This entry is in the series 20040819_Issue

திலகபாமா


முட்களை பார்த்துப் பார்த்து

நாட்கள்

முன் நகர்ந்து கொண்டிருந்தன.

ஆறில் முட்கள் இருக்கையில்

விடியலென்று சொல்லப் பட்டது

எட்டில் முட்கள் இருக்கையில்

இரவின் உண்ணா நோன்பை

வயிறுகள் முடித்து விட நினைவு கூர்ந்தன

ஒன்பதில்

பள்ளியும் அலுவலகமும்

கிளம்பிப் போயின

பன்னிரெண்டு

சாப்பாட்டுக் கூடைகள்

வெளியேறின

எண்களோடும் முட்களோடும்

பயணித்த பொழுதுகள்

தூங்கக் கண் மூடிய போதும்

எழுப்பி விட எண்களுக்குப் பணித்து

உறங்கிப் போயின

வீட்டின் எல்லா

கடிகாரங்களும் உறைந்து போனதை

உணரா நிலையில்

எழுப்பப் படாத விடியலொன்றிலும்

சரியாக விழித்த போது தான்

உணர்ந்திருந்தன

முட்களும் எண்களும்

வெளியில் இல்லை

இருப்பது தனக்குள் என்று

mathibama@yahoo.com

Series Navigation