இடதுசாரி இரட்டை டம்ளர்

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


“சோவியத் ஏகபோகத்துக்கு எதிராக அமெரிக்கா ராஜ தந்திர வியூகங்களில் மேம்பட்டு விளங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.”
-ஹென்றி கிஸ்ஸீஞ்சரிடம் சீன அதிபர் டெங் ஸியோ பிங் 1974 இல்1

பொதுவாகவே இந்திய இடதுசாரிகளுக்கு ஒரு இரட்டை நிலைபாடு உண்டு. அவர்களது சித்தாந்த தாய்நாடாக விளங்கும் பூலோக கம்யூனிஸ சுவனங்களுக்கு ஒரு நீதியையும், ஒரு பார்வையையும், அவர்களது பிறந்த தாய்நாடான பாரதத்துக்கு வேறொரு நீதியையும் வேறொரு பார்வையையும் முன் வைப்பார்கள். இதில் அவர்கள் கூச்சப்படமாட்டார்கள். தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் பிரச்சனையா – அதில் ஆக்கிரமிப்பாளர் யார் என்பதற்கு பதில் நம் உள்ளூர் மார்க்சிய முன்னாள் எம்.எல்.ஏ முதல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக அறிவுஜீவி வரை (இடைப்பட்ட எல்லா இடதுசாரி வகையறாக்களையும் சேர்த்து) எவ்வித தயக்கமும் இல்லாமல் பளிச்சென வரும். ஆக்கிரமிப்பு செய்வது தென் கொரியாதான். ஜனநாயக நாடு வடகொரியாதான். ஆனால் 1962 இல் நடைபெற்ற சீன ஆக்கிரமிப்பை – மன்னிக்கவும், மார்க்சிய பரிபாஷையில் அது சீன-இந்திய எல்லை பிரச்சனை-யைப் பொறுத்தவரையில் சீதாராம் எச்சூரி ஆகட்டும் காம்ரேட்டு தம்பதிகளான காரட்டுகள் ஆகட்டும் – ஆக்கிரமிப்பு நாடாக சீனாவை சொல்லவே மாட்டார்கள். இன்னும் சொன்னால் மதச்சார்பின்மைக்காக அவர்கள் அவ்வப்போது புகழும் நேரு கூட வில்லனாகிவிடுவார். அண்மையில் அரங்கேறிய அணு ஆயுத ஒப்பந்த எதிர்ப்பிலும் இந்திய இடதுசாரிகளும் அவர்களது அறிவுசீவி எழுத்தாளர்களும் எழுப்பிய அமெரிக்க எதிர்ப்பு கூத்துக்களுக்கு அப்பால் விசுவரூபமெடுத்து தலைவிரித்தாடியது என்னவோ இந்த இடதுசாரி இரட்டை டம்ளர் முறைதான்.
இதற்கான சிறந்த உதாரணமாக, வெளிப்படையாக தன்னை மார்க்சிய கட்சியின் உறுப்பினராக காட்டிக்கொள்ளாதவரும், 120 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியம் உடைய ‘தி ஹிண்டு’ பத்திரிகையின் உயர்மட்ட ஆசிரியக்குழு உறுப்பினரும், முக்கியமான மனிதநேய அறிவுசீவி என தன்னைக் காட்டிக்கொள்பவருமான சித்தார்த் வரதராஜனை எடுத்துக்கொள்ளலாம். இந்திய பத்திரிகையாளர்களில் ஒரு முக்கிய இடத்தை வகிப்பவர் சித்தார்த் வரதராஜன். மேல்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பு, இடதுசாரி சிந்தனை குஜராத் முதல் காஷ்மிர் வரை மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர். ஆனால் என்ன அந்த குரல் ரொம்ப செலக்டிவ்வான குரல். திபெத்தில் ஏறக்குறைய ஐம்பதாண்டுகளாக நடக்கும் இனப்படுகொலை அல்லது பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள் ஆகியவை அன்னார் கண்களில் படாது. இன்னும் சொன்னால் சீனா திபெத்திய பண்பாட்டை அழிக்கும் முயற்சிகளுக்கு அவரது நாளேடு கைதட்டி ஆதரவளிக்கும். ஆனால் அவர் குஜராத் ‘இனப்படுகொலையை’ குறித்து தார்மிக ஆத்திரம் பொங்க நூல் எழுதுவார். எழுநூற்று சொச்சம் முஸ்லீம்களும் 250 இந்துக்களும் இறந்த அந்த துயர நிகழ்வுகள் இனப்படுகொலைகளா? கலவரங்களா? என்று கேட்டால் பதில் இருக்காது. அன்னார் அணு சக்தி விவகாரங்களில் சமர்த்தர். சித்தார்த் வரதராஜனின் பார்வையும் இலக்கண சுத்தமான அதே இடதுசாரி வகையறா பார்வைதான்.
