பதஞ்சலி சூத்திரங்கள்…..(3)

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

ருத்ரா



(30) வ்யாதி ஸ்த்யான ஸம்சய
ப்ரமாத
ஆலஸ்யா அவிரதி
பிராந்திதர்சன அலப்த்வ
பூமிகத்வ அநவஸ்திதத்வானி
சித்த வி§க்ஷபா:
தே அந்தராயா.

ஒன்றியத்துள்
ஒன்றவிடாமல்
தடுப்பவை எவை எவை?
நோய், உள்ளம் தொய்தல்,
ஐயங்கள்
மலைப்பு, சோம்பல்,
உறுதியோடு நோன்பு ஏற்க
இயலாமை
அதனால் புலன்களில்
முங்கிப்போகுதல்
உள்ளம் வெருண்டு தெளிவான
பார்வையின்றி
ஒரு புகை மூட்டத்தில்
முடங்குதல்
சமாதி எனும் ஒன்றியம்
உள்ளே பிடிபடாமல்
குழப்பத்தின்
புதைகுழியில்
புதைந்து போகுதல்.
ஆகாயத்தின்
எங்கோ ஒரு
உச்சியிலிருந்து
விழுந்து
கொண்டிருக்கிறோமே
என்ற உணர்வு கூட இன்றி
விழுந்து
கொண்டேயிருத்தல்..
உள்ளம் விரிந்து உடைந்து
வெற்றுச்சிந்தனைகள்
வேரூடி விழுதூன்றி
கற்பனையின்
சோப்புக்குமிழிகள்
ஆயிரம்
ஊதி ஊதி
கனவுகள் வீங்கிய
தேக்கத்தில் கிடப்பதும்
இந்த தேகத்துள்
கம்பி யெண்ணிக்கொண்டு
சிறைப்படாமல்
சிறைப்பட்டுக்கிடக்கும்
உயிர்ப்பொருளே!
உயர் பொருள் நோக்கி
உறு பொருள் தேடி
எல்லாம் கரை.
உருகிக் கரைந்து போ.
எல்லாம் கலை.
வேடங்களின் சிதிலங்களில்
வேதம் படிக்காதே.
கண்ணாடி உடைந்து
தூளாகிய போதும்
பிம்பங்கள்
தூளாவதில்லை.
உன் உடம்பு வெறுங்கூடு
அல்ல.
அதனுள்
படபடக்கும் உயிர்
பற்றியெரியும்
நெருப்பின் இறக்கைகளில்
சாம்பல் ஆகாத
ஒரு பறவை உண்டு.
அது உன் மீது
முட்டையிட்டு குஞ்சு
பொறிக்கட்டும்.
பிரபஞ்சம் எனும்
ஞானப்பிழம்பின்
ஆழ்நிலை தியானத்துள்
அமிழ்ந்து போ.

(31) துக்க தௌர்மனஸ்ய அங்கமே
ஜயத்வ: ச்வாஸ ப்ரச்வாஸா
வி§க்ஷப ஸஹபுவ:

அடுத்து துன்பங்களின்
அணிவகுப்பு.
துயரங்களின்
படையெடுப்பு.
உள்ளத்தினுள் உடலும்
உடலினுள் உள்ளமும்
ஓடிப்பிடித்து
கண்ணாம்பூச்சி ஆடியதில்
மூச்சிரைத்து
தடுமாறுகின்றாய்.
முழிபிதுங்கி
வலுவிழந்தாய்.
கவலைகளின்
கனமான சம்மட்டிகள் முன்
உன் மயிற்பீலிகளெல்லாம்
தோற்றுப்போய் விட்டன.
வலிப்பிரளயங்கள்.
உன்னை கந்தல்கள்
ஆக்குகின்றன.
தியானத்தில் போய்
உட்கார்.
வலி உள்ளத்துக்கா?
வலி உடலுக்கா?
எல்லாம் கேள்விகளாக
மாற்றப்படும்.
ஐநூறு ரூபாய்க்கு
சில்லறைகளாய்
மாற்றிக்கொள்வது போல்
உனக்கு சொந்தமாக
இருக்கும் வரை
கேள்வி-விடைகளின்
சில்லறைச்சத்தங்களே
உனது கனக தாரா
ஸ்தோத்திரம்.
உன் இதய உண்டியல்
அந்த இரைச்சல்களில்
குலுக்கப்படட்டும்.
ஓம் களின்
வைர ஒலித்துண்டுகள்
அதனுள்
ஞானக்கதிர் பாய்ச்சும்
வரை.
நாளங்களில்
மூச்சுக்காற்றுகள்
முளைவிட்டு
அடர்ந்த காடுகளாய்
கிளைபரப்பும்.
உன் நுரையீரல்
பூங்கொத்துகளே
உனக்கு வெண் சாமரங்கள்.
நல்ல பூங்காற்றும்
நடுக்கமூட்டும் புயல்
காற்றும்
முடை நாற்றம் எடுக்கும்
கெட்ட காற்றும் கூட
உன் தியானத்திலிருந்தே
குமிழியிகிறது.
கோயிலுக்காக
மசூதியை இடிப்பதும்
மசூதிக்காக குண்டுகளை
வீசுவதுமான
சைத்தான் விளயாட்டுகளை
சுட்டெரிக்கும்
ஒரு புதிய குண்டலினி
சக்தியை
எழுப்பி விடு.
பாபரும் ராமரும்
இன்னும் பத்து தலை
ராவணர்களும்
எல்லாமே வேடங்கள் தான்.
வேடங்கள் கலையட்டும்.
வேதங்கள் மாறட்டும்.
சத்தங்கள் துப்பியதும்
போதும்.
ரத்தங்கள்
கொப்புளித்ததும் போதும்.
தியானம் ஒன்றே
இந்த கரடு முரடுகளை
“லேமினேட்” செய்யும் வழி.
சமநிலை பூக்கும் சமாதி
இதுவே.
மனிதன்
தியானம் செய்யட்டும்.
மானுடம் ஒளியாய்
வெளியே பொங்கட்டும்.

