கால்டுவெல்லின் தனித்துவம்

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

புதிய மாதவி, மும்பை


மாந்தவியல் ஆய்வுகள் காலனி ஆதிக்க மக்களை நாகரிகமற்றவர்களாகவும் அவர்கள் மொழியை
பண்பாடற்ற மொழியாகவும் காட்டிக்கொண்டிருந்தன. ஆனால் இந்தியாவில் அவர்கள் கண்ட
செழுமை மிக்க இரு மொழிகளான தமிழ், சமஸ்கிருதம் அவர்களின் பார்வையை மாற்றியது.
மற்ற காலனி ஆதிக்க நாடுகளில் செய்த கீழ்நிலைப் படுத்தலை இங்கே அவர்களால் செய்யமுடியவில்லை.

இந்திய மொழிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றோ இந்திய சமுதாயத்தை ஆரியம், திராவிடம்
என்று பிரிக்க வேண்டும் என்று திட்டமிட்டோ
இன்றைக்கு நாம் நினைக்கும் எந்த நோக்கத்திலும் இந்தப் பயணம் துவங்கவில்லை என்பது
ஒரு விந்தையான செய்திதான். ஆரம்பத்தில் இந்தியக் குடிமை வழக்குகளை விசாரிக்க ஜெண்டோகோடு
என்ற சட்டமுறை உருவாக்கப்பட்டது. ஆனால் சிக்கலான இந்திய வழக்குகளைக் கையாள
இந்தியச் சட்டம் என்று இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களைத் திரட்ட வேண்டி இருந்தது.

கல்கத்தாவில் வாழ்ந்த இந்து வடமொழியாளர்கள் மனுவையும் பகவத்கீதையையும் இந்தியர்கள்
ஏற்றுக்கொண்ட சட்டமாக ஆங்கிலேயருக்கு அறிமுகம் செய்தனர். விளைவு, லார்ட் வாரன் ஹேஸ்டிங்ஸ்
இந்தியச் சட்டங்களை மொழியாக்கம் செய்ய ஆணையிடுகிறார்.
சர். வில்லியம் ஜோன்சைக் மனுநீதியையும் (1792) சார்லஸ் வில்கின்சன் பகவத்கீதை (1784),
இதோபதேசம் (1787) ல் மொழிபெயர்த்தனர்.
மனு இன்றைக்கும் இந்திய நீதிமன்றத்தில் அரசாள்வதும் கீதையின் பெயரால் இந்து இந்தியர்கள்
சத்தியப்பிரமாணம் செய்வதும் இப்படித்தான் நீதிமன்றத்தில் நுழைந்தது.

சர் வில்லியம் ஜோன்ஸ் ‘ஆசிய ஆராய்ச்சிகள்’ என்ற இதழை ஆரம்பிக்கிறார். பல மொழி வல்லுநராக
இருந்த வில்லியம் ஜோன்ஸ் வடமொழியை பிற ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பாய்வு செய்து
‘இந்தோ ஜரோப்பிய மொழிக்குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார்.
அதன்படி வடமொழி ஜரோப்பியர்களுக்கு மிகவும் நெருக்கமானது என்ற கருத்துருவாக்கம் ஏற்பட்டது.
கிழக்கிந்தியக் கம்பேனியின் பயிற்சிக் கல்லூரியில் வடமொழியும் கற்பிக்கப்படும் அளவுக்கு
நெருக்கம் ஏற்பட்டது. ஆக்ஸ்போர்ட், லண்டன், எடின்பரோ, மற்றும் அமெரிக்க பல்கலை கழகங்களில்
வடமொழி தனி இடத்தைப் பெற்றது.
பிரடெரிக் சிலகெல் 1808ல் on the language and wisdom of the indians என்ற நூலை எழுதுகிறார்.
கிழக்கிந்திய கம்பேனி 1847ல் வேத நூல்களை வெளியிடுவதற்கு ஒன்பது லட்சம் ரூபாய் (அன்றைய மதிப்பில்
பெருந்தொகை ) நிதி ஒதுக்கீடு செய்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.!

வடமொழி நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவந்தவுடனேயே அதற்கான பிரஞ்சு, ஜெர்மன் மொழியாக்கங்களும் தொடர்ந்தன.
இவ்வாறாக , வடமொழி சமஸ்கிருதம் ஐரோப்பிய அறிவுஜீவிகள் வட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தக்
காலத்தில் தமிழ்மொழியின் நிலை என்ன?