அண்மையில் சீனாவின் வளர்ச்சியை ஆராயும் எனும் இண்டர்நெட் வானொலி அமைப்பான ஆசியா-2025 நடத்திய கலந்துரையாடலில் பங்குபெற்ற சித்தார்த் வரதராஜன் அமெரிக்க-இந்திய அணு உறவு முதல் இந்தியாவின் வெளியுறவுகள் சீனாவைப் பொறுத்தவரையில் எப்படி இருக்கவேண்டும் என்பது வரை மிக விரிவாக கலந்துரையாடலில் கூறிய கருத்துகளை படிக்க நேர்ந்தது. அண்மைக்கால வரலாற்று நிகழ்வுகளைக் கூட எப்படி சாதுரியமான வார்த்தைகளில் மறைக்க முடியும், எப்படி உயர்ந்த இலட்சியங்களின் போர்வையில் மிகவும் மோசமான தேசதுரோக நிலைப்பாட்டினை எடுக்க முடியும் என்பதற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக அந்த பேட்டி அமைந்துள்ளது. நமது அறச்சீற்றத்துக்கு தீனி போட்டு இடதுசாரிகளின் கவர்ச்சிகரமான கோஷங்களை முன் வைத்து எப்படி தேசத்தின் அடிப்படை பாதுகாப்பு குறித்து கூட கவலை இல்லாமல் ஒரு இடதுசாரி அறிவுசீவி எப்படி இடதுசாரி இரட்டை டம்ளர் முறையினை ஒரு அறிவுசீவி அரங்கேற்றுகிறார் என்பதனை அவரது வாதங்களை உண்மை சூழ்நிலை மற்றும் தரவுகளின் அடிப்படையில் சிறிது பகுத்தாய்ந்து பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்,2

இதோ இனி வரதராஜன் கூறுவதைப் பார்க்கலாம்:

“இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து இராணுவ பயிற்சிகள் செய்வதை சீன மக்கள் பார்க்கும் போது நினைப்பார்கள் ‘ம்ம் நம்முடைய நலன்களுக்கு எதிராக அமெரிக்க வியூகத்தில் இந்தியா பயன்படுத்தப்படுகிறது’ என்று. இந்த இடத்தில்தான் இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சீனாவுடன் மோதல் போக்கில் செல்ல இந்தியா விரும்பவில்லை. இந்தியாவும் சரி சீனாவும் சரி இதை செய்ய விரும்பவில்லை. உண்மையில் சீன இந்திய உறவுகள் மேம்பட்டவாறு உள்ளன. 1989 இல் இருந்தே அவை மேம்பட்டவாறுதான் உள்ளன….” 2
அவர் மேலும் கூறுகிறார்:
“நான் என்ன நினைக்கிறேன் என்றால், you know, அமெரிக்காவில், அமெரிக்க நிர்வாகத்தில் வலதுசாரிகள் உள்ளனர். இந்தியாவிலும் பழைய-பகைப்பார்வை கண்ணாடி மூலமாக சீனாவைப் பார்க்கும் போக்கு உள்ளது. அவர்களை வேண்டுமென்றால் நியோ-கன்ஸர்வேட்டிவ்கள்(neocons) என நீங்கள் அழைக்கலாம், எதுவானாலும் அப்படி ஒரு வலதுசாரி கூட்டம் இந்தியாவில் உள்ளது. அந்த கூட்டம் சீனாவையும் இந்தியாவையும் 3000 ஆண்டுகள் பழமையான எதிரிகளாக பார்க்கிறார்கள். இது உண்மையிலேயே வரலாற்றுப்பூர்வமானது அல்ல. மேலும் நீங்களே கூறியது போல1962 இல் நாங்கள் போட்டுக்கொண்ட சண்டைதான் 3000 ஆண்டுகளில் ஒரே யுத்தமாகும். ஆக இரண்டு நாடுகளிலும் (அமெரிக்கா, இந்தியா) இந்த வலதுசாரிகள் இருக்கின்றனர். அவர்கள் சீனாவை அடக்கும் கோட்பாட்டினைக் கொண்டிருக்கின்றனர்.”2
ஆக, அவர் கூறுவதை மூன்றாக பகுக்கலாம்:
1. சீன மக்கள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துகிற மாதிரி அமெரிக்காவிடம் இந்தியா உறவு ஏற்படுத்தக்கூடாது.
2. சீன- இந்திய உறவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது.
3. அமெரிக்க இந்திய வலதுசாரிகள் சீனாவை அடக்க சதி செய்கின்றனர் அதிலும் இந்திய வலதுசாரிகள் வரலாற்று அறிவற்ற விதத்தில் 3000 ஆண்டுகளாக சீனாவும் இந்தியாவும் எதிரிகள் என கருதுகின்றனர்.

சீன மக்கள் மனதில் சஞ்சலத்தையும் சந்தேகத்தையும் இந்தியா அமெரிக்க உறவுகள் உருவாக்கக் கூடாது என அறிவுரை வழங்கும் சித்தார்த் வரதராஜன் அதே விதமாக சீனாவும் தன் நடவடிக்கையில் இருக்க வேண்டுமென வற்புறுத்தவில்லை ஏன் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக இந்தியாவின் பூகோள-அரசாண்மைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக உறவுகளை உருவாக்கிவருவதை குறித்து ஒரு சிறு முனகலைக் கூட வெளிப்படுத்தவில்லை என்பதனை கவனியுங்கள். டிசம்பர் 2006 இல் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இராணுவப்பயிற்சிகளை மேற்கொண்டன. உலகம் முழுவதிலும் இது ஒரு ஆச்சரியத்தை
ஏற்படுத்தியது. (ஆனால் நம் நாட்டு ஊடகங்களில் இது பெரிது படுத்தப்படவில்லை) ஏனெனில் சீன இராணுவத்தினர் மற்றொரு நாட்டு இராணுவத்துடன் சீனாவுக்கு வெளியே இணைந்து பயிற்சிகள் மேற்கொள்வது மிகவும் அரிதான விசயமாகும்.3 நட்பு-2006 என்ற பெயரில் பயங்கரவாதத்துக்கு எதிரான முயற்சி எனும் போர்வையில் இது நடத்தப்பட்டாலும் இந்த பயிற்சியின் பரிமாணங்கள் உள்நாட்டு பயங்கரவாதத்தை தாண்டி இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் என்பது பாகிஸ்தானிய பாதுகாப்புவியல் ஆராய்ச்சியாளர் ஹஸன் அக்ரியின் வார்த்தைகளில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் கூறுகிறார்: “இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் படித்துக் கொள்ளலாம். சீனர்கள் மலைப்பகுதி போரில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் என்பதுடன் பனிபடர்ந்த போர்களத்திலும் அனுபவம் வாய்ந்தவர்கள். இவற்றினை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாகிஸ்தான் ஆண்டுகளாக தான் பெற்றுள்ள அனுபவத்தை சீனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.” 