இஸ்லாமிய கலாச்சாரம் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

மன்சூர் ஹல்லாஜ்


.

சென்னை தேவநேய பாவாணர் நூலரங்கில் இஸ்லாமிய கலாச்சாரம் -கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல் விமர்சன அரங்கு நடைபெற்றது.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமை வகித்து நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.அவர் தனது தலைமைஉரையில்
ஹெச்.ஜி.ரசூல் மீது ஊர்விலக்கம்,மதவிலக்கம் நிகழ்த்தப்பட்டுள்ளது.இன்றைய அதிகாரமையங்களை நோக்கி அவரது படைப்பு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இத்தனை இத்தனை ஆண்நபிகளுக்கு மத்தியில்
ஏன் வாப்பா இல்லைஒரு ஆண்நபி..?
என தன் மைலாஞ்சி கவிதைநூலில் எழுதியதற்காக ஏற்கெனவே நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார். இன்று தான் எழுதிய ஒரு கட்டுரைக்காக பழிவாங்கப்பட்டுள்ளார். அதிகாரங்களை கட்டமைத்து வைத்துள்ள ஜமாஅத் இத்தகையான மோசமான தீர்ப்பை வழங்கியுள்ளது என்றார்.

கவிஞர் இன்குலாப் தனது உரையின் போது

நண்பர் ஹெச்.ஜி.ரசூல் மீது அவர் எழுதிய ஒரு கட்டுரைக்காக ஜமாத் அவரை ஊர்விலக்கம் செய்திருக்கிறது.அவர் எழுதிய கருத்துக்கள் விவாதத்திற்கு உரியன என ஜமாத் கருதலாம். அதை ஏற்பவர்கள் இருக்கலாம்,மறுப்பவர்கள் இருக்கலாம். ஆனால் ஒரு தண்டனை என்பது அந்த மனிதரின் எழுத்துரிமைக்குஎதிராக அமைவது எந்த வகையிலும் மனிதநேயத்திற்கு பொருந்தாத ஒன்று என்று கண்டனம் செய்ய விரும்புகிறேன்.ரசூலை அப்படி ஒன்றும் எளிதில் தூக்கி வீசி விட முடியாது. மனிதநேயச் சிந்தனையை வழி மொழிகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரசூலின் பக்கம் இருப்பார்களே தவிர ஜமாத்தின் பக்கம் இருக்கப் போவதில்லை என்பதாக குறிப்பிட்டார்.

உயிர்மை இதழாசிரியர் மனுஷ்யபுத்திரன் உரை நிகழ்த்துகையில்

ஒரு கட்டுரைக்காக அதில் சொல்லப்பட்டிருக்கிற கருத்துக்களுக்காக ஒரு நபரை,அவரது குடும்பத்தினரை அந்த வீட்டிலுள்ள பெண்களை குழந்தைகளை முதியோர்களை ஊர்விலக்கம் செய்வது அவர்களை உளவியல்ரீதியாக தண்டிப்பது என்பது உண்மையில் ஒரு சாதிரீதியான ,மதரீதியான அடையாளத்திற்காக ஒரு குடும்பத்தை கொளுத்துவது, ஒரு வீட்டை எரிப்பது போன்ற சம்பவமாகும்.இஸ்லாத்திற்குள் இருந்து,அதனுடைய தத்துவார்த்த கேள்விகளை,வாழ்வியல் கேள்விகளை அறிவார்ந்த முறையில் முகம் கொடுக்க தயாராக இல்லாமல் இன்று இஸ்லாமை நம்பக்கூடிய ரசூல் போன்றவர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதை எல்லா தளங்களிலும் எதிர்த்து போராடுவதற்கான ஒரு நிர்ப்பந்தம் அவசியம் நமக்கு இருக்கிறது என்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் அமைப்பாளர் ஸ்டெப்ஸ் ஷரிபா தனது கருத்துக்களை பதிவு செய்கையில்

இஸ்லாத்தில் வரதட்சணை வாங்குபவர்கள் வட்டி வாங்குபவர்கள் எத்தனை பேர்களை ஊரைவிட்டு விலக்கி வைத்திருக்கிறார்கள்?எந்த தலாக்கின் நெறிமுறைகளையும் பேணாமல் கல்யாணம் பண்ணுகிறவர்கள் எத்தனை பேர்மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? பிஜேபியை எதிர்த்து பேசுகிறார்கள் ஆனால் பிஜேபியைச் சார்ந்த அம்பானிக்கு மும்பையிலுள்ள வக்ப் போர்டுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஐநூறு கோடிக்கு இஸ்லாமிய பெரியவர்கள் விற்றிருக்கிறார்கள்.ஒரு கட்டுரையை ரசூல் எழுதியுள்ளார் அவருடைய படிப்புக்கு,உழைப்பிற்கு சமூக சிந்தனைக்குஎந்தவித மதிப்பும் கொடுக்காமல் ஒரு நாலுவரியில் ஊர்விலக்குவது என்பது எப்படி சரியாகும். இதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள்? குரானில் எங்கு ஊர்விலக்கு உள்ளது?இப்படி செய்த இந்த உலமாக்களை தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுகிறது.

