பெரியபுராணம் – 125 – 37. தண்டி அடிகள் நாயனார் புராணம்

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

பா. சத்தியமோகன்


3590.

தண்டி அடிகள் எனும் பெயர் உடையவர்

திருவாரூரில் பிறக்கும் பெருமைமிகு தவத்தை

முன்பே செய்தவர்

தேவர்கள் –

வேத முழக்கங்கள் செய்ய

சிறந்த ஆடல் புரியும் பொன்போன்ற

கூத்தரின் திருவடிகளை மனதில் கொண்டவர்

அதைக்காணும் அகநோக்கம் தவிர

வெளிப்பார்வையால் உலகை நோக்கும் உணர்வு

வேண்டாமென ஒழித்தவர்போல

பிறவியிலேயே

கண்பார்வை இழந்து பிறந்தவர்

3591.

“பார்ப்பதற்கு அரிதான கண்களால்

காணப்பெற வேண்டியது

சிவபெருமானின் மெய்த்தொண்டே ஆகும்” என்கிற

கருத்து உடையவர் தண்டி அடிகள்

போற்றும் செல்வமாகிய திருவாரூரில் வீற்றிருக்கும்

தியாகப் பெருமானின் திருவடிகளையே

அன்பினால் பரவி வழிபட்டார்

தொலைவிலிருக்கும் தேவர்களாலும்

அறியமுடியாத திருத்தொண்டு புரிந்து

சிறந்து விளங்கினார்.

3592.

மலர்கள் பொருந்திய சடையுடைய இறைவர்

மகிழ்ந்து

அருள் செல்வம் வழங்கும் பூங்கோயிலில்

தேவாசிரிய மண்டபத்தை முதலில் வணங்கினார்

செம்மை நெறியில் செல்கின்ற

நமசிவாய எனும் நற்பதத்தையே

மறையாத அன்புடன் ஓதினார்.

ஒரு நாள் போல பலகாலமும்

இறைவனை வணங்கி வரும் நாளில் –

3593.

சிவந்த கண்கள் உடைய காளையினை உடைய

இறைவரது திருக்கோயிலின் மேற்குப்பக்கம்

கமலாலயம் என்ற தீர்த்தக் குளத்தின்

பக்கங்கள் எங்கும்

அமணர்களின் பாழிகளாய் ஆக்கித்

தூர்ந்து போயிருந்தது

குறைபாடு அடைந்திருந்தது.

அந்நிலைமை அறிந்து

தண்டி நாயனார் அன்பு கொண்டார்

“இங்கு இக்குளம்

நீர் பெருகுமாறு நான் தோண்டிட வேண்டும்” என

முடிவு செய்தார் உறுதி கொண்டார்.

3594.

தோண்ட வேண்டிய குளத்துக்கான

குழியின் ஓரத்தில் ஒரு கோல் நட்டார்

அதிலிருந்து ஒரு கயிறு கட்டி

மறுமுனையை

குளத்தின் கரையில்

தாழ்ந்த உயரத்தில்

கட்டப்பட்ட தறியுடன் இணைத்தார்

இருமுனைகளை இணைக்கும் கயிற்றைத்

தொட்டுத் தடவிக் கொண்டே

வழி தவறாமல் இறங்கி வந்தார்.

இப்படியாக

இடைவிடாத முயற்சியுடன்

மண்ணை வாரி வாரி மேலே கொட்டினார்

இச்செயலைச் செய்யும்போது

ஐந்தெழுத்தை

ஓயாமல் ஓதிக் கொண்டே செய்தார்.

3595.

நல்தொண்டராகிய தண்டி அடிகள்

உள்ளத்தில் விருப்பத்துடன்

அண்ணலாகிய இறைவரின் தீர்த்தக் குளத்தை

ஈடுபாட்டுடன் தொண்டு செய்வதை

சமணர்களால் பொறுக்க முடியவில்லை

அவரிடம் வந்து

“மண்ணிலும் கல்லிலும் இருக்கும் பிராணிகளை

வீணாய் வருத்த வேண்டாம்” என்று உரைத்தனர்.