(32) தத்ப்ரதிஷாதார்த்த
மேகதத்வாப்யாஸ:

எதற்கு இத்தனை
சித்திரங்கள்?
எதற்கு இத்தனை வர்ணங்கள்.?
உருவம் புலப்படாத
இத்தனை மேகக்கூட்டங்கள்
எதற்கு?
வண்ணத்துப்பூச்சிகளாய்
சிறகுகளைக் கொண்டு
வானத்துக்கு
அரிதாரம் பூசியா
உங்கள் மன முறிவுகளை
அரங்கேற்றம்
செய்யப்போகிறீர்கள்.
ஓ! பசுக்கூட்டங்களே!
ஒன்றே குலம். ஒருவனே தேவன்
என்று
முளையடித்த கயிற்றில்
மேய்ந்து கொண்டிருங்கள்.
பச்சைப்புல்
ரத்தம் சிந்தாது.
புலியும் பிரம்மம்.
புலியின் வயிற்றுக்குள்
போன
பசுவும் பிரம்மம்.
பசு மேய்ந்த புல்லும்
பிரம்மம்.
பசுக்களின் மொழி
புலிகளுக்கு புரியவில்லை.
புலிகளின் பசி
பசுக்களுக்கு தெரியவில்லை.
பிரம்மம்
தானே பசித்து
தன்னையே
அடித்து
தின்றுகொண்டிருக்கும்
தத்துவம் புரிவதற்கு
புலிப்பாணி சித்தரின்
உயிருக்குள்
கூடு விட்டு கூடு
பாயவேண்டும்
சும்மா
ஒரு மாலை நேர
டி.வி கலக்கல் காட்சியாய்
அந்த தியானக்கரைசலில்
கொஞ்சம்
கரைந்து தான்
பாருங்களேன்.
ஓ! மை டீயர் பூதங்களே!

(33) மைத்ரி கருணா
முதிதாபேக்ஷணாம் சுகதுக்க
புண்யாபுண்யவிஷயாணாம்
பாவானாத சித்தப்ரஸாதனம்

சாதாரண மனிதர்களை விட
ஞானிகள்
சிகரம் தொடுவதற்கு
முன்னால்
அவர்கள்
மரம் மட்டைகளாய்
சுற்றுப்புரங்களின்
கூச்சம் தாங்காத
மரவட்டைகளாய்
சுருண்டு கொள்கிறார்கள்.
ஆனால்
இந்த மண்புழுக்களோடு
தங்கள் மனத்தை
சுற்றிக்கொள்கிறார்கள்.
ஈ எறும்புகளோடு
உண்டு உடுத்து உறங்கி
அவற்றின் காதில் கூட
“பிரம்மோபதேசம்”
செய்கிறார்கள்.
கரப்பான்பூச்சிகள்
இடுகின்ற மௌன
“கிரீச்சொலிகளில்” கூட
“ப்ரச்னோபநிஷதம்”
கேட்கிறார்கள்.
அவர்களுக்கு
எல்லையில்லை.
இந்த பிரபஞ்சம் கூட
எல்லையை தாண்டிய
ஒருமையத்தில் (singularity)
உடைந்து போய்
காணாமல் போய்விடுகிறது.
இந்த சமாதி எனும்
ஒருமையத்தில்
ஒடுங்கிய ஞானியோ
எல்லைகளூக்கெல்லாம்
எல்லையாய்
(infinty of infinities)
விரவி இழைந்த
நட்பு ,நெஞ்சில் ஈரம்
விருப்புகளையெல்லாம்
விடுத்து
வெறுப்புககளையெல்லாம்
வெறுத்து
தவத்தின் உருவகமாய்
உறைந்து விட்டவர்
அறிவின் கனபரிமாணம்
அவருடைய ஞானத்தளும்பலில்
அலை அடிக்கிற.து.
நல்லது கெட்டது
இரண்டுமே
அவர் முன்
வர்ணம் இழந்து போகிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு
முன்
ஒரு செல் துடிப்பாய்
இருந்து இறந்து
இப்போது
கல்லுக்குள் கிடக்கும்
பாசில் (fossil)கள் கூட
அவர் மீட்டும்
“மாசில் வீணைகள்”.
தீயதை பார்க்காதே
தீயதை கேட்காதே
தீயதை பேசாதே
என்று அபிநயம் செய்யும்
அந்த மூன்று குரங்குகள்
கூட
அகர உகர மகரத்தை
சுருதி சேர்க்கும்
ஓம் களின்
கார்டூன் உருவங்கள்.
நல்லதும் தீயதும்
நிழல்கள்
ஒன்றின் மீது
இன்னொன்று நிழல் விழும்
இந்த மாய ரசம்
கொண்டா
இந்த உயிர்க்கிண்ணத்தை
நீ நிரப்பவேண்டும்.
இந்த பிரபஞ்சம் உனக்கு
முதுகு

காட்டிக்கொண்டிருக்கிறதே!
அதன் முகம் பார்க்க
இந்த
சமாதியே சரியான கண்ணாடி.


ருத்ரா

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா