பூம்பூம் காளை!!

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

கவியோகி வேதம்


கதவு திறந்ததும் பூம்பூம் காளைஎன்
..கண்ணையும் கருத்தையும் கவர்கிறது!–திருமணப்
புதிதில் ‘அவளுக்கு’ எதற்கும்-ஆமாம்
…போட்ட நினைவைக் கொணர்கிறது!
..
கதவின் அருகில் நிற்கும் காளையோ
..கடமையை “ஆட்டிச்’ செய்கிறது!-கண்ணில்
பதிந்த காட்சியில் என்றன் பாட்டோ
..பந்தல் விரித்து மகிழ்கிறது!
..
என்ன அழகுஅந்த ‘ஆமாம்’ மாடு!
…எத்தனை அரியஅலங் கரிப்பு!-ஆகா!
மின்னல் சுற்றிடும் முகில்போல் கொம்பை
..மேவிடும் மணிகள் எழில்தொகுப்பு!
..
மணிகளின் அழகு போதா தென்றா-(கொம்பில்)
..மயில்பீ-லிகளின் அணிவகுப்பு?-ஓ!
பணிகள் இன்னும் முடியா ததுவாய்
..பதக்கம்,ஜிகினா ஜிலுஜிலுப்பு!
..
நீலம்,சிவப்பில் பஞ்சுக் குஞ்சம்
..நிற்கும்அக் ‘குட்டைக்’ கழகுதரும்!-அது
காலம் செடிகளில் போடும் பூக்கள்
..கோலமாய்க் கற்பனைக் காட்சிதரும்!
..
இத்தனை அழகும் போதா தென்றா
..எழிலாய் நெற்றியில் நாமங்கள்?-ஓ!அவை
அத்தனை முயன்றும்,வயிறே நிரம்பா-(இரு)
..அவல ஏழைகளின் ரூபங்கள்!
*******************************

(எனக்குத் திருமணம் ஆகி ஆறு வருடம் கழித்து மனைவியுடன் சொந்த(கிராமம்)
ஊர் சென்றேன்..பொல்லென கிழக்குவெளுத்த போது.ஒரு நாள்.
கதவு திறக்கிறேன்.நகரத்தில் காணக் கிட்டாத அற்புதக் காட்சி..!!
கவிதையும் பிறந்தாச்சு!)

(கவியோகி வேதம்)

kaviyogi.vedham@gmail.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்