3 இந்த பயிற்சிகள் குறித்து மேஜர் ஜெனரல் லியு மிங் ஜியாங் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ பாணியில் “எங்கள் இந்த பயிற்சியால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் கிடையாது. இது எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல” என்று சொன்னாலும் சீன இராணுவ செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் ஆராய்ச்சியாளர் கிறிஸ்டியன் லி மயெர் சொல்கிறார்: “இராணுவ உறவுகள் வலிமை அடையும் போது இந்திய பாகிஸ்தான் பிரச்சனைகளில் சீனா பாகிஸ்தானுக்காக தலையிடும் நிலை வந்தால் அது இந்தியாவுக்கு தலைவலிதான்.” 3
இது எத்தனை உண்மை என்பதனை 1971 போரின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைகளை பார்த்தாலே விளங்கும். ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா போரில் இறங்காததற்கு ஒரே காரணம் குளிர்கால இமாலய பாதைகள் சீன இராணுவ இயக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிட்டதுதான் என்கிறார் பாகிஸ்தானிய இராணுவ அதிகாரி ஹ¤மாயூன் அமின்4. ஆக, இன்றும் தொடரும் பாகிஸ்தானிய-சீன இராணுவ தொடர்புகள் இந்தியாவுக்கு எத்தகைய ஐயங்களை எழுப்ப வேண்டும்?
மட்டுமல்ல பாகிஸ்தானுக்கு அணு தொழில்நுட்பங்களை அளிப்பதில் சீனா தயக்கமே காட்டுவதில்லை. அது இன்றைக்கும் தொடர்கிறது. இந்தியாவை குறி வைக்கும் பாகிஸ்தானிய அணு ஆயுத ஏவுகணைகள் சீன தயாரிப்புகள். சீனா பாகிஸ்தானுக்கு உதவுவதில் இரட்டை நன்மையை காண்கிறது. சீன உள்நாட்டு இஸ்லாமிய பிரிவினைவாதிகளை அது சமாதானப்படுத்துவதுடன் தென்கிழக்காசிய பிராந்திய வல்லரசாக இந்தியா வளவிடாமல் தடுக்கவும் அது உதவுகிறது. சீனா பாகிஸ்தானுக்கு அளித்துவரும் ஏவுகணை தொழில்நுட்ப உதவி வர்த்த ரீதியானதல்ல அதைவிட அது சீனாவின் பிராந்திய வியூக அமைப்புக்கு உதவுவதற்காகவே வழங்கப்படுகிறது.5 பிராந்திய மேலாண்மை மட்டுமல்ல இந்தியாவுக்கு ஒரு மாற்றாக இருக்கவும் இது செய்யப்படுகிறது. ஆக, உண்மையில் அமெரிக்க-இந்திய அணு ஒப்பந்தம் சீனாவை அடக்க கொண்டு வரப்பட்டதோ இல்லையோ ஏறக்குறைய 40 ஆண்டுகளாக சீராக பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவை அடக்க மட்டுமல்ல ஆக்கிரமிக்கவும் தங்களை பரஸ்பர உதவியுடன் தயார்படுத்திக்கொண்டு வருகின்றன. இது குறித்து ஒரு வார்த்தை கூட வரதராஜனுக்கு பேச முடியவில்லை.. இந்தியர்களிடையே அது உருவாக்கும் மன சஞ்சலத்தை விடுங்கள் – சீன-பாகிஸ்தான் உறவுகளால் இந்திய பாதுகாப்புக்கு ஏற்படும் யதார்த்தமான அபாயங்கள் குறித்து கூட அவருக்கு கவலை இல்லை. ஆனால் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். அதன் வெளியுறவுகள் சீன மனத்தை மென்மையாகக் கூடத் தீண்டிவிடக்கூடாது.

அடுத்ததாக சீன-இந்திய உறவுகள் உண்மையிலேயே மேம்பட்டுக்கொண்டு வருகின்றனவா? அப்படித்தான் பிரச்சாரம் செய்கிறார்கள் இடதுசாரிகளும் அவர்கள் தயவில் பரம்பரை-பினாமியாக பணியாற்றும் இந்தியாவின் முதல் நியமிக்கப்பட்ட பிரதமமந்திரியும். ஆனால் உண்மை என்ன? அருணாச்சல பிரதேசம் மற்றும் இமாலய பிரதேசங்களில் ஏற்படும் அதிவிரைவு வெள்ளப்பெருக்குகள் சீனாவின் வசம் இருக்கும் திபெத்திய பிரதேசத்தில் உள்ள ஏரியானால் ஏற்படுகின்றன. இதற்கான காரணங்கள் இந்திய இராணுவ அதிகாரிகளை உஷார்படுத்தியுள்ளன. ஆகஸ்ட் 1 2000 அன்று இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் 200 இந்தியர்களை பலி கொண்டது. இதற்கு காரணமாக இந்திய பகுதிகளில் ஏற்படும் இயற்கை வெள்ளப்பெருக்கினை சீனா காரணமாக கூறியது. இந்நிலையில் இண்டியா டுடே பத்திரிகை இந்த வெள்ளப்பெருக்கு குறித்து இஸ்ரோவின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. சீனப்பகுதியில் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சீனர்களால் அணைக்கட்டுகளில் நிரம்பிய வெள்ளம் திறந்துவிடப்பட்டதே இதற்கு காரணமாகும்.6 அதனை அவர்கள் முறைப்படி இந்தியர்களிடம் தெரிவித்திருந்தால் இதனை தடுத்திருக்கலாம். இதைத் தொடர்ந்து இந்தியா சீனாவிடம் தரவுகளை கேட்டபோது அவற்றைக் கொடுக்க சீனா மறுத்துவிட்டது. இந்த பிரச்சனைகள் பூதாகரமான பின்னர் (தேசிய பிரக்ஞையில் இவை உறைக்கவே இல்லை. ஆனால் அருணாச்சல பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய பிராந்தியங்களில் இது முக்கிய ஜீவாதார பிரச்சனை ஆனதுடன் இந்தியா டுடே முந்தைய மானுட இழப்பில் சீனாவின் உதாசீனத்தின் பங்கினை வெளிப்படுத்தியதால்)அண்மையில் இவ்வாறு அணைக்கட்டு வெள்ளம் திறந்துவிடப்படுவதை சீனா அறிவித்தது. ஆனால் அதிலும் சீனாவின் எல்லை விஸ்தீகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஆபத்துக்களை குறித்து இந்திய இராணுவத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.மேலும் பிரம்மபுத்திர நதியின் சீனபகுதியில் இந்திய எல்லைக்கு மிக அருகில் கட்டப்பட்டு வரும் அணை (The Tsangpo project) அதன் விளைவாக இந்தியாவில் ஏற்படுத்த முடிந்த நாசம் ஆகியவையும் இந்தியாவுக்கு பிரச்சனையாகியுள்ளன. “தெற்காசியாவில் சீனாவால் செய்யப்பட்ட யுத்த பிரகடனமாக இந்த அணைக்கட்டு திட்டம் விளங்குகிறது.” என்கிறது ஒரு அறிக்கை.7
2006 நவம்பரில் சீன தலைவர் ஹ¤ ஜிண்டோ இந்தியா வருவதற்கு முன்னதாக இந்தியாவிற்கான சீன தூதர் ஸன் யூக்ஸி அருணாச்சல பிரதேசம் முழுவதையும் சீன பிரதேசம் என சொந்தம் கொண்டாடினார் . “எங்கள் நிலைப்பாடு என்னவென்றால் அருணாச்சல பிரதேஷ் முழுவதும் சீனாஉக்கு சொந்தமானதே. த்வாங்க் அதில் ஒன்றுதான். ஆனால் அந்த மாநிலம் முழுவதும் சீனாவுக்கு சொந்தமானது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு”8 மே 2007 இல் 107 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் சீன பயணம் ரத்து செய்ய வேண்டியதாயிற்று, காரணம் சீனா அருணாச்சல பிரதேசத்தை சார்ந்த அதிகாரிகளுக்கு விசா வழங்க மறுத்துவிட்டதே ஆகும். ஏனென்றால் அவர்கள் சீன பிரஜைகளாம். சட்டவிரோதமாக இந்திய ஆக்கிரமிப்பில் இருக்கிறார்களாம்.9 இவ்வாறு 1960களில் தொடங்கிய இந்திய நிலப்பரப்பின் மீதான ஆக்கிரமிப்பு கனவுகள் இன்றைக்கும் சீனாவால் தொடரப்படுகின்றன. இந்திய நிலப்பரப்பின் மீது ஆக்கிரமிப்பு மட்டுமல்ல இந்திய பிராந்தியங்களில் உயிரிழப்பையும் சொத்து சேதத்தையும் சீனா உருவாக்கி வருகிறது. ஆனால் எவ்வித கூச்சமும் இல்லாமல் சித்தார்த் வரதராஜன் சொல்கிறார் இந்திய சீன உறவுகள் 1989 இல் இருந்து மேம்பட்டு வருகின்றன என்று.
அடுத்ததாக இந்திய வலதுசாரிகள் குறித்து அவர் கூறுகிற சித்திரத்துக்கு வருவோம். உண்மையில் அமெரிக்காவின் அதீத வலதுசாரிகள் இந்திய ஆதரவாளர்கள் அல்ல. இந்தியாவின் வலதுசாரிகளாக சித்தார்த் வரதராஜன் போன்றவர்களால் காட்டப்படும் இந்து தேசியவாதிகளுக்கும் அமெரிக்காவின் வலதுசாரிகளுக்கும் ஏன் பாப்டிஸ்ட் சபையை உந்து சக்தியாக கொண்ட ரிப்பப்ளிக்கன்களுக்குமே கூட பல அடிப்படை கோட்பாட்டு வேறுபாடுகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் நிச்சயமாக வலதுசாரியாக கொள்ளத்தக்க ஹென்றி கிஸ்ஸிஞ்சர்தான் 1971 இந்தோ-பாகிஸ்தானிய போரின் போது சீன-அமெரிக்க அணியை இந்தியாவுக்கு எதிராக வலுப்படுத்தியவர். இன்றைக்கும் அமெரிக்க வலதுசாரிகளான பாப்டிஸ்ட் எவாஞ்சலிக்க சக்திகள் தென்கிழக்காசியாவில் அமெரிக்க சீன உறவினை அமெரிக்க இந்திய உறவைக் காட்டிலும் அதிகமாக விரும்பும். (இந்தியாவின் பல இடதுசாரி அரசு சாரா அமைப்புகள் அமெரிக்காவின் வலதுசாரி எவாஞ்சலிக்கல் அமைப்புகளுடன் வலுவான தொடர்புள்ளவை என்பது அப்படி ஒன்றும் முரணான விஷயமில்லை., ஏனெனில் அவை பொது எதிரியாக இந்துக்களை காண்கின்றன.) மேலும் இந்து தேசியவாதிகள் எவருமே சீன-இந்திய பகைக்கு 3000 ஆண்டுக் காரணியை கூறியதில்லை – உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடிய இந்திய-சீன போரின் போது கூட அவர்கள் அவ்வாறு கூறியதில்லை. உதாரணமாக குருஜி கோல்வல்கரை எடுத்துக்கொள்ளலாம். சீனா ஆக்கிரமிப்பாளனாக மாறியதற்கான காரணத்தை அவர் பின்வருமாறு வர்ணிக்கிறார்: “பௌத்த சமய நாடான பழைய சீனா பல்லாண்டுகளுக்கு முன்னாலேயே இறந்துவிட்டது என்பதை நாம் மறந்துவிட்டோம். ரஷிய மந்திரவாதி அந்த சடலத்துக்குள் பிசாசு ஒன்றை நுழைத்து அதனை பொல்லாத சைத்தானாக மாற்றிவிட்டான். அதன் பேயாட்டத்தைதான் நாம் இன்று எல்லையில் பார்க்கிறோம்.”10 ஆக, சீனாவுக்கும் இந்தியாவுக்குமான இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நல்லுறவை கெடுத்தது சில ஆண்டுகளாக அங்கே உட்புகுந்த கம்யூனிசம் என்பதே இந்து தேசியவாதிகளின் பார்வை ஆகும். ஆனால் அப்படி குறிப்பிடுவதற்கு பதிலாக இந்தியாவின் சீன எதிர்ப்பாளர்கள் ஏதோ வரலாற்று அறிவு இல்லாதவர்களாக ஒரு சர்வதேச கலந்துரையாடலில் குறிப்பிடும் சித்தார்த் வரதராஜனின் நேர்மைத் திறத்தை என்னவென்பது!
இப்படியெல்லாம் கதைக்கும் சித்தார்த் வரதராஜன் இந்தியா செஞ்சீனத்துடனும் பாகிஸ்தானுடனும் ஈரானுடனும் நல்லுறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திவிட்டு பின்னர் இந்தியா ஜப்பானுடனோ, ஆஸ்திரேலியாவுடனோ அல்லது அமெரிக்காவுடனோ நல்லுறவு கொள்வதைக் குறித்து பேசும் போது மட்டும் கூறுகிறார்: “ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் ஆசிய பகுதியில் எந்த மதிப்பீடுகளினை முன்னிறுத்துகின்றன? ஜனநாயகம், நாடுகளுடனான உறவுகள், ஏற்புத்தன்மை (democracy and diplomacy and inclusiveness ) என்பது போன்ற மதிப்பீடுகளுக்காகவா அவை உள்ளன? அல்லது
ஏகபோகம், இராணுவமயமாக்கல் ஆகியவற்றைக் குறிக்கின்றனவா?” ஏனென்றால் அவர் புளகாங்கிதம் அடையும் பாகிஸ்தான், சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் democracy and diplomacy and inclusiveness கொடி கட்டி பறக்கிறது பாருங்கள்.
ஆனால் சித்தார்த் வரதராஜன் இப்படியெல்லாம் தன் சித்தாந்த தாய்நாடான சீனாவுக்காக தன் தாய் பிறந்த நாட்டை விட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும் போது சீனாவோ மிகத்தெளிவாக இயங்குகிறது. ஆசியாவில் சீனாவே பிரதான சக்தியாக திகழ 2005 இலேயே அமெரிக்காவுடன் அணு சக்தி தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.11 அமெரிக்க சீன இராணுவ ஒருங்கிணைப்பை அதிகரிக்க இரு நாடுகளுக்கிடையே இராணுவ ஹாட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீனா மற்றொரு நாட்டுடன் இராணுவ ஹாட்லைன் ஏற்படுத்தியுள்ளது இதுவே முதல்தடவையாகும். நவம்பர் 7 2007 முதல் செயல்படும் இந்த இராணுவ ஹாட்லைன் குறித்து செஞ்சீன அறிக்கை சொல்கிறது : “இது அமெரிக்க சீன இராணுவ நம்பிக்கைகளை பரஸ்பரம் மேம்படுத்தும்,…மேல்மட்ட இராணுவ பரிமாற்றங்களுக்கு இது உதவும்.”12