3596.

அழுக்கு சேர்ந்த

முடை நாற்றம் உடைய உடல் கொண்ட சமணர்கள்

சொன்னதைக் கேட்டு

ஒளிபெருகும் திருத்தொண்டரான தண்டி அடிகள்

இவ்வாறு எதிர்மொழி கூறினார்;-

“மெய்யான திரு இல்லாதவர்களே கேட்பீராக –

பூசும் திருநீற்றையே

சாந்தமென அணிந்த சிவபெருமானுக்கு உரிய

திருப்பணிகள் யாவும்

குற்றமற்றதே ஆகும்”எனும் உண்மை

உமக்குத் தெரிய வருமோ ?” என்றார்

3597.

எல்லையற்ற அறிவுடைய தண்டிஅடிகள் கூறியதும்

அறிவற்ற சமணர்கள் இவ்வாறு கூறினர்;-

“சிந்தித்து நாங்கள் கூறிய அறத்தைக்

கேட்காது போனாய் ;

நீ கண் இழந்ததுடன்

செவியும் இழந்து விட்டாயோ” என்றனர்

“மந்த உணர்வும் விழிக்குருடும்

கேளாத செவிகளும்

இந்த உலகில் உமக்கே உள்ளன” என்று

பதில்கூறிய தண்டி அடிகள்

மேலும் சொல்லியதாவது:-

3598.

“மேருமலையை வில்லாக வளைத்து

மூன்று புரங்களையும் எரித்த இறைவரின்

மணமுடைய தாமரைகள் போன்ற

திருவடிகள் தவிர

வேறு ஒன்றையும் நான் பார்க்கமாட்டேன்

அத்தன்மையை அறிய

நீங்கள் யார்?” என்று கூறிவிட்டு

“நில்லாத நிலை உடையவர்களே

உணர்விழந்து

உங்கள் கண்கள் குருடாகி

என்கண்கள் உலகெலாம் பார்க்கும்படி

கண் பார்வை நான் பெற்றுவிட்டால்

நீங்கள் என்ன செய்வீர்கள்?” என உரைத்தார்.

3599.

அவர் கூறியதைக் கேட்ட சமணர்கள்

“உன் தெய்வத்தின் அருளால்

நீ கண் பார்வை பெற்றாயெனில்

அதன் பின்னும்

இவ்வூரில் இருக்க மாட்டோம்” எனக் கூறினர்

பிறகு –

தலை முடி பறிக்கும் இயல்புடைய அவர்கள்

கரிய மரத்துண்டு உருட்டும் கைகளால்

தண்டி அடிகளின் கூடையைப் பிடுங்கினர்

அவர் நட்டிருந்த தறியையும் பறித்தனர்.

3600.

கொடிய செயல் உடைய சமணர்களின்

செய்கையினால் சினம் கொண்டார் தண்டி அடிகள்

நஞ்சுடைய கண்டம் உடைய இறைவரின்

அழகிய பூங்கோயில் வாசல் முன்பு வந்து

“ஐயனே

இன்று என்னை அவர்கள்

அவமானம் செய்ததால்

நான் மனம் நைந்து வருந்துகிறேன்

இது தீர வேண்டும்

அடியேனுக்கு அருள வேண்டும்”

துதித்தபடியே நிலத்தில் வீழ்ந்தார்.

3601.

“இந்தக்குறை தீராதோ” என

வேண்டி வணங்கினார் திருத்தொண்டர்

விண்ணப்பம் செய்தார் தொழுதார்

பிறகு

தம் திருமடத்தில் புகுந்தார்

குளம் தூய்மை செய்யும் திருப்பணி

செய்ய இயலாமல் தடுக்கப்பட்டதால் அழுதார்

அழுதபடியே உறக்கம் கொண்டார்

அகில உலகங்களையும் முழுதும் காக்கின்ற

முதல்வனாராகிய சிவபெருமான்

தண்டியடிகள் முன்பு தோன்றி

அருள் செய்தார்.

