கீதாஞ்சலி (53) நான் பாட குழந்தை ஆட! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part of 32 in the series 20051216_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


என்னரும் குழந்தாய்!
பன்னிற விளையாட்டுப்
பொம்மைகளை
நானுனக்குக்
கொண்டு வரும் போது ஏன்
நடனமிடும்,
மேகத்தில் வண்ணக் கோலங்கள் ?
நீரின் மீது வண்ணங்கள் ஏன்
நெளிந்தாடு கின்றன ?
மலர்களில் ஏன்
வர்ணப் பட்டைகள்
வரையப்படு கின்றன ?
அவை யாவும் புரிகிற தெனக்கு,
கண்மணி! உனக்கு
வண்ணப் பொம்மைகள்
வழங்க வரும் போது!

உன்னை
ஆட வைக்க வேண்டுமென நான்
பாடும் போது ஏன்
சலசலத்து இன்னிசை மீட்டும்
இலைகள்,
என்பதை அறிவேன்!
கடல் அலைகள் ஒருங்கே
உடன் முழக்கும்
கான ஓசைகள்
வையத்தின் நெஞ்சில் ஏன்
மெய்யாக ஒலிக்கு மென அறிவேன்,
கண்ணே! உன்னை
ஆட வைக்க நான்
பாட வரும் போது!

கண்மணி!
சுவைத் தின்பண்டங்கள்
கனிவோடு உன்
ஆசைக் கரங்களில்
அளிக்க வரும் போது,
பூவின் கும்பாவில்
தேனூறுவது,
ஏனெனத் தெரிகிறது எனக்கு!
இனித்திடும் கனிரசம்
பழங்களின் மடுவில்
யாரும் அறியாது,
ஊறி நிரம்புவதை ஏனென்று
கூறுவேன்,
ஆசைக் கரங்களில் உனக்கு
இனிக்கும் தின்பண்டம்
அளிக்க வரும் போது!

கண்மணி!
உன்னெழில் முகத்தில்
புன்னகை மலர்ந்திட,
கன்னத்தில் நான் கனிவுடன்
முத்தமிடும் போது,
ஆகாயக் கங்கை பொங்கி
பொழுது புலரும்
பொன்னொளிச் சுடரில் ஏன்
தாரணி நோக்கிப் பாயுதெனக்
காரணம் அறிவேன்!
தழுவிச் செல்லும்,
வேனிற் தென்றல் வீசும் போதென்
மேனியின் பூரிப்பு
எப்படி யெனச் சொல்வேன்,
உன்முகப் புன்னகை மலர
கன்னத்தில்
முத்தமிடும் போது!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 13, 2005)]

Series Navigation