ஜிகாதின் சொற்கள்

This entry is part of 31 in the series 20080807_Issue

ஹெச்.ஜி.ரசூல்கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த
பரிபூரணத்தின் பேரழகு
உருண்டு திரண்டு வளர்ந்தும்
கீற்றாய்
சிறுகோடாய் தேய்ந்தும்
காலம் பற்றிய அறிக்கையை வெளியிடும்

பிறையின் கையெழுத்தை
அதிசயித்துப் பார்க்கும் கண்கள்.
ஹவுளில் நிரம்பிய கண்ணீரில்
ஒளுவெடுத்து புனிதப்படும் உள்ளங்கைகளும்
நெடுவெளி மணற்காட்டில்
தய்யமும் செய்யும் விரல்களும்
அறிந்திராத் தொரு தீண்டல்.

யுத்த இருளின் புகைமூட்டத்தில்
எதிரே கண்டால் வெட்டச் சொன்ன
வசனங்களின் புனித வசீகரம்
எதிரிகளின் ஆயுதங்களாய் உருமாறும்.
போதையூட்டப்பட்ட சொற்கள்
பைஅத்திற்கு தயார்படுத்தப் படுகின்றன.
அதன் அடுத்தடுத்தப் பக்கங்களில்
தினந்தோறும் கவனிப்பாரற்று
ஒலித்துக் கொண்டிருக்கும்
லக்கும் தீனுக்கும் வலியதீன்
மறைக்கப்பட்ட வரிகளின் இடைவெளிகளினூடே
அர்ஷின் முத்திரை ஒன்று வழிதவறிப் போனது.
—————————————
ஜிகாத் – புனிதப்போர்
பைஅத் – ரகசிய வாக்குமூலம்
லக்கும்தீனுக்கும் வலியதீன் -உங்கள்மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு
அர்ஷ் – சுவர்க்கம்


mylanchirazool@yahoo.co.in

Series Navigation