ஆக, இந்திய இடதுசாரிகளின் சீன ஆதரவு அமெரிக்க எதிர்ப்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக விளங்கும் சித்தார்த் வரதராஜனின் வாதங்கள் செயலாக்கப்படும் போது (பலமற்ற இன்றைய மத்திய அரசு இடதுசாரிகளின் கையில் பொம்மையாக திகழ்வதைப் போல) என்ன நிகழும்? அமெரிக்க-சீன-பாகிஸ்தானிய உறவு பலப்படும். நாளைக்கு இந்தியா மீது பாகிஸ்தானோ சீனாவோ ஏன் பங்களாதேஷோ கூட ஒரு தாக்குதலை நிகழ்த்தினால் இந்தியாவின் பதிலடியை தவிர்க்கவும் அல்லது பலமிழக்கவும் செய்ய இந்த கூட்டணி உதவும். (என்றால் இந்தியா என்ன செய்ய வேண்டும்? அமெரிக்காவுக்கோ சீனாவுக்கோ அடிமையாகாமல் சுயபலத்துடன் தன் தேவைக்கு ஏற்ப வெளிநாட்டுறவுகளை ஏற்படுத்தி தன்னை வலிமையாக்கிக் கொள்ள வேண்டுமே அல்லாது தேசதுரோக இடதுசாரிகளின் கண்மூடி சீன-ஆதரவு அமெரிக்க எதிர்ப்பு பாதைகளை பின்பற்றக்கூடாது.) இப்படி அப்பட்டமான நேர்மை கேட்டுடன் சொந்த நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டு பின்னர் மனித நேயம் குறித்து பேச இத்தகைய அறிவுசீவிகளால் முடிகிறது. சொந்த நாட்டுக்கு துரோகம் செய்ய வைப்பதில் மார்க்சியம் மற்ற மதங்களைக் காட்டிலும் அதிக திறமையுடன் செயல்படுகிறது என்பதற்கு மற்றுமொரு அத்தாட்சி – சித்தார்த் வரதராஜன்.

1. முகமது அலி, ‘US-china Cold War Collaboration, 1971-1989’, பக்.80, Routledge 2005.
2. முழுப் பேட்டியையும் இங்கு காணவும்http://www.asia2025.net/index.cgi?tid=46
3. ‘Chinese Troops In Pakistan Signal Warming Relationship’,Radio Free Europe செய்தி டிசம்பர் 12 2006,
http://www.rferl.org/featuresarticle/2006/12/bba13424-0c75-4cbb-ab99-2cd05c56f7fe.html
4. மேஜர் (ஓய்வு) ஹ¤மாயூன் அமின், ‘The Pakistan Army From 1965 to 1971 Analysis and reappraisal after the 1965 War’,
http://www.defencejournal.com/2000/nov/pak-army.htm
5. எஸ்தர் பான், ‘China and Pakistan: A Deepening Bond’, மார்ச் 8 2006, Council for Foreign Relations,
http://www.cfr.org/publication/10070/china_and_pakistan.html
6. ‘Made in China’, ஷிஷீர் குப்தா India Today, June 25 2001
7. ‘Water war in South Asia? Brahmaputra Dam and diversion’, ‘South Asia Politics’, அக்டோபர் 2003.
8. யுஎன்ஐ செய்தி: நவம்பர் 14 2006
9. டைம்ஸ் ஆ·ப் இந்தியா 29-மே-2007
10. குருஜி கோல்வல்கர், ஞானகங்கை-பாகம் 3 பக்.112
11. ‘US to transfer nuclear reactor tech to China’,ப்யூ சிங் சீனா டெய்லி, 26-10-2005,
http://www.chinadaily.com.cn/english/doc/2005-10/26/content_487855.htm
12. ‘What does China-U.S. military hotline imply?’, நவம்பர் 07, 2007, http://english.peopledaily.com.cn/90001/90780/91342/6298528.html

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்