலும் மிகப் பெரியது பசிபிக்கடல்! அட்லாண்டிக் கடலை விட இரு மடங்கு பெரியது! பூதள நிலப்பரப்பை விடப் பெரியது! 64 மில்லியன் சதுர மைல் பரப்பை உடைய பசிபிக் கடல் பூதளப் பரப்பில் மூன்றில் ஒருபங்கு பகுதியை அடைத்துக் கொண்டுள்ளது! ஆங்கில எழுத்து V- போன்ற ஆழமான குழிகள் பசிபிக் கடற்தளத்தில் உள்ளன போல், வேறெந்தக் கடலிலும் காண முடியாது. விண்வெளியில் ஆய்வுச்சிமிழ் மூலம் 70,000 மைல் உயரத்திலிருந்து பார்த்தால், ஏறக்குறைய அரைப் பூகோளத்தை ஆக்கிரமித்துள்ளது, பசிபிக்கடல்!

160 மில்லியன் ஆண்டுகளாக கடலையும், கண்டத்தையும் ஏந்தியுள்ள கடற்தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதி, பசிபிக்கடலின் கரையோர அரங்குகள் அமைப்பாகி யுள்ளன. பசிபிக்கடலின் இருபுறமும் கடற்தட்டுகள் வலிதான கண்டத் திட்டுகளின் கீழே திணிப்புப் பிறழ்ச்சியில் [Subduction Process] வளைந்து சென்று மறைகின்றன! விரியும் பசிபிக் மையப் பிறழ்ச்சிப் புடைப்புகள் [Mid-Oceanic Ridges] படைக்கப்படும் வேகத்தை விட, கரைகளில் கடற்தட்டுகள் சுருங்கும் திணிப்பு இயக்கத்தில் மறைந்து போவது விரைவாக நிகழ்வதால், ஒட்டு மொத்தமாக பசிபிக்கடல் குறுகி வருகிறது. நீண்ட காலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆண்டிரியா பழுது [Andrea Fault] அத்தகைய கடற்தட்டுப் பிறழ்ச்சியைக் கொண்டுள்ள பூகம்ப அரங்கமாக இருக்கிறது. அட்லாண்டிக் கடல் மடியில் மலைப் புடைப்புகள் மையத்தில் இரண்டாகப் பிரிப்பது போல், பசிபிக்கடல் மையத்திலும் புடைத்த மலைத் தொடர் இரண்டாகப் பிரிக்கிறது.

பசிபிக் கடலைச் சுற்றியுள்ள கிழக்கு மேற்குக் கரைகள், வடக்குத் தெற்குக் கரைகள் எங்கும் கடற்தட்டுக் கீழ்த்திணிப்பு இயக்கம் ஏற்பட்டு பூகம்பங்கள், எரிமலைகள் உண்டாகும் கடூர அரங்கமாக உள்ளன. ஆனால் பசிபிக் கடல்கரை அரங்குகள் போல, அட்லாண்டிக் கடல் கரை அரங்குகளில் கடற்தட்டுத் திணிப்புப் பிறழ்ச்சிகள் ஏற்படுவதில்லை. அவ்விதத் திணிப்பு இயக்கத்தால், நிலத்தட்டுகள் வளைக்கப்பட்டு, வடக்கே அலாஸ்கா முதல், தென்கோடி முனை வரை [Tierra Del Fuego] நீண்ட மலைத்தொடர்கள் பல்லாயிரம் மைல் எழும்பியுள்ளன! மலைப் பகுதியிலிருந்து ஒடுக்கமான கண்டக் கரைச் சரிவுகள் [Continental Shelf] 12-24 மைல்கள் [20-40 கி.மீ] தூரம் உண்டாகி அடுத்து உடனே ஆழப் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

(தொடரும்)

தகவல்கள்

1. Atlantic: Driving Continents Apart. Pacific The Vanishing Ocean -Reader ‘s Digest Atlas of the World [1987]

2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

8. Continental Drift, Geology & Oceanography. [Several Internet Articles]

9. Everyday Geography By: Kevin McKinney (1993)

10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

16 Physical Earth By: National Geographic Society [1998]

17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

18 National Geographic Picture Atlas of our World [1990]

19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

20 The Evolution of the Sumatran Earthquake Fault System By: Andy McCarthy. [July 9, 2002]

21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

25 Reader ‘s Digest Publication: The Living Earth Book of Deserts By: Susan Arritt [1993]

26 Physical Earth, By: National Geographic Society, Millennium in Maps [1998]

27 Birth of the Himalaya By: Roger Bilham. [NOVA PBS Home (Nov 2000)]

28 Rodinia Web Site: http://www.peripatus.gen.nz/paleontology/Rodinia.html (Jan 27, 2005)

29 Historical Geology Rodinia & Pannotia By: Erin McKenna (Spring 2005)

30 Rodinia & Pannotia By: Christopher Scotese (2000)

31 The Origin of Life -Plants & Animals By The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

32 The New American Desk Encyclopedia (1989)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 16, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா