மக்களைத் திசை திருப்பும் கூட்டம்!

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

அக்னிப்புத்திரன்


திரு. வர்ணண் அவர்களுக்கு நன்றி…மீண்டும் ஒரு கட்டுரை எழுதுவதற்கும் இலங்கைப்பிரச்சினையில் உண்மையான நிலையை உலகுக்கு எடுத்துக் கூறவும் வாய்ப்பளித்திருக்கிறார்.

திரு. வர்ணன் தமது பெயருக்கு ஏற்றார் போல தமது கற்பனையான செய்திகளுக்கு நல்ல வர்ணனைகள் கொடுத்து மெருகேற்றி கொடுத்திருக்கிறார். ஆனால் படிப்பவர்கள் மட்டும் கொஞ்சம் கேனையர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும்.

திரு. வர்ணன் அரசியல் பேசவில்லை என்று கூறிவிட்டு தமது கட்டுரையில் முழுக்க முழுக்க அரசியல் பேசியிருக்கிறார்.

கலைஞர் அவர்களின் மீது தமது நெஞ்சத்தில் குடிகொண்டிருக்கும் வஞ்சத்தை அவர் அறியாமலே அவரது எழுத்துகள் வன்மம் காட்டி நஞ்சை கக்கியிருக்கின்றன.

சரி இனி வர்ணனின் கட்டுரையை வரிக்கு வரி பார்ப்போம்.

1. வர்ணனின் வசை: திரு அக்னிபுத்திரன் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையைப் படிக்கும் அன்பர்களுக்கு அது தன் தலைவனுக்காக உணர்ச்சிவசப்பட்ட ஒரு தொண்டன் எழுதியதாகத்தான் தெரியுமே தவிர நடுநிலையான தமிழரான ஒருவர் எழுதியதாகத் தெரியாது. ஏனென்றால் அவர் திரு கருணாநிதி செய்த முயற்சிகளைப் பட்டியலிட்டு இருக்கிறாரே ஒழிய அந்த முயற்சிகளுக்கு கிடைத்த பலன்கள் என்ன என்பது பற்றி ஒன்றும் இல்லை!

அக்னிப்புத்திரனின் பதில்: ஐயா…வருணனாரே…முதலில் என் கட்டுரை உங்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி எங்கே தம்மை போன்ற கூட்டம் இட்டுக்கட்டி உண்மைக்கு மாறாக கலைஞர் மீதும் திமுக மீதும் பரப்பும் அவதூறுகள் பொய்யானவை என்ற உண்மை உலகுக்கு தெரிந்துவிடுமோ என்ற பதைபதைப்பில் மறுப்புக்கடிதம் எழுதத் தூண்டியுள்ளதே அதுவே நேர்மைக்கும், உண்மைக்கும், தமிழனுக்கும் கிடைத்த வெற்றி.

அப்புறம் நான் உணர்ச்சிவசப்பட்டு கட்டுரை தீட்டியிருக்கிறேனாம். இங்கு யாரும் உணர்ச்சியும் படவில்லை.. யாரும் யாருக்கும் வசமும் படவில்லை. கலைஞரின் முயற்சிகளை மட்டுமே கூறியிருக்கிறேனாம். பலன்களைக் கூறவில்லையாம். கலைஞராவது முயற்சி பண்ணியிருக்கிறார். மற்றவர்கள் அதுகூட பண்ணவில்லையே வருணன். என்ன செய்வது?

நீங்க மகாத்மா காந்தி ரேஞ்சிக்குப் புகழ்ந்துள்ள நடிகர் திரு.எம்ஜிஆரும் தமிழகத்தின் முதல்வராகப் பத்தாண்டு காலத்திற்கு மேலாக இருந்தாரே அவர் இலங்கைப்பிரச்சினையில் சாதித்த பட்டியலையும் பலன்களையும் கொஞ்சம் பட்டியல் போட்டுக் காட்டி இருக்கலாமே!

திரு.எம்ஜிஆர் பத்தாண்டுக்கும் மேலே முதல்வராக இருந்தபோதே இலங்கைப்பிரச்சினையைச் சுமூகமாக முடித்திருக்கலாமே! ஏன் முடிக்கவில்லை அல்லது ஏன் அவர் முயலவில்லை? அப்போது அதிமுகவின் நெருக்கமான கூட்டாளி காங்கிரஸ்தானே மத்தியில் ஆட்சி புரிந்தது? இலங்கைப்பிரச்சினை நீடிக்க விடாமல் தமிழர்களுக்கு நல்லது செய்திருக்கலாமே! (அதையும் கொஞ்சம் சிந்தித்து கொஞ்சம் வர்ணனையும் சேர்த்து ஒரு மறுப்புக் கடிதம் போடுங்க அண்ணாச்சி)

சரி அதையும் விடுங்க வருணன்…(உங்க) அம்மா ஒரு பத்து வருஷம் பதவியில் இருந்து ஊழல் ஆட்சி நடத்தி உலகப்புகழ் பெற்றார்களே…அப்போது அவர் செய்த சாதனைகளை (ஊழலில் இல்லீங்க… இலங்கைப்பிரச்சினையில்தான்) கொஞ்சம் பட்டியல் போட்டு அதனாலே எல்லாம் ஏற்பட்ட பலனை விளக்கி வர்ணித்திருந்தால் வருணன் திறமையான வர்ணிப்பாளருன்னு சொல்லலாம்.

உடனே அடுத்த பதில் உங்களிடம் இருந்து சீறிப்பாய்ந்து வரலாம்… கர்நாடகத்திலே பிறந்த அம்மாவுக்கு ஆரம்பத்திலேயிருந்து தமிழர்களைப் பிடிக்காது! குறிப்பாக இலங்கைத் தமிழர்களை சுத்தமாகப் பிடிக்கவே பிடிக்காது… ஆரம்பத்துல இருந்து அம்மா தமிழர்களுக்கு எதிரான தமது கருத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்கறார். எனவே அவரை கணக்கில் சேர்க்கக் கூடாது என்று கூட சொல்லுவீர்கள். எடுத்துக்காட்டுக்கு அண்மையிலே உங்க அம்மா விடுத்த அறிக்கையை கூட சுட்டிக்காட்டுவீங்க…அதாவது,

“இலங்கைப்பிரச்சினை உள்நாட்டுப்பிரச்சினை அதுல நாம தலையிடக்கூடாது. போர் என்று வந்தால் பொதுமக்கள் சாகத்தான் செய்வாங்க” –என்று தமிழர்களின் படுகொலையை நியாயப்படுத்தி செல்வி ஜெயலலிதா பேசியதைச் சுட்டிக்காட்டி செல்வி ஜெயலிலதாவை இலங்கைப்பிரச்சினையிலிருந்து சுலபமாக வருணண் கழட்டிவிட நினைக்கலாம். அதற்கும் உண்ணாவிரத நாடகம் முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

2. வர்ணனின் வசை: “நீங்கள் எழுதிய கட்டுரையில் ஜெயலலிதாவைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். தமிழர்கள் பிரச்சினையில் இந்த அம்மா எங்கிருந்து வந்தார். அவருக்கும் தமிழர் பிரச்சினைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனென்றால் அவர் இதில் மாற்றி மாற்றி பல்டி அடித்துக் கருத்து எதுவும் கூறியதாகத் தெரியவில்லை”

அக்னிப்புத்திரனின் பதில்: பாவம் திரு. வர்ணின் நினைப்புக்கு அம்மா வைச்சுட்டாங்க ஒரு ஆப்பு. உண்ணாவிரதம் இருந்து அந்தர் பல்டி அடித்து வருணனின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் அம்மா! ஆமாங்க உங்க அம்மா இலங்கைப்பிரச்சினைக்கா உண்ணாவிரதம் இருந்தாங்களாம்! என்ன திடீர் பாசமழை? ஓ …தேர்தல் கால பாசமா? இப்படி மாறி மாறி பல்டி அடிக்கும் இவுங்க பத்தாண்டு காலம் முதல்வராக இருந்து பவிசு காட்டிய போது இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே! (அதையும் கொஞ்சம் சிந்தித்து, கொஞ்சம் வர்ணனையும் சேர்த்து ஒரு மறுப்புக் கடிதம் போடுங்க வருணன் அண்ணாச்சி)

3. வர்ணனின் வசை: இலங்கைத் தமிழரைப் பற்றி பேசும் யாராலும் திரு எம் ஜி ஆரை மறக்க முடியாது. 1971 இலிருந்து 5 முறை முதல்வர் வகித்த ஒருவர் ஏதோ நேற்றுதான் தமிழ் மக்கள் பிரச்சினை தொடங்கியது மாதிரி பாவ்லா காட்டி வருவதை வக்கலாத்து வாங்குகிறார். எனக்குத் தனிப்பட்ட முறையில் முதல்வர் மீது வருத்தமோ கோபமோ இல்லை. ஆனால் ஒரு முதல்வர் தனக்கு வயதான போதும் தனக்குக் கீழ் எத்தனையோ பேர் இருந்தும் தள்ளாத வயதில் நாட்டுக்கு உழைப்பதாக்கக் கூறிக்கொண்டு இவர் நடத்தும் நாடகத்தை இந்த உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது!

அக்னிப்புத்திரனின் பதில்: திரு. எம்ஜிஆரை யாரும் மறக்க முடியாதுதான். அரசியல் மாமேதை (உங்க) அம்மாவை தமிழகத்திற்கு மட்டுமல்ல அகில உலகத்திற்கே (???) அடையாளம் காட்டிய அற்புத மனிதர் அல்லவா அவர். இந்த சாதனையை தவிர உருப்புடியாக எந்த சாதனையும் செய்யாத அவர் இலங்கைப்பிரச்சினையில் என்னத்தை செய்துவிட்டார் என்பதை வர்ணன் வந்துதான் விளக்க வேண்டும்.

1971 முதல் 5 முறை கலைஞர் ஆட்சியில் இருப்பதாக கூறும் திரு. வர்ணன் இடையில் இருபதாண்டுக் காலத்தை வசதியாக மறந்து விட்டார். தமிழகத்தின் இருண்ட காலம் என்பதால் அதை மறந்துவிட்டார் போலும். அந்த இருபதாண்டுக் காலமும் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் யாதொரு முன்னேற்றமும் வளர்ச்சியும் அடையாமல் ஊழலில் கொடிகட்டிப் பறந்த காலம். இந்தியா டூடே மாத இதழ் கூட ஒரு கருத்துக்கணிப்பில் தமிழகம் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்றும் பீகார் மாநிலத்தைவிட ஆட்சி மோசம் என்றும் அந்தக் காலத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அந்த இருபது ஆண்டு காலமும் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி அதிமுக! அதிமுக ஆட்சி செய்த காலம் தமிழகத்தின் கற்காலம். குறிப்பாக அம்மாவின் ஆட்சி ஊழலிலும் சர்வாதிகாரத்திலும் கொடி கட்டி பறந்த காலம். அதனால்தான் நடிகர் ரஜனிகாந்த், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாதுன்னு அப்போது கூறினார்.

அப்போது எல்லாம் இம்மாதிரியான வருணன்கள் தோன்றவில்லை…எந்தக்கேள்வியையும் கேட்கவில்லை. இப்போது இந்த வர்ணன் கேள்வி கேட்கிறார். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பார்கள். கலைஞர் தாய்மை உள்ளத்துடன் மென்மையாக எந்தப் பிரச்சினையையும் கையாள்வது பித்தலாட்டதனமான ஏமாற்றிப்பிழைக்கும் எத்தர்களுக்கு எகத்தளமாகப் போய்விட்டது.

தள்ளாத வயதில் கலைஞர் நடத்தும் நாடகத்தை உலகம் வேடிக்கை பார்க்கிறதாம்…இளையர்களுக்கும் திமுகவின் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமாம். இந்தியாவின் எந்த மாநிலத்தின் முதல்வரையும் விடவும் மிகவும் சுறுசுறுப்பாக கலைஞர் மக்கள் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார். அவரின் அரசியல் பணி விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதால்தான் இத்தனை காழ்ப்புணர்ச்சியாளர்கள் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டு கூட்டம் கூட்டமாகப் பொய்மூட்டைகளை சற்றும் கூச்சமின்றி அவிழ்த்து விட்டுக் கொண்டு திரிகின்றனர்.

வருணன் முதல்வர் பதவிக்கு திமுகவில் கலைஞரைத் தவிர்த்து மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறார். ஆலோசனையும் தருகிறார். உங்கள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும். வரும் 2011-லிருந்து ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்பார். அப்போது உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும் வர்ணன். கவலைப்படாதீர்கள்!

4. வர்ணனின் வசை: திரு அக்னிபுத்திரன் கட்டுரையில் எங்கே தன் தலைவரின் ஆட்சி போய்விடுமோ என்ற கவலை தெரிகிறது. உண்மைதான். தன் நாட்டில் இருக்கும் தமிழருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் ஒரு முதல்வரால் அடுத்த நாட்டு மக்கள் எப்படிப் போனால் என்ன என்று நினைப்பதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அந்த நாட்டு மக்களுக்காக தன் உயிரையே தருவேன் என்று கூறிவிட்டு தன் கையில் வைத்திருக்கும் சட்டம் ஒழுங்குக்காக உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறுகிறாரே. அதுதான் அவரது கதை வசனத்தின் உச்சக்கட்டம்.தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழை தனது வருமானம் ஈட்டித் தரும் (தொல்காப்பியப் பூங்கா போன்ற) தொழிலாளியாக அல்லவா மாற்றி விட்டார்.

அக்னிப்புத்திரனின் பதில்: உண்மைதான். கலைஞர் ஆட்சி தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். தமிழகத்திற்கு மீண்டும் ஒர் இருண்டகாலம் வந்துவிடக்கூடாதே என்று எண்ணத்தில்தான் அவ்வாறு விரும்புகிறோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் உருப்படியான திட்டங்கள் ஏதும் நடைபெற்றுயிருந்தால் வர்ணன் அது பற்றி தனியாக ஒரு கட்டுரை தீட்டலாமே…உருப்படியாக ஒரு மேம்பாலமாவது கட்டி, போக்குவரத்து நெரிசலைக் குறைத்தார்களா? ஏதாவது வளர்ச்சித் திட்டங்களை தமிழகம் கண்டதுண்டா? திமுகவின் வளர்ச்சிப்பணிகளை எடுத்துக்கூறினால் ஏடு கொள்ளாது. சொன்னால் சொல்லிமாளாது! அதற்காகத்தான் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று கூறுகிறோம். தமிழ்நாட்டின் மீதும் தமிழன் மீதும் உண்மையான அக்கறை இருப்பதால்தான் கவலைப்படுகிறோம்.

தமிழ்நாட்டில் தமிழருக்குப் பாதுகாப்பு இல்லையாம். எந்த தமிழனுக்கு எங்கே பாதுகாப்பு இல்லை திரு. வருணன் அவர்களே? எந்த ஆட்சியிலும் மாற்றுக்கருத்து கொண்டவர்களால் தூண்டிவிடப்படும் கலவரங்களும் போராட்டங்களும் இருக்கக்தான் செய்யும். கலவரம் விளைவிப்பவர்களை போலீஸ் தடியடி செய்து விரட்டுதும் சகஜமான செயல்தானே! இப்போது மட்டும்தான் கலவரங்கள் மற்றும் போலீஸ் நடவடிக்கைகளை நீங்கள் கேள்விப்படுகிறீர்களா திரு. வர்ணன்? அப்படி என்றால் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் முதல் பத்திரிக்கை நிருபர்கள் வரை அடித்து உதைத்த செயலை எல்லாம் வசதியாக மறந்து விட்டீர்களா?

அடுத்து தமிழை வைத்து கலைஞர் பிழைக்கிறாராம். வேறு சிலர் போல் ஊரை அடிச்சி உலையில் போட்டு வருமானம் ஈட்டாமல் தமிழை வைச்சுதானே கலைஞர் வருமானம் ஈட்டிக்கொள்கிறார். அதனால் சகாவரம் பெற்ற குறளோவியம், சங்கதமிழ், தொல்காப்பிய பூங்கா போன்ற இலங்கியங்கள் நமக்குக் கிடைக்கின்றனவே. அதில் என்ன குறை கண்டீர்கள்?

திமுக அறுதி பெரும்பான்மை பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி வர இயலாத நிலையிலும் சூழலுக்குட்பட்டு முதல்வர் கலைஞர் தம்மால் முடிந்த அளவு தம் சக்திக்குட்பட்டு அனைத்தையும் செய்துகொண்டுதான் வருகிறார். தமிழர்களே…ஏமாற்றுக்காரர்களால் தூண்டி விடுப்படும் உணர்ச்சிகளுக்கு இடமளித்துவிடாமல் கலைஞரின் கரங்களைப் பலப்படுத்துங்கள்.

(திரு. வர்ணனின் கட்டுரைக்கு, வரிக்கு வரி பதில் அடுத்த வாரமும் தொடரும்)
-அக்னிப்புத்திரன்


agniputhiran@yahoo.com

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்