“தமிழின் மிகப்பழங்காலத்து நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள்,
திருக்குறள் நாலடியாரின் சில பகுதிகள் தவிர்த்த கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பிய பொருளதிகாரம்,
தொல்காப்பிய நூலுக்கான புகழ்பெற்ற உரைகள், சைவசித்தாந்த நூல்கள், அவற்றுக்கான உரைகள், நன்னூல் தவிர்த்த
தமிழின் முக்கியமான சிற்றிலக்கண நூல்கள் என்று தமிழ் மொழிக்கே உயிர்ப்பாக இருந்த எந்த நூலும் 1875 வரை
அச்சு வடிவமே பெறவில்லை ” என்ற செய்தியைப் பதிவு செய்கிறார் பொ.வேல்சாமி.

இந்தக் காலக்கட்டத்தில் தான் கால்டுவெல் தன் ஆய்வை மேற்கொள்கிறார். தன் ஆய்வின் முடிவில்
அவர் சொல்லவரும் கருத்து அதுவரை இந்திய மொழியியல் ஆய்வில் பரவலாக நம்பிக்கொண்டிருந்த
ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த கருத்தை உடைக்கும் என்பதையும் அவர் அறிந்தே இருக்க வேண்டும்.
கால்டுவெல் சொல்வதற்கு முன், தமிழ் மொழி சம்ஸ்கிருத மொழியிலிருந்து தான் வந்தது என்று
சொல்லிக்கொள்வதில் தான் தமிழ் அறிஞர்களுக்கே பெருமிதம் இருந்தது.

கால்டுவெல் திராவிட மொழிகள் தனித்துவம் உள்ளவை என்று நிறுவியதுடன் சம்ஸ்கிருதம் திராவிட
மொழிச் சொற்களைக் கடன் வாங்கி இருக்கிறது என்று சொன்னதுதான் சம்ஸ்கிருதத்தின்
“தேவபாஷை’ படிமத்தை அடியோடு தகர்த்த ஒரு கலகக்குரலாகவே இருந்தது எனலாம்.
கால்டுவெல்லின் இக்கருத்து அன்றைய ஆளும் வெள்ளையருக்கு ஒன்றும் உகந்ததாக இல்லை.
கால்டுவெல் திராவிட மொழிகளை தனித்துவமான மொழி என்று சொன்னதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை,
தமிழர்கள் சமஸ்கிருத மனுதர்ம கலாச்சாரத்திலிருந்தும் சடங்கு சாத்திரங்களிருந்தும் முற்றும் அந்நியப்பட்ட
பாரிய குடி மரபைச் சார்ந்த இனம் என்று சொன்னதுதான் அதிகமாகவே சம்ஸ்கிருத மனுதர்ம வாதிகளை
கோபம் கொள்ளச் செய்தது.

கால்டுவெல் நூலின் சிறப்பம்சங்களாக கவிதாசரண் தொகுத்துரைக்கும் சில கருத்துகள்:

1. “பார்ப்பானுக்கு அடிமையாய் இருந்தாலும் இருப்பேனே தவிர பறையனுக்குச் சகோதரனாய் இருக்க மாட்டேன்” என்னும் தமிழ்ச் சாதியின் வெறியுணர்வே தமிழின் தனித்துவத்தையும் மீறி அவர்களைப் பார்ப்பனத் தகைமைகளுக்கு முன்னுரிமையும் முதலிடமும் கொடுக்க வைத்துள்ளது. அதன் காரணமாகவே “பறையர் முதலான தாழ்த்தப்பட்டவர்கள் திராவிடர்கள்தாம்” என்னும் கால்டுவெல்லின் கட்டுரையை அவர் நூலிலிருந்தே உருவிப்போட்டுவிடத் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.