3602.

“நீ நெஞ்சில் கொள்ளும் கவலையினை ஒழி

உன் கண்கள் விழித்து

அந்தச் சமணர்களின் கண்கள் மறைவதை

நீ நிச்சயம் காண்பாய்

அஞ்ச வேண்டாம்” என்று அருளினார்

நீங்கிப் புறப்பட்டார் இறைவர்

அன்று இரவே அரசன் கனவில் தோன்றி

அருள் செய்யத் தொடங்கினார்.

3603.

தொண்டர்களின் துன்பம் நீக்கும் தொழிலில்

மகிழ்பவரான சிவபெருமான்

மன்னன் மனதுள் கொள்ளுமாறு

“தண்டி நமக்காகக் குளம் தோண்டுவதை

பொறுக்கமுடியாத சமணர்கள்

அப்பணியைத் தடுத்து விட்டதால்

அவன் சினமாக உள்ளான்

அவனிடம் நீ சென்று

அவன் உட்கொண்ட கருத்தை

குறிப்பால் புரிந்து கொண்டு முடி” என்று

அருள் செய்தார்.

3604.

மன்னன் அக்கனவு கண்ட அக்கணமே

விழித்து உறக்கம் கலைந்தான்

மயிர்க்கூச்செறிந்தது மன்னனுக்கு;

அழகிய கொன்றை மலர் சூடிய

சிவபெருமானைத் துதித்தான்

பொழுது விடிந்தது

திருத்தொண்டரான தண்டி அடிகளை அடைந்தான்

தனக்கு

கனவில் நிகழ்ந்ததை மன்னன் கூறியதும்

அதைக்கேட்ட தண்டி அடிகள்

நிகழ்ந்ததை விளக்கிக் கூறினார்.

3605.

“மன்னா கேள்

நான்

இளமை பொருந்திய காளையை உடைய

சிவபெருமான் மகிழும்

குளத்தைத் தோண்டும்போது

சமணர்கள் அங்கு நெருங்கி வந்தனர்

“இது அறமல்ல” என்று பலவாறு சொல்லயும் கேளாமல்

கையால் தடவி வழி காண்பதற்காக

நான் நட்டிருந்த முளைக்கோல்களையும் பிடுங்கி எறிந்தனர்

வலிய வந்து துன்புறுத்துகின்றனர்

நான் வைத்திருந்த

கல் கொட்டும் கூடையினையும் பறித்துவிட்டனர்”

என இயம்பினார்.

3606.

“குருடன் ஆகிய உனக்கு

அறிவும் இல்லை” என்று சமணர்கள் கூறினர்

அதற்கு நான் –

“கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்” என்றேன்

அதற்கு அவர்கள் –

“அதன்பின் இந்த ஊரில் இருக்கமாட்டோம்” என்றனர்

இதற்கு மேல்

இதன் உண்மை என்னவென நீயே கண்டு

வழக்கை முடிப்பாயாக”

என்று மொழிந்தார்தண்டி அடிகள்.

3607.

உடனே மன்னன்

சமணர்களை அங்கு அழைத்தான்

விசாரித்தான் கேட்டான்

அவர்களும் அதனை ஒத்துக் கொண்டனர்

பெரும் தொண்டராகிய தண்டி அடிகள் முன்னே நடந்து செல்ல

மன்னன் பின்னே நடந்தான்

கமலாலயக் குளத்தின் அருகில் நின்று

ஆற்றலுடைய தண்டிஅடிகளின் முகம் பார்த்து

“பெருகும் தவத்தினை உடையவரே

திருவருளால் நீவீர்

கண்பெறும் நிலையைக் காட்டுவீராக” என்று கூறியதும் —

3608.

