மேகம்
சங்கர் நாக்

வெகு நீளமான பயணம்.
நீர்பருகி, சூாியன் வேகவைத்த
ஒளிக்கதிரால் பிறந்து
வானெழும்பி வளர்ந்து
காற்றோடு காற்றாய்…
பறவைக்கெல்லாம் குடையாய்
மேலிருந்து பூமி நோக்கிட
சிறுபிள்ளை சிறுநீராய் சமுத்திரம்.
படர்ந்து வானம் மறைக்க
பின்னாலிருந்து சூடு பரப்புவான்
சூாியன் – வலி பொறுக்கமுடியாமல்
தாங்கிவந்த நீரெல்லாம் கரைந்துபோகையில்
செத்துப்போய்
காற்றோடு மிதக்க வேண்டிவரும்.
மோதி உடைந்தபின்
நீராய், மழையாய்
மண்ணோக்கி விழுகையில்
கவலை துளியும் இல்லை.
என்னை நோக்கித்தான்
பூமி காத்திருக்கிறது என்கையில்
இன்னுமொருமுறை விழவேண்டும்
மழையாய்ப் பிறந்து.