2. பறையர் முதலானவர்கள் பார்ப்பனர் முதலான உயர்சாதியினரின் முறையற்ற பாலுறவால் “நடத்தை கெட்டவர்கள் பெற்றுப்போட்ட குழந்தைகள்” என்பதாக ஐரோப்பியர்கள், பார்ப்பனர்கள், உயர்சாதித் தமிழர்கள் போன்றோரால் இழிவாக வைத்து எண்ணப்பட்டிருந்த காலம் அது. இது ஆய்வு ரீதியாகவோ நடைமுறை அறிவிலோ மெய்ப்பிக்கப்பட முடியாத கட்டற்ற மனத்தின் ஆகப்பெரும் பொய்ப்புனைவு என்பதைக் கால்டுவெல் ஐயத்திற்கிடமின்றி நிறுவுகிறார். இந்தப் பொய்யிலும்கூட ஒரு விஷயம் பாருங்கள்: வல்லுறவு கொண்ட பொறுக்கிகள் மேல்குலத்தவர்களாம். வல்லுறவுக்காட்பட்ட பெண்கள் பெற்றுப்போட்ட குழந்தைகள் சாதி கெட்டவர்களாம். இந்தச் சடங்குத்தனமான வகைப்பாட்டை நம்புகிறவர்கள்தாம் மேன்மக்கள் எனில் மேன்மையின் கீழ்மை எவ்வளவு கோரமானது அதைத்தான் கால்டுவெல் வலுவாக நிறுவுகிறார். அதைச் சகித்துக்கொள்ள மறுத்தவர்கள்தாம் அவர் நூலைச் சிதைத்தவர்கள்.

3. மலையாளத்தைத் தமிழின் சகோதரி என்பதைவிடப் புதல்வி என்றே சொல்லலாம் என்பது கால்டுவெல்லின் எண்ணம். மொழி ரீதியாக அதற்கொரு சான்று சொல்கிறார். தமிழில் கிழக்கு, மேற்கு என்று திசைகளைச் சொல்கிறோம். கிழக்கு என்றால் கீழே, தாழ்வாக (கிழங்கு என்றால் நிலத்தின் “கீழ்” விளைவது) என்னும் பொருள் தருவது. அதுபோல மேற்கு என்பது மேல்நோக்கி, மேடாக என்றாகிறது. தமிழ்நாட்டுக்கு மேற்கு நோக்கிச் செல்லும்போது ஏறுமுகமாக, மலைநோக்கியும், கிழக்கு நோக்கிச் செல்லும்போது இறங்குமுகமாக, கடலை நோக்கியும் அமைகிறது. ஆகவே இவை காரணப் பெயர்கள். மலையாளத்திலும் திசைகளுக்கு இதே பெயர்கள்தாம். ஆனால் கேரளத்தில் கிழக்குத் திசை ஏறுமுகமாகவும், மேற்குத்திசை கடலை நோக்கி இறங்குமுகமாகவும் நிலப்பரப்பைக் கொண்டது. எனவே, அங்கே இத்திசைகள் இடுகுறிப் பெயர்களாக, தமிழ்ப் பெயர்களை உள்வாங்கிக் கொண்டனவாக உள்ளன. அதாவது அவர்கள் தமிழர்கள், தமிழ்நாட்டிலிருந்து நகர்ந்து சென்றவர்கள் என்பதாக முடிவுக்கு வரலாம். நம்பூதிரிகள் “நாங்கள் “படுஞ்ஞாயிறு” என்றுதான் மேற்கை அழைக்கிறோம்” என்று சொன்னபோது “அடடே, அது இன்னும் நல்ல தமிழாயிற்றே” என்கிறார் கால்டுவெல். இதுபோன்று பல சாத்தியப்பாடுகளையும் அவர் மொழிகளூடாக ஆராய்கிறார்.

4. கால்டுவெல் தொல்காப்பியத்தை அறிந்திருந்தார் என்பது இன்றுவரை இருட்டடிப்புச் செய்யப்பட்டே வருகிறது. 07-05-2007இல் இரவு 11.30 மணியளவில் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ்மொழி பற்றிய நிகழ்ச்சியில் கால்டுவெல் தொல்காப்பியத்தை அறிந்திருக்கவில்லை என்றே “தமிழறிந்த” மூன்று பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். அனால் உண்மை என்னவெனில் அவர் தொல்காப்பியத்தை அறிந்திருந்தார் என்பதுதான். தொல்காப்பியத்தில் “என்மனார் புலவர்” எனப்படுவது தொன்மையை நிலைநாட்டும் பொருட்டு என்பதாகிறது. ஆனால் “என்மனார்” என்பதற்கு மாற்றாக “என்பர்” என்று சொன்னாலே அது தொன்மையைச் சுட்டக்கூடியதுதான் என்கிறார் கால்டுவெல்.

