செஞ்சுடரில் பூனைக் கண்கள்

This entry is part of 46 in the series 20090108_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எரியும் செஞ்சுடரின்
கடைசி ஒளித் துளியில்
உன் முகம் மாறுபட்டு பிரதிபலித்தது.
ஒரு சாட்சியாய் சயனித்திருந்த
இரவின் காற்றை தொட்டுப்பேசி
மெளனம் மிதந்து செல்ல
பதுங்குகுழி சாம்பல் மேட்டில்
தன்னந்தனியாய்
சுடரும் பூனைக் கண்கள்
அழிந்துபோன உடல்களை மண்தின்ன
உருவங்கள் சிதிலமடைய
ஞாபகங்கள் ஆன்மாக்களாய் விரியும்
ஒவ்வொரு செடியின் இலையாகவும் பூவாகவும்
ஒன்றுகூடி உரையாடும் தருணங்களில்
அமைதியிழக்காத இதயம்
இழப்பின் துயர் பெருக சிந்தும்
ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும்
தனக்கான வரலாற்றுக் குறிப்பொன்றை
எழுதத் துவங்கும்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation