மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)

This entry is part of 59 in the series 20041223_Issue

தமிழில் : சுகுமாரன்


பத்து
@

கல்லுக்குள் கல், மனிதன், எங்கிருந்தான் அவன் ?
காற்றுக்குள் காற்று, மனிதன், எங்கிருந்தான் அவன் ?
காலத்துக்குள் காலம், மனிதன், எங்கிருந்தான் அவன் ?
நீயும் நிச்சயமின்மையின் நொறுங்கிய துண்டுதானா ?
இன்றைய தெருக்கள்வழியே,
பழைய தடங்களில்,
இலையுதிர்காலச் சருகுக்குவியல்களினூடே,
ஆண்மையைக் கல்லறைகளில் மோதிச் சிதறும்
வெற்றுக்கூடான கழுகின் நொறுங்கிய துண்டுதானா நீயும் ?
பாவம் கைகள், பாவம் கால்கள், பாவம் அருமையான உயிர்.
விழாக்காலத்தில்
காளைச்சண்டைக்காரர்களின் குத்தீட்டிகள்மேல் பெய்யும் மழைபோல
உன்னில் வந்துவிழும் ஒளியின் நாட்கள்.
அவை தமது இருண்ட உணவை
பசித்த வாயில்
ஒவ்வொரு இதழாகப் புகட்டியதோ ?
பஞ்சம், மனிதகுலத்தின் பவளம், பசி, ரகசியத்தாவரம், விறகுவெட்டிகளின் வேர்,
வழுக்குச் சுவர்களுள்ள இந்த கோபுரங்களிலேறி
உனது சங்கிலிப்பாறைகளையும் பஞ்சம் துளைத்ததோ ?

நெடுஞ்சாலைகளின் உப்பே,
ஒரு கொல்லக்கரண்டியைக் கேட்கிறேன்.
கட்டிடமே,
கல்லால் ஆன மகரந்தக் கேசரத்தை
ஒரு சிறு சுள்ளியால் குடைய அனுமதி,
காற்றின் பறவைகளனைத்தையும் ஏறிக்கடந்து
வெறுமைக்குள் நுழைய அனுமதி,
மனிதனைத் தீண்டும்வரை உன் குடல்களைச் சுரண்ட அனுமதி.
மாச்சுபிச்சு,
கந்தையான அஸ்திவாரத்தின்மேல்
கல்லின்மேல் கல்லாக எழும்பினாயா நீ ?
நிலக்கரிமேல் நிலக்கரி அடர்ந்து அதன் ஆழத்தில் கண்ணீரா ?
நெருப்பின்பொன்மகுடம், அதற்குள்ளே
இரத்தத்தின் வீக்கமா ?

நீ இங்கே புதைத்த அடிமையை என்னிடம் திரும்பக்கொடு.
இந்த நிலங்களின் ஏழைகளது வறண்டரொட்டியைப் பிடுங்கி வீசு.
அந்த அடிமைக்குடிலின் சன்னலை,
அவன் உடுத்திருந்த கந்தலை எனக்குக் காட்டு.
உயிரோடிருந்தபோது அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு,
தளர்ச்சியால் அவன் உராய்ந்து சுவரில் தோன்றிய
கறுத்த தழும்புபோல வாய்பிளந்திருக்கக்
குறட்டைவிட்டு அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு.
அந்தச் சுவர், அந்தச் சுவர்.
ஒவ்வொரு கல்லும் தளர்ந்து
அவனது உறக்கத்தின்மேல் அழுத்தியிருக்குமோ ?
நிலவுக்குக் கீழே உறங்குவதுபோல அவன் அகப்பட்டிருப்பானோ ?

புராதன அமெரிக்கா, கடலின் முகத்திரையணிந்த மணமகளே,
வெளிச்சமும் ஆராதனையும் கலந்த திருமணத் தோரணங்களின் கீழே
முரசுகளிலும் ஈட்டிகளிலும் தெறிக்கும் இடிமுழக்கத்துடன் இணைந்த
உன் விரல்கள்
கானகத்தின் விளிம்பிலிருந்து
கடவுளரின் அசாதாரண பீடங்கள்வரை நீளும்போது
அமிழ்ந்துபோயின.
மனதில் ரோஜாவையும் குளிரின் மயிரிழையையும்கொண்டிருந்த
உன் விரல்கள்,
புது தானியத்தின் இரத்தம்படிந்த நெஞ்சை
ஒளிரும் பொருளாக மாற்றிய உன் விரல்களும்
திட்டமான வெறுமையில் அமிழ்ந்தன.
அவற்றோடு, அவற்றோடு புதைந்துபோன அமெரிக்கா!
உனது குமட்டும்குடலுக்குள்
பருந்துப்பசியை ரகசியமாக வைத்திருந்தாயா ?

—-
மாச்சுபிச்சுவின் சிகரங்கள்

பதினொன்று
@

குலைந்த அழகினூடே
இரவு உருவாக்கிய கல்லினூடே
என் கைகளை ஆழ்த்தினேன்.
ஆயிரமாண்டுகளாகச் சிறைப்பட்ட பறவைபோல,
பழைய, நினைக்கப்படாத மனித இதயம்போல
என்னுள் துடித்தது அது.

இன்று
இந்த மகிழ்ச்சியை மறக்க விடு.
எல்லாக் கடல்களையும்விடப் பரந்தது
ஏனெனில்
எல்லாக் கடல்களையும்விட
கடலின் கழுத்துநகையான தீவுகளைவிட
மனிதன் பரந்தவன்.
ஒரு கிணற்றில் விழுவதுபோல
நாம் அவனுக்குள் விழவேண்டும்.
மர்ம நீரின் கிளைகளுடனும்
மூழ்கிப்போன உண்மைகளுடனும்
மேலேறி வரவேண்டும்.

கல்லின் சுற்றளவை,
வலுவான பரிமாணங்களை,
எல்லைதாண்டிய நீட்சியை,
தேன்கூட்டின் அடித்தளங்களை
மறந்துவிட என்னை அனுமதி.
ஒரு செங்கோணத்தின் கிடைக்கோடாக
கம்பளிச் சட்டைக்கும்
கரிப்பு ரத்தத்துக்கும் அடியில் நகர
என் கைக்கு அனுமதி கொடு.

குதிரை லாடம்போன்ற துருப்பிடித்த சிறகுகளுடன் பறந்து
என் நெற்றிப்பொட்டில் கொத்துகிறது வெறிக்கழுகு.
அதன்
பிணந்தின்னிச் சிறகுகளின் சூறாவளி
சாய்வான படிக்கட்டுகளில்
இருட்புழுதியை வாரியிறைக்கிறது.
அந்தப் பறவையின் வேகத்தையோ
அதன்
நகங்களின் குருட்டு அரிவாள்களையோ
நான் பார்க்கவில்லை.

புராதன மனிதனை, அடிமையை,
வயலில் கிடந்துறங்குபவனை
நான் பார்க்கிறேன்.
ஓர் உடலை
ஓர் ஆயிரம் உடல்களை
ஓர் ஆணை
ஓர் ஆயிரம் பெண்களை
இரவாலும் மழையாலும் பொசுக்கப்பட்டு,
இருண்ட காற்றால்
இறுகிய கற்கள்போலக் கறுத்தவர்களை
நான் பார்க்கிறேன்:
விராகோச்சாவின் மைந்தன் யுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ்
பச்சை நட்சத்திரத்தின் வாரிசு யுவான் கோல்டுபெல்லி
மரகதத்தின் பேரன் யுவான் பேர்ஃபுட்
என்னுடன் உயிர்தெழுகிறார்கள்,
எனது சகோதரர்களாக!
@

குறிப்பு:-
யுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ் (Juan Splitstones) கல்வெட்டுபவன்
யுவான் கோல்டுபெல்லி (Juan Coldbelly) ஆறிய உணவை உண்பவன்
யுவான் பேர்ஃபுட் (Juan Barefoot) வெறுங்காலில் நடப்பவன்

—-
மச்சுபிச்சுவின் சிகரங்கள்

பன்னிரண்டு
@
என்னுடன் உயிர்தெழுந்து வா, என் சகோதரா.

