தோழிமார் கதை

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

மீனாக்ஸ்


‘ஜென்னிதான்
உலகத்திலேயே என்னுடைய மிகச்சிறந்த தோழி ‘
என்று நான் முன்பெல்லாம் அடிக்கடிச் சொல்லுவேன்

கல்லூரியில் சேர்ந்த முதல் நாளன்று
பக்கத்தில் அமர்ந்து சினேகிதமாய்ச் சிரித்து
‘என் பேர் ஜென்னி, உன் பேர் என்ன ? ‘
என்று அவள் கேட்ட போது அறிமுகமானோம்
முதல் வருடத்தின் இறுதிக்குள்
கல்லூரி எங்களை ‘இரயில் தண்டவாளங்கள் ‘
என்று அடைமொழி கொடுத்து
அழைக்கத் தொடங்கியது

பக்கத்து வீட்டுக் கல்லூரி மாணவன் முதல்
பேருந்து நிலையத்தில் தினமும் பார்க்கும்
ரிஸர்வ் பேங்க் ஆண்ட்டி வரை
எல்லாமும் என்னிடம்தான் சொல்வாள்

கல்லூரி மெஸ்ஸிலே உணவின் தரம் முதல்
முன் தினம் வீட்டுக்கு ஃபோன் செய்ததுவரை
எல்லாமும் அவளிடம் தான் சொல்வேன்

விடுதி அறையில் தூங்கும்போது
தலையில் தண்ணீர் ஊற்றுவது முதல்
தன்னைக் கணவனாகவும் என்னை மனைவியாகவும்
பாவித்து ‘டார்லிங் டார்லிங் ‘ என்று கொஞ்சி
ஒரு நாள்
அல்வாவும் மல்லிகைப்பூவும் வாங்கித் தந்து
செல்லமாய் அடிவாங்கியது வரை
ரசிக்கத்தக்க குறும்புகள் செய்வாள்

நான்கு வருடங்கள் படிப்பை முடித்து
வெவ்வேறு மென்பொருள் நிறுவனங்களில்
வேலைக்குச் சேர்ந்தோம்
தினந்தோறும் மாலை அரட்டையில் அழைப்பாள்
வண்டியில் வரும்போது சிக்னலில் மாட்டியது முதல்
பக்கத்து புரோஜக்ட் பையன் வந்து வழிந்தது வரை
சகலமும் சொல்லித்தீர்ப்பாள்

மறக்காமல் இரவு
நான் தங்கியிருந்த மகளிர் விடுதிக்கு
ஃபோன் செய்து ‘குட்நைட் ‘சொல்வாள்

முதல் மாத சம்பளத்தில்
பிடிவாதமாய் எனக்குப்பிடித்த
பெரியதொரு கரடி பொம்மை வாங்கித் தந்தாள்
‘திருமணமாகும் வரை கட்டிப்பிடித்துத் தூங்க ‘
என்ற வாசகத்தைப் பார்த்து நான் வெட்கப்பட்டதும்
குதூகலித்தாள்

வேலை நிமித்தம் அமெரிக்கா சென்றபோது
விமான நிலையத்தில் என் கைப்பிடித்து அழுதாள்
‘தினமும் உன் குரலைக் கேட்காமல் எப்படியடி இருப்பேன் ‘

வாரமொரு முறை மறக்காமல் போன் செய்து
நடந்தது, கண்டது, நினைத்தது எல்லாம் சொல்வாள்
‘நயாகரா போயிருந்தேன்
கட்டிப் பிடித்தபடி நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள
நீ பக்கத்தில் இல்லாமல் போனாயே ‘
என்று விசனப்பட்டாள்

எனக்கு பிறந்தநாள் வந்தபோது
மின் கார்டு முதல் மியூசிக் கார்வு வரை
அனுப்பி வைத்து வாழ்த்தினாள்

எனக்குத் திருமணம் நிச்சயமானது..
‘நீ வரமுடியுமா ? ‘ என்று கலக்கத்துடன்
இ-மெயில் அனுப்பினேன்
உடனே பதில்வந்தது
‘என் கல்யாணத்துக்குக் கூட வராமல் இருந்துவிடுவேன்
உன் கல்யாணத்துக்கு வராமல் இருப்பேனா ? ‘

சொன்னபடி விடுமுறையில் வந்தாள்
அவரைப்பார்த்து என் காதுக்குள்
‘க்யூட்டார் இருக்காருடி ‘ என்று கிசுகிசுத்து மகிழ்ந்தாள்
என் கல்லூரி காலத்துக் கலாட்டாக்களை
அவரிடம் சொல்லி மானத்தை வாங்கினாள்
திருமணமும் விடுமுறையும் முடிந்ததும்
மறுபடி அழுதபடி
‘சந்தோஷமா இருக்கணும்டி ‘
என்று சொல்லிச்சென்றாள்

அவளுக்கும் திருமணம் ஆனது
கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்ததால்
அங்கேயே நிரந்தரமானாள்

இரண்டு வருடத்துகொருமுறை விடுமுறையில்
இந்தியா வருவாள் குழந்தைகளோடு
என் வீட்டுத்தோட்டத்தில் அமர்ந்து
என் கையைப் பிடித்தபடி
பழைய கதைகளைப் பேசிக் களிப்பாள்
போகும்போது வழக்கம்போலக் கண்ணீர் சிந்துவாள்
‘ஒரு தடவை அமெரிக்காவாடி ‘ என்று
மறக்காமல் அழைப்பாள்

அன்றொருநாள் என் மகளின்
பள்ளிக்குச் சென்றிருந்தேன்
தன் பக்கத்தில் உடகாரும் பெண்ணை
என்னிடம் அழைத்துவந்து
‘அம்மா இவள்தான் ப்ரியா
உலகத்திலேயே என்னுடைய மிகச்சிறந்த தோழி ‘ என்றாள்

நான் இருவரையும் அணைத்தபடி
ஜென்னியை நினைத்தேன்
இப்போதெல்லாம அவளைப் பற்றிக் குறிப்பிட நான்
அத்தனை வார்த்தைகளை வீணடிப்பதில்லை
‘உலகத்தின் மிகச்சிறந்த தோழி ‘ என்று
சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்
என் ஜென்னியைத் தவிர
வேறு யார் அதற்குப்
பொருத்தமாக இருக்க முடியும் ?

***

***

Series Navigation

மீனாக்ஸ்

மீனாக்ஸ்