5. கால்டுவெல் மட்டும் இந்த நூலை எழுதாமல் இருந்திருந்தால் இன்றைய இந்தியப் பெருவெளியில் தமிழ்ச் சமூகம் என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது. சிந்துவெளி நாகரிகம் தமிழ்ச் சமூகத்தினுடையது என்று சொல்வதுகூட எளிதாய் இருந்திருக்க முடியாது. இந்திய ஒற்றைத் தேசியத்தில் தமிழ்ச் சமூகம் ஆகக் கீழான தலித் சமூகமாக மிதிபட்டு நசுங்கிப் போயிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய அரசியல் களத்தில் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்தைத் தலைநிமிர்ந்து செம்மாந்து நிற்க வைத்த பெருமை கால்டுவெல்லையே சாரும். “வெள்ளையின மக்களே மேன்மை யானவர்கள், கறுப்பினத்தார் கீழானவர்கள்” என்னும் சமஸ்கிருதக் கோட்பாட்டை அடித்து நொறுக்கியவர் கால்டுவெல். சமஸ்கிருதம் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே தமிழுக்குக் கடன்பட்டது என்பதைத் தர்க்கபூர்வமாக நிறுவிக்காட்டியவர் அவர்.

6. தமிழ்ச் சமூகம் ஒருவகையில் ஆரிய சமூகத்தைவிடவும் குரூரமானது என்பதைக் கால்டுவெல்லைக் கொண்டே நம்மால் மெய்ப்பிக்க முடியும். தமிழ்ச் சமூகம் தன் தலை நிமிர்வுக்கான கால்டுவெல்லின் ஒரு முகத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டது. அவருடைய இன்னொரு முகம் பறையர்கள் முதலான தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களே – வெள்ளாளர்களின் சகோதரர்களே என்று உறுதிபட மெய்ப்பித்துக் காட்டிய முகம். அந்த முகத்தைத்தான் அவர் மறைவுக்குப் பின் ஆதிக்கத் தமிழ்ச் சாதிகள் முற்றாக மறைத்துவிட்டன- ஒளித்து வைத்துவிட்டன. இன்றைய தமிழ் மக்களுக்கு, ஏன் அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்கும்கூட கால்டுவெல்லின் அந்த முகம் முற்றாகத் தெரியாது. தெரிந்துகொள்ள முயலவே இல்லை. அதை வெளிக் கொண்டுவரும் முயற்சியாகத்தான் கால்டுவெல் ஒப்பிலக்கணம் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

7. தமிழ்ச் சூத்திரர்கள் தங்களை மட்டுமே தமிழர்களாக நிறுவிக் கொண்டார்கள். பார்ப்பனர்களையோ தாழ்த்தப்பட்டவர்களையோ தமிழர்களாக அவர்கள் ஏற்கவில்லை என்னும் முறைகேட்டை கால்டுவெல் துல்லியமாக எடுத்து வைத்துத் தாழ்த்தப்பட்டவர்களும் தமிழர்களே என்று நிறுவுகிறார். அந்தப் பகுதியையும் அதன் நிறம் கசிந்த பல பகுதிகளையும் வெட்டியெறிந்துவிட்டே “தமிழர்கள்” அவர் நூலுக்கு மூன்றாவது பதிப்பைக் கொண்டு வருகிறார்கள். அவர் எடுத்துக் காட்டிய உண்மை மறைக்கப்பட்டுவிட்டதால், எப்போதும் போலவே வையாபுரிப் பிள்ளை தொகுத்த தமிழ் அகராதியில் “பார்ப்பானொழிந்த பறையனொழிந்த தமிழ் பேசுவோரே தமிழர்கள்” என்று குறிப்பிடும் பழைய முறையைப் பேணிக் கொண்டார்கள். இதை எதிர்த்து அண்மைக் காலங்களில் கிளர்ச்சி நடந்தது. உண்மையில் இந்தக் கிளர்ச்சி கால்டுவெல் காலந்தொட்டே நடந்திருக்க வேண்டும். அதை மறைத்த பெருமை இந்தச் சுரணையற்ற தமிழர்களையே சாரும்.