பெண்நிலைவாத ஆய்வாளர் வ.கீதா தனது ஆய்வுரையில்

தமிழகத்தில் செயல்படுகின்ற ஜமாத்துக்கள் சாதிப்பஞ்சாயத்துகளாக தொடர்ந்து இப்படி கட்ட பஞ்சாயத்து தீர்ப்புகளை திண்ணியம் போல வழங்கிவருகிறது.தமிழ்மண்ணோடுள்ள சாதி அதிகாரம்,பெண்விரோதத்தின் அடையாளமாகவே உள்ளது.இன்று அமலில் இருக்கும் ஷரீஅத் சட்டம் ஒரு ஆங்கிலேய முகமதியன் சட்டம்.காலனி ஆட்சிக் காலத்தில் உருப்பெற்ற சட்டம். பலவகையில் ஒப்பீட்டளவில் பாகிஸ்தான், பங்காளதேஷ் சட்டமோ இதைவிட மேம்பட்டது. பெண்களுக்கு அதிக உரிமைகளை தரக்கூடியது. வேதகாலத்து பார்ப்பனர்கள் இறைச்சி சாப்பிடுவது பற்றி பேசினாலும் சரி, லிங்காயத்துகள் பற்றி பேசினாலும் சரி அவர்கள் மனம் புண்படுகிறது என்று எல்லோரும் பேசுகிறார்கல். இப்படி சொல்வது ஒரு உரையாடலுக்கான வாசலை திறக்காது. இது இஸ்லாத்திற்கு மட்டும் உரிய ஒரு விஷயமல்ல இந்திய ஜனநாயகத்திற்குள் இருக்கிற ஒரு போக்கு இது என்பதாக மதிப்பிட்டார்.

தாமரை இதழாசிரியர் சி.மகேந்திரன் தனது உரையில்

கிராமப்புறத்திலுள்ள நாட்டாமை போல ஜமாத்துக்கள் மக்களை அடிமைப் படுத்துகிறது. எனவே அரசாங்க அளவிலே இப்படிப்பட்ட மனித உரிமைகளுக்கு எதிரானவற்றை தடுக்க நாம் இதனை ஒரு சட்ட வடிவாக்கவேண்டும். ரசூல் மீது தொடுக்கப்பட்டிருக்கிற இந்த விலக்கு கண்டனத்திற்கு உரியது.

எழுத்தாளர் அழகியபெரியவன் பேசும் போது

இஸ்லாத்திற்கு வலு சேர்க்கக் கூடிய புது சிந்தனைகளை தரக் கூடிய செயலாகத்தான் ரசூலுடைய கவிதைகளும்,கட்டுரைகளும் இருந்து கொண்டிருக்கிண்றன. ஆனால் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த விலக்கம் என்பது அரசியல் உள் நோக்கம் கொண்டுள்ளது.இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.தலித் அறிவுஜீவிகள் உள்ளிட்ட அத்தனை பேரும் இதனை கண்டிக்கிறார்கள்.

கதையாளர் களந்தை பீர்முகமது தனது கருத்துரையை நிகழ்த்தும் போது
நண்பர் ரசூலைப் போல சூபிஞான மரபுக்கும் தர்கா கலாசாரத்திற்கும் பங்களித்தவர்கள் யாருமே இல்லை. நமது தேடல் அறிவு ஞானத்தை விரித்துக் கொள்ள வேண்டும்.ஊர்விலக்கம் என்பது கொடூரமான தண்டனை.இந்திய அரசியல் சட்டத்திலும் இடம் கிடையாது.நம் மனத்திலும் இடம்கிடையாது என்று கூறினார்.

கவிஞர் ரசூல் தனது ஏற்புரையில்

நவீன கவிதை மற்றும் இஸ்லாமிய பண்பாட்டுஆய்வுத் தளங்களிலான தனது எழுத்து இயக்கம் எழுபதுகளுக்குப் பிறகான சுன்னத்வல் ஜமாத் -வகாபிசம் போக்குகள்,அடிததள அர்சால்முஸ்லிம்களின் பண்பாட்டியல் மானுடவியல் நடைமுறைகள் குறித்தும் உருவாகியுள்ளதின் தொடர்ச்சியே இதுவும் என்றார்.எந்த பத்வாவாலும் ஊர்விலக்கத்தாலும் தனது தீவிர எழுத்து இயக்கத்தை தடை செய்யமுடியாது, தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன் எனவும் பேசினார். தமிழ் படைப்பாளிகள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த இந்த உரையாடல் நிகழ்விற்கு நாவலாசிரியர் ஜாகிர்ராஜா நன்றி கூறினார்.

நிகழ்ச்சி தொகுப்பு: எச்.முஜிபுர்ரகுமான்,நட.சிவகுமார்.
நன்றி:புதியகாற்று மாத இதழ் அக்டோபர் 2007


mansurumma@yahoo.co.in

Series Navigation

மன்சூர்ஹல்லாஜ்

மன்சூர்ஹல்லாஜ்