காம்பின் எடையால் பூவின் இடை ஒடியும்!

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


**
திருவள்ளுவர் தந்த புதுக்கவிதை 3(112)
**
அனிச்சமே வாழ்க நீ
நீ மென்மையின் மெல்லினம்
உன்னினும் மெல்லினம்ெஎன்
உள்ளம் புகுந்த
பெண்ணெனும் பூவினம்

தளிர் மேனி
முத்துப்புன்னகை
இழுக்கும்;
ஈர்க்கும் மணம்
வீழ்த்தும் வேலாய்க் கண்கள்
மூங்கில் தோள்கள்
இவைதாம் அவள்
இவற்றால் அவள்
இவைதாம் அவளுடைமை
அவள்தான் என்னுடைமை

அந்த
மாணிழையாளின்
மயக்கும் கண்களைக்
குவளைகள் காணின்
கூசும் கண்கள்
ஒப்பிலா நிலையெண்ணி
நாணும்
நாணித் தலைகுனியும்
நிலம்நோக்கும்

பூக்களாய்க் கண்கள்
பூத்திருப்பதால்
கண்களே பூக்களாய்க்
காணப்படுவதால்
பலர் பார்க்குமாறு
பூப்பூத்த வேளையில்
மலர்பார்க்கும்தோறும்
மயங்கிடும் என்னெஞ்சம்

அவள்
காம்புக்களையா
அனிச்சம் அணிந்தாள்
அனிச்சம் அணிந்ததால்
அனிச்சத்துடன்
காம்பும் அணிந்ததால்
எடைகூடும்!
எடைகூடினால்!
நிச்சயம் அவள்
இடை ஒடியும்பெின்
பறைதான் ஒலிக்கும்

நிலமதி இவளுக்கும்
வான்மதி நிலவுக்கும்
நிலவும் ஒற்றுமையால்
நீலவான் நீந்தும் மீன்கள்
நிலைதடுமாறும்!
நிலவு யாரெனும்
நிலையறியா நிலைமை உருவாகும்

பிறைமதியாய்ப்
பின்
நிறைமதியாய் மாறும்
குறையிலா மதி
குளிர்மதி அவள்முகம்
அவள்
மதிமுகத்தும் குறையில்லை
மதியிடத்தும் குறையில்லை

வான் மதியே
நீயும் அவளைப்போல்
குறையிலா நிலவானால்
ஒளிரும் நிலையானால்
நீயும் என்
காதல் பொருளாவாய்
காதலியாவாய்

அனால், ஒரு
காதல் கட்டளை!
மலர்க்கண்ணுடைய
என்
மனமதியாளைப்போல
ஒத்திருக்க உனக்கு
ஒப்பும் மனமென்றால்
ஊரறிய வானில்
உலா வராதே!

அதுமட்டுமா ?
அனிச்சமலரும்
அன்னப்பறவையின் இறகும்
என்
காதலியின் காலுக்கு
நெறிஞ்சி முள்ளென்றால்
நினைத்துப்பார்!
நீ எங்கே!என்
காதலி எங்கே!

ilango@stamford.com.sg

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