பூமியைச் சுற்றிவரும் செயற்கைத் துணைக் கோள்கள்

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

சி. ஜெயபாரதன், கனடா


இரண்டாவது உலகத் தொழிற் புரட்சியின் உதயம்!

1957 அக்டோபர் 4 ஆம் தேதி முதன் முதல் ரஷ்யா ஸ்புட்னிக்-1 செயற்கைக் கோளை ராக்கெட் மூலம் ஏவிப் பூமியைச் சுற்றிவரச் செய்து, அண்டவெளி யுகத்தை ஆரம்பித்தது! வியப்பான அந்த சம்பவம் உலகில் ஓர் விண்வெளிப் புரட்சியை ஏற்படுத்தி, வல்லரசுகளின் சிந்தனையைக் கலக்கியது! அது முதல் ஆயிரக் கணக்கான செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டு, ஈக்கள் போல் பல திசைகளில் பூமியைச் சுற்றி வருகின்றன. பூமத்திய ரேகையில் சுற்றி வருபவை சில! பூமியின் துருவங்களைச் சுற்றி வருபவை சில! இரண்டுக்கும் இடைப் பட்ட வீதிகளில் சுற்றி வருபவை சில! செயற்கைக் கோள்கள் சில வட்ட வீதியில் [Circular Orbits] சுற்றுபவை! சில நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] பவனி வரும்! தற்போது தொடர்புத் தொழிற் துறைகள் [Communications Industry], ராணுவ உளவுகள் [Military Intelligence], பூகோளத் தளவியல், காலநிலை ஆராய்ச்சிகள், அண்டவெளி படையெடுப்பு போன்ற புதிய முயற்சியில் ஈடுபடச், செயற்கைக் கோள்கள் அடிகோலி யுள்ளன.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னால் எழுந்த, விஞ்ஞானப் புரட்சி விளைவுகள் இரண்டு! 1945 இல் முதல் அணுகுண்டு வெடிக்கப் பட்டு, அணுயுகம் பிறந்து அணு மின்சக்தி நிலையங்கள் தோன்றின! அடுத்து 1957 இல் ஜெர்மனி போரில் பயன்படுத்திய V2 ராக்கெட்டுகளை விருத்தி செய்து, முதல் துணைக்கோள் ஸ்புட்னிக்-1 ஏவப்பட்டு, அண்டவெளி யுகம் பிறந்து, விண்வெளிப் படையெடுப்பு எழுந்தது! அணுசக்தி நிலையங்களும், அண்டவெளிப் பயணங்களும் துவங்கி, எண்ணற்ற நுணுக்கப் பொறிகள் உற்பத்தி! அடுத்து அவற்றை ஆட்சி செய்ய மின்னியல் தொழில் வளர்ச்சி! செயற்கைத் துணைக்கோள் வானலைத் தொடர்புகள் விருத்தி! மின்கணனிகள் வளர்ச்சி ! விஞ்ஞானமும் தொழிற் துறைகளும் மிகப் பெரிய அளவில் மேன்மை அடைந்தன! இவற்றின் மாபெரும் வளர்ச்சிகளைக் கண்டு பிரமித்த சரித்திர ஞானிகள், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியை இரண்டாவது தொழிற் புரட்சிக் காலம் [Second Industrial Revolution] என்று பறைசாற்றுகிறார்கள்!

இருபதாம் நூற்றாண்டில் படைத்த செயற்கைக் கோள்கள்

ரஷ்யாவின் முதல் ஸ்புட்னிக் குட்டித் துணைக்கோள், 184 பவுண்டு எடை கொண்டு நீள்வட்ட வீதியில் [உயரம் 140-590 மைல்], 90 நிமிடத்துக்கு ஒரு முறைப் பூமியை வேகமாய்ச் சுற்றி, 21 நாட்கள் வரை நீடித்தது! அமெரிக்காவின் முதல் துணைக்கோள் எக்ஸ்ப்ளோரர்-1 [Explorer-1] 1958 இல் ஏவப் பட்டு 220-1600 மைல் உயரத்தில் நீள்வட்டத்தில் சுற்றியது. அதன் முதல் தொலைத் தொடர்பு துணைக்கோள், டைரஸ் [TIROS-1] 1960 இல் ஏவப் பட்டது. 1997 ஆண்டு இறுதிவரை மொத்தம் 4800 செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர ஏவப் பட்டுள்ளதாகக் கணக்கிடப் பட்டது! இவற்றில் 2300 துணைக் கோள்கள்தான் இப்போது இயங்கிக் கொண்டுள்ளன. அவற்றுள் 1300 துணைக் கோள்கள் ரஷ்யாவுக்குச் சேர்ந்தவை. 700 துணைக் கோள்கள் அமெரிக்காவுக்குச் சொந்தமானவை. மற்றும் உலகக் கூட்டு நாடுகள் ஏழு சேர்ந்து தமது 26 செயற்கைத் துணைக் கோள்களை [Multinational Satellites] அனுப்பி யுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா, ஜப்பான், இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளும், ஈரோப்பியன் அண்டவெளி ஆணையகமும் [European Space Agency] தமது சொந்த துணைக்கோள் ஏவுதளங்களைக் கொண்டுள்ளன.

உலகில் பல்வேறு பணிகள் புரியும் செயற்கைக் கோள்கள்

ஒற்றைப் பணிபுரியும் குறிக்கோளுடன் அமைக்கப் பட்டுப் பலவித செயற்கைத் துணைக் கோள்கள் இயங்கி வருகின்றன. தொலைத் தொடர்பு, செய்திக்காட்சிப் பரப்பி நிலையங்கள் [Broadcasting Stations], வானலை, தொலை ஒளி, தொலை ஒலிச் சமிக்கைகளைக் [Signals] கம்பி யில்லாமல் அனுப்பத் தொடர்புத் துணைக் கோள்களைப் [Communication Satellites] பயன்படுத்துகின்றன. வழிகாட்டும் துணைக் கோள்கள் [Navigational Satellites] வானில் பறக்கும் விமானம், கடலில் செல்லும் கப்பல், இவற்றின் இடத்தைக் கண்டு பிடிக்க உதவும். காலநிலை ஆய்வு செய்யும் துணைக் கோள்கள் [Weather Satellites] பூகோளக் காலநிலை முன்னறிக்கும் பணி புரிவோருக்கு உதவுகின்றன. பிற நாடுகளின் ராணுவ ரகசியங்களை அறிவதற்கு அமெரிக்க அரசு உளவு செய்யும் துணைக் கோள்களை [Surveillance Satellites] அனுப்பி வருகிறது. அண்டவெளியில் நகர்ந்து செல்லும் பூமி, நிலா, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய சூரிய மண்டலக் கோள்கள், மற்றும் வால்மீன், ஒளிக்கதிர் வீசி [Galaxy] நிபுளா [Nebula] போன்றவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்ய, விஞ்ஞானத் துணைக் கோள்கள் [Scientific Satellites] பணி செய்து வருகின்றன.

துணைக் கோள்களின் உயரம், சுற்றும் நேரம், ஆயுட்காலம்

வான்கார்டு திட்டத்தை [Vanguard Project] நிறைவேற்ற, வான்கார்டு துணைக்கோளை 300 மைல் உயரத்தில் பறக்கவிட அமெரிக்கா முதலில் முற்பட்டது. ஆரம்பத்தில் குறு ஆரம் 200 மைல் [Perigee], நெடு ஆரம் 1500 மைல் [Apogee] கொண்ட நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] வான்கார்டு பூமியைச் சுற்றி வந்தது. அந்த நீள்வட்ட வீதியில் சுற்ற, துணைக்கோள் மணிக்கு 17340 மைல் வேகத்தில் தள்ளப்பட வேண்டும். 300 மைல் உயர வட்ட வீதியில் சுற்ற வேண்டுமானால், அது மணிக்கு 17000 மைல் வேகத்தில் உந்தப்பட வேண்டும். பூமிக்கு மேல் 22,000 மைல் உயரத்தில் ஒரு துணைக்கோள் எறியப் பட்டால், அது எப்போதும் பூமிக்கு இணையாக ஒரு நாளில் [24 மணி நேரம்] புவியைச் சுற்றி வந்துவிடும். அப்போது துணைக்கோள் பூகோள இணைவு வட்ட வீதியில் [Geostationary Circular Orbit] சுற்றி வரும். அதாவது பூமியும், துணைக்கோளும் ஒரே முகத்தை ஒன்றுக் கொன்று காட்டிக் கொண்டு இணையாகச் சுற்றி வரும்.

