This entry is in the series 20030119_Issue

சேவியர்


ஒரு நாளைக்கு
இருக்கும் நீளமே போதும்.
அதிகம் கிடைத்தால் மட்டும்
என்ன ஆகிவிடும் ?

முடிக்கப் படாத பணிகள்
நிச்சயமாய்
மிச்சமிருக்கும்.

படிக்க வேண்டிய புத்தகங்கள்
பத்தாகிலும்
பக்கமிருக்கும்.

விடியல் போர்வைக்குள்
இன்னும்
கொஞ்சம் சோம்பல் நீளும்.

அப்போதும்
வழிபாடு துவங்கிய பின் தான்
ஆலய வாசலைக்
கால்கள் வந்தடையும்.

தொலைக்காட்சிகளும்
தூக்கமும்
அதிகம் கிடைக்கும் நேரத்தை
முடிந்தவரை
கடித்துத் தின்னும்.

ஐந்து முறை உண்டு
இரண்டு முறை குளித்து
இன்னும் இருக்கும்
சூரியன் மேல்
எரிச்சல் பார்வை விழும்.

நாளுக்கு
நாற்பது மணிநேரம் கிடைத்தாலும்
நள்ளிரவில் தான்
தூக்கம் துவங்கும்,
அதிகப்படியான அலைச்சலோடு.

ஒரு நாளைக்கு
இப்போது
இருக்கும் நீளமே போதும்.
அதிகம் கிடைத்தால் மட்டும்
என்ன ஆகிவிடும் ?

0
Xavier_Dasaian@efunds.com

Series Navigation