“உண்மையிலேயே

சிவபெருமானுக்கு நான் அடிமை என்றால்

இம்மன்னன் எதிரில்

இன்று என் கண்கள் பார்வை பெற

திருவாரூரில் இருக்கின்ற இந்தச் சமணர்கள்

தமது கண்களை இழப்பார்கள்”

ஆராய்ந்து

முடிந்த முடிவான பொருள் சிவபதமே ஆகும் என்று

ஐந்தெழுத்தினை “சிவாயநம” என்று எடுத்து ஓதினார்

நீர் நிலையினுள் முழுகினார்.

3609.

இறை அருளைத் தொழுத தொண்டர்

தூயமலர் போன்ற கண்களில்

ஒளி பெற்று எழுந்தார்

சமணர்களோ

விழித்திருந்தும் கண்பார்வை இழந்து

தடுமாறுவதைக் கண்டான் மன்னன்

“தீமை செய்த சமண சமயம் கெட்டது” என்றான்

மன்னன் மேலும் கூறத் தொடங்கியதாவது :-

3610.

“தண்டி அடிகளுடன் சபதம் செய்து

தோற்றுவிட்ட சமணர்களாகிய கீழ்மக்கள்

தேவர்கள் போற்றும் திருவாரூர் விட்டு அகலும்படி

கண்ட இடத்தில்

எங்கும் காணாதபடி துரத்தி விடுக”

என்று மன்னன் கூறியதும்

வீரர்கள் விரட்டினர் சாடினர்

கண் ஒளி இழந்த அவர்கள்

மனம் கலங்கி —

3611.

சிலர் குழியில் விழுந்தனர்

சிலர் நிலை தளர்ந்தனர்

“ஊன்று கோலும் இல்லையே” என்றனர் சிலர்

“இது வழி” என நினைத்து

சிலர் பதரில் விழுந்தனர்

“நாம் செத்தோம்” என்பார் சிலர்

“அழியும் பொருளைக் கைக்கொண்டோமே ! ” என்பார் சிலர்

“அரசனுக்கு இது பழி ஆகுமோ ?” என்றனர் சிலர்

“ஆகவே ஆகாது” என்றனர் சிலர்.

3612.

உடுத்த பாய்களையும்

மயிர் பறித்த தலை உடைய சமணர்கள் –

கையில் ஏந்திய மயில்பீலிக் கற்றையைக்

காணாமல் நகர்ந்தனர்

சொல்லாமல் மயங்கினர்

கால்களோடு கைகளும் முறியும்படி

கல்லின் மீது இடறி விழுந்தனர்

மிக நெருக்கமாகச் சென்று

தங்களுக்குள் தாங்களே முட்டிக் கொண்டனர்

மனம் அழிந்தனர்

வழிகள் அறியாமல் தடுமாறினர்.

3613

இப்படிப்பட்ட விதமாக

திருவாரூரில்

சமணர்களின் கலக்கத்தைக் கண்டான் மன்னன்

சபதத்தில் அவர்கள்சம்மதித்தபடி

அவர்களை ஓடும்படி துரத்தினான்

சமணர்களின் பாழிகளையும் பள்ளிகளையும் இடித்தான்

குளத்தைச் சூழ்ந்த கரையை

தகுந்த விதத்தில் அகலமாக்கினான்

மிகவும் மகிழ்ந்த அரசன்

தண்டி அடிகளை வந்து வணங்கினான்.

3614.

மன்னன் வணங்கிப் புறப்பட்ட பிறகு

திருமாலும் நான்முகனும் அறிய இயலாத

சிவபெருமானின் பொற்பாதங்களை வணங்கினார்

தாம் துவக்கிய திருக்குளப்பணியை

நிறைவு செய்த

ஐந்தெழுத்தை ஓதினார்

அதே நெறியில் நின்று

ஒளி மின்னும் சடையுடைய இறைவரின்

திருவடி நிழலில் சிறப்புடன் பொருந்தினார்.

3615.

கண்ணின் மணியான ஒளி இன்றி

கயிற்றினைத் தடவி குளத்தினைத் தோண்டிய

அளவிலாத பெருமை உடைய

திருத்தொண்டர் தண்டி அடிகளின் பாதம் வணங்கினேன்

இடையூறு நீங்கினேன்

வான் உலகில் வாழும் தேவர்களின் வேண்டுதலால்

மூன்று புரங்களும் எரித்த இறைவரின்

திருவேற்காட்டூரில் தோன்றிய

பெரும்புகழ் உடைய திருத்தொண்டரான

மூர்க்க நாயனாரின் செய்கையை

இன் உரைக்கின்றேன்.

(தண்டி அடிகள் நாயனார் புராணம் முற்றியது)

38. மூர்க்க நாயனார் புராணம்

“நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்”

– திருத்தொண்டத் தொகை

3616.

நிலை பெற்றுப் பெருகுவது மிகப்பெரிய தொண்டை நாடு

அதன் வயல்களில் முத்துக்கள் சேர்க்கும்படி

அலைகள்வீசும் பாலி ஆறு

பாலி ஆற்றின் நீரில் வடகரையில் பெண் அன்னங்கள்

தாமரை முதலான பூக்களில் குடைந்து விளையாட

விழா காலத்தில் ஆடல் அரங்குகளில்

மின்னல் கொடி போன்ற பெண்களும்

துகில் கொடிகளும்

ஆடும் நாடு திருவேற்காடு ஆகும்.

3617.

செம்பொன்னால் ஆன மதிலை உடைய

திருவேற்காட்டில் விரும்பி எழுந்தருளிய

சிவந்த சடை உடைய இறைவருக்கு;

வானவர்களுக்கு அமுதம் அளித்து

நஞ்சினை அமுதமென உண்டவரான

சிவபெருமானுக்கு;

இவ்வுலகில் இப்பிறவியில்

வழிவழியாய் வரும் அடிமைத்திறத்தில்

மாறாத இயல்புடன் வருகின்ற பற்றுகொண்ட

வேளாளர் குலத்தில்

தலைமை நிலை பெற்றுள்ளார் மூர்க்க நாயனார்.

3618.

குற்றமில்லாத குலத்தில் பிறந்து வளர்ந்தார்

அறிவு தெரிந்த நாள் முதலாக

“ஆதி முதல்வரான சிவபெருமானின்

திருநீற்றுச் சார்பே உண்மை” என்ற உணர்வுடன்

அடியார்களுக்கு உணவு ஆக்குவார்

அடியார்கள் உணவு உண்ட பின்பே

தாம் உண்ணவேண்டும் என்கிற

நியதியுடன் வாழ்ந்து வந்தார்.

3619.

தூய்மையான சோறு நெய்,

வெல்லம்

இனிய காய்கறிகள் என

இவற்றை ஏற்பாடு செய்வார்

பொருந்திய அடியார்களை உபசரிப்பார்

விருப்பமுடன் உணவு உண்ணச் செய்வார்

அடியவர்கள் வேண்டிடும் உதவியினையும்

அன்போடு செய்வார்

இத்தகைய பணியை நாள்தோறும் செய்து

இன்பம் அடைவார்.

3620.

இத்தகைய செயல்கள் செய்து வந்த நாளில்

அடியார்கள் அதிகமாகி உதவி பெற்றதால்

தமது உடமை முழுதும் இழந்து விட்டார்;

யாவும் தீர்ந்து போனது;

தன்னிடமிருந்த காணி நிலம்-

தன்னிடமிருந்த அடிமைகள்-

யாவும் விற்றார்;

என்றாலும்-

தொடர்ந்து அன்னம் அளித்து வந்தார்

அதில்

மகிழ்ச்சி மிகுந்த மனத்தராய் ஆனார்.