200 மைல் உயரத்தில் பறக்கும் துணைக்கோள், பூமியை வெகு விரைவாக 90 நிமிடங்களுக்கு ஒரு முறைச் சுற்றுகிறது. 1000 மைல் உயரத்தில் சுற்றினால், துணைக்கோள் விரைவாக 2 மணி நேரத்தில் ஒரு முறைப் பூமியைச் சுற்றி விடுகிறது! 22,000 மைல் உயரத்தில் உள்ள துணைக்கோள் 24 மணி நேரத்தில் புவியை ஒரு தரம் சுற்றுகிறது. 235,000 மைல் உயரத்தில் ஏவப்பட்ட துணைக் கோள், பூமியைச் சந்திரன் சுற்றி வருவது போல் 27 நாட்களில் [ஒரு நிலவு மாதம்] ஒரு முறைச் சுற்றி வரும். ஏவப்படும் உயரத்தை ஒத்து, துணைக்கோளின் ஆயுள் மாறுபடுகிறது. உதாரணமாக 100 மைல் உயரத்தில் உள்ள துணைக்கோள், ஒரு மணி நேரத்திற்கும் குன்றிய ஆயுளை உடையது! 200 மைல் உயரத்தில் விடப்பட்ட துணைக்கோள் சுமார் 21 நாட்கள் வரை நீடிக்கும்! 300 மைல் உயரத்தில் எறியப்பட்ட துணைக்கோள் ஏறக் குறைய ஓராண்டு காலம் பூமியைச் சுற்றும். 600 மைல் உயரத்தில் சுற்றும் துணைக்கோள் 1000 ஆண்டுகள் கூட நீடிக்கும். பூகோளத்தின் நலிந்த வாயு மண்டலம் அந்த உயரங்களில் இருப்பதால், உராய்வு இழுப்புக் [Drag Effects] கூடிய வரை குறைய, துணைக்கோள் 200 மைல் உயரத்துக்கும் மேலாக ஏவப்பட வேண்டும். போகப் போக உராய்வு இழுப்பு துணைக்கோளின் வேகத்தைக் குன்றச் செய்கிறது. சிறுகச் சிறுக அதன் சுழல்வீதி சீர்குலைந்து, பூமியின் அடர்ந்த வாயு மண்டலத்தில் மாட்டிக் கொள்கிறது. வேக மிழந்த துணைக்கோள், பூமியின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிக் கொண்டு, அதி வேகமாய் இழுக்கப் பட்டு, உராய்வு வெப்பத்தில் எரிந்து இறுதியில் சிதைவடைகிறது!

செயற்கைத் துணைக் கோள்கள் ஏவப்படும் முறை

செயற்கைத் துணைக்கோளை பூமியின் சுழல்வீதியில் [Earth Orbit] சுற்றவிட பெருமளவு சக்தி தேவைப்படுகிறது. அதற்கு வேண்டிய வெப்ப சக்தியைத் தூக்கிச் செல்லும் ராக்கெட் அளிக்கிறது. துணைக்கோள் மணிக்கு 18,000 மைல் வேகத்திற்கும் மேலாகச் சென்று, குறைந்தது 120 மைல் உயரத்தில் விடப்பட வேண்டும். இரண்டு விதச் சக்தியை [உயர சக்தி, இயக்க சக்தி (Potential Energy, Kinetic Energy)] மூவடுக்கு ராக்கெட்டுகள் [Three Stage Rockets] இரண்டு அல்லது மூன்று வித ரசாயனப் பண்டத்தை எரித்துத் துணைக் கோளுக்குத் தருகின்றன.

பூகோள இணைச்சுழல் வீதியில் [Geostationary Orbit] பூமிக்கு இணையாக 24 மணி நேரத்தில் சுற்றி வர, துணைக்கோள் 22,000 மைல் உயரத்தில், மூன்றாவது அடுக்கு ராக்கெட்டால் எறியப் பட வேண்டும். அடுத்து துணைக்கோள் வட்டவீதியில் சுற்ற மற்றும் ஒரு சிறிய ராக்கெட் சுடப்பட வேண்டும். பல்லடுக்கு ராக்கெட்டுகள் ஒவ்வொன்றும் சரியான நேரத்தில் சுடத் துவங்க வேண்டும். சரியான காலம் வரை ராக்கெட் இயக்கம் நீடிக்க வேண்டும்.

1990 ஆண்டில் அமெரிக்கா சிறிய துணைக்கோளை ஏவச், சில சமயம் ஆகாய விமானத்தைப் பயன் படுத்தியது. அவ்வாறு ஏவும் போது, எரிபொருள் குறைவாகவே செலவாகிறது. அடுத்து 1990 ஆண்டு முதல் விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] வெற்றிகரமாய்ப் பூமியைச் சுற்றி வந்தபின், சில கனத்த துணைக்கோள்கள் அதன் மீதிருந்து ஏவப்பட்டன. துணைக்கோள் ஏவப்படும் முன்பே, மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் சுற்றி வருவதால், துணைக்கோள் திட்ட மிட்டபடி முறையான வீதியில் சிதைவு படாமல் பயணம் செய்கிறதா, என்று விமானிகள் நேரடியாகக் கண்காணிக்க முடிகிறது. மீள்கப்பல்கள் துணைக் கோள்களைச் செப்பனிடவும், செயலற்ற துணைக் கோள்களை மீட்கவும் பயன்படும். சுழல்வீதியைத் தொடும் ஒற்றை அடுக்கு ஏவு வாகனம் [Single Stage to Orbit Launching Vehicle], எதிர்காலத்தில் துணைக்கோள் அனுப்பும் செலவை மிகவும் குறைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

செயற்கைத் துணைக் கோள்கள் இயங்கும் முறைகள்

அண்டவெளியில் பரிதியின் கொடும் வெப்பத்தையும், பரிதி மறைந்தபின் தாக்கும் கடும் குளிரையும் தாங்கிக் கொண்டு, தட்ப வெப்ப நிலையைக் கட்டுப் படுத்தி நீண்ட காலம் பிழைத்திடத் துணைக் கோளுக்கு தேவையான பாதுகாப்புச் சாதனங்கள் அமைக்கப் பட வேண்டும். அவை ஒழுங்காய் இயங்கிடப் போதுமான மின்சக்தி இராப் பகலாய் எப்போதும் துணைக் கோளுக்குப் பரிமாறப்பட வேண்டும்.

குறிப்பணி நிறைவேற, பூமியின் சுழல்வீதியில் ஒரே திசைநோக்கி துணைக் கோள் நகர வேண்டும். விண்வெளியின் வீரிய கதிர்வீச்சு [Radiation], விண்கற்கள் மோதல் [Collision of Meteeoroids] ஆகிய வற்றிலிருந்து துணைக் கோள் தப்பிக் கொள்ள வேண்டும். பெரும்பான்மையான துணைக் கோள்களில் உட்தள மின்கணனிகள் [Onboard Computers] துணைக்கோளின் இயக்கம், திசைக் கட்டுப்பாடு, குறிப்பணிக் கட்டளை போன்றவற்றைக் கண்காணித்துக் கொள்கின்றன.

துணைக்கோள் குறைந்தது பத்தாண்டுகள் வரை நீடிக்க சூரியசக்திச் சிமிழ்கள் [Solar Cells], மற்றும் பின்னுதவி பாட்ரிகள் [Backup Batteries] துணைக் கோள்களில் அமைக்கப் பட்டுள்ளன. 50 சதுரடிப் பரிதி இதழ்களில் [Solar Panels] 700 வாட்ஸ் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. சுற்றி வரும் போது, பரிதி இதழ்கள் எப்போதும் சூரியனை நோக்கியே முகம் காட்ட வேண்டும். துணைக்கோளின் மின்னலைக் கம்பங்கள், மின்னலை உணர்விகள் [Antennas & Sensors] பூமியின் திசை நோக்கி நிற்க வேண்டும். அல்லது எந்த அண்டத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டுமோ, அதை நோக்கிக் குறிபார்க்க வேண்டும். காலநிலை முன்னறிவிப்புத் துணைக் கோளின் கம்பங்கள், எப்போதும் பூமியை நோக்கியே நிற்கும்படி அமைக்க வேண்டும். அவ்வாறு கம்பங்களின் திசையைக் கட்டுப்பாடு செய்பவை, நேர், மட்ட, எதிர் அச்சுகள் திருப்பும் திசை உந்திகள் [X,Y,Z Attitude Thrusters].

அமெரிக்காவின் முதல் விஞ்ஞான ஆராய்ச்சித் துணைக்கோள்

அமெரிக்காவின் வான்கார்டு திட்டம் [Vanguard Project], மூன்றுவிதக் குறிக்கோள் களை நிறைவேற்றும் திறமையுள்ள விஞ்ஞானத் துணைக்கோளை ஏவிட உருவானது. தொலைத் தொடர்பு [Communications], தொலைக் கணிப்பியல் [Telemetering], விஞ்ஞான ஆராய்ச்சி [Scientific Research] ஆகிய முப்பணிகளைப் புரிய வேண்டும். அமெரிக்கப் படைத்துறையின் [Dept of Defence] கடற்படை ஆய்வு நிபுணர்கள் [Naval Research] திட்டத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். 21.5 பவுண்டு எடையும் 1.5 அடி விட்டமுள்ள சிறிய கோள வடிவானது, வான்கார்டு துணைக்கோள். பரிதி ஒளியை மாற்றும் சூரிய சக்திச் சிமிழ் [Solar Cell], புறவூதா ஆய்வுமானி [Ultraviolet Detector], உஷ்ணத்தை அளக்க ஆக்ஸைடுகள் [Oxides], விண்கற்கள் தாக்கி உண்டாக்கும் உராய்வு இழப்பை அளக்க உராய்வு மானி [Erosion Gauge], வானலை அனுப்பி [Transmitter], பாதரஸ பாட்ரிகள் [Mercury Batteries] போன்றவை வான்கார்டில் இருந்தன.

வான்கார்டு ஏவும் ராக்கெட் தொகுப்பு, மூவடுக்கு கொண்டது. துணைக்கோளை 11 டன் எடையுள்ள ராக்கெட் தொகுப்புத் தூக்கிச் சென்றது. ராக்கெட் தொகுப்பின் உயரம் 70 அடி! ராக்கெட் பெருத்த உருளையின் விட்டம் சுமார் 4 அடி! முதல் அடுக்கு ராக்கெட் திரவ ஆக்ஸிஜனை [Liquid Oxygen] ஆக்ஸிடைசராகவும் [Oxidizer], ஆல்கஹால், பெட்ரோல் கலப்பு [Alcohol, Petrol Mixure] எரிப்பண்ட மாகவும் பயன்பட்டு, 27,000 பவுண்டு உதைப்பு [Thrust] உண்டானது. இரண்டாவது ராக்கெட் அடுக்கு நைடிரிக் அமிலம் [Nitric Acid] ஆக்ஸிடைசராகவும், டைமிதைல் ஹைடிரஸீன் [Dimethyl Hydrazine] எரிப்பண்ட மாகவும் உபயோக மாயின. மூன்றாம் அடுக்கு ராக்கெட் திடவ உதைப்புப் பண்டத்தைப் [Solid Propellent] பயன் படுத்தியது.

வான்கார்டு ராக்கெட் தொகுப்பு பிளாரிடா கனாவரல் ஏவுதள முனையிலிருந்து [Cape Canaveral] ஏவப்பட்டது. முதலில் நேர் செங்குத்தாக எழும்பிய ராக்கெட், அடுத்துச் செல்ல வேண்டிய வீதியின் திசை நோக்கி 45 டிகிரிக் கோணத்தில், 35 மைல் உயரத்தில் திரும்பியது. அப்போது முதல் அடுக்கு ராக்கெட் பணி முடிந்து அற்றுவிடப் பட்டது. உடனே இரண்டாவது அடுக்கு ராக்கெட் சுடப்பட்டு, 140 மைல் உயரத்தை எட்டி, பின்பு 300 மைல் உயரத்தில் நிலை பெற்றது. அச்சமயம் மூன்றவது அடுக்கு தனது நீண்ட அச்சில் நிமிடத்துக்கு 100-200 சுற்றுக்கள் சுற்றித், துணைக்கோளின் மிதப்பு நிலைச் [Gyroscopic Stability] சோதிக்கப் பட்டது. அதற்குப் பின் இரண்டாம் அடுக்கு ராக்கெட் அற்று விழுந்தது. இறுதி அடுக்கு ராக்கெட் அப்போது சுடப்பட்டு 400 மைல் உயரத்தை அடைந்து, வான்கார்டு துணைக் கோள் பிரிந்து, ராக்கெட் அற்று விடப்பட்டது. ஏவப்பட்டு 10 நிமிடங்களுக்குள் அத்துணை இயக்கங்களும் நிகழ்ந்து, துணைக்கோள் ஏவு தளத்திலிருந்து சுமார் 1500 மைல் தூரத்தில் பூமியைச் சுற்ற ஆரம்பித்தது.

தொலைத் தொடர்புகள் செய்யும் செயற்கைக் கோள்கள்

ஏறக்குறைய எல்லாத் துணைக் கோள்களும் ஒருவிதத் தொடர்புக் கருவியைக் கொண்டுள்ளது. 1962 ஆம் ஆண்டு நாசா முதன் முதலில் டெல்ஸ்டார் [AT&T Telstar-1] துணைக் கோளை ஏவி, தொலைப் பேச்சு, தொலைக் காட்சித் [Telephone, Television] தொழில்களை மேம்படுத்தியது. அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் 1963 இல் சின்காம் [Syncom-3] தொலைத் தொடர்பு துணைக்கோளை, பூமத்திய ரேகைக்கு மேலாக 22,000 மைல் உயரத்தில் பூகோள இணைவுச் சுழல்வீதியில் [Geostationary Orbit] ஏவினர். அந்தச் சுழல்வீதியில் துணைக்கோள் பூமியோடு இணைந்து சுற்றுவதால், அது பூமத்திய ரேகையில் குறிப்பிட்ட ஒரே இடத்தின் மேல் எப்போதும் பறக்கிறது. 1997 புள்ளி விபரப்படி 300 மேற்பட்ட தொலைத் தொடர்புத் துணைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன. இப்போது பல செயற்கைக் கோள்கள் பூகோள இணைவுச் சுழல்வீதியில் சுற்றிக் கொண்டு, தொலை ஒலி, தொலை ஒளிக்காட்சி, புள்ளி விபரப் போக்கு [Voice, Television, Data Transmission] போன்ற தொலைத் தொடர்களை நிகழ்த்தி வருகின்றன. 1964 இல் ஆரம்பித்த இண்டல்ஸாட் [IntelSat] துணைக்கோள் தொலைத் தொடர்பு, 1969 இல் முதல் மனிதன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் பதித்த போது, அரை பில்லியன் மக்கள் கண்டு களிக்க உதவியது!

இங்கிலாந்து லண்டனுக்குப் தொலை பேசியில் பேசும் போதோ, அன்றி மாஸ்கோவுக்குத் தொலைத் தகவல் [Telex] அனுப்பும் போதோ, அல்லது ஜப்பானுக்கு மின்கணனி மூலம் புள்ளி விபரம் செலுத்தும் போதோ, அவற்றில் மூன்றில் இரண்டு தொடர்புகள் துணைக்கோள் இண்டல்ஸாட் [International Telecommunications Satellite, IntelSat] மூலமாகத்தான் செல்கின்றன. மூன்றில் ஒரு பகுதி மட்டும், கடல் தளத்தில் மலைப் பாம்பு போல் கிடத்தப் பட்ட கேபிள் [Cable] மூலமாகப் போகும். இண்டல்ஸாட்டின் 15 துணைக்கோள்கள், 109 உலக நேச நாடுகளை இணைத்துத், தமக்குள் ஒளிவேகத்தில் [வினாடிக்கு 186,000 மைல்] தகவலை அனுப்பியும், பெற்றும் வருகின்றன. 1986 இல் அந்த நாடுகள் அடுத்து அனுப்பிய இண்டல்ஸாட்-6, 22,300 மைல் உயரத்தில் பூகோள இணைவுச் சுழல்வீதியில் சுற்றி வருகிறது. 39 அடி நீளம், 12 அடி அகண்டு, சுமார் 2 டன் எடையுள்ள இண்டல்ஸாட்-6, குறைந்தது 30,000 தொலைப்பேசி அழைப்புக்களைக் கையாள முடியும்.

வாகனப் போக்கு வரத்துக்கு வழிகாட்டும் செயற்கைக் கோள்கள்

வழி காட்டும் செயற்கைக் கோள்கள் [Navigational Satellites] ஆகாய விமானங்கள், கப்பல்கள் போன்ற வாகனங்கள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க உதவுகின்றன. அதற்கு வாகனங்கள் ஒரு தனிப்பட்ட வானலை அனுப்பி, வானலை இழுப்பி [Radio Transmitter, Radio Receiver] மின்னியல் சாதனங்களைப் பெற்றிருக்க வேண்டும். 1960 இல் அமெரிக்கக் கடற்படை தனது முதல் வழிகாட்டிக் கோளை ஏவியது. அமெரிக்க விமானப்படை நவ்ஸ்டார் [NAVSTAR] என்னும் பூகோள இடங்காட்டி ஏற்பாட்டை [Global Positioning System, G.P.S] 11,000 மைல் உயரத்தில் 28 செயற்கைத் துணைக் கோள்களின் மூலமாய் இயக்கி வருகிறது. அதன் மொத்த எடை 1900 பவுண்டு. இறக்கை [Solar Cells] 17 அடி அகண்டது. நவ்ஸ்டார் 12 மணிக்கு ஒருமுறைப் பூமியைச் சுற்றித் தூரத்தை ஒத்து அரை அங்குலம் முதல் 300 அடி வரைத் துள்ளியமாய் இருப்பிடத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அதைப் போன்று ரஷ்யாவும் 24 செயற்கைக் கோள்கள் இயங்கும் குளோநஸ் [GLONASS] என்னும் பூகோளத் துணைக்கோள் வழிகாட்டி ஏற்பாட்டை [Global Orbiting Navigation Satellite System] உபயோகித்து வருகிறது. ஈரோப்பியன் அண்டவெளி ஆணையகம் [European Space Agency] 2002 ஆம் ஆண்டில் தனது துணைக் கோள் வழிகாட்டி ஏற்பாட்டைத் துவங்கத் திட்ட மிட்டுள்ளது.