8. இதன் இன்னொரு தொடர் நிகழ்வாகக் கால்டுவெல் கூடுதல் தகவல் தருகிறார். தலித்துகளும் தங்களுக்குக் கீழாகத் தலித்துகளைப் பேணி வந்தார்கள் என்பதே அந்தத் தகவல். அதாவது பறையர்கள் தங்களை விடத் தாழ்ந்தவர்களாக செருப்பு தைப்பவர்கள், துணி வெளுப்பவர்கள் போன்றோரை ஒதுக்கி வைத்தனர் என்கிறார். ஆக, இந்தியாவில் ஒவ்வொருவனும் தனக்கொரு தலித்தை உருவாக்கிக் கொள்வதையே குறியாகக் கொண்டிருக்கிறான் என்றாகிறது. இது வர்க்கப் பிரச்சினையின் உள் மடிப்புகளில் படிந்திருக்கும் செல்லரிப்புச் சிதிலம். இந்த உள்வட்டச் சிதிலங்களைக் களையாமல் தலித்தியம் வெல்வதெப்போது?

9. தென்னிந்தியா முழுதுமுள்ள பெருநகரக் கண்டோன்மென்டுகளிலும் சந்தைகளிலும் பெருவாரியாகத் தமிழைக் கேட்கலாம் என்கிறார் கால்டுவெல். இப்படித் தமிழை ஒலிக்கச் செய்தவர்கள் படைப் பிரிவுகளிலும் வெள்ளையர் மனைகளிலும் பணியமர்த்தப்பட்ட, சிப்பாய்களாயிருந்த பறையர்கள்தாம். அண்மையில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து இது பற்றிய கூடுதல் விவரங்களும் கிடைக்கின்றன. சாதிக் கொடுமைகளுக்கு அஞ்சி படைப் பிரிவில் இருந்த பறையர்கள் தங்கள் குடும்பத்தையும் தங்களோடே அமர்த்திக் கொள்வார்கள் என்றும், இன்னும்கூடத் தமிழ் அவ்வாறு புழங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். இப்படிப்பட்டதொரு கொடும் தள்ளிவைப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கென்றே கால்டுவெல் எழுதிய “பறையர்கள் திராவிடர்களே, தோடர்களும் திராவிடர்களே” என்னும் பகுதிகளையும், திராவிடர்கள் “மலையிறங்கி வந்து அருள்வாக்கு சொல்லி மீண்டும் மலையேறும் தெய்வ வழிபாட்டினர்” – என்னும் உண்மைகளையும் முற்றாகக் களைந்துவிட்டுத் தங்களுக்குப் பிடித்த மாதிரி நூலைச் சிதைத்து வெளியிட்டுக் கொண்டனர்.

10. திராவிட மொழிகளில் தமிழ் தவிர மற்றவை சமஸ்கிருதத்தோடு ரசாயணக் கலவைக்கு உட்பட்டுவிட்டதையும் தமிழ் மட்டும் விதிவிலக்காய் இருப்பதையும் கால்டுவெல் சுட்டுகிறார். ஒரு மொழியின் எழுத்துப் பயன்பாட்டை அல்லது இலக்கியத்தை யார் வசப்படுத்துகிறார்களோ அவர்கள் அந்த மொழியைத் தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்கிறார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பார்ப்பனர்களே முதல் இலக்கியத்தைப் படைத்தார்கள். ஆகவே அவை சமஸ்கிருதமயமாயின. ஆனால் தமிழில் மூல இலக்கியங்கள் பார்ப்பனர்களுக்கு முன்பே தமிழர்களாலேயே படைக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து வந்த பார்ப்பனர்களின் பங்களிப்பு மூல இலக்கியங்களை மீறியதாக இயங்க முடியவில்லை என்கிறார். வள்ளுவர் திருக்குறளை இயற்றினார். அதற்குப் பரிமேலழகர் உரை எழுதினார். இதை “பறையராகக் கருதப்படும் வள்ளுவர் எழுதிய குறளுக்குப் பார்ப்பனராகிய பரிமேலழகர் உரையெழுதும்படியாகத்தான் பார்ப்பனியத் தாக்கம் தமிழை வந்தடைந்தது” என்கிறார். அதாவது முயன்றால் தனித் தமிழ் சாத்தியமே என்பது அவர் கண்டுணர்த்தும் உண்மை.

கால்டுவெல்லின் இனம் குறித்த இந்த ஆய்வின் இன்னொரு பக்கம் அடுத்த வாரத்தில்

——————-
தரவுகள்: பொ.வேல்சாமியின் கட்டுரை : தமிழ்நேயம் இதழ் 40
& கவிதாசரண்

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை