அம்மா சொன்னது
எஸ். வைதேஹி.

மெல்ல வாழ்க்கையின் ரகசியம்
அடங்கிக் கொண்டிருக்கிறது.
புருவ முடியில் இருந்து
கனவின் கடைசி அத்தியாயம்
வரை நரைத்துவிட்ட
அம்மாதான் சொன்னாள்
முதலில்.
வர்ணங்கள் அற்ற
இரவுகளின் அழுகுரல்கள்
தினமும் அறைந்து கொண்டிருக்கிறது
வாசல்புற கதவுகளின்
இடுக்குகளில்.
அடையாளம் காண முடியாத
சவுக்கடிக்கு பின்னால்
பிரிந்து கூடி
மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது
அஞ்சறைப் பெட்டியினூடே
ஆளுமைப்படுத்தப்பட்ட
ஒரு கூடு.
தவிர்க்க முடியாமல்
காற்றில் பறந்த
காகிதங்களை
ஒழுங்கு படுத்தும்
அளவோடு
நின்று போயிற்று
வாழ்க்கையின்
அழகியல் பற்றிய என்
பிரச்சனை.
svaidehi@hotmail.com