காலநிலையைக் கண்காணிக்கும் செயற்கைக் கோள்கள்

இரு தரப்பு உயரங்களில் துணைக்கோள்கள் காலநிலையைக் கண்காணிக்கின்றன. ஒன்று பூமியின் துருவங்கள் மேல் சுற்றும், குறு உயரத் [300-600 மைல்] துருவத் துணைக்கோள். அடுத்து பூமியுடன் இணைந்து சுற்றும் வெகு உயரத் [22,000 மைல்] துணைக்கோள். அமெரிக்கா 1960 ஏப்ரல் முதல் தேதி தனது முதல் காலநிலைக் கோள் டைரஸ் என்னும் தொலைக்காட்சிக் கீழ்ச்சிவப்பு ஆய்வுத் துணைக் கோளை [TIROS-1, Television Infrared Observation Satellite] ஏவியது. டைரஸ் பூகோள உஷ்ண மாறுதல், மேக அடர்த்தி, ஈரச் சமப்பாடு [Moisture Distribution], பனிக் போர்வை [Ice Cover], தரை ஈரடிப்பு [Soil Moisture] போன்ற தகவல்களை அனுப்பி யுள்ளது. அது 23,000 மேற்பட்ட காலநிலைப் படங்களை அனுப்பி யுள்ளது! நாசா கோஸ் [GOES] என்னும் பூகோள இணைவுச் சுழல்வீதி சூழகத் துணைக்கோளை [Geostationary Orbiting Environmental Satellite] ஏவிப் புயல், சூறாவளி [Cyclone], கடற்காற்று பேய்மழைக் கொந்தளிப்பு [Hurricane] போன்ற அபாய முன்னறிவிப்புகளை ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு முன்பே அனுப்பி வருகிறது. ஈரோப்பியன் காலநிலை முன்னறிவிப்புக் கோள் மெட்டியோசாட் [Meteosat-3], அமெரிக்காவின் கோஸ் துணைக் கோள் பணிக்கு மிகவும் உதவி செய்தது. அமெரிக்காவின் தேசீயக் கடல், சூழ்நிலை ஆணையகம் [National Oceanic & Atmospheric Administration] மூன்று செயற்கைக் கோள்களை இயக்கி, நெடுங்கால முன்னறிவிப்பைச் [Long Term Forecast] செய்து வருகிறது. அம்மூன்று கோள்களும் பூமியின் துருவச் சுழல்வீதியில், குறைந்த உயரத்தில் சுற்றி வருபவை. 22,000 மைல் உயரத்திலிருந்து கோஸ் செயற்கைக் கோள் வட அமெரிக்கா தென்அமெரிக்கா தெரியும்படி, பூகோள உருண்டையின் படத்தை எடுத்திருக்கிறது.

ராணுவப் பணிகள் புரியும் செயற்கைக் கோள்கள்

ராணுவச் செயற்கைக் கோள்கள் பிற கோள்களைப் போன்று தோன்றினாலும், பணி புரிவதில் வேறுபாடு கொண்டவை. அவை அனுப்பும் சொற்கள் குறிமொழிச் [Code] சொற்கள். அவற்றை வாங்கி விளக்கம் தரத் தனியான வானலைக் கருவிகள் தேவைப்படும். அவை படம் எடுக்கும் காமிராக்கள் உயர்ந்த கூர்மை [High Resolution Camera] யுள்ளவை. அமெரிக்கப் படைத்துறைப் பலவிதச் செயற்கைத் துணைகோளை இயக்கி வருகிறது. ராணுவத் துணைக்கோள் தொடர்பு ஏற்பாடு [The Defense Satellite Communication System] பயன்படுத்தும் 5 விண்வெளிச் சிமிழ்கள் [Spacecrafts] பூமியின் இணைவுச் சுழல் வீதியில் சுற்றி வந்து தொலை ஒலி, தொலை ஒளிக்காட்சி, புள்ளி விவரப் போக்கு ஆகியவற்றை, ராணுவத் தளங்களுடன் பரிமாறிக் கொள்கின்றன. ராணுவத் துணைத் திட்டம் [The Defense Support Program] உலகில் எங்காவது ஏவுகணைகள் ஏவப்படும் [Missile Launches] போது முன் எச்சரிகை செய்கின்றது. 1991 இல் ஈராக்குடன் நேச நாடுகள் யுத்தம் புரிந்த போது [Persian Gulf War], ஈராக்கி ஸ்கட் ஏவுகணைகள் [Iraqi Scud Missiles] ஏவப்பட்ட நேரத்தில் அவை முன் எச்சரிக்கை செய்தன.