3621.

அடியார்களுக்கு உணவு செய்து அன்பு காட்ட

எவ்வித நிதி ஆதாரமும் இல்லாத நிலை தோன்றியது

வறுமை சேர்ந்தது

முன் நாளில் தாம் கற்றுக் கொண்ட

நன்மை அமைந்த சூதாட்டத்தினாலும்

பொருள் ஈட்ட வழியிலாமல் போனது.

3622.

காளையூர்தியில் ஏறி

ஐந்தெழுத்து கேட்டு அருள்புரிகின்ற

சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கிற

பல தலங்களுக்கும்

அன்பு பொருந்தச் சென்றார்

உருகும் உள்ளத்தோடு வணங்கினார்

தாம் கற்ற சூதினால்

ஈட்டும் பொருளினால்

அடியார்களுக்கு உணவிடும் பணி தொடர்ந்தார்

பகைவரின் திரிபுரங்களை எரித்த

வில்லினை உடைய

திருக்குடந்தை வந்தார்.

3623.

கரிய நிறம் பெற்று

அழகுடன் விளங்கும் கண்டம் உடைய

சிவபெருமானின் அடியவர்களுக்கு

இனிய அமுது அளிப்பதற்குரிய பொருள் ஈட்டுவதற்காக

புகழ் உடைய குடந்தையில்

பொது இடத்தில் உருளும் கருவியால் சூதாடுவார்

சூதில் உற்ற வெற்றியை

இறைவன் அருளாகவே எண்ணி

அடியவர்களுக்கு அமுது செய்விப்பார்

இன்பம் அடைவார்.

3624.

முதல் ஆட்டத்தில் திட்டமிட்டே தோற்பார்

முதல் பந்தயப்பணத்தை தந்தும்விடுவார்

பிறகு ஆடுவார்

பலமுறை வெல்வார்

பெரும் பொருள் சம்பாதிப்பார்

வஞ்சகச் சொற்களால்

பொருள் தர மறுப்பவர்களை

உடை வாளினால் குத்துவார்

நல்ல சூது ஆடும் இவர்

நானிலத்தில் “மூர்க்கர்” எனும் பெயர் பெற்றார்

3625.

சூதாட்டத்தில் வென்ற பொருளை

குற்றமிலாத நல் உணர்வுடன்

தீமை அகலும்படி

அப்பொருளை கையாலும் தொடாமல்

அமுதை ஆக்குபவரிடம் தருவார்

பெருவிருப்பத்துடன்

அடியவர்களை உண்ண வைத்து

கடைசி பந்தியில்

தானும் உண்பார்

இவ்வாறாக அத்தலத்தில் வாழும் நாளில் –

3626.

தலைவராகிய சிவபெருமானின் அடியவர்களுக்கு

நல் அமுதினை

நாள்தோறும் அன்புடன் தருவார்

திருவருளால்

குற்றங்கள் நீங்கப்பெற்றதால்

இந்த உலகை நீங்கினார்

பூத கணங்கள் சூழ்ந்து இசை பாட

ஆடும் சிவபெருமானின் உலகமான

சிவபுரம்சேர்ந்தார்

3627.

சூதாடுபவர்களை வெற்றிகண்டு

சூதாட்டத்தால் வந்த பொருள் அனைத்தையும்

கறைக்கண்டரான சிவபெருமானின் அடியவர்களுக்கு

திருவமுது செய்வதற்கென தந்ததால்

“நற்சூதர்” எனும் பெயர் பெற்ற

மூர்க்கரின் திருவடிகள் வணங்கி

வேத வாய்மை சிறப்புடைய

சோமாசி மாற நாயனாரின் திறம் சொல்லப்புகுவோம்

( மூர்க்க நாயனார் புராணம் முற்றிற்று )

–இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்