உனது துயரங்களால் புதைக்கப்பட்ட ஆழத்திலிருந்து
உனது கைகளை நீட்டு.
இறுகிய கல்லறைகளிலிருந்து நீ திரும்பப்போவதில்லை
புதையுண்ட காலத்திலிருந்து நீ எழப்போவதில்லை
உனது கனத்த குரலோ
கண்குழியிலிருந்து தோண்டப்பட்ட உனது விழிகளோ
மீண்டும் வரப்போவதில்லை.

பூமியின் அடியாழத்திலிருந்து என்னைப் பார்.
நிலங்களை உழுபவனே,
நெசவாளியே,
வாய் திறவாத மேய்ப்பனே,
குலச்சின்னத்தின் சந்ததியே,
வஞ்சிக்கும் சாரத்தின்மேல் நிற்கும் கொத்தனே,
நசுங்கிய விரல்களுள்ள பொற்கொல்லனே,
நாற்றுகளை நினைத்துப் பதறும் உழவனே,
களிமண்ணுக்கிடையே விரயமாகும் குயவனே,
உனது
புதையுண்ட புராதன துக்கங்களை
புதுவாழ்வின் குவளைக்குள் கொண்டுவா.

உனது இரத்தத்தையும் உனது தழும்பையும்
என்னிடம் காட்டு.
பிறகு
வைரம் ஒளிமங்கிப்போனதாலோ
சோளக்கதிரையோ கல்லையோ
காலத்திற் தராமல் நிலம் பொய்த்ததாலோ
சவுக்கடி பட்டது இங்கேதான் என்று
என்னிடம் சொல்.
நீ இடறிவிழுந்த பாறையும்
உனது உடலை சிலுவையேற்ற
அவர்கள் தறித்த அந்த மரத்தையும்
என்னிடம் காட்டு.

புராதன விளக்குகளையேற்ற
சிக்கிமுக்கிக் கற்களை உரசு.
நூற்றாண்டுகளாக
உனது காயங்களில் ஒட்டியிருக்கும்
சவுக்குகளைக் கொளுத்து.
உனது இரத்தத்துடன் ஒளிரும்
கோடரிகளைக் கொளுத்து.

உனது இறந்த உதடுகளுக்காகப் பேசவந்திருக்கிறேன் நான்.

பூமிமுழுவதிலும்
இறந்த உதடுகள் ஒன்றிணையட்டும்.
ஆழங்களிலிருந்து
இந்த நீண்ட இரவை எனக்காக நெய்துகொடு.
உன்னோடு இங்கே நிலைப்பேன்.

சங்கிலி சங்கிலியாக
கண்ணி கண்ணியாக
படிப்படியாக
எல்லாவற்றையும் என்னிடம் சொல்.
நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளைக் கூராக்கு.
சூரியச் சீற்றத்தின் பெருக்காக
புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக
அந்தக் கத்திகளை
என் மார்பில் பாய்ச்சு.
மணிக்கணக்காக
நாட்கணக்காக
ஆண்டுக்கணக்காக
இருண்ட யுகங்களாக
நட்சத்திர நூற்றாண்டுகளாக
என்னை அழவிடு.

எனக்கு மெளனத்தைக்கொடு, எனக்கு நீரைக்கொடு,
நம்பிக்கையையும்.

எனக்கு போராட்டத்தையும் இரும்பையும்
எரிமலைகளையும் கொடு.

காந்தங்கள்போல என் உடலோடு தொற்றட்டும் உடல்கள்.

எனது நாளங்களுக்குள்ளும் எனது நாவுக்குள்ளும்
விரைந்து வா.

எனது குரலினூடே எனது இரத்தத்தினூடே பேசு.
@

—-
sukumaran@sunnetwork.org

Series Navigation