கூ ற ா த து கூ ற ல் – கவிதைப் பம்பரம்

This entry is part of 59 in the series 20050318_Issue

எஸ். ஷங்கரநாராயணன்தீபாவளி சிறப்பிதழில் முன் அறிமுகம் செய்துவைத்த /ஆனந்த விகடனுக்கு/ நன்றி

பாலம் கட்டினால் மனிதன்
இறங்கிக் குளித்தால்
கவிஞன்

பொழிகிறது மழை
குடை மடக்கி வீடுதிரும்பும்
காகம்

பாலுக்கு அழும் குழந்தை
பலா மரத்தடி

பேச்சாளர் மரணம்
மெளன ஊர்வலம்

விநாயகர் சந்நிதி
மூஞ்சூறு சத்தம்
விரட்டும் குருக்கள்

கஞ்சன் வீட்டுத்
தோட்டத்தில்
வெளிச்ச நாணயங்கள்

தன் முகம் பார்க்க
ஏங்குகிறது
கிணறு

பால்சுரக்கும் சூரியன்
வாய் விரிக்கும்
தாமரை

தவளை என்பது
பூவானால்
கட்டும் நாரே
பாம்பாகும்

பேப்பர் வெய்ட்டடியில்
பாவம்
காகிதம்

குடிகாரனின் சவஊர்வலம்
பின் தொடரும்
தெருநாய்கள்

பிறத்தியான் மனைவி
கூந்தலை முகர்ந்தால்
காமம் செப்பாமல் எப்படி

பல்செட் தாத்தா
மழலை பேசினார்
கேட்டு ரசித்தது
குழந்தை

இனிய உளவாக
பாவிகளே
என்கிறான்

உறங்குகிறான் ரசிகன்
திரைப்படத்தில்
கனவுக் காட்சி

காளிகோயில் பூசாரிக்கு
பெண்டாட்டி பயம்

ஜாதகத்தில்
வாசக தோஷம்
இலக்கியவாதி

குழந்தை இல்லை
தன் நிழல் கொஞ்சும்
குடிகாரன்

பஸ்டிரைவர் மகள்
ஓடிப்போனாள்
ரயில் பிடித்து

காதலியிடம்
நீ அழகு என்கிறான்
குருடன்

காந்தியவாதி சத்யா
வீடு கட்டினான்
சத்யாகிரகம்

தலையணையில்
கிடந்தது பூ
கூடவே கூந்தலும்

தடுக்கி விழுந்தான்
இடையன்
தடுக்கி விழுந்தது
செம்மறி கூட்டம்

அப்பா அம்மா விளையாட்டு
விளையாட அழைக்கிறார்
தாத்தா

அம்மாதேடி ஓடிவரும்
சங்கராச்சாரியார்
மாறுவேடப் போட்டி

ஐயோ பாம்பு தலைக்குமேலே
சுகமாய் விஷ்ணு
உறங்குகிறீரே

அடகு வைத்தான் பகலில்
எடுத்துப் போனான்
இரவில்

இறந்த பின்பும்
துாக்கிச் செல்ல
ஆணையிடுகிறார் முதலாளி

ஓட்டைப் படகில்
காதலர்
கடலுக்குள்
கணவன்

தடுக்கி விழுந்தவர் கண்டாக்டர்
துாக்கி விட்டவர்
நோயாளி

தோலில் சுருக்கம்
இடுப்பில்
சுருக்குப் பை

விஷ்ணுவை எழுப்ப
என்னை ஏன் எழுப்பினாய்
ஆண்டாளே

சப்தம் வேணாம்
உறக்கம் கலையும்
ஷ் என்றது
விஷ்ணுவின் பாம்பு

மாமியை விட
குருக்களுக்கு
தலைமுடி நீளம்

பத்தினிக்கு மான்கள்
ரிஷிக்கு மான்தோல்

தீபாவளி மும்முரம்
தைக்கிறான்
சட்டையில்லாமல்

இறைவனிடம் கையேந்துங்கள்
மின்ரயில் பிச்சை
நீயே ஏந்தேன்

விஷ்ணு சந்நிதியில்
துாங்கா விளக்கு

துாக்கம் வராமல்
முதலாளி
துாங்கி வழியும்
வாச்மேன்

சிவன்கோவில் கவியரங்கம்
கீழே
அறுபத்திருவர்

தலைவி மும்முலைக்காரி
தலைவனுக்கு
முக்கண்

பஸ் நெரிசல்
வியர்வைப் பெண்
பிளாஸ்டிக் பூ

கிரெடிட் கார்டு கடன்
தீர்த்துக் கொண்டான்
உயிரை

—-
கூறாதது கூறல் – கவிதைப் பம்பரம்
எஸ். ஷங்கரநாராயணன்
வெளியீடு இருவாட்சி சென்னை 600 011
—-
storysankar@rediffmail.com

Series Navigation