விஞ்ஞான ஆராய்ச்சி செய்யும் செயற்கைக் கோள்கள்

பூமியைச் சுற்றிவரும் துணைக்கோள் பூகோளத் தரைப்படத்தைத் தெளிவாகக் காட்டும். மேலும் பூமியின் பள்ளத் தாக்குகள், வானுயர்ந்த மலைகள், கொந்தளிக்கும் கடல்கள், நெளிந்து செல்லும் ஆறுகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்யவும் உதவும். விஞ்ஞானிகள் பரிதியைப் பற்றி அறியவும், நிலவை பற்றித் தெரியவும், பிற அண்டங்கள் அவற்றின் சந்திரன்களைப் பற்றி ஆராயவும், வால்மீன்கள், பல்வேறு விண்மீன்கள், பால்மய ஒளிநிறக் கதிர்மீன்கள் [Milky Way Galaxies] போன்றவற்றைக் கண்டு பிடிக்கவும் செயற்கைக் கோள்கள் பயன் படுகின்றன. விண்வெளியில் 1990 ஆம் ஆண்டு முதல் சுற்றி வரும் ஹப்பிள் தொலைநோக்கி [Hubble Telescope], பூமியின் துணைக்கோளாய்ப் பவனி வந்து, அண்டவெளியின் ஜன்னலாகப், பிரபஞ்சத்தின் எழில்மிகு ஒளிமீன்களை நமக்குக் காட்டி வருகிறது. சில செயற்கைத் துணைக் கோள்கள் பிற அண்டங்களைச் சுற்றி அவற்றை ஆராய்ந்து வருகின்றன. விண் ஆய்வுச்சிமிழ் [Space Probe] யுலிஸிஸ் [Ulysses] பரிதியைச் சுற்றி வந்து அதன் துருவப் பாகங்ளைப் பற்றி அறிந்து வருகிறது. 1995 ஆண்டு முதல் காலிலியோ விண்சிமிழ் [Galileo Spacecraft] பூதக்கோள் வியாழனைச் [Giant Jupitar] சுற்றி, அதைப் பற்றியும், அதன் சந்திரன்களைப் பற்றியும் விபரங்களை அறிந்து, பல்லாண்டுகள் தகவல் அனுப்பி வந்தது.

முதல் மனிதரற்ற துணைக்கோள், சந்திரா எக்ஸ்ரே நோக்ககம் [Chandra X-Ray Observatory] பூமியின் சுழல்வீதில் சுற்றிவர ஏவப்பட்டது. முற்போக்கு நுணுக்க முடைய அத்துணைக்கோள் இந்திய அமெரிக்க விண்வெளி விஞ்ஞான மேதை [Indo-American Astrophysicist] சந்திர சேகர் பெயரைக் கொண்டுள்ளது.

அக்கோளில் ஒருங்கிணைக்கப் பட்ட பிம்ப ஆடிகள் [Nested Array of Mirrors], எக்ஸ்ரே கதிர்களை குவிமையப் படுத்தி மிகக் கூர்மையான பிம்பங்களை உருவாக்கும். அல்லது எக்ஸ்ரே கதிர்கள் எழுப்பும் மூலப் பொருட்களின் ஒளிநிறப் பட்டையைத் [Spectrum] தெளிவாகக் காட்டும். அது விண்வெளியில் ஒரு நண்டு நிபுளாவைக் [Crab Nebula] கண்டு படமெடுத்துள்ளது.

இவ்வாறு பல துறைகளில் நுணுக்கமும், வளர்ச்சியும், பெருக்கமும் பெற்றுள்ள இருபதாம் நூற்றாண்டின் பின் காலத்தைத், தொழிற் துறையின் இரண்டாவது பொற்காலம் என்று உறுதியாகச் சொல்லலாம்!

*****************************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா